• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீமத்பகவத்கீதை அத்தியாயம் - 2

#ஸ்ரீமத்பகவத்கீதை
-
#அத்தியாயம்-2
-
ஸஞ்சயன் சொன்னது
-
2.1 இரக்கத்தால் நெகிழ்ந்து, கண்ணீர் நிறைந்ததால் பார்வை மறைந்து, சோகத்தில் மூழ்கியிருந்த அர்ஜுனனிடம் ஸ்ரீகிருஷ்ணர் இவ்வாறு சொல்லத் தொடங்கினார்
-
ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது
-
2.2.அர்ஜுனா, நெருக்கடியான இந்த நேரத்தில்,ஆரியனுக்கு இருக்காத,சுவர்க்கத்திற்கு தடையான,புகழை தடுக்கின்ற, இந்த மனச்சோர்வு எப்படி உன்னிடத்தில் வந்தது?
-
2.3.பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. இது உனக்கு பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே, இழிவான இந்த மனத்தளர்ச்சியை விட்டுவிட்டு எழுந்திரு.
-
2.4. அர்ஜுனன் சொன்னது.
-
எதிரிகளை வென்றவரே,மது என்ற அரக்கனை கொன்றவரே,நான் போற்றக்கூடிய பீஷ்மரையும், துரோணரையும் யுத்தத்தில் எப்படி எதிர்த்து போரிடுவேன்?
-
2.5.மேன்மை பொருந்திய ஆச்சார்யர்களை கொல்வதைவிட இவ்வுலகில் பிச்சைஏற்று உண்பது நிச்சயமாக நல்லது. ஆனால் பெரியவர்களை கொன்றால் ரத்தம்கலந்த பொருளையும் போகத்தையும் இவ்வுலகில் அனுபவிப்பவனாவேன்
-
2.6.எது மேலானது என்று எனக்கு புரியவில்லை. நாம் ஜயிப்போமா அல்லது இவர்கள் நம்மை ஜயிப்பார்களா. யாரை கொன்றபின் நாம் உயிர்வாழ விரும்பமாட்டோமோ அந்த உறவினர்களான திருதராஷ்டிர மைந்தர்கள்
போர்புரிய நம் எதிரில் வந்து நிற்கிறார்கள்.
-
2.7 மற்றவர்கள் இகழும்படியான நிலையில், தர்மத்தை பற்றி புரிந்துகொள்ள முடியாத குழப்பமான மனநிலையில் உம்மை கேட்கிறேன். எனக்கு எது சிறந்ததாக இருக்கிறதோ அதை நிச்சயமாக சொல்லும். நான் உம்முடைய சிஷ்யன்.உம்மை சரணடைகிறேன். எனக்கு உபதேசிக்கவேண்டும்
-
2.8 பூமியில் எதிர்ப்பில்லாத அழிவில்லாத ராஜ்யத்தையும் மகாவீரர்களையும் பெற்று அதிபதியாக இருந்தாலும். என்னுடைய இந்திரியங்களை பொசுக்குகின்ற இந்த சோகத்தை போக்காது.
-
2.11 ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது.
-
துக்கப்பட தேவையில்லதவர்கள் குறித்து துக்கப்படுகிறாய். ஞானிகளை போன்று ஞானவார்த்தைகளை பேசுகிறாய். பண்டிதர்கள் இறந்தவர்களை குறித்தோ, உயிருடன் இருப்பவர்கள் குறித்தோ புலம்புவதில்லை
-
2.12. நான் முன்பு இல்லாத காலம் என்ற ஒன்று இல்லை. அதேபோல் இந்த அரசர்கள் இல்லாத காலம் என்பதும் இல்லை. இனிமேல் நாமெல்லாம் இருக்கமாட்டோம் என்பதும் இல்லை. (அதாவது நாம் எல்லோரும் எப்போதும் இருக்கிறோம்)
-
2.13. எப்படி உடலில் குடியிருப்பவனுக்கு, இந்த உடலில் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம்
ஏற்படுகிறதோ அதேபோல்தான் வேறு உடலை எடுப்பதும் அமைகிறது. தீரன் இதைகுறித்து குழப்பமடைவதில்லை
-
2.14 அர்ஜுனா, கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் போன்ற ஐந்து இந்திரியங்களும், அதற்குரிய பார்த்தல்,கேட்டல்,நுகர்தல்,கேட்டல்,சுவைத்தல்,உணர்தல் போன்ற ஐந்து இந்திரியார்த்தங்களில் உள்ள இணக்கத்தினால் குளிர்-வெப்பம், சுகம்-துக்கம் முதலியவை உண்டாகின்றன.தோன்றி மறையும் நித்தியமில்லாத இவைகளை பொறுத்துக்கொள்.
