உறையூரில் ஒரு மாப்பிள்ளை அழைப்பு:--உறையூர் சேர்த்தி

நம் மாப்பிள்ளை வந்த வரலாறு:

நந்த சோழன் என்ற மன்னன் உறையூரைத் தலைநகராக்க கொண்டு, ஆட்சி செய்து கொண்டு இருந்த காலம். மன்னன், அரங்கனின் பரம பக்தன். இவனுக்கு ஒரு பெரிய மனக்குறை, குழந்தை இல்லை என்பதுதான். ரங்கனிடம் வேண்டிக்கேட்க, ரங்கனோ மஹாலக்ஷ்மியை மன்னனுக்கு மகளாக் கொடுக்க நினைத்தான் . ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடப் போன இடத்தில் ஒரு தடாகத்தில் மலர்ந்திருந்த தாமரையில் ஒரு பெண்குழந்தை கிடைத்தது...கமலத்தில் கிடந்த குழந்தையை எடுத்துவந்து கமலவல்லி என்ற பெயர் வைத்து வளர்த்து ஆளாக்கினான் மன்னன். ஒருநாள் குதிரையில் போன அரங்கனைக்
கண்ட கமலவல்லி காதலில் விழுந்தாள். கமலவல்லி அவரைக் கண்டதும் அவர் அழகில் மயங்கி வியப்படைந்தாள். யாரோ இவர் எனக் கருதினாள். பெருமாள் தம் பேரழகு முழுவதையும்
கமலவல்லிக்குக் காட்டி மறைந்தார். கமலவல்லியோ அவரை மறக்க இயலாமல் அவர் மீது காதல் கொண்டு பக்தியும் மேலிட்டுக் கலங்கலானாள்.

தம் மகளின் நிலை கண்ட நந்தசோழன் அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் திகைத்தான்;மனம் வருந்தினான்;எம்பெருமானிடம் முறையிட்டான். அவன் கனவில் தோன்றிய பெருமாள் “யாம் பிள்ளையில்லாத உன் மனக்குறையைப் போக்கவே பிராட்டியை உனக்குத் திருமகளாக அனுப்பி வைத்தோம். ”நீ உன் மகளை எம் சந்நிதிக்கு அழைத்து வா; யாம் அவளை ஏற்றுக்கொள்கிறோம்”
என்று திருவாய் மலர்ந்து அருளினார். மன்னன் மனம் மகிழ்ந்தான். நகரை அலங்கரித்தான்.கமலவல்லியைத் திருமணக் கோலத்தில் திருவரங்கம் அழைத்து வந்தான். அக்கோவிலின் கருவறையில் எழுந்தருளி உள்ள அரங்கநாதனுடன் சென்று கமலவல்லி இரண்டறக் கலந்தருளினார்...

உறையூர் திரும்பிய மன்னன், மகளுக்காக ஒரு கோவிலைக் கட்டினான். அதுதான் இந்த உறையூர் நாச்சியார் கோவில் ..

அழகிய மணவாளன் என்னும் அரங்கனே, கமலவல்லிக்கு அழகான மாப்பிள்ளையாக வந்ததால் இங்கு எழுந்தருளிய பெருமாளும் மணவாளன் எனும் திருநாமம் கொண்டார்.

மாப்பிள்ளையும்,பெண்ணுமாக கல்யாணக்கோலத்தில் வடக்கே, ஸ்ரீரங்கத்தில் உள்ள தங்கள்"பெரிய கோயிலை-திருமாளிகையை" நோக்கி நின்றபடி சேவை சாதிக்கிறார்கள்.
உறையூர் கோயிலில் கமலவல்லி நாச்சியார் மட்டுமே மூலவராகவும், உற்சவராகவும் சேவை தருகிறார்.
அழகிய மணவாளப் பெருமாள் (ஸ்ரீரங்கநாதர்) மூலவர் மட்டுமே நின்ற கோலத்தில்எழுந்தருளி யிருக்கிறார்.
உற்சவர் ஸ்ரீரங்கம் பெரியகோயில் நம்பெருமாளே.அவர் ஆண்டுக்கு ஒரு முறை இந்த பங்குனி ஆயில்ய சேர்த்திக்கு, மட்டுமே இங்கு எழுந்தருள்கிறார்.

கமலவல்லி நாச்சியார் பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்ததாக ஐதீகம்(திருமணத் தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.)

மாப்பிள்ளை வர்ராரு... மாப்பிள்ளை வர்ராரு... பல்லக்கிலே!!

இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம், காவிரி, குடமுருட்டி நதிகளைக் -நதி,காடுமேடு,பள்ளம்--கடந்து இக்கோயிலுக்கு வருகிறார்.(பெருமாள், காவிரி பாலத்தின் மீது செல்வது சம்பிரதாய/ஆகம விரோதம்)

அப்போது,இவ்வூர் பக்தர்கள் மட்டுமின்றி, வழிநெடுகிலும் உள்ள கிராமங்கள்/குடியிருப்புகளிலும் வாழை மரங்கள் கட்டி, வாசலில் கோலம் போட்டு “உறையூரின் மாப்பிள்ளைக்கு” வரவேற்பு கொடுக்கின்றனர். கோயிலுக்கு வரும் ஸ்வாமி, மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார்.

