• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பிதாமகர் பீஷ்மர்

#Shared
#பிதாமகர் பீஷ்மர்

களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர்
என்ற செய்தி கர்ணனை அடைந்ததும், அதிர்ந்துபோனான். எவர் வீழ்த்தியது என ஆவேசப்பட்டான். அர்ஜீனனின் பெயர் கேட்டவுடன் கொதித்தான்.
பிதாமகரை அத்தனை எளிதாய் வீழ்த்திவிட்டானா அர்ஜீனன் ?...
என கோபப்பட்டான் கர்ணன்.

இல்லை. சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை வீழ்த்திவிட்டார்கள்...
என்றான் தகவல் கொண்டுவந்த வீரன்.

அதர்மத்தின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று எங்களை குறை கூறிய பாண்டவர்களே, அதர்மத்தினைக் கையாளுவதுதான் தர்மமா ?
அர்ஜீனா.. இதோ வருகிறேன். சந்திக்கிறேன் உன்னை களத்தில். உன்னைக் கொல்லவேண்டும் என நான் நினைத்ததற்கான காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கூடிக்கொண்டே போகின்றன... என தனக்குள் பொங்கினான். இறுதியாக ஒருமுறை, பீஷ்மரின் திருமுகத்தைக் கண்டுவரக் கிளம்பினான் குருஷேத்திரம் நோக்கி.

கௌரவர் சேனையும், பாண்டவர் சேனையும் அணிவகுத்து நின்று, ஒவ்வொருவராய் பீஷ்மரைக் கண்டு கலங்கியபடியே நகர்ந்தார்கள் களத்தில்.

போதும் புறப்பட்டுவிடலாம் என நினைத்த பீஷ்மம், தனது தாயின் மடியினைத் தேடியது. தாய் தந்த அமுதோடு உயிர்கொண்டோம்.
அதோடே, உயிர் துறப்போம் என்று எண்ணிய பீஷ்மர், அர்ஜீனனை அருகில் அழைத்தார்.

அர்ஜீனா.. தாகம் அதிகம். இதுவரை கொண்ட அத்தனை தாகத்தினையும் மறக்கச் செய்யும் அதீத தாகம். என் தாய் கங்கையால் மட்டுமே தீர்க்கமுடிந்த தாகம். தீராமல், இவ்விடம் விட்டு நகர்தல் என்பது இயலாது. புரிகிறதா ?.. என்றார்.

அர்ஜீனனின் கண்கள் கண்ணனை நோக்க, அவனும் தலையசைக்க, தனது பாணங்களை நிலம் நோக்கி செலுத்தினான் அர்ஜீனன்.
நிலம் பிளந்து, பாறைகள் தாண்டி, ஆழத்தில் பயணித்துக் கொண்டிருந்த கங்கையினை தொட்டது அர்ஜீனனின் அம்புகள்.

அம்பு பயணித்த இடைவெளியின் ஊடே, பீஷ்மரின் சுவாசமும் கலந்து பயணிக்க, சீறி எழுந்தாள் கங்கை. கிடைத்த இடைவெளியில் பொங்கி வழிந்து ஊற்றாய் பெருகி, பாலாய்ப் பொழிந்தாள். மண்தொட்டு கிளம்பிய கங்கை, நேராக, தன் மகனின் தாகம் தீர்க்கத் தாயாக மாறி, பாலூட்ட ஆரம்பித்தாள் பிதாமகர் பீஷ்மருக்கு.

கங்கை உள்நிரம்பியதும், வெம்மையாய் இருந்த கொஞ்ச நஞ்ச எண்ணங்களும் குளிர்ந்துபோக,போதும் தாயே போதும். கொண்டதொரு பணி நிறைவாய் முடிந்தது. விடைகொடு எனக்கு.. என்று மனதாலேயே தன் தாயை வணங்க, கங்கை அடங்கினாள்.

பீஷ்மத்தைப் பெற்றதனால், புனிதமானாள் கங்கை என நாளைய சரித்திரம் சொல்லுமடா உன் பெயரை.. என வாழ்த்தினாள்.