-
2.15 மனிதனின் சிறந்தவனே, இந்த சுக-துக்கங்களை சமமாக ஏற்றுக்கொண்ட தீரனான மனிதன் எதற்கும் அசைவதில்லை. அவன் நிச்சயமாக அமிர்தம்போன்ற சாகாநிலையை அடைய தகுதியானவன்.
-
2.16 இல்லாமல் இருப்பது ஒருபோதும் இருப்பதில்லை. இருப்பது ஒருபோதும் இல்லாமல்போவதில்லை. தத்துவத்தை தர்சித்தவர்களாலேயே இவ்விரண்டின் முடிவை காணமுடியும்.
-
2.17 எதனால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ, அது அழியாதது என்று உறுதியாக தெரிந்துகொள். மாறாத தன்மையுள்ள அதை யாராலும் அழிக்க இயலாது
-
2.18 எப்போதும் இருக்கும், அழியாத, அளவிடமுடியாத உடலில் குடியிருக்கும் அதற்கு(ஆன்மாவிற்கு), சொந்தமான உடல்கள் அழியக்கூடியது, என்று சொல்கிறார்கள். ஆகவே பாரதா, யுத்தம் செய்
-
2.19 யார் இதை அதாவது இந்த உடலில் குடியிருப்பவனை (ஆத்மாவை அல்லது ஆன்மாவை), கொல்லுகிறவன் என்று நினைக்கிறானோ, அதே போல் யார் இதை கொலைசெய்யப்பட்டு இறந்தவன் என்று நினைக்கிறானோ அவர்கள் உண்மையை அறிந்தவர்களல்ல. இந்த உடலில் குடியிருப்பவனை(ஆத்மாவை) யாராலும் கொல்ல முடியாது. அதேபோல் இந்த ஆத்மாவும் யாரையும் கொல்லாது.
-
2.20 இது(ஆத்மா) ஒருபோதும் பிறப்பதில்லை. அது போல் ஒருபோதும் இறப்பதில்லை. முன்பு இல்லாமல் இருந்து இப்போது உருவானதல்ல,அதேபோல் இப்போது இருந்து, இனிமேல் இல்லாமல் போவதுமில்லை. இது பிறவாதது, இறவாதது,தேயாதது,வளராதது,முன்பே இருப்பது. உடலை கொன்றாலும், இதை கொல்லமுடியாது.
-
2.21 பார்த்தா, யார் இதை அழியாததாகவும், மாறுபடாததாகவும்,பிறவாததாகவும்,குறையாததாகவும் அறிகிறானோ அந்த மனிதன் எப்படி யாரை கொல்வான், யாரை கொல்ல சொல்வான்.
