• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கவிதையில் யாப்பு

Status
Not open for further replies.

saidevo

Active member
கவிதையில் யாப்பு

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம்
ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012

இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி.
தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது.
கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே,
என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை
வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம்.

யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து
எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில்
கவிதை வரிகளில் தருவது தொடரின் இரண்டாவது நோக்கம்.

அப்படித் தரும்போது அது வாசகர்களுக்குப் பயன்தந்து, பிற நூல்களின் மூலம்
யாப்பிலக்கணம் மேலும் நன்கு பயில ஊக்கம் அளிக்கும் என்ற நம்பிக்கை மூன்றாவது நோக்கம்.

யாப்பின் ஒழுங்கில், இன்றைய வழக்கில் கவிதை புனைவது
வேறு விதத்தில் எழுதுவது போன்றே எளிதில் வருவது,
அதைவிட அதிகப் பெருமையும் திருப்தியும் தருவது
என்று இத்தொடரில் காட்டிட முயல்கிறேன்.

தொடரின் நிறை குறை பற்றிக் கவிதை ஆர்வலர்கள் அப்போதைக்கப்போதே பின்னூட்டம் இடலாம்.
வரும் பின்னூட்டங்களின் சீரிய கருத்துக்களை எடுத்தாண்டு, குறைகளைக் கூடியமட்டும் திருத்தி,
இறுதியில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் ஒரு மின்னூலாக்குவது என் இலக்கு.

1. செய்யுளும் கவிதையும்

யாப்பு என்பது கட்டும் நியதி.
யாத்தல் என்பது பிணித்தல், புனைதல்.

செய்யுள் என்பது செய்யப் படுவது.
பத்தியும் பாட்டும் காவியம் உரையும்
செய்யுள் என்பதன் பிரதி பதங்களே.

கவிதை என்பது கவினுற விதைத்தல்.
செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே.

மலரும் கொழுந்தும் சேர்த்துத் தொடுத்த
மாலை போலச் சொற்கள் விரவி
சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம்.

மாலையின் நுகர்ச்சி மணமே போலச்
செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம்.
மாலையின் ஊடகம் அதன்நார் என்றால்
செய்யுளின் ஊடகம் ஓசை எனலாம்.

யாக்கை என்பது நம்முடல், கட்டுடல்.
நம்முடல் நாமாவது நம்மனத் தாலே.
கவிதை யாப்பில் மனமே அதன்பொருள்.

கவிதையில் மனதைச் சொல்லும் போது
செய்யுள் யாக்கையைக் கவினுறச் செய்து
மாலையின் மணத்தை, மலர்களின் அழகை,
நாரின் ஓசையை, முழுவதும் துய்ப்போம்.

*** *** ***
 
யாப்பின் அடிப்படை உறுப்புகளைப் பொறுத்தவரையில் விவரங்கள், விளக்கங்கள், சான்றுகள் போன்ற உதவிக் குறிப்புகளை நிறையத் தர முனைவதால், இத்தொடரின் ஒவ்வொரு பகுதியையும் படிப்பதற்கு வசதியாகத் தவணைகளில் அஞ்சலிடுகிறேன்.

2. செய்யுள் உறுப்புகள்

தொல்காப் பியம்தரும் செய்யுள் உறுப்புகள்
துல்லிய மாக முப்பத்து நான்கு.

மாத்திரை, எழுத்து, அசையும், சீரும்,
அடியும், யாப்பும், மரபும், தூக்கும்,
தொடையும், நோக்கும், பாவும், அளவும்,
திணையும், கைகோள், கூற்றும், கேட்போர்,
களனும், காலம், பயனும், மெய்ப்பாடு,
எச்சம், முன்னம், பொருளும், துறையும்,
மாட்டு, வண்ணம், அம்மை, அழகு,
தொன்மை, தோலும், விருந்து, இயைபு,
புலனும், இழைபும் என்றிவ் வாறு.

2.1. செய்யுள் இயற்ற

செய்யுள் இயற்ற உறுப்புகள் ஏழு:
அளவும், பாவும், அடியும், சீரும்,
அசையும், எழுத்தும், மாத்திரை யாக.

பாவே செய்யுள் என்பது ஆகும்;
அந்தப் பாவும் அளவுடன் வரும்;
பாவின் அளவு அடிகள் கணக்கு;
அடியின் அளவு சீர்கள் கணக்கு;
சீரின் அளவு அசைகள் கணக்கு;
அசையில் எழுத்துகள் ஒருங்கே அசையும்;
எழுதப் படுவன எழுத்துகள் ஆகும்;
எழுத்தொலிக் காலம் மாத்திரை யாகும்.

இந்த ஏழு உறுப்புகள் எல்லாம்
வழக்கில் உண்டு, செய்யுளில் உண்டு.
வழக்கில் ஏழும் வரைவின் றிவரும்;
செய்யுளில் ஏழும் கட்டுண் டுவரும்.
வழக்கு என்பது பேச்சு வழக்கு,
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.

2.2. வரிகள் அமைக்க

செய்யுள் அமைக்க உறுப்புகள் ஏழெனில்
வரிகள் அமைக்கப் பத்தும் இரண்டும்:
வனப்பு, தொடை, மாட்டு, வண்ணம்,
அம்மை, அழகு, தொன்மை, தோலும்,
விருந்து, இயைபு, புலனே இழைபு
என்பன அந்தப் பத்தும் இரண்டும்.

வனப்பால் வருவது கலையின் நுகர்ச்சி;
தொடையால் இயல்வது சீரடித் தொடுப்பு.

விலகியும் அணுகியும் உள்ள சொற்களைப்
பொருளால் பிணித்தல் மாட்டு என்பது.

வண்ணம் என்பது செய்யுளின் தாளம்;
அம்மை என்பது சொற்களின் அமைதி.

எளிய சொற்களும் பொருந்திய தாளமும்
அமைய வருவதே அழகு என்பது.

தொன்மை என்பது பழமை மதிப்பு;
தோலால் வருவது செய்யுளின் பொற்பு.

விருந்தால் வருவது செய்யுளின் புதுமை;
இயைபில் சொற்கள் ஒலிகளில் ஒன்றும்.

வழக்கில் எளிதே பயிலும் சொற்கள்
பயின்று குறிப்பால் சொல்வது புலனாம்.

தேர்ந்த சொற்கள் உயிரொலி நீண்டு
மெல்லின இடையின மெய்கள் செறிந்து
பயிலும் நடையே இழைபு என்பது.

*****
 
2.3. பொருள் உணர்த்த

வரிகளில் பயில்வது பன்னிரண் டானால்
பொருளினை உணர்த்தப் பத்தும் மூன்றும்:
நோக்கும், திணையும், கைகோள், கேட்போர்,
கூற்றும், களனும், காலம், பயனும்,
மெய்ப்பா டெச்சம், முன்னம், துறையும்,
பொருள்வகை என்று பத்தும் மூன்றும்.

நோக்கு என்பது கவியின் பார்வை,
செய்யுள் அணிகளால் கேட்டாரைக் கவர்ந்து
தன்னை நோக்கச் செய்யும் உறுப்பு.

திணை என்பது அகமும் புறமும்;
அகமாம் மனதின் வடிகால் என்பது;
புறமாம் வெளிநில வாழ்க்கை என்பது;
திணைகள் முற்றும் அறிந்திட நாடுவீர்
தொல்காப் பியத்தில் பொருளதி காரம்.

கைகோள் என்பது களவும் கற்பும்,
ஆண்-பெண் வாழ்வின் ஒழுங்கும் முறையும்.

கேட்போர் என்பது செய்யுள் மாந்தர்,
கூற்று என்பது அவர்களின் பேச்சு.

சந்தர்ப்ப சூழல் என்பது களனாம்,
காலம் என்பது நேரமும் பொழுதும்;
செய்யுளின் தாக்கம் பயனெனப் படுமே.

மெய்ப்பா டென்பது தங்கும் உணர்வு;
உணர்வில் எட்டு வகைகள் உண்டு:
நகைத்தல், அழுதல், இகழ்தல், வியத்தல்,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.

முன்னம் என்பது கவிஞன் மரபு;
எச்சம் என்பது கவிஞன் போக்கு.

துறை என்பது மரபைத் தழுவல்;
பொருள்வகை என்பது வேறு படுதல்.

2.4. யாப்பும் தூக்கும்

யாப்பும் தூக்கும் எஞ்சி யிருப்பன:
யாப்பு என்பது பாட்டின் செயல்வகை;
மரபு என்பது நிறுவிய வழக்கு;
தூக்கு என்பது மதிப்பினை ஆய்தல்.

செய்யுள் உறுப்புகள் முப்பத்து நான்கில்
பாக்கள் நீண்டால் பொருந்தி வருவது
அழகு, தொன்மை, தோலும், விருந்து,
இயைபு, புலனும், இழைபும் என்று
இறுதி எட்டாக உள்ள உறுப்புகள்.

மற்றவை எல்லாம் ஒற்றைப் பாவிலும்
பாக்கள் திரட்டிலும் உகந்து வருவன.

2.5. யாப்பியல்

வேறொரு நோக்கில் பார்க்கும் போது
மாத்திரை, எழுத்து, அசையும், சீரும்,
அடியும், யாப்பும், தூக்கும், தொடையும்,
பாவும், அளவும், மாட்டு, வண்ணம்,
இயைபு, இழைபு என்று மொத்தம்
பத்தும் நான்கும் அமைவது யாப்பியல்.

பொருளைக் குறித்தவை பத்தும் ஒன்பதும்:
நோக்கும், திணையும், கைகோள், கூற்றும்,
கேட்போர், களனும், காலம், பயனும்,
மெய்ய்ப்பா, டெச்சம், முன்னம், பொருளும்,
அம்மை, அழகு, தொன்மை, துறையும்,
தோலும், விருந்தும், புலனும் என்று.

மரபு என்னும் நிறுவிய வழக்கு
பொருளிலும் வடிவிலும் பொருந்தி வருவது.

2.6. மூவகை யாப்பு

யாப்பியல் குறித்த பத்தும் நான்கும்
மேலும் பிரிவது வகைகள் மூன்றாய்.

அடிப்படை உறுப்புகள் ஏழு ஆகும்:
மாத்திரை, எழுத்து, அசையும் சீரும்,
அடியும், பாவும், அளவும் என்று.

செய்யுள் செயல்வகை இரண்டில் அமையும்:
வடிவம் யாப்பில், மதிப்பு தூக்கில்.

அழகும் மகிழ்ச்சியும் ஐந்தில் அமையும்:
தொடையும், மாட்டும், வண்ணம், இயைபு,
தேர்ந்த சொற்களின் நடையில் இழைபு.

*****
 
3. யாப்பு விவரணம்: ஓசை

அடிபடை உறுப்புகள் முதலில் ஆய்வோம்.
மாத்திரை என்பது எழுத்தொலிக் காலம்;
எனவே முதலில் ஓசையை ஆய்வோம்.

3.0. செய்யுள் ஓசை

ஓசை என்பது ஒலிகளின் இணைப்பு.
இயலிசை நாடகம் மூன்றிலும் ஓசை
ஒலியின் ஊடக மாக வருவது.

இயலெனும் உரைநடை வழக்கில் ஓசை
அலைகளின் இரைச்சலாய்க் குழம்பி வருவது.
நாடக வழக்கிலும் உரைநடை போன்றே.

