• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இறந்த அர்ஜுனன்

தன் மகன் பப்ருவாகனனால் யுத்தக் களத்தில் வீழ்த்தப்பட்டு உயிரிழந்த அர்ஜுனன் மறுபடியும் உயிருடன் மீண்டதன் பின்னணியை விவரிக்கும் நிகழ்ச்சி இது...

குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற்று, தர்மபுத்திரர் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டார். தேசம் முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்த விரும்பினார். அதன் பொருட்டு கண்ணனின் ஆணைப்படி அசுவமேத யாகம் செய்ய முடிவுசெய்தார். யாகம் செய்வதற்கு உரிய வழிமுறைகளை வியாசரிடம் கேட்டறிந்தார்.

வியாசர் வழிகாட்டியபடி, சித்ரா பௌர்ணமியன்று தர்மபுத்திரருக்கு முறைப்படி, யாக தீட்சை கொடுக்கப்பட்டது.

பின்னர், உத்தம லட்சணங்கள் பொருந்திய குதிரையை தேசம் முழுவதும் சுற்றிவர அனுப்பினார் தர்மபுத்திரர். பாதுகாப்பாக அர்ஜுனனை அனுப்பி வைத்தார். அர்ஜுனனும் தெய்விக அஸ்திரங்கள், வில், எடுக்கக் குறையாத அம்பறாத் தூளிகள் ஆகியவற்றுடன் புறப்பட்டான்.

சென்ற நாடுகளில் எல்லாம் யாகக் குதிரைக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. கண்ணனின் அருளுக்குப் பாத்திரமான தர்மபுத்திரரின் யாகக் குதிரையை யாரால் எதிர்த்து நிற்க முடியும்?

அனைத்து நாட்டு மன்னர்களும் யாகக் குதிரையை வணங்கி மாலை மரியாதை செய்தனர். வட தேசம் முழுவதும் வெற்றிகொண்ட அர்ஜுனன், தென் தமிழகத்தில் மதுரைக்கு அருகில் இருந்த மணலூருபுரம் என்ற நாட்டை அடைந்தான்.

மதுரை அப்போது கடம்ப வனமாக இருந்தது. மணலூருபுரம்தான் அப்போதைய பாண்டிய நாட்டின் தலைநகரமாக இருந்தது.

அப்போது அந்த நாட்டை பப்ருவாகனன் என்பவன் ஆட்சி செய்து வந்தான்.

இவன் அர்ஜுனனுக்கும், பாண்டிய மன்னரின் மகளான சித்ராங்கதைக்கும் பிறந்தவன். அவனை பாண்டிய மன்னருக்கே தத்துப் பிள்ளையாகக் கொடுத்து விட்டான்.

யாகக் குதிரை வந்திருக்கும் தகவல் பப்ருவாகனனுக்கு வீரர்கள் மூலம் தெரியவந்தது.

`பெரியப்பா நடத்தும் யாகக் குதிரைக்கும், காவலாக வந்திருக்கும் என் தந்தைக்கும் சகல மரியாதைகளையும் செய்ய வேண்டும்' என்று விரும்பினான்.

அதன்படி மாலை மற்றும் காணிக்கைகளுடன் அர்ஜுனனிடம் சென்றான். தன் மகன் தனக்குப் பணிந்து மரியாதை செய்வதை அர்ஜுனன் விரும்பவில்லை.

தன் மகன் தன்னுடன் போர் செய்ய வேண்டும் என்றே நினைத்தான். அர்ஜுனன் பெற்றிருந்த சாபத்தை ஏற்கெனவே அறிந்திருந்த கண்ணன்தான் அர்ஜுனன் மனதில் அப்படி ஓர் எண்ணத்தை ஏற்படுத்தினார் போலும்.