-
2.22 மனிதன் எப்படி பழைய உடைகளை விட்டுவிட்டு புதிய உடைகளை அணிந்துகொள்கிறானோ, அவ்வாறே தேகத்தில் இருப்பவன்(ஆத்மா) இறந்துபோன உடல்களை விட்டுவிட்டு புதிய உடல்களை அடைகிறது
-
2.23 ஆயுதங்கள் இதை வெட்டுவதில்லை. தீ இதனை எரிப்பதில்லை. நீர் இதனை நனைப்பதில்லை. காற்றும் இதை உலர்த்துவதில்லை
-
2.24 இது(உடலில் குடியிருப்பவன்) வெட்டுப்படாதவன், எரிக்கப்படாதவன்,நனையாதவன்,உலராதவன். இது எப்போதும் இருப்பவன், எங்கும் நிறைந்தவன், எங்கும் செல்லாதவன், அசைவற்றவன், ஆதிகாலம் முதலே இருப்பவன்
-
2.25 இதை(உடலில் குடியிருப்பவன்) பார்க்க முடியாதது, இது சிந்தனைக்கு அப்பாற்பட்டது,இது மாறுபடாதது .ஆகையால் இங்ஙனம் இதை அறிந்து துன்பத்தை அகற்று
-
2.26 அர்ஜுனா, ஒரு வேளை இது எப்போதும் பிறந்து எப்பொழுதும் இறப்பதாகவும் நினைத்தால், அப்போதும் நீ இதைக்குறித்து வருந்தக்கூடாது
-
2.27 பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம், இறந்தவனுக்கு மறுபிறப்பு நிச்சயம் ஆகையால் நீக்க முடியாத இந்த விஷயத்தில் துக்கப்படுவதற்கு ஒன்றுமில்லை
-
2.28 பாரதா, உயிரினங்கள் துவக்கத்தில்(பிறக்கும் முன்) தென்படாதவைகளாகவும், இடையில் (வாழும்போது) தென்படுபவைகளாகவும், முடிவில் (இறந்தபின்) தென்படாதவைகளாகவும் இருக்கின்றன. ஆகையால் அதுவிஷயத்தில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது?
-
2.29 ஒருவன் இதை(ஆத்மாவை) ஆச்சர்யமானது என விழிக்கிறான், இன்னொருவன் ஆச்சர்யமானது என பேசுகிறான், இன்னொருவன் ஆச்சர்யமாக கேட்கிறான், மற்றொருவன் இதை குறித்து கேட்டாலும் இதை அறிவதில்லை
-
2.30 பாரதா, எல்லோருடைய தேகத்திலும் உள்ள இந்த ஆத்மாவை ஒருபோதும் துன்புறுத்தமுடியாது. ஆகையால் நீ எல்லா உயிர்களைக்குறித்து வருத்தப்படவேண்டாம்
-
2.31 சுயதர்மத்தை பார்த்தாலும் மனம் நடுங்க தேவையில்லை. ஏனென்றால் உனது தர்மமான யுத்தம்புரிவதைவிட சத்திரியனுக்கு வேறு சிறப்பு எதுவும் இல்லை
-
2.32 பார்த்தா, தற்செயலாய் நேர்ந்துள்ள சுவர்க்கத்தை தருவதான, இதுபோன்ற தர்மயுத்தம், பாக்கியவான்களான சத்திரியர்களையே வந்து சேர்கின்றன.
-
2.33 ஆனால், நீ இந்த தர்மயுத்தத்தை செய்யாமல்போனால் அதனால் சுயதர்மத்தை இழந்து, புகழை இழந்து, பாபத்தை அடைவாய்
-
2.34 மேலும் அனைவரும் உன்னைப்பற்றி எப்போதும் இகழ்ந்து பேசுவார்கள். பலரால் போற்றப்பட்ட ஒருவன் இகழப்படுவது மரணத்தைக்காட்டிலும் நிச்சயம் இழிவானதே.
-
2.35 மகாவீரர்கள் உன்னை பயத்தால் யுத்தத்திலிருந்து பின்வாங்கினான என்றுதான் நினைப்பார்கள். எவர் உன்னை புகழ்ந்து பேசினார்களோ அவர்களே உன்னை இகழ்ந்து பேசுவார்கள்.
--
2.36 உன்னுடைய பகைவர்கள் உன்னுடைய திறமையை பழித்து, பல சொல்லத்தகாத வார்த்தைகளை சொல்லுவார்கள். அதைக்காட்டிலும் பெரிய துன்பம் எது உள்ளது?
-
2.37 போரில் கொல்லப்பட்டார், சொர்கத்தை பெற்றிடுவாய். ஜயித்தால் பூமியை அனுபவிப்பாய். ஆகையினால் குந்தியின் மைந்தா, போர்புரிய உறுதியோடு எழுந்திரு
-
2.38 சுக- துக்கங்களை , லாப- நஷ்டங்களை, வெற்றி- தோல்விகளை சமமாக கருதி போர்புரிய புறப்படு. அதனால் பாபத்தை அடையமாட்டாய்
-
2.39 பார்த்தா, ஸாங்கிய தத்துவத்தின் படி இந்த புத்தியை உனக்கு சொன்னேன். இனி யோக தத்துவத்தில் சொல்லப்பட்டிருப்பதை கேள். அந்த புத்தியை தெரிந்துகொண்டால், கர்மபந்தத்திலிருந்து விடுபடுவாய்.