செய்யுள் வழக்கில் ஓசை இசைந்து
இயல்பாய்ப் பயின்று ஒருங்கே வருமே.

தமிழில் செய்யுள் ஓசைகள் நான்கு:
அகவல், செப்பல், துள்ளல், தூங்கல்.

3.1. அகவல் ஓசை

மயில்கத் துவதை அகவல் என்கிறோம்;
அகவிக் கூறலால் அகவல் எனப்படும்.

உயர்த்துக் கூறும் ஓசை அகவல்.
எடுத்தல் என்றும் அதனை அழைப்பர்.

செய்யுளின் அகவல் எடுத்தல் ஓசை:
தடைகள் இல்லாது செல்லும் ஓட்டம்;
நினைத்தது உரைத்தலாம் நினைத்த வாறு.

ஒருவரே உரைக்க மற்றவர் கேட்பார்,
இருவர் உரையா டலாக இன்றி.

ஒருவரே சொல்வது அழைத்தல் எனப்படும்;
அழைத்தலில் அகவல் ஓசை கேட்கும்!

தச்சு வேலை செய்வோர் பேச்சில்
போர்க்களம் பற்றிப் பாடுவோர் பாட்டில்
வருவது உரைப்போர் கூறும் சொற்களில்
தனக்குத் தானே பேசும் பேச்சில்
அகவல் ஓசை கேட்பது அறியலாம்.

அகவல் ஓசை பயின்று வருவது
ஆசிரியப் பாவெனும் அகவற் பாவில்.

ஆசிரியப் பாவில் ஆசிரி யத்தளை
வெண்டளை விரவிட அகவல் கேட்கும்.

மாமுன் நேரசை, நிரையசை விளம்முன்
என்று வந்தால் ஆசிரி யத்தளை.

மாமுன் நிரையும் விளம்,காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.


அகவல் ஓசை பயிலுமோர் செய்யுள்:
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளை*இ
அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
--அகநானூறு 149.


இன்னொரு உதாரணம் பாரதி தருவது:
வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!


3.1. அகவற் பயிற்சி
நாமும் அகவல் புனைந்திடு வோமா?
அகவல் ஓசையின் தேவைகள் என்ன?

நேர்முன் நேரோ நிரையோ
நிரைமுன் நிரையோ நேரோ
ஈரசைச் சீர்கள் எப்படி வரினும்
சீரிடை அடியிடை பொருந்தி வந்திட
அகவல் ஓசை கேட்குமென் றறிந்தோம்.
(மூவசைச் சீர்கள் இப்போது வேண்டாம்.)

வாசலில் யாரெனப் பாரடி மகளே!
வேறுயார், உங்கள் அறுவை நண்பரே!


இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
வா/சலில் யா/ரெனப் பா/ரடி மக/ளே!
வே/றுயார், உங்/கள் அறு/வை நண்/பரே!

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்-நிரை நேர்-நிரை நேர்-நிரை நிரை-நேர்
நேர்-நிரை நேர்-நேர் நிரை-நேர் நேர்-நிரை

தந்தையும் மகளும் அழைத்துக் கூவிட
அசைகள் யாவும் இப்படிப் பொருந்திட
அகவல் ஓசை வருவது தப்புமோ?

தந்தையின் கூவல் கூர்த்த தொடர்ச்சி.
வாசலில் யாரெனப் பாரடி மகளே!

மகளின் கூவல் நின்று ஒலிப்பது,
அயர்ச்சி, அங்கதம், குரலில் தெரிய.
வேறுயார், உங்கள் அறுவை நண்பரே!

இந்த வரிகளை இப்படி எழுதினால்
வேறு ஓசைகள் விரவிடக் கேட்பீர்:

வாசலில் யாரென்று பார்த்திடுவாய் மகளே!
வேறுயார், உங்களது அறுத்திடும் நண்பரே!

அகவல் குறைந்து வினவலாக மாறி
செப்பலும் துள்ளலும் சேர்வது காண்பீர்.

கவிதையைச் செய்யுளில் புனையும் போது
இத்தனை அழகுகள், அணிகள் நோக்கி
மனதில் வருவதை வந்தபடி கொட்டாமல்
யோசித்துக் கவினுடன் எழுத முனைந்தால்
கவிதையின் விதைகள் படிப்போர் மனதில்
மெல்லத் துளிர்விட்டு நின்று நிலைக்கும்.
மத்தாப் பாக எரிந்து மறையாது!

எனவே கவிதை முனையும் அன்பர்காள்!
செய்யுள் நன்கு புனையக் கற்பீர்.

தறியின் பாவு ஊடுவது போலப்
பாவி நடப்பதே பாட்டென் றுணர்க.

ஓசை உணர்ந்து அசைகளைப் பிணைத்தால்
தளைகள் தாமே பொருந்திட
பாவகை எப்படி ஆயினும்
எழுதும் பாட்டு சிறப்பது நிச்சயம்.

*****
 
Last edited:
நேர் என்றால் என்ன நிரை என்றால் என்ன மா விளம் என்பன என்ன மந்திரச் சொற்கள் என்பவற்றையும் விளக்கிவிட்டுத் தொடர்ந்தால் நலம்.

வா/சலில் யா/ரெனப் பா/ரடி மக/ளே!
என்று ஏன் பிரிக்கவேண்டும்?
ம/களே என்று பிரித்தால் என்ன?
 
3.1. பின்குறிப்பு: (திரு. ’விக்ரம’வின் அஞ்சலில் பரிந்துரைத்தபடி)

குறிலோ நெடிலோ தனித்து வந்தாலோ,
ஒற்றடுத்து வந்தாலோ, நேரசை எனப்படும்.

’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.

தனிக்குறில் அசைகள் பெரிதும் சீரின்
இறுதியில் வருவது: ’பானு, படகு’.

ஒற்றுகள் எத்தனை வரினும் அசையாகா.
’அர்த்தம்’ என்பது நேர்-நேர்’ ஆகும்.

குறில்கள் இரண்டோ, குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும், ஒற்றடுத்தும் வந்தால் நிரையசை.

’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.

சீர்களின் அசைகளைப் பிரிக்கும் போது
குறில்கள் தொடர்ந்து வந்தால்,
இருகுறில் இணைப்பினை
நிரையெனச் சேர்த்த பின்னரே,
ஏதும் தனிக்குறில் மீதம் இருப்பின்
நேரசை யதுவெனப் பிரிக்க வேண்டும்.
அப்படி மிஞ்சும் தனிக்குறில்
சீரின் இறுதியில் வருவது காணலாம்.

இதனால் ’மகளே’ என்பது ’மக/ளே’
என்றுதான் ஆகும்; ’ம/களே’ ஆகாது.
’வருவதறி’ என்பது ’வரு/வத/றி’ ஆகும்.
’வருவதறிகுறி’ என்பது ’வரு/வத/ரிகு/றி’ ஆகும்.

அசைச்சீர் வகைகளின் வாய்பா டுகளும்
செய்யுளை அலகிடும் முறைகள் பற்றியும்
உரிய பகுதிகளில் அறியப் பெறலாம்.

*****
 
Last edited:
3.2. செப்பல் ஓசை

செப்புதல் என்றால் பதில்சொற் கூறுதல்:
தானே இயல்பாக மறைவின்றி மொழிவது.

"மறைத்துக் கூறாது செப்பிக் கூறுதல்"
என்பார் நச்சினார்க் கினியர் உரையில்.

"இசைகுறித்து வருதலின்றி செப்புத லாகிய
வாக்கியம் போன்ற ஓசை" என்று
கூறுவார் இளம்பூ ரணர்தம் உரையில்.

வெண்பா யாப்பது செப்பல் ஓசையில்;
வெண்பாவில் வராது அகவல் ஓசை.
செப்பலை விளக்கும் கீழ்வரும் வெண்பா:

வெண்பா இயற்றத் தளையாகும் வெண்டளையாம்;
வெண்டளையால் தானே வருவது செப்பலோசை;
மாமுன் நிரையும் விளம்காய்முன் நேரும்
வருவது வெண்டளை காண்.


செப்பல் ஓசை பயின்று வருகிற
வெண்பா வுக்கோர் உதாரணம் காண்போம்:

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம்.
--நான்மணிக்கடிகை 11


இன்னொரு உதாரணம் பாரதி தருவது:

நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்---உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே, இம்மூன்றும் செய்.


3.2. செப்பல் பயிற்சி
நாமும் செப்பல் புனைந்திடு வோமா?
செப்பல் ஓசையின் தேவைகள் என்ன?

மாமுன் நிரையும் விளம்முன் நேரும்
காய்முன் நேரும் சீரிடை அடியிடை
வந்தால் செப்பல் தானே பயிலும்.

காய்ச்சீர் என்பது நேரில் முடியும்
மூவசைச் சீரென நினவிற் கொள்வோம்.

தானே இயல்பாக மொழிவது மற்றும்
வாக்கியம் போல அமைவது செப்பல்.

கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடக்க
மாடியில் போட்ட வடாம்.


(இந்த அடிகளில் வருவது வெண்பா.
வெண்பாவின் தேவைகள் பின்னர்க் காண்போம்.)

இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
கண்/ணோ/டு கண்/ணோக்/கின் காக்/கை பறக்/குமா?
மண்/ணோ/டு காற்/றடித்/தால் உள்/ளம் பத/றுமே!
பா/டுபட்/டுக் கா/யவைத்/து வாழ்க்/கை நடக்/க
மா/டியில் போட்/ட வடாம்.

சீர்களின் அசைகள் நோக்கிடக் கிடைப்பது
நேர்-நேர்-நேர் நேர்-நேர்-நேர் நேர்-நேர் நிரை-நிரை
நேர்-நேர்-நேர் நேர்-நிரை-நேர் நேர்-நேர் நிரை-நிரை
நேர்-நிரை-நேர் நேர்-நிரை-நேர் நேர்-நேர் நிரை-நேர்
நேர்-நிரை நேர-நேர் மலர்.

மூன்றாம் நான்காம் அடிகளைப் பிணைத்து
நேர்-நேர் எனவரும் தளைமுரண் கண்டீரோ? (நடக்க--மாடியில்)
இம்முரண் போக்கிட இப்படி மாற்றுவோம்.

கண்ணோடு கண்ணோக்கின் காக்கை பறக்குமா?
மண்ணோடு காற்றடித்தால் உள்ளம் பதறுமே!
பாடுபட்டுக் காயவைத்து வாழ்க்கை நடந்திட (’நடக்க’ என்பதை மாற்றி)
மாடியில் போட்ட வடாம்.


கீழ்வரும் வரிகளை அலகிட்டுப் பார்த்து
செப்பல் ஓசை சீரிடை அடியிடை
வருவது கண்டு உறுதி செய்யவும்.

நேரம் தவறாது வேளைக்குச் சாப்பாடு
நாயர் கடையில் நினைத்தபோது கரம்டீ
வாரம் ஒருமுறை மாட்டினி சினிமா
பேச்சிலர் வாழ்வே வாழ்க்கை.


[உங்கள் முயற்சியை இங்கே அஞ்சலிடவும்.]

கீழுள்ள வரிகளை அலகிட்டுப் பார்த்து
தளைதட்டும் நான்கசைச் சீரையும்
அடியிடைத் தளைதட்டும் சீரையும்
தக்கபடி மாற்றிச் சரியாக எழுதவும்.