பீஷ்மரின் கண்கள் விண்ணைநோக்கின. தேவர்களும், விண்ணவர்களும் புடைசூழ நிற்பது கண்டு வணங்கினார்.
சூரிய தேவனுக்கு அருகிலேயே, மரணதேவனும் தன் அனுமதிக்கு காத்திருப்பது தெரிந்தது.
வாரும் மரணதேவரே.. வாரும். இதுநாள்வரை உம் கடமை நிறைவேற்றத் தடையாயிருந்தமைக்கு மன்னியும் என்னை. நானே அழைக்கிறேன் உம்மை. வந்தெம்மை ஆட்கொள்ளும்.. என பீஷ்மரின் மனம் இறைஞ்சியது.

சற்றுப் பொறும் பீஷ்மரே. இருக்கும் அத்தனை பேரையும் விருப்பு வெறுப்பின்றி ஆசீர்வதித்து செல்கிறீரே.. வந்து கொண்டிருக்கிறான் எம் மைந்தன். அவனையும் ஆசிகொடுத்துவிட்டுச் செல்லலாமே... வேண்டினான் சூரியதேவன்.

அதேநேரம், கர்ணனும் நுழைந்தான் அவ்விடம். அம்புப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த பீஷ்மரைக் கண்டதும் ஆடிப்போனான் கர்ணன். மனம் கலங்கியது. அவரை எதிர்த்து உதிர்த்த வார்த்தைகள் நினைவில் வந்து நெஞ்சினைக் கிளறியது. அவரது கால் தொட்டு வணங்கினான். அருகே சென்றான்.

பிதாமகரே.. அறியாமல் கோபத்தில் நான் உதிர்த்த வார்த்தைகள், உம்மைக் காயப்படுத்தியிருப்பின் மன்னியுங்கள் என்னை... என்றான் கர்ணன்.

தவறான புரிதலால் ஏற்பட்ட விளைவிற்கு காரணமாக எதையுமே கற்பிக்க இயலாது கர்ணா.. இதோ.. நீ விரும்பியது காத்திருக்கிறது. நாளைமுதல் நான் களத்தில் இருக்கப் போவதில்லை... என்றார் பீஷ்மர்.

அவசரப்பட்டு பேசிவிட்டேனோ என்று அதற்காகப் பலமுறை வருந்தியிருக்கி
றேன் பிதாமகரே. உம்மோடு களம் புகுந்து, பார்போற்றும் உமது வீரத்தினை அருகிருந்து காணும் கொடுப்பினை கிட்டியும், அவசரப்பட்டு தவற விட்டு விட்டேனே என வருந்தாத நாளில்லை ஐயனே.. என்றான் கர்ணன் உருக்கமாக.

எல்லாம் நன்மைக்கே கர்ணா.. என் இடத்தை நிரப்பாமல் செல்கிறேனே என்ற கடைசிக்குறையும் தீர்ந்தது உன்னால். களம் காண்பாய் கர்ணா... என்றார் பீஷ்மர்.

நீங்கள் இட்ட பணி தொடர, வெற்றி பெற வாழ்த்தியருள வேண்டுகிறேன் பிதாமகரே.. என்றான் கர்ணன்.

எவரும் பெறமுடியாத புகழினை இக்களத்தினில் நீ பெறுவாய் கர்ணா.. உன் தர்மம் அதற்குத் துணைநிற்கும்.. என கர்ணனை ஆசீர்வதித்த பீஷ்மர், கண்மூட ஆரம்பித்தார்.
மனதாலேயே மரணதேவனை ஆட்கொள்ள அழைக்க, பீஷ்மரின் ஆன்மாவினை தனதாக்கிக் கொண்டான் மரணதேவன். உடல் மட்டுமே உயிர்ப்போடு இருந்தது.
விண்ணெங்கும், மண்ணெங்கும் பீஷ்ம.. பீஷ்ம..பீஷ்ம.. என்னும் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

கலங்கிய கண்களோடும், கனத்த இதயத்தோடும் செய்வதறியாது நின்ற அர்ஜீனனை அவ்விடம் விட்டு சற்று தூரமாய் அழைத்துவந்தான் கண்ணன்.
இழப்பின் வலி என்னவென்பதை பிதாமகர் உணர்த்திப் போனபின்பும், மண்ணிற்கான இப்போர் தொடரத்தான் வேண்டுமா கண்ணா ?.. கலங்கியபடியே கேட்டான் அர்ஜீனன்.

