ஆதித்யஹிருத்ய ஸ்தோத்ரம்

praveen

Life is a dream
Staff member
ஆதித்யஹிருத்ய ஸ்தோத்ரம்

காஞ்சி மகாசுவாமிகளைத் தேடி மடத்திற்கு வந்த அன்பர் ஒருவர், ''என் மகன் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறான். முக்கியமாக பள்ளிக்கூடத்தில் தேர்வு என்றால் அளவு கடந்த பயம். படித்த கேள்விக்கான விடை கூட அவனுக்கு மறந்துபோகிறது அவன் மனதில் தைரியம் உண்டாக என்ன செய்வதெனத் தெரியவில்லை!'' என வருந்தினார்.


காமாட்சி குங்குமப் பிரசாதத்தை அவருக்குக் கொடுத்து ஆசீர்வதித்த சுவாமிகள் பேசத் தொடங்கினார்.


''பயம் போக வேண்டும் என்றால் ஆதித்ய ஹ்ருதயம் படிக்கச் சொல்லுங்கள். அந்த ஸ்லோகத்தைப் படித்தால் மனதில் அச்சம் நீங்கி தைரியம் பிறக்கும். எதற்கும் கலங்காத திடமான மனம் உருவாகும்.
இலங்கையில் யுத்தம் நடந்த காலகட்டம். ராவணன் அணியிலிருந்த முக்கியமான வீரர்கள் போரில் தோற்றனர். அதைக் கண்கூடாகப் பார்த்தும் கூட ராமருக்குப் பணிய மறுத்தான் ராவணன். சிறையில் இருந்து சீதாதேவியை விடுவிக்க சம்மதிக்கவில்லை. ஆக்ரோஷத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.


ஆனால் ராமருக்கு மனதில் சோர்வு எழுந்தது.
'' எவ்வளவு நாளாக யுத்தம் நடக்கிறது! இன்னும் இவன் பணியவில்லையே? என்ன தான் வழி?'' என கவலைப்பட்டார்.


அப்போது வந்த அகத்திய முனிவர், சூரியபகவானைப் பிரார்த்தனை செய்யும் 'ஆதித்ய ஹ்ருதயம்' ஸ்லோகத்தை ராமருக்கு உபதேசம் செய்தார். ராமரும் அதைச் சொல்லி சூரியபகவானை வழிபட்டார்.


அவ்வளவு தான்...ராமரின் சோர்வு காணாமல் போனது. வீரம் பொங்கியது. மறுநாள் உற்சாகமுடன் போரிட்டு ராவணனை வதம் செய்தார்.


வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இந்தப்பகுதி வருகிறது. துணிவுடன் வாழ விரும்புபவர்கள் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட்டால் போதும். தைரியம் பிறக்கும். வாழ்க்கைப் போரிலும் எளிதாக வெல்ல முடியும்''.


மகாசுவாமிகளின் வழிகாட்டுதல் கேட்ட அன்பரின் மனம் நெகிழ்ந்தது. தினமும் ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை மகனை பாராயணம் செய்ய சொல்வதாக கூறி மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.


நன்றி: திரு.திருப்பூர் கிருஷ்ணன்
 
Back
Top