எல்லோரும் தூங்கும்போது எனக்கு விழிப்பு
பகலே இரவு இரவே பகலாம்
யாரெது சொன்னாலும் கேட்க வேண்டும்
அபார்ட்மென்ட் வாச்மேன் நான்.


[உங்கள் முயற்சியை இங்கே அஞ்சலிடவும்.]

*****
 
Last edited:
Sri. Saideo, Greetings.

This is a very nice thread. I am enjoying it. Hats off to your efforts. I know how hard it would be to type in Tamizh. Great effort!

Cheers!
 
namaste shrI Raghy.

I am happy that you like this thread. Since you are a kavithai-abhimAni, why don't you try your hand in the interactive exercises set here, and perhaps try a few lines of traditional poetry?
 
3.3. துள்ளல் ஓசை

துள்ளல் என்பது குதித்தல் ஆகும்.
துள்ளலில் நடையே தடைப்படும்;
பசுவின் கன்று துள்ளல் போல,
இடையிடை உயர்ந்து மீண்டும் சமன்படும்.
துள்ளலை விளக்கும் கீழ்வரும் கலிப்பா:

ஓரடிக்குள் அறுதியிட்டு அடியிடையே தொடராமல்
காய்ச்சீர்முன் நிரைவந்த கலித்தளையால் கலிப்பாவில்
துள்ளலோசை பயின்றுவந்து பசுக்கன்றை நினைவூட்டும்.


கீழ்வந்த கலிப்பாவின் தளையோசை அறிந்துகொள்க:

ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள்
கருநோக்கா வகைக்கருணைக் கண்ணோக்கம் செயுஞானத்
திருநோக்க அருணோக்கம் இருநோக்கும் செயச்செய்து
மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்.
--குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை


3.3. துள்ளல் பயிற்சி
நாமும் துள்ளல் புனைந்திடு வோமா?
துள்ளல் ஓசையின் தேவைகள் என்ன?

காய்ச்சீர்முன் நிரைவந்தால் கலித்தளை யாகும்
கலிப்பாவில் அதுபெரிதும் பயின்று வந்திடும்.
சீரிடைத் தளைக்கும், அடியிடை அல்ல.

வீட்டுக்குள் பறந்தோடும் குழந்தையைப் பிடித்திழுத்து
இடுப்பினிலே இருத்திவைத்து நிலாகாட்டி உணவூட்டினாள்.


இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
வீட்/டுக்/குள் பறந்/தோ/டும் குழந்/தை/யைப் பிடித்/திழுத்/து
இடுப்/பினி/லே இருத்/திவைத்/து நிலா/காட்/டி உண/வூட்/டினாள்.

நேர்-நேர்-நேர் நிரை-நேர்-நேர் நிரை-நேர்-நேர் நிரை-நிரை-நேர்
நிரை-நிரை-நேர் நிரை-நிரை-நேர் நிரை-நேர்-நேர் நிரை-நேர்-நிரை

குழந்தையின் துள்ளலும் தாய்தடு மாற்றமும்
பொருளிலும் ஒலியிலும் இயல்வது நோக்குக.

சீர்களில் மட்டுமே தளைத்து வந்தாலும்
கலித்தளை மட்டுமே பயின்று வருவதால்
துள்ளல் தொடர்ந்து எழுதுதல் கடினம்.

கீழ்வரும் வரிகளை அலகிட்டுப் பார்த்து
துள்லல் ஓசை சீரிடை வருவது
ஒவ்வொரு வரியிலும் உறுதி செய்யவும்.

படியளக்கப் பெருமாளின் வரம்தரும்கை இருக்கிறதே!
அடிநோக்க நதிகங்கா அமுதூற்றாய்ப் பொழிகிறதே!


கீழ்வரும் வரிகளில் ஈரசைச் சீர்களை
தக்க வேற்றுமை விகுதிகள் கொடுத்து
காய்வரும் சீர்களாக மாற்றி
கலித்தளை வருவது உறுதி செய்து
துள்ளை ஓசை கேட்க எழுதுக.
[உங்கள் முயற்சியை இங்கே அஞ்சலிடவும்.]

வானப் பரப்பில் மேகச் சுவடில்லை!
சூரியன் தெரியாத வெளியில் நீலநிறம்!


*****
 
3.4. தூங்கல் ஓசை

நித்திரை மயக்கம் பயின்று வருமாம்
வஞ்சித் தளையில் தூங்கல் ஓசை.

தூங்கலில் வருவது தளைகள் இரண்டு.
கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சியில்,
கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சியில்.

தூங்கலை விளக்கும் கீழ்வரும் வஞ்சிப்பா:
வஞ்சித்தளை ஒன்றாமலும் பொருந்தியும்வரும்
தூங்கல்*ஒலி ஓரடியினில் முடிவுறுவது வஞ்சிப்பா.


தூங்கலோசை கேட்கிறதா இந்தப்பாவில்?
மாகத்தினர் மாண்புவியினர்
யோகத்தினர் உரைமறையினர்
ஞானத்தினர் நய*ஆகமப்
பேரறிவினர் பெருநூலினர்
காணத்தகு பல்கணத்தினர்
. . என்றே
---கி.வா.ஜ.

மரபு சார்ந்த உரைகளில் கூறுவர்:
அகவல், செப்பல் இரண்டும் வருமே
செய்யுள் உரைநடை இரண்டு வடிவிலும்;
எனினும், துள்ளல், தூங்கல் இரண்டும்
செய்யுளில் மட்டுமே வரும். தவிர,
அகவல், செப்பல் அடியிடைத் தளைக்கும்;
துள்ளல், தூங்கல் அடிகளில் மட்டுமே.

3.4. தூங்கல் பயிற்சி
நாமும் தூங்கல் புனைந்திடு வோமா?
தூங்கல் ஓசையின் தேவைகள் என்ன?

கனிமுன் நிரையோ நேரோ வரவேண்டும்
கனிச்சீர் மூவசை, நிரையில் முடியும்.

ஆரியபவன் நெய்ரோஸ்ட்டினில் பொய்மணக்கும்!
பிரியாணியில் காய்கறிகளைத் தேடவேண்டும்!


இந்த வரிகளை அலகிடக் கிடைப்பது
ஆ/ரிய/பவன் நெய்/ரோஸ்ட்/டினில் பொய்/மணக்/கும்!
பிரி/யா/ணியில் காய்/கறி/களைக் தே/டவேண்/டும்!

நேர்-நிரை-நிரை நேர்-நேர்-நிரை நேர்-நிரை-நேர்
நிரை-நேர்-நிரை நேர்-நிரை-நிரை நேர்-நிரை-நேர்.

தூங்கல் ஓசை இங்கே எப்படி?
தூங்கல் ஓசையில் பாட்டின் விஷயம்
தூங்குவது பற்றி என்பது அல்ல.

அகவலு மின்றிச் செப்பலு மின்றித்
துள்ளலு மின்றி ஒலிகளில் மயக்கம்,
மந்தம், ஓய்வு, ஏக்கம் வந்திடத்
தூங்கல் ஓசை தளைகளில் கேட்கும்!

கீழ்வரும் வாக்கியம் ஒவ்வொன் றையும்
தனித்தனிச் செய்யுள் ஆக மாற்றி
இருசீர் உள்ள அடிகள் வருமாறு
ஒவ்வொரு சீரும் மூவசை யாக
கனிமுன் நேரோ நிரையோ வைத்து
சீரிடைக் கலித்தளை பயில எழுதுக.

1. நெல் கதிர்களின் தலைகளை தென்றல் காற்று கொய்து சென்றது!
2. இரண்டு மருங்குகளிலும் பரந்த மணல் இருக்க, கரை ஓரத்தில் கையகலத்துக்கு நீர் ஆடிடும் வறண்ட காவிரி.
3. பெருமாள் படி அளந்ததால் தம் பாவங்களைப் பணமாக்கி உண்டியலில் போட்டனர்!


*****
 
பயிற்சிகளின் விடைகள்

3.2. செப்பல் பயிற்சி
கொடுத்த வரிகள்:
எல்லோரும் தூங்கும்போது எனக்கு விழிப்பு
பகலே இரவு இரவே பகலாம்
யாரெது சொன்னாலும் கேட்க வேண்டும்
அபார்ட்மென்ட் வாச்மேன் நான்.

பிரச்சினை:
எல்/லோ/ரும் தூங்/கும்/போ/து எனக்/கு விழிப்/பு
பக/லே இர/வு இர/வே பக/லாம்
யா/ரெது சொன்/னா/லும் கேட்/க வேண்/டும்
அபார்ட்/மென்ட் வாச்/மேன் நான்.

1. ’தூங்கும்போது’ என்ற நாற்சீரை ’தூங்குகையில்’ அல்லது ’தூங்குவதால்’ என்று மாற்றினால் காய்ச்சீராகும்;
ஆனால் ’எனக்கு’ என்ற வரும்சொல்லின் நிரை தட்டும் (காய் முன் நேர் வரவேண்டும்).

எனவே, பொருள் கெடாமல் சொற்களை அனாவசியமாக மாற்றாமல், நீட்டாமல் இப்படி எழுதலாம்:
எல்லோரும் தூங்குகையில் என்பணி விழிப்பு (அல்லது)
எல்லோரும் தூங்குவதால் என்பணி விழிப்பு

’தூங்குகையில்’ எனும்போது காலத்தையும், ’தூங்குவதால்’ எனும்போது காரணத்தையும் குறிப்பது காண்க.

2. இந்தத் திருத்தங்கள் செய்த பின்னர் சீரைடைத் தளைகள் ஒழுங்கே அமைகின்றன.
அடியிடைத் தளைகளைப் பார்க்கும்போது
’விழிப்பு-பகலே’ ’வேண்டும்-அபார்ட்மென்ட்’ என்றன சரியாக உள்ளன.

ஆனால் ’பகலாம்-யாரெது’ என்ற இரண்டாம் அடியின் முடிவுடன் மூன்றின் தொடக்கம் சேரும்போது,
நேர்-நேர் என்று வந்து தளை தட்டுகிறது. இதனைச் சரிசெய்வது எளிது:
’யாரெது’ என்ற சொல்லை ’எவரெது’ என்று மாற்றிவிட, முதலில் நிரை வந்து அடிகள் தளைக்கும்.

சரியான வரிகள்:
எல்லோரும் தூங்குவதால் என்பணி விழிப்பு (’தூங்கும்போது, எனக்கு’ என்ற சொற்களை மாற்றி)
பகலே இரவு இரவே பகலாம்
எவரெது சொன்னாலும் கேட்க வேண்டும் (’யாரெது’ என்றதை மாற்றி)
அபார்ட்மென்ட் வாச்மேன் நான்.

*****
 
3.3. துள்ளல் பயிற்சி
கொடுத்த வரிகள்:
வானப் பரப்பில் மேகச் சுவடில்லை!
சூரியன் தெரியாத வெளியில் நீலநிறம்!

வா/னப் பரப்/பில் மே/கச் சுவ/டில்/லை!
சூ/ரியன் தெரி/யா/த வெளி/யில் நீல/நிறம்!

பிரச்சினை:
ஈரசைச் சீர்களில் தக்க விகுதிகள் சேர்த்து கலித்தளை வரவேண்டும்.
காய் முன் நிரை கலித்தளை.
கலித்தளை சீரிடை வர, துள்ளல் ஓசை அமையும்.

