அயோத்தி அற்புதங்கள்!

Venky adi

Active member
அயோத்தி அற்புதங்கள்!

ராவணனின் கொடுமையைத் தாங்கமுடியாத தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டபோது, `யாம் அயோத்தியில் அவதரிப்போம்’ என்று தேவர்களுக்கு வாக்களித்தாராம்.

ஞானிகளும் உத்தமக் கவிஞர்களும் அயோத்தியைப்பற்றி விரிவாகவே கூறியிருக்கிறார்கள்.

`காலம் இல்லாதது அகாலம். நீதி இல்லாதது அநீதி. தர்மம் இல்லாதது அதர்மம். அதுபோல யுத்தம் இல்லாதது, ‘அயோத்தி’. `யாரும் எதற்காகவும் யாரோடும் யுத்தம் செய்யாத அன்புமயமான பூமி அயோத்தி’ என்று விளக்குவார் வாரியார் சுவாமிகள். கம்பரும் அயோத்தியின் அமைதியை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

`நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி

தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்’ என்கிறார் கம்பர்.


`உறங்குதல்’ என்ற சொல்லுக்கு, ‘தங்குதல்’ என்ற பொருளும் உண்டு. அதன்படி பார்த்தால் அயோத்தியின் அமைதி புரியும். சங்குகள் நீரிலே தங்கியிருக்கின்றனவாம். தண்ணீரில் இறங்கிக் கலக்கவேண்டிய எருமைகள் நிழலில் அமைதியாகத் தங்கியிருப்பதால், சங்குகள் நீரில் அமைதியாக இருக்கின்றனவாம். அடுத்து பறந்து திரிய வேண்டிய வண்டுகளைச் சொல்கிறார்.

தேனுக்காக ஒவ்வொரு மலரையும் தேடித் திரியும் வண்டுகள், மலர் மாலைகளில் தங்கி விட்டனவாம். ஓர் இடத்திலேயே தேவையான தேன் முழுவதும் கிடைத்த பிறகு, ஒவ்வொரு மலராகத் தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லை. எனவே, வண்டுகள் மலர் மாலையில் தங்கியிருந்தனவாம்.

அடுத்து, திருமகளைச் சொல்கிறார் கம்பர். அவள் தாமரையில் தங்கியிருக்கிறாளாம். அவளை யாருமே தங்கள் இல்லத்துக்கு வரும்படி அழைக்கவில்லை. ஏனெனில், அனைவரிடமும் அனைத்தும் இருக்கின்றன. பிறகு ஏன், அவர்கள் திருமகளை அழைக்கப்போகிறார்கள்! அதனால், திருமகள் தாமரையிலேயே தங்கிவிட்டாளாம்.

இவ்வாறு அயோத்தியின் வளத்தை வர்ணித்து, அந்த நகரின் அமைதியைச் சிறப்பிக்கும் கம்பர், இந்தப் பாடலின் மூலம் `அயோத்தி நீர்வளம் நிறைந்தது; நிலவளம் நிறைந்தது; அங்கிருப்பவர்கள் திருப்தி பெற்றவர்கள்' என்ற கருத்துகளையும் பதிவு செய்கிறார். இவ்வளவு அற்புதமான நகரத்தில் தெய்வம் அவதரிக்க விரும்பியதில் ஆச்சர்யம் இல்லைதான்!

மேலும் படிக்க:
 
Back
Top