-
2.40 இதில் முயற்சி வீண்போவதில்லை. குற்றம் ஒன்றும் வராது. இந்த யோக தர்மத்தை சிறிதளவு பின்பற்றினாலும் பெரும் பயத்திலிருந்து இது காப்பாற்றும்
-
2.41 அர்ஜுனா, இந்த நெறியில் உறுதிகொண்டவனுக்கு நிச்சயமான புத்தி ஒன்றே. உறுதிகொள்ளாதவர்களின் புத்திகள் பல கிளைகளை உடையவையாக, பலவகைப்பட்டவையாக இருக்கின்றன.
-
2.42,43,44 பார்த்தா விவேகமற்றவர்கள், வேதம் கர்மத்தை பற்றி சொல்கின்ற வார்த்தைகளை ரசித்து, சுவர்க்க இன்பத்தை தவிர வேறு ஒன்றும் மேலானது இல்லை என்று வாதிடுகிறார்கள். இவர்கள் சுவர்க்க லாபத்தை முக்கியமான லட்சியமாக கொண்டவர்கள். இது புதிய பிறவிகளை உருவாக்கும் கர்மபலனை கொடுக்கும். போகத்தையும், ஐசுவர்யத்தையும் அடைவதற்கு தேவையான, பல கர்மங்கள் நிறைந்ததுமான இப்படிப்பட்ட அலங்கார வார்த்தைகளை அவர்கள் சொல்கிறார்கள். அந்த வேத வார்த்தையினால் அபகரிக்கப்பட்ட மனதையுடையவர்களாக, போகத்திலும், ஐசுவர்யத்திலும் பற்றுடையவர்களான இவர்களுக்கு உறுதியான புத்தி உள்ளத்தில் உண்டாவதில்லை.
-
2.45 அர்ஜுனா, வேதங்கள் முக்குணமான (சத்வ,ரஜஸ்,தமஸ்) பிரபஞ்சத்தை சாரமாக கொண்டது. நீ
முக்குணங்களிலிருந்து விடுபட்டவனாக , இருமைகளிலிருந்து(இன்பம்-துன்பம்) விடுபட்டவனாக, எப்பொழுதும் சத்வத்தில் இருப்பவனாக . யோகத்தில் நிலைபெற்றவனாக ,தன்னில் நிலைத்தவனாக இரு.
-
2.46 எங்கும் நீர் நிறைந்திருக்கும்போது கிணற்றின் பயன் எவ்வளவு குறைவோ,அதேபோல் பிரம்மஞானிக்கு அந்த அளவு குறைவாகவே வேதங்களினால் பயன் ஏற்படுகிறது
-
2.47 கர்மம் செய்யவே உனக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருபோதும் கர்ம பலன்களில் அதிகாரம் செலுத்தாதே. கர்ம பலன்களை உண்டு பண்ணுபவனாகவும் இருக்காதே. கர்மம் செய்யாமலும் வெறுமனே இருக்காதே
-
2.48 அர்ஜுனா, யோகத்தில் நின்று பற்றை விட்டுவிட்டு ,வெற்றி தோல்வி ஏற்படும்போது சமமான மனநிலையில் இருந்து கர்மங்களை செய். சமமான நிலையில் இருப்பதே யோகம் என்று சொல்லப்படுகிறது
-
2.49 அர்ஜுனா, புத்தி யோகத்தில் நிலைபெற்று கர்மம் செய்வதை விட,ஆசையில் பலன் வைத்து செயல்புரிவது மிகக்கீழானது. புத்தியில் சரணடை. பலனை விரும்புபவர்கள் கீழானவர்கள்.