சரியான வரிகள்:
வானத்தின் பரப்பினிலே மேகத்தின் சுவடில்லை!
சூரியனே தெரியாத வெளியெங்கும் நிறம்நீலம்!


3.4. தூங்கல் பயிற்சி
கொடுத்த உரைநடை வரிகள்:

1. நெல் கதிர்களின் தலைகளை தென்றல் காற்று கொய்து சென்றது!

இதன் தூங்கல் ஓசைச் செய்யுள்:
நெற்கதிர்களின் தலையெல்லாம்
கொய்துசென்றது தென்காற்று!


2. இரண்டு மருங்குகளிலும் பரந்த மணல் இருக்க, கரை ஓரத்தில் கையகலத்துக்கு நீர் ஆடிடும் வறண்ட காவிரி.

இருமருங்கிலும் மணல்பரந்திடக்
கரைவிளிம்பினில் கையகலமே
நீராடிடும் வறள்காவிரி.


2. பெருமாள் படி அளந்ததால் (அவர்கள்) தம் பாவங்களைப் பணமாக்கி உண்டியலில் போட்டனர்!

படியளந்திடும் பெருமாளிடம்
பாவங்களைப் பணமாக்கிப்
போட்டனரே உண்டியலில்!


*****
 
4. யாப்பு விவரணம்: அடிப்படை உறுப்புகள்

ஓசை ஒருங்கே அசையாய் இசைந்து
இயல்பாய் அமைவது செய்யுள் என்றும்
ஒசை ஒருங்கே அமையத்
தளைகள் முக்கியம் என்றும்
அறிந்த பின்னர் இனிமேல்
செய்யுளின் அடிப்படை உறுப்புகள் ஆய்வோம்.

4.1. மாத்திரை

மாத்திரை என்பது கால அளவு.
கண்ணிமை கைநொடி செய்தல் காலம்
மாத்திரை ஒன்று என்பது அறிக.

மாத்திரை என்பது எழுத்தொலிக் காலம்.
எழுத்தின் மாத்திரை இப்படி யாகும்:
குறிலொன்று, நெடிலிரண்டு, உயிரளபெடை மூன்று.

குற்றிய லிகரம், குற்றிய லுகரம்,
ஆய்தம், மெய்யிவை அரைமாத் திரையே;

ஒற்றளபெடை, ஐகாரக் குறுக்கம் ஒன்று,
மகரக் குறுக்கம் கால்மாத் திரையே;
உயிரின் அளவே உயிர்மெய் அளவு.

4.2. எழுத்து

4.2.1. எழுத்தென்பது:
எழுத்தில் வரைவது பேசும் ஒலியாம்;
எழுதப் படுவதால் எழுத்தெனப் பட்டது.

4.2.2. எழுத்தின் வகைகள்:
எழுத்தின் வகைகள் மூன்று ஆகும்,
உயிரும் மெய்யும் சார்பும் என்று.

4.2.3. முதலும் சார்பும்:
உயிரும் மெய்யும் முதலெழுத் தெனப்படும்;
முதல்சார்ந்து வந்தது சார்பெழுத் தாகும்.

4.2.4. முதல் முப்பது:
முதலில் வருவது மொத்தம் முப்பது;
உயிரெழுத் துகளில் பத்தும் இரண்டும்
மெய்யெழுத் துகளில் பத்தும் எட்டும்.

4.2.5. உயிரின் வகைகள்:
அ-முதல் ஔ-வரை உயிரெழுத் தாகும்;
உயிரில் வகைகள் மூன்று உண்டு
குறில்,நெடில், அளபெடை என்று.

குறில்கள் ஐந்து: அ,இ,உ, எ,ஒ-என,
நெடில்கள் ஏழு: ஆ,ஈ,ஊ,ஏ, ஐ,ஓ,ஔ.

4.2.6. மெய்யின் வகைகள்:
இக்-முதல் இன்-வரை மெய்யெழுத் தாகும்;
மெய்யில் வகைகள் மூன்று உண்டு
வல்லினம், மெல்லினம், இடையினம் என்று.

கசடதபற வல்லின மாகும்;
ஙஞணநமன மெல்லின மாகும்;
யரலவழள இடையின மாகும்.
மெய்யெனும் உயிரிலா எழுத்துகள் யாவும்
ஒற்றுப் பெறுவதால் ஒற்றெனப் படுமே.

4.2.7. சார்பின் வகைகள்:
சார்பு எழுத்துகள் பத்து வகைப்படும்:
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை,
குற்றிய லுகரம், குற்றிய லிகரம்,
ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம்,
மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம்
என்பன அந்தப் பத்து வகைகள்.

முதலெழுத் துகளைச் சார்ந்து வருதலால்
மேல்வரும் பத்தும் சார்பெழுத் தெனப்படும்.

4.2.8. உயிர்மெய்:
இக்-முதல் இன்-வரை மெய்கள் ஒவ்வொன்றும்
அ-முதல் ஔ-வரை உயிர்கள் சேர்ந்து
க-முதல் ன-வரை இருநூற்றுப் பதினாறாக
வருவது உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.

4.2.9. ஆய்தம்:
உயிரிலும், மெய்யிலும், உயிர்மெய்யிலும் சேரா
அஃ-என்னும் ஆய்த எழுத்துக்கு
முப்புள்ளி, முப்பாற் புள்ளி, தனிநிலை
என்று, வேறு பெயர்களும் உண்டு.

முன்னொரு குறிலும் பின்னொரு வல்லினமும்
பெற்று இடைவரும் ஆய்த எழுத்தே.
அதாவது, அஃது, எஃகு, எனவரும்.

தனக்கே உரிய அரைமாத் திரையில்
குறையா தொலிப்பது முற்றாய்த மாகும்.

*****
 
4.2.10. அளபெடை யென்பது:
செய்யுளில் ஓசை குறையும் போது,
உயிர்நெடில் ஏழும்,
ஙஞணநமன வயலள பத்தும்,
ஆய்த எழுத்தும்,
தத்தம் மாத்திரை நீண்டு ஒலிக்கும்
அளபெடை இரண்டு: உயிரும் ஒற்றும்.

4.2.11. உயிரளபெடை:
நெடில்பின் தக்க குறிலே வந்து
ஒசை நிரப்பும் உயிரள பெடையாம்
மூன்று மாத்திரை யாக ஒலிக்கும்.

அளபெடுக்கும் போதொரு இனவெழுத்து தோன்றும்:
ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ,
ஐஇ, ஓஒ, மற்றும் ஔஉ.

4.2.12. செய்யுளிசை அளபெடை:
ஓசை நிரப்ப உயிர்நெடில் எழுத்துகள்
முதலிடை கடையில் அளபெடுத்து வந்தால்
செய்யுளிசை அளபெடை என்று பெயர்பெறும்.

’ஆஅதும் என்னுமவர்’ என்று முதலிலும்,
’தெய்வந் தொழாஅள்’ என்று இடையிலும்,
’நல்ல படாஅ’ என்று கடையிலும்
செய்யுளிசை அளபெடுத்து வருவது காண்க.

4.2.13. இன்னிசை அளபெடை:
ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
இன்னிசை நோக்கி அளபெடுத்து வந்தால்
இன்னிசை அளபெடை என்று பெயர்பெறும்.

’கெடுப்பதூஉம் கெட்டார்க்கு’, ’உடுப்பதூஉம், உண்பதூஉம்’
என்பன இன்னிசை அளபெடைச் சான்றுகள்.

4.2.14. சொல்லிசை அளபெடை:
ஓசை குன்றா விடத்தும் பாட்டில்
ஒருசொல் மற்றொன் றாக வேறுபடுத்தி,
சொல்லிசை கூட்ட வருவது
சொல்லிசை அளபெடை என்று பெயர்பெறும்.

"உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னும் உளேன்"
என்ற குறளில், நசையெனும் விருப்பம்,
அளபெடுத்து நசைஇ, விரும்பி என்று
ஆனது சொல்லிசை அளபெடைச் சான்று.

4.2.15. ஒற்றள பெடை:
மெய்யெழுத்து மிகுந்து ஒலித்து பாட்டில்
ஒசை நிரப்புவது ஒற்றள பெடையாம்.

செய்யுள் ஓசை குறையு மாயின்
ஈடு செய்ய இடைகடை அளபெடுத்து
நீண்டு ஒலிக்கும் பதினொரு எழுத்துகள்
ஙஞணநமன வயலள ஆய்தம் என்பன,
அளபெடுத் ததுகாட்ட மீண்டும் எழுதப்படும்.

’எஃஃகு இலங்கிய’, ’பூவுந் தண்ண் புனமயில்’,
’இலங்ங்கு வெண்பிறை’ என்பன சான்றுகள்.

4.2.16. முற்றிய லுகரம்:
மாத்திரை குறையா தொலிக்கும் உகரம்
முற்றிய லுகரம் என்று பெயர்பெறும்.

இஃது தனிக்குறில் அடுத்தும்
மெல்லின இடையின மெய்மேல் ஏறியும்
வருவது சான்றாக: ’நகு,தடு, தபு,பசு,
அது,அறு, தும்மு, கதவு, உண்ணு’
சொற்களில் உகரம் முழுவதும் ஒலிக்கும்.

4.2.17. குற்றியலுகரம்:
எனினும், குசுடு துபுறு என்ற
வல்லின உகர மானது,
தனிக்குறில் அல்லாத மற்றச்
சொற்களில் வரும்போது,
குற்றிய லுகரமாக
அரைமாத்திரை அளவில் ஒலிக்கும்.

4.2.18. குற்றியலிகரம்:
நிலைமொழி ஈற்றில் உகரம் நிற்க
வருமொழி முதலில் யகரம் வந்தால்,
உகரம் இகர மாகத் திரிந்து,
அரைமாத் திரையால் குறைந்து ஒலித்து
குற்றிய லிகரம் ஆகி விடும்.

நாடு + யாது = நாடியாது என்றும்
வரகு + யாது = வரகியாது என்றும்
கேள் + மியா = கேண்மியா என்றும்
செல் + மியா = சென்மியா என்றும்
வருவது குற்றிய லிகரச் சான்றுகள்.

4.2.19. ஐகாரக் குறுக்கம்:
ஐ-எனும் உயிரெழுத்து தனித்து வந்தால்
இரண்டும் மாத்திரை யளவில் ஒலிக்கும்.

அதுவே மற்ற எழுத்துகள் சேர்ந்து
முதலிடை கடையில் வந்த போது
ஒருமாத் திரையாகக் குன்றி ஒலிப்பது
ஐகாரக் குறுக்கும் என்று பெயர்பெறும்.
ஐப்பசி, தலைவன், வலை,கலை சான்றுகள்.

4.2.20. ஔகாரக் குறுக்கம்:
ஔ-எனும் உயிரெழுத்து தனித்தோ அல்லது
தனித்து நிற்கும் உயிர்மெய் யாகவோ
தன்னை உணர்த்தி வரும்போதும்
அளபெடுத்து வரும்போதும்
தன்னிரு மாத்திரையில் குன்றாது ஒலிக்கும்.