உறையூர் நாச்சியார் சேர்த்தி சேவை:

பின்னர் தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக்கொள்வார். பின்னர் இருவரும் திருமணக் கோலத்தில் "சேர்த்தி சேவை" சாதிப்பார்கள்.இன்று தாயார் நம்பெருமாள் பதக்கத்தையும் (அகலவிடேன் இறையுமென்று) மாங்காய் மாலையும் அணிந்து பெருமாளை நோக்கிய வண்ணம்.
நம்பெருமாள் தாயார் பதக்கத்துடன் (அகலகில்லேன் இறையு மென்று).
அழகியமணவாளன் அழகுக்கு கன்னத்தில் திருஷ்டிபொட்டு;நள்ளிரவில் திரும்பிச் செல்வதால் பவள மாலையில் தாயத்து!! இந்த சேர்த்திக்காகவே கோர்க்கப் பட்ட அழகிய மலர் மாலைகள்
(படங்களில் உற்று நோக்கி சேவிக்கவும்.)

இந்த சேவை வருடம் ஒரு முறை பங்குனி ஆயில்யத்தில் மட்டுமே.(ஸ்ரீரங்கம் பங்குனி ஆதி பிரம்மோற்சவத்தில் ஆறாம் நாள்)எனவே திருச்சி/ஸ்ரீரங்கம் நகர மக்கள் அனைவருமே இந்த அற்புத "திவ்ய சேர்த்தியைச்" சேவிப்பதற்கு உறையூர் நாச்சியார் கோயிலில் கூட்டங் கூட்டமாக வருவார்கள்.

பின்னர் தாயார் மூல ஸ்தானத்திற்கு திரும்ப,நமபெருமாள் மீண்டும் அதிகாலை 1.30 மணிக்கு ஸ்ரீரங்கம் திரும்பிச்செல்கிறார்.
திரும்பும் போதும் வந்த வழியிலேயே தீப்பந்தங்கள் வழிகாட்ட,மங்கள வாத்தியங்கள் முழங்க, அத்யாபகர்கள் பிரபந்தம் சேவிக்க,சுமார் ஆயிரம் பக்தர்கள் சூழ்ந்து வர, செல்வார்.

கூடலில் நம்பெருமாள் !
ரோட்டில் நம்பெருமாள் !
நாட்டில் நம்பெருமாள் !
காட்டில் நம்பெருமாள் !
மேட்டில் நம்பெருமாள் !
ஓடையில் நம்பெருமாள் !
கழனியில் நம்பெருமாள் !
ஆற்றில் நம்பெருமாள் !
(அம்மா)மண்டபத்தில் நம்பெருமாள் !

அந்த பின்னிரவில் நம்பெருமாளுடன் காடு,மேடு, நதி,ஊர் வழியாகச்செல்வது ஓர் அற்புதமான அனுபவம்.

வெளி ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றல்:

அதிகாலை 4 மணியளவில் ஸ்ரீரங்கம் மேற்கு அடைய வளைந்தான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சந்நிதிக்கு வந்து சேருவார் நம்பெருமாள். (ஆண்டாளைப் பெரியாழ்வார், அரங்கனுக்கு மணம்முடிக்க, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அழைத்து வந்த போது,இந்த இடத்தில் ஆண்டாளுக்கு, மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு,பெரியகோயிலுக்கு அழைத்துச் செல்லப் பட்டாராம்.அவர் மணப்பெண்ணாக இங்கு அமர்ந்ததால், இன்றும், இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
பொதுவாக எல்லாக் கோயில்களிலும் ஆண்டாள் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருப்பார்).

ஆண்டாள் சந்நிதி முகப்பு மண்டபத்தில் பெருமாள் எழுந்தருள, சந்நிதியிலிருந்து ஆண்டாள் அணிந்த மாலையை,அர்ச்சகர் மங்கள மரியாதைகளுடன் எடுத்து வருவார். ஆண்டாள் மாலையை பெருமாள் உவந்து அணிந்து கொள்வார்.
---(பூ) சூடலில் நம்பெருமாள்.
பெருமாள் அணிந்த மாலையும் அவ்வாறே எடுத்துச் செல்லப்பட்டு ஆண்டாளுக்கு அணிவிக்கப்படும்.இந்த மாலைமாற்றல் வைபவம் முடிந்தவுடன் நம்பெருமாள் புறப்பட்டு காலை 5 மணிக்கு ஆஸ்தானம் அடைவார்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)



1616673740964.png


1616673750789.png


1616673758214.png
 
Back
Top