பீஷ்மர் ஆவது அத்தனை எளிதென்று எண்ணிவிட்டாயா அர்ஜீனா ?.. கேட்டான் கண்ணன்.

நான் கேட்பது என்ன ? நீ சொல்வது என்ன ?.. எரிச்சலோடு கேட்டான் அர்ஜீனன்.

புரிந்துகொள்ளும் மனநிலையில் நீயில்லை எனப் பொருள் அர்ஜீனா.. என்றான் கண்ணன்.

என்ன புரியவில்லை ? இன்னும் என்ன புரியவேண்டும் ? எவர் பார்த்து இவர்போல் ஆகவேண்டும் என நினைத்தேனோ, அவரை என்னைக் கொண்டே வீழ்த்த வைத்தது புரியவில்லையா எனக்கு ? மனம் முழுதும் நிறைந்திருந்த பிதாமகரை, மண்விட்டு அனுப்ப, காரணமாகிப் போனேனே நான்.. இதுகூடவா எனக்குப் புரியவில்லை ?.. படபடத்தான் அர்ஜீனன்.

பீஷ்மர் மண்விட்டுப் போய் வெகுகாலமாகிவிட்டது அர்ஜூனா... என்றான் கண்ணன்.

திகைப்பாய்ப் பார்த்தான் அர்ஜீனன்.

ஆம் அர்ஜீனா.. மண்ணாள மட்டும் பீஷ்மர் நினைத்திருந்தால், தடுப்பார் எவருமில்லை அன்று. மண்ணோடு தன் தொடர்பை என்றோ விட்டொழித்தார் பீஷ்மர். அதனாலேயே, தன் சுக துக்கங்களை அவரால் மறக்க முடிந்தது.
தன்னைப் பற்றிய நினைவே இன்றி, தம் குலத்திற்காக மட்டுமே வாழ்வினை அர்ப்பணிக்க முடிந்தது.

பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது அர்ஜீனா.. விருப்பு, வெறுப்பின்றி எதனையும் அணுகமுடிவதே #பீஷ்மம் .
கொண்ட கொள்கைக்காக, தனைப்பற்றிய சிந்தனையே இன்றி, தொடர்ந்து கடமையாற்றுவதே #பீஷ்மம்.
பீஷ்மரின் கொள்கை தன் குலம் காத்து நிற்பது மட்டுமே. அதற்கு எது சரியோ, அதை மட்டுமே சிந்தனையில் கொள்பவர். அது சரியா, தவறா என்றுகூட யோசிக்கமாட்டார். தன் நிலை தாழ்ந்தாலும் கவலைப்படாமல், தன்னை நம்பியிருக்கும் தன் குலம் காப்பவர் எவரோ.. அவரே #பீஷ்மர் . அதற்காக, அவர் கைக்கொண்ட தவம்தான் பிரம்மச்சர்யம். மண்ணிலிருந்து தன்னை விலக்கிக் கொள்பவனால் மட்டுமே பீஷ்மனாக முடியும்.. என்றான் கண்ணன்.

பஞ்சபூதங்களில் ஒன்றுதானே இம்மண். அதை மட்டும் விட்டு விலகிநின்றால் போதுமா ?.. கேட்டான் அர்ஜீனன்.