-
2.50 புத்தியுள்ளவன், இவ்வுலகில் நன்மை தீமை இரண்டையும் கடக்கிறான். ஆகையால் யோகத்தில் நிலைபெற்றிரு. திறமையாக கர்மம் செய்தல் யோகம் எனப்படுகிறது
-
2.51 புத்தியில் நிலைபெற்ற மேலான மனிதர்கள், கர்மத்தினால் வரும் பலனை ஏற்றுக்கொள்ளாமல், மறுபடி பிறக்கவேண்டிய பிறவி பந்தத்திலிருந்து விடுபட்டு, துன்மற்ற மேலான நிலையை நிச்சயமாக அடைகிறார்கள்.
-
2.52 எப்பொழுது உன்னுடைய புத்தியானது மோகம் என்றும் குற்றத்தை தாண்டுமோ, அப்போது கேட்கவேண்டியதிலும், கேட்டவைகளிலிருந்தும் விடுபட்டு வாக்கு கடந்த நிலையை அடைவாய்.
-
2.53 எப்பொழுது பலவற்றை கேட்டு கலக்கமடைந்துள்ள உன்னுடைய புத்தியானது, சமாதியில் அசைவற்றதாய், உறுதியாக, நிற்குமோ அப்பொழுது யோகத்தை அடைவாய்
-
2.54 அர்ஜுனன் சொன்னது,

கேசவா, சமாதியில் நிலைபெற்றவர்களுடைய நடவடிக்கைகள் என்ன? உறுதியான அறிவுடையவன் எதை பேசுவான்? எப்படி இருப்பான்? அவனது செயல்பாடு எப்படி இருக்கும்?
-
2.55 பார்த்தா, எப்பொழுது மனதில் எழுகின்ற எல்லா ஆசைகளையும் விட்டு விடுகிறானோ, அவன் தன்னில் தானே திருப்தியடைகிறான். அப்பொழுது ஸ்திதப்ரக்ஞன்(மனத்தை நிலைநிறுத்தியவன்) என்று சொல்லப்படுகிறான்.
-
2.56 துன்பம் வரும்போது அசையாத மனதையுடையவன், சுகத்தில் நாட்டமில்லாதவன், பற்று, பயம், கோபம்
போன்றவை இல்லாதவன் முனி என்றும், உறுதியான அறிவுடையவன் என்றும் சொல்லப்படுகிறான்.
-
2.57 யார் எதிலும் பற்றில்லாமல், ஒவ்வொன்றிலிருந்தும் வரும் இன்ப துன்பங்களை கண்டு மகிழாமலும், துன்பப்படாமலும்,வெறுப்படையாமலும் இருக்கிறானோ அவனது அறிவு நிலைபெற்றுவிட்டது
-
2.58 ஆமை தன் உள் உறுப்புகளை ஓட்டிற்குள்ளே சுருக்கிக்கொள்வது போல், எப்போது இந்த யோகி இந்திரியவிஷங்களிலிருந்து (பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,நுகர்தல்,தொடுதல்) இந்திரியங்களை (கண்,காது,மூக்கு,நாக்கு,தோல்)முழுவதும் இழுத்துக்கொள்கிறானோ, அவனுடைய அறிவு நிலைபெற்றுவிட்டது
-
2.59 இந்திரியங்களை இவ்வாறு அடக்கிவைப்பவனுக்கு, இந்திரிய விஷயஅனுபவங்கள் வருவதில்லை. ஆழ்மனதில் ஆசை எஞ்சியிருக்கிறது. மேலானதை(பிரம்மத்தை) தரிசித்தபின் அந்த ஆசையும் அழிகிறது
-
2.60 குந்தியின் மைந்தா, நிச்சயமாக தவவாழ்வில் உள்ள விவேகமுள்ள மனிதனுடைய மனதையும், கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாக இழுத்துசெல்கின்றன.
-
2.61. யோகம் பயில்பவன் அவைகளையெல்லாம் அடக்கிக்கொண்டு, மேலானதை(பிரம்மத்தை) நினைத்துக்கொண்டு இருக்கிறான். ஏனெனில் யாருடைய இந்திரியங்கள் வசப்பட்டிருக்கிறதோ, அவனுடைய அறிவு நிலைபெற்றது.
-
2.62 இந்திரிய விஷயங்களை நினைக்கின்ற மனிதனுக்கு அவைகளிடமிருந்து பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசை நிறைவேறாவிட்டால் கோபம் வளர்கிறது.
