கவி மழை பொழிய ஆசையா?

Status
Not open for further replies.
கவி மழை பொழிய ஆசையா?

SARASWATI.webp

அவ்வையார், கம்பன், அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள், பாரதி, காளிதாசன் ஆகியோர் எல்லாம் கவி மழை பொழிந்து நம்மை அருள் வெள்ளத்திலும் ஆனந்த வெள்ளத்திலும் மிதக்கச் செய்தனர். அவர்களைப் போல கவி பாடவும் மொழி அறிவு பெறவும் ஆசைப் பட்டால் நீங்களும் அவர்களைப் போல இறைவனிடம் வேண்டுங்கள்.

பெரிய கவிஞர்கள் எல்லாம் இறைவனின் அருள் பெற்றே கவி பாடினர். அவர்கள் அல்லும் பகலும் அனவரதமும் “நாவில் சரஸ்வதி நல் துணையாக” (கந்த சஷ்டிக் கவசம்) என்றும் “நனி வாக்கை விநாயகர் காக்க” (விநாயகர் கவசம்) என்றும் வேண்டிப் பலன் பெற்றனர். இதோ அவர்கள் என்ன வேண்டினர் என்பதைப் படித்து, அதையே மனம் உருக வேண்டினால் மொழி அறிவு பெருகும், கவி மழை பொழியலாம், பல மொழிகளைப் பேசலாம்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இந்தத் துதிகளை தினமும் படித்தால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு உண்மையான மொழி அறிவும், கவி புனையும் ஆற்றலும் பெறுவர்.


அவ்வையார்
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்குண்டாம்—மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

அருணகிரிநாதர்
புமியதனில் பிரபுவான புகலியில் வித்தகர் போல
அமிர்தகவித் தொடை பாட அடிமை தனக்கருள்வாயே
சமரில் எதிர்த் தசுர் மாள தனியயில் விட்டெறிவோனே
நமசிவயப் பொருளானே ரசதகிரிப் பெருமாளே

புகலி வித்தகர்=திரு ஞான சமபந்தர்

kumaraguruparar-1.webp

குமரகுருபரர்
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய் எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலுமன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே
****
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே
*****


தேசிய கவி சுப்பிரமணிய பாரதி: ஒரு கோடி தமிழ் பாடல்
வெள்ளை மலர்மிசை வேதக் கருப் பொருள்
ஆக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன்;
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி
இராதென்றன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி
வேல் சக்தி வேல் சக்தி வேல்!
*****
விண்டுரை செய்குவேன் கேளாய் புதுவை விநாயகனே
தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்
பண்டைச் சிறுமைகள் போக்கி, என்னாவிற் பழுத்த சுவைத்
தெண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே
***
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்—உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்
***
பக்தியினாலே—இந்தப்
பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடி!

சொல்லுவதெல்லாம்—மறைச்
சொல்லினைப் போலப் பயனுளதாகும், மெய்
வல்லமை தோன்றும்—தெய்வ
வாழ்க்கையுற்றேயிங்கு வாழ்ந்திடலாம்
***
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப் பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார்
இங்கு அமரர் சிறப்பு கண்டார்.

*****
529_Kambar.webp

கம்பர் பாடிய சரசுவதி அந்தாதி
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை—தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் வாராதிங்கு இடர்

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரைப் போற்கையும்—துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி


காளிதாசர்
வாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் ப்ரதிபத்தயே
ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ (ரகுவம்சம் 1-1)
சொல்லும் பொருளும் போல சேர்ந்திருப்பவர்களும் உலகத்திற்குத் தாய் தந்தையாக இருப்பவர்களுமான பார்வதி பரமேஸ்வரனை, சொல், பொருள் இவைகளை அறியும்பொருட்டு வணங்குகிறேன்
*****************
 
Status
Not open for further replies.
Back
Top