நீர், நெருப்பு என இரண்டையும் தன்னுள் அடக்கி, தன்னைத் தொட்டே தன் பலத்தினை நிரூபிக்க முடியும் என வாயுவிற்கும் வாய்ப்பளிக்கும் மண்ணை அத்தனை சாதாரணமாக எண்ணிவிடாதே அர்ஜீனா. இங்கு அனைத்திற்கும் காரணம் மண்தான். மண்தொட முடியாத ஒரே விஷயம் ஆகாயம் மட்டுமே. அதுவும், இறப்பிற்கு பின்மட்டுமே அடையமுடியும் இடம்.
உலகின் அத்தனை செயல்களுக்கும் ஆதாரமாய் நிற்பது #மண் மட்டுமே. மனிதப்பிறவியின் அசைக்கவே முடியாத, விடவே இயலாத, ஆழமான ஓர் உணர்வு ஆசை. அந்த ஆசையின் அஸ்திவாரமே
#மண்தான் . கருவில் இருக்கும்வரை, மண்ணோடு தொடர்பில்லை. வெளியில் வந்தபின்னும், தாய்மடியில் இருக்கும் வரை, தனக்கென்று ஓர் தனித்த சிந்தனை இருப்பதே இல்லை எந்தக் குழந்தைக்கும்.எப்போது குழந்தை என்ற ஓருயிர், மண்தொட ஆரம்பிக்கிறதோ.. அப்போது நுழைகிறது அதனுள் ஆசை. தான் படுத்திருக்கும் இடம் தன் இடம். அதுமட்டும் போதுமா ? போதாது. உள்நுழைந்த ஆசை விட்டுவிடுமா என்ன ? புரள்கிறது குழந்தை.. இன்னும் இடம் கிடைக்கிறது. அதுவும் தன் இடம் என்றபின், முன்னோக்கி நகர்கிறது.. தவழ்கிறது இடம் பிடிக்க.

அதுவும் போதவில்லை. கண்படும் இடமெல்லாம் தனதாகவேண்டுமே.. எழ முயற்சித்து தொட நினைக்கிறது.. எழுகிறது.. நடக்கிறது.. ஓடுகிறது.. இத்தனை இடம் கிடைத்தும் போதவில்லை. மண் மட்டும் போதுமா ? மண்மேல் இருக்கும் அத்தனை சுகங்களும் வேண்டும்.. ஓடுகிறது.. தேடுகிறது.. வாழ்நாள் முழுதும் தேடியே ஓய்கிறது. முதுமையில் தளர்ந்து மறுபடியும் மண்மேல் விழும்வரை ஓய்வதில்லை. எல்லாம் ஓய்ந்தபின்னே, உயிர்பிரிந்து போனபின்னே, மண்ணால் வந்த மனிதனின் ஆசை, மண்ணுக்குள்ளேயேதான் புதைக்கவும் படுகிறது. இத்தனைக்கும் காரணமான இம்மண்ணை மட்டும், அத்தனை எளிதாய் எவராலும் துறக்க முடியாது.

வாழும் காலத்திலேயே, மண்ணாசையை.. மண்ணால் கொண்ட உணர்வுகளை துறந்து நின்றதால்தான் அவர் பீஷ்மர்.. என கண்ணன் கூறியதைக் கேட்ட அர்ஜீனன் திகைத்தான்.

அதனால்தான், மண்படாது பீஷ்மரை அம்புப் படுக்கையில் ஏற்றச் சொன்னாயா கண்ணா ?.. விழிகள் விரியக் கேட்டான் அர்ஜீனன்.

