ஆந்திரத்தில் நரசிம்மரின் சிம்ம கர்ஜனை:

Status
Not open for further replies.
ஆந்திரத்தில் நரசிம்மரின் சிம்ம கர்ஜனை:

ஆந்திரத்தில் நரசிம்மரின் சிம்ம கர்ஜனை:

ஆந்திரத்தில் நரசிம்மரின் சிம்ம கர்ஜனை:



வைகாசி மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திரத்தில் இங்கு ஆந்திரர்கள் நரசிம்ம ஜெயந்தியைக் கொண்டாடுவார்கள். ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் உயர்ந்த தத்துவத்தைக் கொண்டதுதான் நரசிம்ம (அல்லது ந்ருஸிம்ஹ) அவதாரம். எப்படி தமிழகத்தின் மலைகள் தோறும் முருகன் கோயில் கொண்டுள்ளானோ, அப்படியே ஆந்திரத்தின் மலைகள் தோறும் நரசிம்மர் கோயிலை நாம் காணலாம். விசாகப்பட்டினத்தின் அருகே அமைந்துள்ள சிம்ஹாத்ரி மலையிலிருந்து வான் வழியே தென்மேற்கே போகப் போக மலை உச்சிகளிலெல்லாம் நரசிம்மர் காட்சியளிப்பது போலத்தான் தோன்றும் என்ற எண்ணம் உண்டு எனக்கு.


காடுகளும் மலைகளும் சூழ்ந்த அஹோபிலத்தில் மட்டுமே ஒன்பது நரசிம்ம க்ஷேத்திரங்கள் அமைந்துள்ளன. ஆந்திரத்தில் ஓடிவரும் கிருஷ்ணை நதிக்கும் ஹிரண்யகசிபுவை வென்ற நரசிம்மருக்கும் அப்படி என்ன விருப்பமான பொருத்தமோ, கிருஷ்ணைக் கரையை அடுத்தமட்டில் பஞ்சநரசிம்ம க்ஷேத்திரங்களாக மட்டப்பள்ளி (நல்கொண்டா மாவட்டம்), வடபள்ளி, வேதாத்ரி (மேலே படத்தில் உள்ளது), கேட்டவரம் (கிருஷ்ணா மாவட்டம்), மங்களகிரி (குண்டூர் மாவட்டம்) என நரசிம்மர் சிம்ம கர்ஜனை புரிந்து கொண்டு ஆள்கின்ற பிராந்தியம் இது.


மட்டப்பள்ளி நரசிம்மர் கோயில் (படத்தில்)குகைக் கோயில்தான். பாறையில் நரசிம்ம வடிவத்தில் சுயமபுவாக தன்னைக் காட்சிப்படுத்தியதாக தல வரலாறுகள் சொல்கின்றன. ஏறத்தாழ ஓரடி உயரத்தில் சங்கு சக்கரதாரியாகக் நரசிம்ம பெருமாள் காட்சியளிக்கிறார். பொதுவாக குடைவரை கோயில்கள் ஆந்திரத்தில் பல்லவர் காலத்திலேயே அதிகம் கிருஷ்ணை நதிக் கரையில் எழுப்பப்பட்டன என்பதற்கு வரலாற்று சாட்சியங்கள் ஏராளமாக உள்ளன. அதே சமயத்தில் நரசிம்மர் எப்போதும் காடு மலைகள் நிறைந்த சூழ்நிலையில் இந்தப் பிராந்தியங்களில் காணப்படுவது கூட ஒரு ஆச்சரியமான விஷயமே. ஏனெனில் தமிழகத்தில் பெருமாளின் அவதாரமாக ஏராளமான கோயில்கள் திவ்யத் தலங்களாக நரசிம்மமூர்த்திக்குதான் உண்டு என்பதும் அந்தக் கோயில்கள் பூமியின் சமதரைப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது என்பதையும் ஒரு ஒப்பீட்டுக்காக இங்கு குறிப்பிடுகின்றேன்.




அதே போல கிருஷ்ணையின் தென் கரையில் மங்களகிரி எனுமிடத்தில் மலை மீது குடைவரையாக எழுப்பப்பட்ட தலத்தில் பானக நரசிம்மர் மிகவும் விசேஷமாக பூசிக்கப்படுகின்றார். இங்கு குடிகொண்ட குடைவரை பானக நரசிம்மரின் வாயில் எந்த அளவு கொண்ட பாத்திரத்தில் பானக்ம் ஊற்றினாலும் பாதிதான் செல்கிறது. இப்போது நேராக கோயிலுக்கே மலைப்பாதை அமைத்துவிட்டார்கள். மலையடிவாரத்திலும் நரசிம்மருக்கு ஒரு அழகான கோயிலும் நீண்டு உயர்ந்த கோபுரமும் உண்டு. (படம் மேலே) பதினோரு அடுக்குகள் கொண்ட இந்த 153 அடி உயர கோபுரத்தை வாசிரெட்டி வெங்கடாத்ரி நாயுடு (பக்கத்தில் உள்ள அமராவதி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட சிறு மன்னர்) என்பவர் கட்டினார்.