அதுவே சேர்ந்து வரும்போது
முதலில் மட்டுமே வந்து
ஓசையில் குறைந்து மாத்திரை யளவு
ஒன்றரை அல்லது ஒன்றாக ஒலித்து
ஔகாரக் குறுக்கம் ஆகி விடுமே:
ஔவை, வௌவால், கௌதாரி சான்றுகள்.

4.2.21. மகரக் குறுக்கம்:
ணகர, னகர மெய்களின் முன்னும்
வகரத்தின் பின்னும் வருகிற மகரம்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பது மகரக் குறுக்கம் என்பது.

கேண்ம் = கேளும், மருண்ம் = மருளும்
போன்ம் = போலும், சென்ம் = செல்லும்
வரும் வங்கம் = வரும் கப்பல்
என்பன மகரக் குறுக்கச் சான்றுகள்.

4.2.22. ஆய்தக் குறுக்கம்:
லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சியால்
ஆய்தம் தோன்றி, இருபுறத் தொடர்பால்
அரையில் குறைந்து கால்மாத் திரையில்
ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் என்பது.

அல் + திணை = அஃறிணை
கல் + தீது = கஃறீது
முள் + தீது = முஃடீது
என்பன ஆய்தக் குறுக்கச் சான்றுகள்.

4.2.23. எழுத்தும் அசையும்:
எழுத்து என்பது தனியெழுத் தாகவும்;

’அக்ஷரம்’ என்று வடசொல் குறிக்கும்
’ஸிலபிள்’ என்று ஆங்கிலம் குறிக்கும்
’அசை’யென் பதாகத் தமிழ்மொழி குறிக்கும்
செய்யுளின் முக்கிய உறுப்பில்
குறில்நெடில் ஒற்று வகைகளில் இசைந்தும்;

தொடையெனும் உறுப்பில் எதுகை மோனை
முரணெனும் வகைகளில் தொடுக்க உதவியும்;

இயைபெனும் உறுப்பில் ஒலியில் ஒன்றியும்;
வண்ணம் என்பதில் தாளம் கூட்டியும்;
இழைபில் தேர்ந்த சொற்களின் நடையிலும்
அடிப்படை உறுப்பாக அசைந்து வருமே.

*****
 
4.3. அசை

4.3.1. அசையென்பது:
அவனின்றி அசையாது அணுவும் எனும்போது
அசையென்றால் அதிர்வாகும் என்பது விளங்கும்.
அணுக்கள் தனியே அசைவது அதிர்வு;
அணுக்கள் சேர்ந்து அதிர்வுகள் சீர்ப்பட்டு
ஒருமித்து அசைவது அசையென அறியலாம்.

4.3.2. எழுத்தும் அசையும்:
எழுத்துகள் தனியே அசையும் போது
ஓசை அவற்றில் முழுதாய் ஒலிக்கும்.
எழுத்துகள் சேர்ந்து அசையும் போது
ஓசைகள் குறையலாம், வலுவும் பெறலாம்.

’தாஅ’ என்று கேட்கும் போது
தாவின் ஓசை முழுதும் ஒலிக்கும்.
அதுவே ’தார்’என ஆகும் போது
மெய்யுடன் சேர்ந்து ஒலிகள் மழுங்கி
’தா’-வின் ஓசை குறைந்து ஒலிக்கும்.

’குயி’எனச் சொல்லும் போது அதிலே
தனிக்குறில் ஓசைகள் முரண்பட்டுப்
பொருளின்றி கேட்கும் அசைந்து.

அதுவே ’குயில்’எனச் சொல்லும் போது
இடையின ஒற்றின் வரவால்
தனிக்குறில் ஓசைகள் இயைந்து
இறுதி ஒற்றில் அழுத்தம் பெற்று
குயில்கள் பாடும் இன்னிசை சுட்டும்!

எழுத்தும் தனியே, தானே அசையும்,
தனியே வருகிற குறில்நெடில் எழுத்தும்
தனித்தனி அசையாய் ஆக முடியும்.

4.3.3. அசை வகைகள்:
அசைகளின் அடிப்படை உயிரொலிக் காலம்.
ஒற்றுகள் அசையா தனித்தோ இணைந்தோ.

அசையில் இரண்டு வகைகள் உண்டு:
நேரசை நிரையசை என்பன அவையே.

நேரே வருவதால் நேரனப் பட்டது:
ஒரேஒரு எழுத்தால் ஆவதால் நேரசை.

ஒன்றை யொன்று தொடர்வது நிரையாம்:
எழுத்துகள் இரண்டு தொடர்ந்து வந்து
இணைந்து அசைவதால் நிரையசை ஆவது.

4.3.4. நேரசை என்பது:
குறிலோ நெடிலோ தனித்து வந்தாலோ,
ஒற்றடுத்து வந்தாலோ, நேரசை எனப்படும்.

’இ,இல்; க,கல்;’ குறில்களின் நேரசை;
’ஆ,ஆல்; பா,பால்;’ நெடில்களின் நேரசை.
’பானு வந்தாள்’ என்ற தொடரில்
நேரிசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.

தனிக்குறில் அசைகள் பெரிதும் சீரின்
இறுதியில் வருவது: ’பானு, வாலி’.

ஒற்றுகள் எத்தனை வரினும் அசையாகா.
’அர்த்தம்’ என்பது நேர்-நேர்’ ஆகும்.

4.3.5. நிரையசை என்பது:
குறில்கள் இரண்டோ, குறில்நெடில் சேர்ந்தோ
தனித்தும், ஒற்றடுத்தும் வந்தால் நிரையசை.

’அணி,கனா’ குறிலிணை, குறில்நெடில் நிரையசை.
’அணில்,சவால்’ குறிலிணை, குறில்நெடில் ஒற்றடுத்தது.

’வழிவகை அறிந்திடாள்’, ’வெடிகளை வெடிப்பதால்’,
’வருவினை அறுப்பதால்’ என்ற தொடர்களில்
நிரையசைச் சான்றுகள் அனைத்தும் காண்க.

4.3.6. அசையும் அக்ஷரமும்:
ஓரசை தானே அக்ஷரம் ஆகாது.
நேரசை என்பதில் அக்ஷரம் ஒன்று.
நிரையசை என்பதில் அக்ஷரம் இரண்டு,
அவற்றில் முதலது என்றும் குறிலே.

4.3.7. அசையும் சொல்லும்:
சொல்லின் பகுதியே பொதுவில் வரினும்
அசையில் சொற்களும் வருவது உண்டு.

’தேமா’ என்கிற நேர்-நேர் அசைகளில்,
’தே’யென்பது ஒற்று நீக்கிய தேன்.
’மா’வென்பது மாவின் மரத்தைக் குறிக்கும்.

’கருவிளம்’ என்கிற நிரை-நிரை அசைகளில்,
’கரு’வின் அர்த்தம் சினையும், முட்டையும்,
’விள’த்தின் அர்த்தம் ’விளாமரம்’ ஆகும்.

*****
 
4.4. சீர்

4.4.1. சீரென்பது
ஓசை லயம்பட நிற்க உதவும்
செய்யுளின் உறுப்பு சீரெனப் படுமே.

நச்சினார்க் கினியர் கலித்தொகை உரையில்,
தாளம் என்பதில் மூன்று உறுப்புகள்,
தாளத்தின் காலச்சுழல் பாணியில் தொடங்கும்,
தாளத்தின் நீடிப்பு தூக்கில் அடங்கும்,
தாளத்தின் முடிவு சீரில் அடங்கும்
என்று சீரினைப் பாணியுடன் ஒப்பிடுவார்.

4.4.2. சீர் வகைகள்
நேரும் நிரையும் பல்வகை இணந்து
செய்யுளின் சீர்களில் கூடி வருமே.

ஓரசைமுதல் நான்கசைவரை உருவாகும் சீர்களில்,
ஈரசையும், மூவசையும் அதிகம் பயின்றும்,
நான்கசைச் சீர்கள் அருகியும் வருமே.

சீர்களின் வகைகளை நினைவில் வைக்க
மிகவும் உதவும் அவற்றின் வாய்பாடு.

4.4.3. ஓரசைச் சீர்கள்
’நாள், மலர், காசு, பிறப்பு’
என்பது ஓரசைச் சீர்களின் வாய்பாடு.

இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர், நிரை, நேர்பு, நிரைபு
என்னும் நால்வகை ஓரசைச் சீர்கள்.
வெண்பாவின் ஈற்றடியில் இறுதிச் சொல்லாக
மட்டுமே இவற்றில் ஓன்று வருமே.

’காசு, பிறப்பு’ ஓரசைச் சீர்களே.
தனிக்குறில் தவிர மற்ற நேருடன்
குற்றிய லுகரம் சேர்ந்தால் நேர்பு.
நிரையுடன் சேர்ந்தா லாகும் நிரைபு.

’நாள்’-இல் முடிவது கீழ்வரும் குறள்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.


’மலர்’-இல் முடிவது கீழ்வரும் குறள்:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.


’காசு’-வில் முடிவது கீழ்வரும் குறள்:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


’பிறப்பு’-வில் முடிவது கீழ்வரும் குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


4.4.4. ஈரசைச் சீர்கள்
ஈரசைச் சீர்கள் மொத்தம் நான்கில்
மாச்சீர் இரண்டு, விளச்சீர் இரண்டு.

’தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்’
என்பது ஈரசைச் சீர்களின் வாய்பாடு.

இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்-நேர், நிரை-நேர், நிரை-நிரை, நேர்-நிரை
என்னும் நால்வகை ஈரசைச் சீர்கள்.

இயற்சீர், அகவற்சீர், ஆசிரிய வுரிச்சீர்
எனவும் ஈரசைச் சீர்கள் பெயர்பெறும்.

செய்யுள் வழக்கிலும் பேச்சு வழக்கிலும்
பெரிதும் பயின்று இயல்பாய் வருதலால்
இயற்சீர் என்று அழைக்கப் பட்டது.

அகவல் ஓசை தாங்கி வருவதாள்
அகவற்சீர் என்று அழைக்கப் பட்டது.

அகவல் பயிலும் ஆசிரியப் பாவிற்
குரிய சீரே ஆசிரிய வுரிச்சீர்.

இயற்சீர் மட்டுமே அமைந்த குறள்:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.


இந்தக் குறளை அலகிட்டுப் பார்த்தால்
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம்
புளிமா புளிமா மலர்-என அறிக.

4.4.4. ஈரசைச் சீர்கள் பயிற்சி
1. கீழ்வரும் குறளின் சீர்களை அறியவும்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.


2. "கசடு, அழகு, அறுதல், கல்வி, மொழிதல்" இந்த சொற்களைப் பயன்படுத்தி கீழ்வருமாறு சீர்கள் அமைத்து ஒரு செய்யுள் வரி எழுதுக:
தேமா புளிமா கருவிளம் புளிமா.

3. இயற்சீர்கள் நான்கும் வருமாறு ஒரு வாக்கியமோ சொற்றொடரோ, ஒவ்வொரு சீரும் ஒருமுறையே வருமாறு எழுதவும்.
[உதாரணம்: மாலைப் பொழுதில் திரும்பிடும் ஆவினம். தேமா புளிமா கருவிளம் கூவிளம்]

4. கீழ்வரும் கண்ணதசனின் புகழ்பெற்ற திரைப்பாடல் வரிகளின் யாப்பிலக்கணத் தனிச்சிறப்பென்ன?
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.


