அலெக்ஸாண்டரும் பட்டினத்தாரும்

Status
Not open for further replies.
அலெக்ஸாண்டரும் பட்டினத்தாரும்

Alexander_.jpg


அலெக்ஸாண்டர் மாமன்னன். 2300 ஆண்டுகளுக்கு முன் மாசிடோனியாவில் இருந்து புறப்பட்டு இந்தியா வரை வந்து உலகின் பல நாடுகலை வென்ற பெரு வீரன். இந்து மதக் கருத்துக்களில் பெரும் ஈடுபாடுகொண்டவன் என்பதை நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர் என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன். நிலையாமை பற்றி இந்து மதம் சொல்லும் கருத்தை அவன் வியப்பான ஒரு செயல் மூலம் உலகிற்கு உணர்த்திச் சென்றான்.


சாகும் தருவாயில் அவனுக்கு ஞானோதயம் வந்தது. தன்னுடைய அமைச் சர்களை அழைத்தான். நான் இறந்த பின்னர் என்னுடைய உடலை அடக்கம் செய்யுங்கள். ஆனால் என்னுடைய உடல் முழுவதையும் மூடிவிட்டு இரண்டு கைகளும் திறந்த நிலையில் வெளியே தெரியும்படி விட்டுவிடுங்கள் என்றான். அவன் உலகிற்கு அளிக்க விரும்பிய செய்தி இதுதான்: வரும்போது எதையும் கொண்டுவரவில்லை. போகும்போது எவ்வளவு பெரிய மன்னனாலும் வெறும் கைகளோடுதான் போக வேண்டும்.


அலெக்ஸாண்டர் கூறியபடியே அவரது சடலம் புதைக்கப்பட்டது. அலெக்ஸாண்ட்ரியா நகரில் தங்க சவப்பெட்டியில் அவன் சடலம் புதைக்கப்பட்டது. அலெக்ஸாண்டர் எதை செயலில் செய்து கட்டினானோ அதை பட்டினத்தார் பாடலில் பாடிவிட்டார்.


பட்டினத்தார் சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினத்தில் பெரும் வணிகர் குலத்தில் பிறந்தார். கொடிகட்டிப் பறந்தும் அவருக்கு குழந்தைகுட்டி இல்லை. திருவிடைமருதூர் தோட்டத்தில் கண்டு எடுக்கப்பட்ட ஒரு பிள்ளையை வளர்ப்பு மகனாக வளர்த்தார். ஒரு நாள் அந்தப் பையன் ஒரு சிறிப பெட்டியை அம்மாவிடம் கொடுத்துவிட்டு மாயமாய் மறைந்தான். அதில் காதற்ற ஊசியுடன் ஒரு புதிரையும் எழுதிவிட்டுச் சென்றான். அது பட்டினத்தாரின் கண்களைத் திறந்தது. சிவபெருமானே அந்தப் பையன் உருவில் தன் மகனாக வளர்ந்தான் என்று அவர் எண்ணினார். அவர் பாடிய திரு ஏகம்ப மாலையில் வரும் பாடல் அலெக்ஸாண்டரின் கருத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. இதோ 2 பாடல்கள்:


பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே


முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.


(பட்டினத்தார் பாடல் கருத்துக்களை நான் முன்னர் எழுதி வெளியிட்ட “பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி” என்ற கட்டுரையில் காண்க.)
 
Status
Not open for further replies.
Back
Top