கிருஷ்ணா நதியை பிரிய மனமில்லாமல் பிரிந்து சற்று வடக்கே வந்தோமேயானால் ராஜமுந்த்ரி அருகே கொருகொண்டா மலையில் 650 படிகளுடன் கட்டப்பட்ட கோயிலில் குடிகொண்ட சாத்வீக நரசிம்மரை தரிசனம் செய்துவிட்டு இன்னும் சற்று வடக்கே விசாகப்பட்டினம் சிம்ஹாத்ரி மலையில் வராகருடன் இணைந்த நரசிம்ம பெருமான் காட்சி தருகிறார்.





வராகநரசிம்மரை அவர் முழு உருவைக் காண் வேண்டுமென்றால் ஒவ்வொரு வருடமும் இதே வைகாசியில் வரும் அட்சயத்திருதியைத் திருநாள் வரும் வரைக் காத்திருக்கவேண்டும். அன்றுதான் சந்தனம் கொண்டு உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருந்த அழகான வராகநரசிம்மரை முழுதாக தரிசனம் செய்யமுடியும். அன்று அவரைப் பார்த்துவிட்டால் இந்த ஒருநாளுக்காக வருடம் முழுவதும் தவம் இருக்கலாம் என்றுதான் தோன்றும், . இந்த தலமும் ஒரு நூற்றாண்டுக்கு முன்வரை காடுகளும் மலைகளும் சூழ்ந்த வனாந்தரப் பகுதிதான்.


விசாகப்பட்டினத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் மலைப்பகுதியான சிம்மாசலத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் சோழர்களின் கலைக் கண்காட்சியாக கண்ணுக்குத் தெரியும் என்பதும், அதைவிட ஆச்சரியமாக அந்த பதினோராம் நூற்றாண்டுக் கால கட்டத்தில் ஒரு நடுக் காட்டுக்குள் சோழர்கள் எப்படி இவ்வளவு அருமையான கோயிலைக் கட்டினார்கள் என்பதும் விந்தையான செய்திதானே..


ஆந்திரத்தில் தெலுங்கானா பகுதியிலும் நரசிம்ம க்ஷேத்திரங்கள் மிக அதிகம். தர்மபுரியிலும், யாதகிரிகட்டா எனும் சிறுகுன்றில் எழுப்பப்பட்ட யோக நரசிம்மரைப் பற்றிச் சிறிதாவது சொல்லவேண்டும்.


கோதாவரிக் கரையில் கரீம்நகர் மாவட்டத்தில் தர்மபுரி க்ஷேத்திரத்தில் நரசிம்மர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இந்தப்பகுதியை ஆண்ட தர்மசேனா மிகவும் கடினமாக தவம் செய்து நரசிம்மரின் தரிசனம் பெற்றதாகச் சொல்வர். ஸ்ரீராமர் பூஜித்தத்தாக சொல்லப்படும் சிவன் கோயிலைக் கொண்ட இந்த க்ஷேத்திரத்தில் தர்மசேனாவின் முயற்சியால் தனக்குத் தரிசனம் தந்த யோகநரசிம்மருக்கு அவனே ஒரு பெரிய கோயில் எழுப்பியதாக தல வரலாறு சொல்கிறது.


அதே யோக நரசிம்மர் ஹைதராபாத் அருகே உள்ள யாதகிரிகட்டாவிலும் காட்சி தருகிறார். காசிபேட் இலிருந்து ஹைதராபாத் செல்லும் இருப்புப் பாதை வழியாகப் பார்த்தால் ரயிலில் செல்லும்போது இந்த குன்று தெரியும். இங்கே ஜ்வாலாநரசிம்மமூர்த்தி குடைவரைக் கோயிலில் குடிகொண்டுள்ளார். கருவரைக் கோபுரத்தில் ஒரு தங்க சுதர்ஸன சக்கரம் 3 அடி சுற்றளவில் பொருத்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஆறு கிலோ மீட்டார் சுற்றளவுக்கு இந்த சக்கரம் தெரிகின்றது.




ஆந்திரத்தில் 108 நரசிம்ம க்ஷேத்திரங்கள் உள்ளதாகவும் அவைகளில் 32 தலங்கள் புகழ்பெற்றதாகவும் சொல்வதுண்டு. நதிக்கரைக்கருகில் காடுகளிலும், வனம் சூழ்ந்த மலைகளிலும் காணப்படும் நரசிம்மர் ஒரு மாறுதலுக்காக கடற்கரைப் பகுதியிலும் நமக்காக தரிசனம் தருகிறார்.


மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நரசாப்பூர் அருகே அந்தர்வேதி எனும் சிற்றூர் கடலுக்கு சற்று அருகே உள்ளது. இங்கே கோதாவரியில் கிளை நதியான வசிஷ்டநதி கடலில் கலக்கிறது. இந்த தலம் கோதாவரி பாயும் தலங்களிலேயே மிகவும் புனிதமான இடம் என்று போற்றப்படுகின்றது. கடலிலிருந்து மேற்கே பார்த்தவிதமாக இங்கே நரசிம்மர் அருள் புரிகின்றார்.
 
Status
Not open for further replies.
Back
Top