இயற்சீர்களை பயன்படுத்தி இதுபோல் இரண்டு வரிகள் எழுத முடியுமா என்று ஆராயவும்.

*****
 
Last edited:
4.4.5. மூவசைச் சீர்கள்
மூவசைச் சீர்கள் மொத்தம் எட்டில்
காய்ச்சீர் நான்கு, கனிச்சீர் நான்கு.

’தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்’
என்பது காய்ச்சீர் வாய்பா டாகும்.

இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்-நேர்-நேர், நிரை-நேர்-நேர், நிரை-நிரை-நேர், நேர்-நிரை-நேர்
என்னும் நால்வகை காய்ச்சீர் வகைகள்.

’தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி’
என்பது கனிச்சீர் வாய்பா டாகும்.

இந்தக் குறிகளை ஆய்ந்தால் கிடைப்பது
நேர்-நேர்-நிரை, நிரை-நேர்-நிரை, நிரை-நிரை-நிரை, நேர்-நிரை-நிரை
என்னும் நால்வகை கனிச்சீர் வகைகள்.

காய்ச்சீர் நான்கும் வெண்பா வுரிச்சீர்
கனிச்சீர் நான்கும் வஞ்சி யுரிச்சீர்
என்று மூவசைச் சீர்கள் பெயர்பெறும்,
பயிலும் பாக்களின் பெயர்களை யொட்டி.

தென்மேற்கு வடமேற்கு வடகிழக்கு தென்கிழக்கு,
பொன்னாக்கும் பொருளாக்கும் பொருள்பெருக்கும் பொன்பெருக்கும்

என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களில்
காய்ச்சீர் அனைத்தும் முறையே காண்க.

பூவாழ்பதி திருவாழ்பதி திருவுறைபதி பூவுறைபதி
மீன்வாழ்துறை சுறவாழ்துறை சுறமறிதுறை மீன்மறிதுறை

என்றுநம் முன்னோர் வகுத்த தொடர்களிலே
கனிச்சீர் அனைத்தும் முறையே காண்க.
[சுற=சுறா மறி=திரிதல் துறை=நீர்த்துறை]

காய்கனிச் சீர்களுக்கு இன்றைய வழக்கில்
டீவீபார் சினிமாபார் ஸ்டேடியம்பார் சீரியல்பார்
ஜூவீபடி குமுதம்படி தினமலர்படி பாடம்படி

போன்ற சான்றுகள் அறிந்து மகிழலாம்.

4.4.5. மூவசைச் சீர்கள் பயிற்சி
1. கீழ்வரும் கலிப்பாவின் சீர்களை அலகிட்டு அறியவும்.
ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள்
கருநோக்கா வகைக்கருணைக் கண்ணோக்கம் செயுஞானத்
திருநோக்க அருணோக்கம் இருநோக்கும் செயச்செய்து
மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்.

--குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை

1. ’பார்’ என்ற காய்ச்சீர் இறுதியும், ’படி’ என்ற கனிச்சீர் இறுதியும் சேர்த்து முன்வந்ததுபோல் சான்றுகள் அமைத்துப் பழகவும். ’காடு’, ’புலி’ போன்ற பிற காய்-கனி இறுதிகளையும் வைத்துத் தொடர்கள் பயில, மூவைச் சீர்களின் போக்கு நன்கு புரியும்.

4.4.6. நான்கசைச் சீர்கள்
நான்கசைச் சீர்கள் மொத்தம் பதினாறில்
தண்பூ நான்கு, நறும்பூ நான்கு
தண்ணிழல் நான்கு, நறுநிழல் நான்கு

நான்கசைச் சீர்கள் அமைவது அறிய
ஈரசைச் சீர்கள் எட்டின் பின்னே
தண்பூ நறும்பூ தண்ணிழல் நறுநிழல்
குறிகள் சேர்ந்து வருவது புலப்படும்.

’தேமாந்தண்பூ, புளிமாந்தண்பூ, கருவிளந்தண்பூ, கூவிளந்தண்பூ’,
’தேமாநறும்பூ, புளிமாநறும்பூ, கருவிளநறும்பூ, கூவிளநறும்பூ’,
’தேமாந்தண்ணிழல், புளிமாந்தண்ணிழல், கருவிளந்தண்ணிழல், கூவிளந்தண்ணிழல்’,
’தேமாநறுநிழல், புளிமாநறுநிழல், கருவிளநறுநிழல், கூவிளநறுநிழல்’

என்பன அவற்றின் வாய்ப்பா டாகும்.

நேரில் முடியும் எட்டு சீர்களும்
பூச்சீர் என்று அழைக்கப் படுவது.
நிரையில் முடியும் மீதம் எட்டும்
நிழற்சீர் என்று அழைக்கப் படுவது.
நான்கசைச் சீர்கள் அருகியே வருமாம்.

பூச்சீர் நிழற்சீர் சான்றுகள் அமைத்தால்
வாவாவென்று வருவாயென்று தெரிவதுகாண்பாய் கண்டதில்லையா
வாவாவெனச்சொல் வருவாயெனச்சொல் தெரிவதென்றுசொல்வாய் கண்டதுகொடுப்பாய்
வாவாவந்துபார் வருவாய்வந்துபார் தெரிவதுவந்துபார் கண்டதுவந்துபார்
பூவாய்வருவது வருவாய்வருவது தெரிவதுவருவது கண்டதுவருவது


இவைபோல் வந்து சொற்கள் பிரிந்திட
நான்கசை அமைவது அரிதெனப் புரியும்.

*****
 
4.5. அடி

4.5.1. அடியென்பது
சீர்கள் தொடர்ந்து அமையும் வரியே
செய்யுளின் அடியென்று அழைக்கப் படுவது.
அடியின் இயற்கை அளவு நாற்சீர்.

4.5.2. அடி வகைகள்
எண்ணளவில் எழுத்துகள் நிலையாய் இருப்பது
கட்டளை அடியென அழைக்கப் படுவது.

சான்றாகக் கட்டளைக் கலித்துறை அடியில்
நேரில் தொடங்கின் பதினாறு எழுத்துகள்
நிறையில் தொடங்கின் பதினேழு எழுத்துகள்.

எண்ணளவில் சீர்கள் நிலையாய் இருப்பது
சீர்வகை அடியென அழைக்கப் படுவது.
சீர்வகை அடிகளே பெரிதும் வருவன.

சீர்வகை அடிகள் மொத்தும் ஐந்து.
குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி,
கழிநெடி லடியென வகைகள் ஐந்து.

சீர்வகை அடிகள் நோக்கும் போது
சீர்களே கணக்கு வரிகள் அல்ல.

4.5.3. குறளடி
இருசீர் அமைந்து வருவது குறளடி.
யாப்பருங்கலக் காரிகைச் சான்று கீழே.

சுறமறிவன துறையெல்லாம்
இறவின்பன வில்லெல்லாம்
மீன்றிரிவின கிடங்கெல்லாம்
தேன்றாழ்வன பொழிலெல்லாம்


வள்ளியப் பாவின் பாப்பாப் பாட்டில்
குறளடி அழகாய் இழைவது காண்பீர்.

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்!
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வாபோன்ற மாம்பழம்
தங்கநிற மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா
இங்கேஓடி வாருங்கள்
பங்குபோட்டுத் தின்னலாம்!


4.5.4. சிந்தடி
முச்சீர் அமைந்து வருவது சிந்தடி.
இளங்கோ வடிகளின் காவிரி நடையிது:

பூவார் சோலை மயிலாலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி.


வள்ளியப் பாவின் பாப்பாப் பாட்டில்
சிந்தடி சீராய்ச் சிரிப்பது காண்பீர்.

பத்துக் காசு விலையிலே
பலூன் ஒண்ணு வாங்கினேன்
பையப் பைய ஊதினேன்
பந்து போல ஆனது
பலமாய் நானும் ஊதினேன்
பானை போல ஆனது
பானை போல ஆனதை
பார்க்க ஓடி வாருங்கள்
விரைவில் வந்தாள் பார்க்கலாம்--அல்லது
வெடிக்கும் சத்தம் கேட்கலாம்!


4.5.5. அளவடி
நாற்சீர் அமைந்து வருவது அளவடி.
அடியின் இயல்பு நாற்சீர் என்பதால்
அளவடி யென்று அழைக்கப் பட்டது.

ஆசிரி யப்பா வெண்பா என்ற
இருவகைப் பாக்களில் அளவடி வருமே.

அளவடிச் சான்றுகள் எளிதில் காணலாம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
---ஔவையார், கொன்றை வேந்தன்.


வாழிய செந்தமிழ்! வாழகநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
---பாரதியார்


4.5.6. நெடிலடி
ஐந்துசீர் அமைந்து வருவது நெடிலடி.

வருவது கம்ப ராமாயணச் சான்று:
செந்தாமரைக் கண்ணொடும் செங்கனி வாயி னோடும்
சந்தார்தடந் தோளடும் தாழ்தடக் கைக ளோடும்
அந்தாரக லத்தொடும் அஞ்சனக் குன்ற மென்ன
வந்தானிவன் ஆகுமவ் வல்விலி ராம னென்றாள்.


நாமும் நெடிலடி எளிதில் முனையலாம்.
கண்களை மூடக்கற்றேன் பார்ப்பது நோக்கா திருக்க.
செவிகளை மூடக்கற்றேன் கேட்பது தைக்கா திருக்க.
வாயினை மூடக்கற்றேன் அடிக்கடி உண்ணா திருக்க.
நாவினை கட்டக்கற்றேன் நினைத்தது பேசா திருக்க.
மனதினை அடக்கிமௌனம் கூடிட என்று கற்பேன்?


*****
 
namaste shrI Raghy.

I am happy that you like this thread. Since you are a kavithai-abhimAni, why don't you try your hand in the interactive exercises set here, and perhaps try a few lines of traditional poetry?

Sri. Saidevo, Greetings.

I love nice poems. I do not have the knowledge or vocabulory to write one though. Thank you for the invitation, but kindly allow me to decline it, please! Poems in this literature section is very nice. I am really enjoying that. Thanks to yourself and thanks to every contributor in this section!

Cheers!
 
4.5.7. கழிநெடிலடி
ஆறும் அதற்கு மேற்படும் சீர்கள்
அமைந்து வருவது கழிநெடி லடியாம்.

கழிநெடி லடிகளை நீளம் நோக்கிப்
பலவரி களிலே எழுதுவது வழக்கம்.

சீர்கள் மிகுவதால் சரியாய் அளவிட
அடியெது கையினை அமைப்பது வழக்கம்.

அடியெது கையினில் ஒவ்வொரு அடியிலும்
முதலாம் எழுத்து அளவொத் திருக்க
இரண்டாம் எழுத்து ஒன்றி வருமே.

4.5.7.1. அறுசீர்க் கழிநெடிலடி
வருவன அறுசீர்க் கழிநெடி லடிகள்:
கம்பன் சீர்களில் மோனைவரக் காண்பீர்.

நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை
...உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை
...உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் ஆமை துறையிடை
...உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை
...உறங்கும் தோகை.


இன்றைய எளிமை பாரதி வரிகளில்:
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்...
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.


கீழ்வரும் வரிகள் கண்ணதாசன் பாடல்:
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.


நாமும் அறுசீர் எளிதில் புனையலாம்:
அன்றும் இன்றும் என்றும் உள்ளது ஒன்றே ஒன்றே
இன்றே நாமிதை உணர்ந்து கொள்வது நன்றே நன்றே.