சரியான புரிதல்தான் அர்ஜீனா.
பிதாமகர் பீஷ்மர் வாவென்றழைக்காமல், மரணதேவனால் அவரை நெருங்கக்கூட இயலாது. வாழும்போது மண்ணோடு தான் கொண்ட உறவறுத்து வாழ்ந்த பீஷ்மர், இறுதி நேரத்தில் மண்மீது விழுந்துவிட்டால், மண் அவரை விட்டுவிடுமா என்ன ? மறுபடியும் வாழவேண்டும் என்ற ஆசைதனை அவருள் புகுத்திவிட்டால் ?..
மீண்டும் எழுந்து, பீஷ்மம் மறந்து, மண்ணாள ஆசை கொண்டுவிட்டால். ?
உன்னால், என்னால், எவராலும் அவரை தடுத்து நிறுத்திட இயலாது என்பதால்தான் அம்புப் படுக்கையில் கிடத்தச் சொன்னேன்.
ஒருவேளை, அதிலிருக்கும்போதும், மண்தொட அவர் விரும்பினாலும், அம்புகள் குத்தி நிற்கும் உடலின் வலி அதிகரிக்கும். மண்தொட ஆசைப்பட்டால், வலிதான் மிஞ்சும் என்பதாலேயே, மறந்தும் கூட அவர் அதனை செய்ய மாட்டார். அதனாலேயே, இறுதிவரை அவரை மண் பார்க்க விடாமல், விழிகளை விண்நோக்கியே இருக்கச் செய்தேன்.பீஷ்மர் தவறலாம் அர்ஜீனா.. அவர் கொண்ட பீஷ்மம் தவறி விடக்கூடாது.. என்றான் கண்ணன்.

இத்தனையும்தான் நானறிந்து கொண்டேனே ? மண் வேண்டாம் என என்னால் போரிடாமல் விலக முடியாதா ?.. ஆதங்கத்தோடு கேட்டான் அர்ஜீனன்.

சிரித்தான் கண்ணன். நீ நிற்பதே மண்மீதுதான். உன் இருப்பே மண்மீதுதான் என்றபின், விலகி எங்கு செல்ல முடியும் அர்ஜீனா ? விண் நோக்கிச் செல்ல, உனக்கான காலம் இன்னும் வரவில்லை என்றபின்,
மண்ணில்தான் போராடவேண்டும். மண்ணோடுதான் போராடவேண்டும்.. மண்ணிற்குள் மறைந்து மண்ணாகும் வரை.. என்றான் கண்ணன்.

அர்ஜீனனுக்குப் புரிந்தது.
மண்ணில் கலக்கத்தான் இத்தனை போராட்டங்களும்.. மண்ணாக மாறத்தான் இந்த ஓர் பிறவியும். நாம் கொண்ட சுகங்களும், துக்கங்களும் மண்ணால்தான் அருளப்பட்டது. அதை அடையத்தான் இந்த வாழ்க்கைப் போராட்டமும். எதை வெல்ல நினைத்தோமோ, அதில்தான் அடங்கப் போகிறோம். இங்கு நாம் கண்ட உறவுகள் அத்தனையும், இந்த மண் தந்ததுதான். உறவுகளையும், உணர்வுகளையும் கொடுத்த மண்தான், அவைகளை திரும்பவும் பெற்றுக் கொள்ளப் போகிறது. எனில், நான் என்பது யார் ? நான் என்பதும் அதுதான்.
இதைப் புரிந்து கொள்ளவே வாழ்க்கை. புரிந்தாலும், புரியாவிட்டாலும், தான் யார் என்பதை மண் புரியவைத்துவிடும்.
அர்ஜீனன், தர்மன், பீமன், நகுலன், சகாதேவன், துரியோதனன், கர்ணன், துரோணன் என எல்லாம் ஒன்றுதான். அத்தனை பேரும், விரைவாய் மண்ணோடு கலக்க, போராடும் களமே வாழ்க்கை. எவர் முந்துகிறார் என்பது மட்டுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம்.
வா கண்ணா.. நாளைய போருக்கு தயார் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உண்டு.. என அர்ஜீனன் கூற,

கண்ணனுக்குப் புரிந்தது.. தன்னை எவரென உணர்ந்துவிட்டான் அர்ஜீனன் என்பது.

இங்கு ஒவ்வொருவர் வாழ்வும் குருஷேத்திரமே.. ஒவ்வொருவரும் அர்ஜீனரே. விளங்கச் சொல்ல, கண்ணன் எனும் சாரதி ஒவ்வொருவர் உள்ளும் உண்டு.வாழும்போதே அதை உணர்ந்தது, பீஷ்மரைத் தவிர வேறு எவரும் இல்லை...
 

Latest ads

Back
Top