தன் எதிரில் வந்த மகனைக் கண்டு கோபம்கொண்ட அர்ஜுனன்,

``பப்ருவாகனா, என் மகனான நீ க்ஷத்திரிய தர்மத்தை மீறுகிறாயே... என்னுடன் போர் செய்ய நினைக்காமல் ஒரு பெண் பிள்ளையைப்போல் நடந்துகொள்கிறாயே'' என்று ஏளனமாகக் கேட்டான்.

பப்ருவாகனன் தலை குனிந்தபடி நின்றிருந்தான். அப்போது அர்ஜுனனின் மற்றொரு மனைவியும் நாக கன்னிகையுமான உலூபி என்பவள் அங்கே வந்து சேர்ந்தாள். பப்ருவாகனனைப் பார்த்து,

``பப்ருவாகனா, என் மகனே, நான் உன் தந்தையின் மனைவியரில் ஒருத்தி. உனக்கு நானும் ஒரு தாய்தான். நான் சொல்வதைக் கேள். உன் தந்தையுடன் போர் செய். அதுதான் அவருக்கு மகிழ்ச்சி தரும்’’ என்றாள்.

பப்ருவாகனன் போருக்குத் தயாரானான். குதிரையைப் பழக்கப்படுத்துவதில் தேர்ச்சிபெற்ற சில வீரர்களை அழைத்து,

குதிரையைப் பிடித்துக் கட்டும்படி உத்தரவிட்டான். மகிழ்ச்சியடைந்த அர்ஜுனன், `பப்ருவாகனன் சிறந்த வீரன்தான்' என்று பாராட்டிவிட்டு யுத்தத்துக்குத் தயாரானான்.

போர் கடுமையாக நடைபெற்றது. அர்ஜுனன் பப்ருவாகனனின் தேரில் பறந்த கொடியை அறுத்து, தேர்க் குதிரைகளையும் கொன்றான்.

தேரைவிட்டு கீழே இறங்கிய பப்ருவாகனன், அர்ஜுனனைக் குறிவைத்து அம்புகளை மழையெனப் பொழிந்தான். மகனிடம் கொண்டிருந்த பாசத்தின் காரணமாக அர்ஜுனன் அந்த அம்புகளைத் தடுத்தானே தவிர, மகனை அதிகம் தாக்கவில்லை.

அர்ஜுனன் இப்படி நடந்துகொண்டாலும், பப்ருவாகனன் அக்னிப் பிழம்புடன் சீறும் பாம்பாகச் சென்று பேரழிவை உண்டாக்கும் கணைகளை அர்ஜுனனின் மார்பைக் குறிவைத்து ஏவினான்.

சக்தி வாய்ந்த அந்த அம்புகள் அர்ஜுனனின் மார்பைப் பிளந்து அவனைக் கீழே சாய்த்தன. எதிர்க்கவும் அவகாசமில்லாமல் அர்ஜுனன் யுத்தக் களத்தில் மடிந்து வீழ்ந்தான்.

தந்தை இறந்ததைக் கண்டதும் பப்ருவாகனனின் ஆவேசமெல்லாம் போன இடம் தெரியவில்லை. `தந்தையின் மரணத்துக்கு, தான் காரணமாகிவிட்டோமே' என்று நினைத்து மயங்கிவிழுந்தான்.

தகவல் ஊரெங்கும் பரவியது. அர்ஜுனனின் மனைவி சித்ராங்கதை யுத்தகளத்துக்கு வந்து அழுது அரற்றினாள். தன் கணவனின் இறப்புக்குக் காரணமான உலூபியிடம் கோபம் கொண்டாள். மயக்கம் தெளிந்து எழுந்த பப்ருவாகனனும் உலூபியைப் பார்த்து,

``நாக கன்னிகையே, நீ சொன்னதைக் கேட்டு நான் என் தந்தையையே கொன்றுவிட்டேன். இனி நான் உயிருடன் இருந்து என்ன பயன்? நானும் என் தாயுடன் அக்னிப் பிரவேசம் செய்து உயிர்விடப்போகிறேன்'' என்று கதறினான்.