4.5.7.2. எழுசீர்க் கழிநெடிலடி
வருவன எழுசீர்க் கழிநெடி லடிகள்:
சீரணி திகழ்திரு மார்பின் வெண்ணூலார்
...திரிபுரம் எரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையொர் பங்கர்
...மான்மறி ஏந்திய மைந்தர்
---சம்பந்தர்


இன்றைய சான்று பாரதி தருவது:
சிறந்து நின்ற சிந்தை யோடு தேயம் நூறு வென்றிவள்
மறந்த விர்ந்தந் நாடர் வந்து வாழி சொன்ன போதிலும்


நாமும் எழுசீர் எளிதில் புனையலாம்:
அன்றும் இன்றும் என்றும் உள்ளது ஒன்றே யாகும் பரமே
இன்றே நாமிதை உணர்ந்து கொளவது நன்றே யாகும் நமக்கு.


4.5.7.3. எண்சீர்க் கழிநெடிலடி
வருவன எட்டு சீர்கள் அமைந்தது:

சிறுவரும் அறிந்த உலக நீதி:
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
...ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
...வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்


பாரதி கண்ட இளவயது மங்கை:
மங்கியதோர் நிலவினிலே கனவவிலிது கண்டேன்
...வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை


நாமும் எண்சீர் முயன்றிடு வோமா?
மாடு மனையாள் வீடு செல்வம்
...கல்வி யெல்லாம் இருந்தும் கூட
பாடு படுவது குறைவது இல்லை
...பிள்ளை ஒன்று பெண்கள் ஐந்து.


4.5.7.4. ஒன்பதின் சீரடி விருத்தம்
வருவது ஒன்பது சீர்கள் அமைந்தது:

இடியது விழுந்த தோதான்
...இரும்பினைப் பழுக்கக் காய்ச்சி
...இருசெவி நுழைத்த தோதான்
தடியது கொண்டே எங்கள்
...தலையினில் அடித்த தோதான்
...தைரியம் பிறந்த தோதான்
---நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை


நாமும் ஒன்பது முயன்றிடு வோமா?
காலை எழுந்து ஆவி மணக்கும் காப்பி குடித்து
...பேப்பர் படித்துக் குளித்து
சாலை ஓய்ந்து காலி யானதும் மெல்ல நடந்து
...கோவில் செல்லும் முன்னே
வேலை எல்லாம் வழியில் முடிக்க வங்கி சென்றிட
...ஞாபகப் படுத்து பெண்ணே.


4.5.7.5. பதின் சீரடி விருத்தம்
வருவது பத்து சீர்கள் அமைந்தது:

கொங்கு தங்கு கோதை ஓதி மாத ரோடு
...கூடி நீடும் ஓடை நெற்றி
வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கீத
...நாத என்று நின்று தாழ
---யாப்பருங்கலம்


நாமும் பத்தில் முயன்றிடு வோமா?
முகத்தில் சந்திரன் விழிகளில் சூரியன்
...நடையில் அன்னம் இடையில் மின்னல்
...கால்களில் சலங்கை கொஞ்ச
அகத்தில் நினைத்ததை விரல்களில் அபிநயித்து
...விழிகளில் தருவித்து மேடையில் ஆடுவாள்
...நாட்டிய மேதையாம் நங்கை.


4.5.7.6. பதினொரு சீரடி விருத்தம்
வருவது பதினொரு சீர்கள் அமைந்தது:

அருளாழி ஒன்றும் அறனோர் இரண்டும்
...அவிர்சோதி மூன்றொ டணியொரு நான்கும்
...மதமைந்தும் ஆறு பொருண்மேல்
மருளாழி போழும் நயமேழும் மேவி
...நலமெட்டும் பாடும் வகையொன்ப தொன்ற
...வரதற்கோ பத்தின் மகிழ
---யாப்பருங்கலம்


நாமும் செய்வோம் பதினொரு சீர்களில்!
வானம் பொழிந்து பூமி விளைந்து
...செல்வம் செழித்து நன்மை விளைந்து
...மனிதர் யாவரும் மகிழ்ந்து
தானம் கொடுத்து நெறிகள் தழைத்து
...அன்புடன் வாழும் வழிவகை கற்றிட
...உன்னருள் தந்திடு இறைவா!


4.5.7.7. பன்னிரு சீரடி விருத்தம்
எட்டிற்குமேல் தற்கா லத்தில் வருவது
பன்னிரு பதினான்கு பதினாறு வகையே.
வருவது பன்னிரு சீர்கள் அமைந்தது:

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
...வாழிய வாழியவே
...வான மளந்த தனைத்து மளந்திடும்
...வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
...இசைகொண்டு வாழியவே
...எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
...என்றென்றும் வாழியவே.
---பாரதியார்


நாமும் பன்னிரு சீர்களில் புனைவோம்!
கேட்டது கிடைத்த குழந்தைப் பருவம்!
...முனைந்து படித்த பள்ளிப் பருவம்!
...நினைத்தது செய்த இளமைப் பருவம்!
வேட்டது கிடைக்கும் வழிதெரி யாமல்
...நாளொரு கனவும் பொழுதொரு கவலையும்
...சூழ்ந்திட வாழ்ந்திடும் இல்லறப் பருவம்!


4.5.7.8. பதினான்கு சீரடி விருத்தம்
வருவது பதினான்கு சீர்கள் அமைந்தது:

தமிழ னென்ற பெருமை யோடு தலைநி மிர்ந்து நில்லடா!
...தரணி யெங்கும் இணையி லாத சரிதை கொண்டு செல்லடா!
அமிழ்த மென்ற தமிழி னோசை அண்ட முட்ட உலகெலாம்
...அகில தேச மக்க ளுங்கண் டாசை கொள்ளச் செய்துமேல்
---நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை


நம்மால் முடியுமோ பதினான்கு சீர்களில்?
வருவது ஏற்றுக் கவலைகள் குறைத்து வந்தது போதும் என்றும்
...விழைவது சுருக்கித் தன்நெறி பார்த்து நடந்திட வேண்டும் என்றும்
குருவின் வார்த்தை கீதையில் கேட்டு, செய்வது நானல்ல நீயே
...பலன்கள் உனக்கே கண்ணா என்று வாழ்ந்திட ஞானம் பிறக்கும்.


4.5.7.9.பதினாறு சீரடி விருத்தம்
வருவது பதினாறு சீர்கள் அமைந்தது:

பயில்தரு முதுமறை நூலைத் தெரித்தவள்
...பகைதொகு புரமெரி மூளச் சிரித்தவள்
...பனிவரை பகநெடு வேலைப் பணித்தவள்
...படுகடல் புகையெழ வார்வில் குனித்தவள்
எயிறுகொ டுழுதெழு பாரைப் பெயர்த்தவள்
... எறிதரு குலிசம்வி டாமல் தரித்தவள்
...இடுபலி கொளுமொர்க பாலக் கரத்தினள்
...எனுமிவர் எழுவர்கள் தாளைப் பழிச்சுதும்
---குமரகுருபரர்


நம்மால் முடியுமோ பதினாறு சீர்களில்?
வந்தது ஒன்று போனது வேறு
...படித்தது ஒன்று கிடைத்தது வேறு
...சொன்னது ஒன்று செய்தது வேறு
...நினைத்தது ஒன்று நடந்தது வேறு
பந்தது போலக் கால்களில் சிக்கி
...அங்கும் இங்கும் உதைக்கப் பட்டு
...இலக்கெது என்று புரிந்தி டாமல்
...காலச் சுழலில் உழல்கின் றேனே!


*****
 
4.6. தளை

4.6.1. தளையென்பது
அடுத்தடுத் துள்ள அடிகள் செய்யுளில்
தளைத்து வருவது தளையெனப் படுமே.

நின்ற சீரின் ஈற்றசை தளைக்கும்
பின்வரும் சீரின் முதலசை யோடு.

அடிகள் இடையிலும் சீர்கள் இடையிலும்
பயின்று வருமே தளைகள் ஒத்து.

4.6.2. தளை வகைகள்
தளையின் வகைகள் ஏழு ஆகும்.
நேரொன்று ஆசிரியத் தளை,
நிரையொன்று ஆசிரியத் தளை,
இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை,
கலித்தளை, ஒன்றிய வஞ்சித் தளை,
ஒன்றாத வஞ்சித் தளை
என்பன அவ்வேழு வகைகளின் பெயர்கள்.

தளைகளின் வகைகள் நோக்கும் போது
பெயரில் பாவகை இருப்பது காண்க.

4.6.3. தளை வாய்பாடுகள்
தளையின் இலக்கணம் அறியும் போது
’மாமுன்நேர்’ போன்ற வாய்பா டுகளில்
மாவென்பது சீரின் பெயராம்
நேரென்பது அசையின் பெயராம்
மாவென்பது நின்ற சீரின் ஈற்றசை
நிரையென்பது பின்வரும் சீரின் முதலசை
என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தளைகள் சொல்லும் வாய்ப்பா டுகளில்
முதல்வரும் சொல்லில் சீரின் பெயரும்
கடைவரும் சொல்லில் அசையின் பெயரும்
முன்னென்ற சொல்லுக்கு எதிர்வருதல் என்றும்
நினைவில் வைக்க எளிதில் புரியும்.

’மாமுன்நேர்’ என்ற வாய்ப்பாடு தன்னில்
மாச்சீர் என்ற நின்ற சீரானது
தேமா புளிமா ஒன்றில் அமையும்;
நேரசை என்பது வரும்சீர் முதலசை;
இப்படி வந்தால் இத்தளை இணையும்.

இத்தனை விவரம் அறிந்த பின்னர்
எழுதளை வாய்பாடு நெஞ்சில் நிற்கும்!

மாமுன் நேர்வந்தால் நேரொன் றாசிரி யத்தளை.
விளம்முன் நிரைவந்தால் நிரையொன் றாசிரி யத்தளை.

மாமுன் நிரையோ விளம்முன் நேரோ
வந்தால் இயற்சீர் வெண்டளை யாகும்.

காய்முன் நேர்வர வெண்சீர் வெண்டளை.
காய்முன் நிரைவர கலித்தளை யாகும்.

கனிமுன் நிரைவர ஒன்றிய வஞ்சித்தளை,
கனிமுன் நேர்வர ஒன்றாத வஞ்சித்தளை.


4.6.4. எழுதளைச் சான்றுகள்

நேரொன்றாசிரியத்தளை:
வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!
---பாரதியார், பாரதமாதா நவரத்னமாலை


வெற்/றி கூ/றுமின்! வெண்/சங் கூ/துமின்!
தேமா கூவிளம் தேமா கூவிளம்

கண்ண தாசனின் கீழ்வரும் திரைப்பா
போன்று வருவது அரிதிலும் அரிது.
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.


நிரையொன்றாசிரியத்தளை:
மங்கல குணபதி மணக்குளக் கணபதி!
---பாரதியார்


மங்/கல குண/பதி மணக்/குளக் கண/பதி!
கூவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்

ஆசிரியப் பாவில் தளைகள் விரவிட
முழுதும் நேர்களோ அன்றி நிரைகளோ
ஒன்றிடப் புனைவது மிகவும் அரிதே.