-
2.63 கோபத்தால், மனக்குழப்பம் உண்டாகிறது. குழம்பியபின் சுயநினைவை இழக்கிறான், பின் புத்தி செயல்படுவதில்லை. புத்தி இல்லாமல் அழிந்துபோகிறான்.
-
2.64 ஆனால் விருப்பு,வெறுப்பிலிருந்து விடுபட்ட தன்னைதான் அடக்கிய, இந்திரியங்களை(கண்,காது,மூக்கு,நாக்கு,தோல்) அதற்குரிய விஷயங்களில் அலைபாயாமல் அடக்கிய மனதை உடையவன் பிரசாதத்தை (மனத்தெளிவை) அடைகிறான்
-
2.65 மனம் அமைதியடைந்தவனுக்கு எல்லா துக்கங்களுக்கும் அழிந்துபோகின்றன. ஏனெனில் மனம் தெளிந்தவனுடைய புத்தி விரைவில் உறுதிபெறுகிறது.
-
2.66 யோகம் பயிலாதவனுக்கு புத்தி தன் வசம் இருப்பதில்லை. யோகம் பயிலாதவனால் தியானம் செய்ய முடியாது. தியானம் இல்லாதவனுக்கு அமைதி கிடைக்காது. அமைதி இல்லாதவனுக்கு சுகம் எப்படி கிடைக்கும்?
-
2.67. நீர்மேல் செல்லும் கப்பலை காற்று நிலைகுறைய செய்வது போல். அலைபாயும் இந்திரியங்களை (கண்,காது,மூக்கு,நாக்கு,தோல்) யாருடைய மனம் பின்பற்றி செல்லுமோ, அவனுடைய அறிவை அது (இந்திரியங்கள்) நிலைகுலைய செய்கின்றன.
-
2.68 அர்ஜுனா, ஆகையினால் யாருடைய இந்திரியங்கள் (கண்,காது,மூக்கு,நாக்கு,தோல்), இந்திரியார்த்தங்களிலிருந்து(பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,நுகர்தல்,தொடுதல்) முற்றிலும் அடக்கப்பட்டிருக்கிறதோ, அவனுடைய அறிவு நிலைபெற்றுள்ளது.
-
2.69 எல்லா உயிர்களுக்கும் எது இரவோ அதில் யோகம் பயில்பவன் விழித்திருக்கிறான். எப்போது உயிர்களெல்லாம் விழித்திருக்கிறதோ அது அந்த முனிவனுக்கு இரவு. (யோகி ஒருபோதும் தூங்குவதில்லை.அவன் தூக்கத்தை கடந்தவன்.இரவில் யோகி தியானத்தில் ஈடுபட்டிருப்பான். பகலில் மக்கள் செயல்புரிகிறார்கள். ஆனால் யோகி ஓய்வில் இருக்கிறான்.)
-
2.70 முழுக்க நிறைந்து அசைவற்ற நிலையில் இருக்கும் சமுத்திரத்தில், எப்படி ஆறுகள் ஒன்று கலக்குமோ,( ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றுநீர் சமுத்திரத்தில் கலந்ததும் அடங்கிவிடுகிறது) அப்படியே, எல்லா ஆசைகளும் முனிவனுள் பிரவேசித்தாலும் அவன் அமைதியில் நிலைத்திருப்பான். ஆசையை அனுபவிக்க நினைப்பவனுக்கு இது கிடைக்காது.
-
2.71. எந்த மனிதன் எல்லா ஆசைகளையும் விட்டுவிட்டு, ஆசைகள் எதுவும் இல்லாமல், அகங்காரம் இல்லாமல், நான் செய்கிறேன் என்ற எண்ணமில்லாமல் நடமாடுகிறானோ, அவன் அமைதியை அடைகிறான்.
-
2.72 பார்த்தா, இது தான் பிரம்மதில் நிலைபெறுவதாகும். இதை அடையப்பெற்று அவன் மோகத்தை கடக்கிறான். இறக்கும் தருவாயிலாவது இதில் நிலைத்திருப்பவன் பிரம்மநிர்வாணத்தை அடைகிறான்.
 

Latest ads

Back
Top