அந்தத் தருணம் பார்த்து அங்கே வந்த பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனன் இறந்ததைக் கண்டு அழுது அரற்றினார். அல்லது அழுவது போல் நடித்தாரோ என்னவோ யாருக்குத் தெரியும்? அழுதபடியே உலூபியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

கண்ணன் அழுவதைப் பார்த்த உலூபி, ``மற்றவர்கள் அர்ஜுனன் இறந்ததற்காக அழலாம். ஆனால், நீங்களே அழலாமா? நீங்கள் சொன்னால் நான் அர்ஜுனனை உயிர் பெறச் செய்கிறேன்'' என்று கூறினாள்.

கண்ணனும் சரியென்று கண்களாலேயே கூறினார். உடனே உலூபி தன் மனதில் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்ஜீவன மணியை நினைத்தாள்.

உடனே தன் கையில் வந்து சேர்ந்த அந்த மணியை அர்ஜுனன் உடலில்வைத்து அவனை உயிர்த்தெழச் செய்தாள்.

உயிர்த்தெழுந்த அர்ஜுனன் தன்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்த சித்ராங்கதை, பப்ருவாகனன், கண்ணன், உலூபி ஆகியோரைப் பார்த்தான்.

பிறகு உலூபியிடம், தன் மகனைக்கொண்டே தன்னைக் கொல்லச் செய்து, பிறகு தன்னை உயிர் பிழைக்கச் செய்ததற்கான காரணத்தைக் கேட்டான்.

கண்ணனின் உத்தரவுப்படி உலூபி நடந்த நிகழ்ச்சியைக் கூறினாள்.

``நாக கன்னிகையான நான் கங்கையில் இருந்தபோது, வசுக்கள் (தட்சனின் மகள் வசுவின் பிள்ளைகள் எட்டுப் பேர். இவர்களில் ஏழு பேர் சாந்தனுவின் பிள்ளைகளாகப் பிறந்து கங்கையில் விடப்பட்டவர்கள். இளையவனான பிரபாசனே பீஷ்மராகப் பிறந்தவர்)

எல்லோரும் தங்களில் ஒருவரான பீஷ்மரை அர்ஜுனன் முறைதவறி கொன்றுவிட்டான். அவன் தன் மகனாலேயே மடிய வேண்டும் என்று சபித்துவிட்டனர்.

இதை அறிந்த என் தந்தை அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்டார். மனமிரங்கிய அவர்கள் என் தந்தையிடம், `அர்ஜுனனுக்கு மணலூருபுரத்தில் ஒரு மகன் இருக்கிறான். அவன் அர்ஜுனனை போர்க்களத்தில் வீழ்த்துவான்.

அப்போது உன்னிடம் இருக்கும் சஞ்ஜீவன மணியால் அர்ஜுனனை உயிர்த்தெழச் செய்’ என்று சாபவிமோசனம் கொடுத்தனர்.

அதனால்தான் இப்படி நடைபெற்றது. இல்லையென்றால் பீஷ்மரைக் கொன்ற பாவத்துக்காக நீங்கள் கொடிய நரகத்துக்குச் சென்றிருப்பீர்கள்’’ என்றாள்.

உலூபி சொன்னதை ஆமோதித்தார் பகவான் கண்ணன்.

அனைவரும் மகிழ்ச்சியுடன் பப்ருவாகனனின் அரண்மனைக்குச் சென்று உபசாரங்களை ஏற்றுக்கொண்டனர். பின்னர் தன் மனைவி சித்ராங்கதை, மகன் பப்ருவாகனன் ஆகியோரிடம் விடைபெற்றுக்கொண்டு

அர்ஜுனன் யாகக் குதிரையுடன் அஸ்தினாபுரம் புறப்பட்டான். அஸ்வமேத யாகம் இனிதே நிறைவுபெற்றது.
 

Latest ads

Back
Top