இயற்சீர் வெண்டளை:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
---திருக்குறள் 001:03


மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டு வாழ்வார்.
கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளம் தேமா காசு

குறளின் தளையை நோக்கும் போது
விளம்முன் நேரும் மாமுன் நிரையும்
சீரிடை அடியிடைத் தளைத்து வந்து
இயற்சீர் வெண்டளை பயில்வது காண்க:

வெண்சீர் வெண்டளை:
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
---திருக்குறள் 040:07


யா/தா/னும் நா/டா/மால் ஊ/ரா/மால் என்/னொரு/வன்
சாந்/துணை/யும் கல்/லா/த வாறு.

வெண்சீரின் வெண்டளையே இக்குறளில் வந்ததுகாண்
சீரிடையே பாதமிடை காய்முன்நேர் வந்திடவே.

மேலுள்ள வரிகள் இரண்டிலும் கூட
வெண்சீர் வெண்டளை பயில்வது நோக்குக.

கலித்தளை:
ஒருநோக்கம் பகல்செய்ய ஒருநோக்கம் இருள்செய்ய
இருநோக்கில் தொழில்செய்தும் துயில்செய்தும் இளைத்துயிர்கள்
---குமரகுருபரர், சிதம்பரச் செய்யுட்கோவை


ஒரு/நோக்/கம் பகல்/செய்/ய ஒரு/நோக்/கம் இருள்/செய்/ய
இரு/நோக்/கில் தொழில்/செய்/தும் துயில்/செய்/தும் இளைத்/துயிர்/கள்

காய்முன் நிரைவரும் கலித்தளையே இவ்வரிகளில்
சீரிடைப் பயில்வது எளிதில் காணலாம்

ஒன்றிய வஞ்சித்தளை:
யோகத்தினர் உரைமறையினர்
ஞானத்தினர் நய*ஆகமப்
---கி.வா.ஜ.


யோ/கத்/தினர் உரை/மறை/யினர்
ஞா/னத்/தினர் நய/*ஆ/கமப்

கனிமுன் நிரைவரும் ஒன்றிய வஞ்சித்தளை
இவ்வரிகளில் சீரிடைப் பயில்வது காண்க.

ஒன்றாத வஞ்சித்தளை:
புனல்பொழிவன சுனையெல்லாம்;
பூநாறுவ புறவெல்லாம்;
வரைமூடுவ மஞ்செல்லாம்;
---யா.கா.வி.


கனிமுன் நேர்வரும் ஒன்றாத வஞ்சித்தளை
இவ்வரிகளில் சீரிடைப் பயில்வது காண்க.

*****
 
4.4.4. ஈரசைச் சீர்கள்: பயிற்சி
1. கீழ்வரும் குறளின் சீர்களை அறியவும்:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.


கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளம் கூவிளம் நாள்.

2. "கசடு, அழகு, அறுதல், கல்வி, மொழிதல்" இந்த சொற்களைப் பயன்படுத்தி கீழ்வருமாறு சீர்கள் அமைத்து ஒரு செய்யுள் வரி எழுதுக:
தேமா புளிமா கருவிளம் புளிமா.

கல்வி கழகு கசடற மொழிதல்.

3. இயற்சீர்கள் நான்கும் வருமாறு ஒரு வாக்கியமோ சொற்றொடரோ, ஒவ்வொரு சீரும் ஒருமுறையே வருமாறு எழுதவும்.
[உதாரணம்: மாலைப் பொழுதில் திரும்பிடும் ஆவினம். தேமா புளிமா கருவிளம் கூவிளம்]

உதாரணத்தில் உள்ளதுபோல் தேமா புளிமா கருவிளம் கூவிளம் என்ற வரிசையில் எழுதுவது ஒரு சவால். வாசகர்கள் முயன்றிடுவார்களாக.
இதோ இன்னொரு உதாரணம்:
வாய்க்கால் வரப்பில் வருவதுன் மாமனே!

மற்றபடி, ஒருமுறையே ஒரு சீர் வருமாறு எழுதுவது எளிது:
கொன்றதன் பாவம் தின்றிட அகலும்.
கூவிளம் தேமா கருவிளம் புளிமா

4. கீழ்வரும் கண்ணதசனின் புகழ்பெற்ற திரைப்பாடல் வரிகளின் யாப்பிலக்கணத் தனிச்சிறப்பென்ன?
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல.


ஈரசைச் சீர்கள் எல்லாமே தேமாவாக வருவது.
(பாடலின் இறுதிவரை இவ்வாறு வருகிறதா என்று அறிந்திடுக.)

இதுபோன்று வேறு இயற்சீர்களை இதுபோல் பயன்படுத்தி இரண்டு வரிகள் எழுத முடியுமா என்று ஆராயவும்.

இரண்டு வரிகள் மட்டுந்தான் என்றால் எளிதில் முடிவதே:
அன்னை தந்தை ஆசி தந்து
நாங்கள் இன்று நன்றாய் உள்ளோம்.

வந்தால் கோழி இன்றேல் முட்டை
கொன்றால் பாவம் தின்றால் போச்சு.

நானும் நீயும் பார்க்கும் வேலை
வேறு யாரும் பார்க்க லாகும்?


*****
 
அடிப்படை உறுப்பினில் பாவகை நோக்குமுன்
தொடையெனும் அழகுறுப்பு நோக்கிட வேண்டும்.
எதுகை மோனை இயைபு முரணிவை
எதுவும் இல்லாத கவிதை இல்லை.
உரைநடை வழக்கிலும் தொடைகள் உண்டு.

5. யாப்பு விவரணம்: செயல்வகை உறுப்புகள்

முன்பே சொன்னதை நினைவில் கொணர
யாப்பும், தூக்கும், தொடையும், மாட்டும்,
வண்ணம், இயைபு, இழைபு என்று
செயல்வகை உறுப்புகள் ஏழெனத் தெரியும். [பார்க்க 2.2.,2.3.]

அழகும் மகிழ்ச்சியும் ஐந்தில் அமையும்:
தொடையும், மாட்டும், வண்ணம், இயைபு,
தேர்ந்த சொற்களின் நடையில் இழைபு.

செய்யுள் செயல்வகை இரண்டில் அமையும்:
வடிவம் யாப்பில், மதிப்பு தூக்கில். [பார்க்க 2.6.]

5.1. தொடை

தொடையெனும் சொல்லின் பொதுவான பொருளே
செய்யுளில் தொடையின் பங்கினைக் காட்டும்.

பின்னுகை, தொடர்ச்சி, கட்டுகை, மாலைவடம்,
கொத்து, பூமாலை, யாழ்-நரம்பு, அம்பு,
படிக்கட்டு எனவரும் பொதுப்பொருள் நோக்கியே
தொடையெனும் அழகிய பெயர்வந் ததுவோ?

5.1.1. தொடையென்பது
பலசீர் களிலோ பலவடி களிலோ
எழுத்துகள் ஒன்றத் தொடுப்பது தொடையாம்.

வகையில் ஒன்று வண்ணத்தில் ஒன்றென
விதவித இழைகள் வெளிவர உட்செலப்
பாங்காய்ப் பின்னிடும் பின்னல் போல
முதலில் இடையில் கடையில் என்று
எழுத்துகள் ஒன்றப் பின்னுகை தொடையாம்.

இடைவெளி விட்டோ பிளவு இன்றியோ
எழுத்துகள் ஒன்றக் கட்டுகை தொடையாம்.

இப்படி வந்தால் பிளவறத் தொடுப்பது:
மின்னிடும் மேகலை மின்னல் மங்கை.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.


இப்படி வந்தால் பிளவுறத் தொடுப்பது:
மாலைப் பொழுதில் சாலை மருங்கில்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு.


கொத்தாய்க் கிடக்கும் பலவித சொற்களை
ஓசையின் நாரில் யாழின் நரம்பில்
மாலை வடத்தினில் மலர்கள் போல
மணம்தறக் கட்டுதல் தொடையெனப் படுமே.

’அன்றும் இன்றும் என்றும் நின்றிடும் ஒன்றே ஒன்றே’
என்ற தொடரில் னற-ஒலிகள் ஊடுருவி
அம்பெனத் துளைக்கும் தொடைவரப் பொருளினை
அவிழ்த்துக் காட்டுதல் காணுதல் தவறுமோ?

’மலரது மலர்ந்திட மலர்ந்திடும் முகமே!’
என்ற தொடரில் ஒருமலர் விரிவதைப்
படிப்படி யாகத் தொடுத்தது காண்பீர்!
 
Last edited:
5.1.2. தொடை வகைகள்
கேட்டோர் மனதில் சொற்கள் நிலைத்து
சிந்தையில் ஊறிப் பொருள்புல னாதல்
பலவகைத் தொடையின் நோக்கம் ஆகும்.

எழுத்துகள் ஒன்றத் தொடுக்கும் போதவை (போது அவை)
முதலிடை கடையெனச் சீர்களில் அடிகளில்
இயைந்து வந்திடப் பிறப்பது தொடைவகை.

முதலில் ஒன்றுவது மோனை யாகும்.
இடையில் ஒன்றுவது எதுகை யாகும்.
கடையில் ஒன்றுவது இயைபு ஆகும்.
சொற்பொருள் முரணுதல் முரண்தொடை யாகும்.

5.2. எதுகை
எதுகை என்றால் எதிர்கொளல் எனப்பொருள்.
எதிர்கொளும் எழுத்துகள் பொருந்தி வருமே.

5.2.1. எதுகை என்பது
முதல்வரும் எழுத்து அளவொத் திருக்க
பின்வரும் எழுத்து(கள்) பொருந்தி அமைவது
எதுகை உறுப்பின் இலக்கணம் ஆகும்.

அடிகளில் சீர்களில் வந்திடும் எதுகையில்
முதல்வரும் எழுத்து அளவொத் திருக்க
இரண்டாம் எழுத்து ஒன்றினால் போதும்.
பின்வரும் எழுத்துகள் ஒன்ற ஒன்ற
ஓசை இனிமையும் நயமும் பெற்றிடும்.

’வண்டு உண்டு’ எதுகைகள் ஓசை
’வண்டு உண்ண’ எதுகைகள் ஓசை
இரண்டும் நோக்கி இனிமை அறிக.

எதுகை பயிலும் சீர்களின் அடிகளில்
முதலெழுத்து அளவில் ஒத்திட வேண்டும்,
குறிலொடு குறிலென நெடிலொடு நெடிலென.

கட்டு, தட்டு, சிட்டு, முட்டு இவையும்
காட்டு, பாட்டு, சீட்டு, மூட்டு இவையும்
முதல்வரும் எழுத்து அளவில் ஒத்திட
முறையாய் அமைந்த எதுகைகள் ஆகும்.

கட்டு, பட்டம், மின்னல், பொன்னின் இவையும்
முதல்வரும் எழுத்து அளவில் ஒத்திட
இரண்டாம் எழுத்து ஒன்றிடும் எதுகைகள்.

சிகரம், தகரம், பாடல், நாடல் இவையும்
மேல் சொன்ன வகையில் எதுகை களாகும்.

கட்டு, பாட்டு, சிட்டு, சீட்டு
என்று வருவன எதுகைகள் ஆகா,
முதலெழுத் தளவில் வேறு படுவதால்.

தொடக்கத்தில் இப்படி வருகிற தவறுகள்
திருத்திக் கொள்ளக் கவிதை சிறக்கும்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top