• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

யமுனா - குறுநாவல் - அனாமிகா

Status
Not open for further replies.

anamika

Active member
யமுனா - குறுநாவல் - அனாமிகா

யமுனா
*******


அத்தியாயம் -1
**************
தமிழ்நாட்டின் பிரபல மகளிர் பத்திரிகை 'நந்தவனத்'தின் அலுவலகம்.


அலுவலர்கள் பலரும் தத்தம் கடமைகளை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருந்தனர்.


ஆசிரியர் அறையில் ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


"நந்தவனம்" - அதன் முக்கிய தூண்களாக விளங்கும் நிருபர்கள் அரவிந்த், ரமேஷ், அபர்ணா, நித்யா, ஜெயஸ்ரீ - இவர்கள் ஐந்து பேரும் அழைக்கப்பட்டு இருந்தனர்.


"அபர்ணா! இப்ப எதுக்காக இந்த திடீர் மீட்டிங்?" நித்யா கேட்க,


"இன்னும் ரெண்டு மாசத்துல ஆண்டுமலர் வரணும்; அதுக்காக ஸ்பெஷலா ஏதாவது இருக்கும்னு நான் நினைக்கிறேன்"


அபர்ணா சொல்லவும், ஆசிரியர் தம் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.


அனைவரும் எழுந்திருக்க, ஆசிரியர் அவர்களை அமரச் சொல்லி கைகாட்டி தானும் அமர்ந்தார்.


"இந்த மீட்டிங் எதுக்காக அப்படிங்கறதை முதல்ல சொல்லிடறேன். வருஷா வருஷம் பிப்ரவரி மாசம் நம்ம இதழோட ஆண்டுமலர் வெளியிடறோம். இந்த வருஷத்துலேர்ந்து நம்ம ஆண்டுமலர்ல ஒரு சிறப்புப் பரிசும், விருதும் கொடுக்கிறதா தீர்மானம் பண்ணியிருக்கோம்."


நித்யா அபர்ணாவை "நீ சரியாக சொல்லி விட்டாய்" என்று விழிகளால் பாராட்டினாள்.


"இந்த சிறப்பு விருதை "நந்தவனம் - சாதனைப் பெண்மணி" விருதாக வழங்கி கௌரவிக்கப் போறோம். உங்களோட கருத்து என்ன?"


"நல்ல யோசனை சார்."


ஐவரும் மனப்பூர்வமாக ஆமோதித்தனர்.


"ரொம்ப சந்தோஷம். இதுல உங்களோட 'ரோல்' என்னன்னா - நீங்க அஞ்சு பேரும் ஒவ்வொரு சிறந்த பெண்மணியைப் பத்தி, நீங்க இந்த விருதுக்கு யார் தகுதியானவங்கன்னு நினைக்கிறீங்களோ - அவங்களைப் பத்தின ஒரு கட்டுரையை எடிட்டர் கிட்ட கொடுக்கணும். அதிலேர்ந்து ஒருத்தரை நம்ம ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்து, விருது வழங்குவோம்.


இன்னுமொரு முக்கியமான விஷயம்: சாதனைகள் அப்படின்னு "கன்னா பின்னானு" சாதனைக்காக சாதனை பண்றவங்க கிட்ட மட்டும்
போயிடாதீங்க. சமுதாயத்துக்கு பயன்படற மாதிரியான சாதனையாக அது இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதெல்லாம் உங்களுக்கே தெரியும், இருந்தாலும் சொல்ல வேண்டியது என்னோட கடமை, அதுக்காக சொன்னேன்."


அவர் சொன்னது போல அவர்களுக்கே "நந்தவனம்" இதழின் பாரம்பரியமும், பெருமையும் பற்றித் தெரியும். சில சமயங்களில் "ஹாட் நியூஸ்" எனப்படும் பல விஷயங்களைப் பற்றி அவர்கள் எழுத வேண்டியிருக்கும். அவற்றில் பல ஆபாசமாகவோ, அசிங்கமாகவோ அமைந்து விடுவதுண்டு. அவை போன்ற செய்திகளை ஆசிரியர் கண்டிப்பாக இடம் பெற அனுமதிப்பதில்லை.


ஓரிரு முறை தலைமை நிருபர் ரவிராஜ் கூட இது விஷயமாக ஆசிரியரிடம் பேசிப் பார்த்தார்.


"சார், முக்கியச் செய்திகள்னு பார்த்தா இவையும் தானே வருது. அதைப் போடவேணாம்னு சொன்னா, எப்படி சார்?"


"அந்த மாதிரியான செய்திகள் மத்த பத்திரிகைகளுக்கு வேணா முக்கியமா இருக்கலாம். "நந்தவனம்" பத்திரிகைக்கு அவை முக்கியம் அல்ல. சுடச்சுட செய்திகள் கொடுக்கணும், பரபரப்பா ஏதாவது நியூஸ் இருக்கணும்கிறது அன்றாடம் வர்ற பத்திரிகைகளுக்கு சரியா இருக்கலாம். நம்முடையது அப்படி இல்லையே.


தன்னுடைய நாவல்கள்ல நா.பா சொல்லுவார்: "எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு ரொம்ப அவசியம். அப்ப தான் சமூகம் ஆரோக்கியமா இருக்கும்னு" சுட்டிக் காட்டுவார். அப்படி ஒரு இலட்சியக் கனலோட தான் நான் இந்தப் பத்திரிகையை ஆரம்பிச்சேன்."


அதன் பின்னர் ரவிராஜ் ஆசிரியரின் உள்ளத்தைத் தெரிந்து கொண்டவராய், இன்னும் கவனமாக இதழில் பணியாற்றி வந்தார்.


அங்கே பணிபுரிய வரும் அனைவருக்கும் அவர்கள் பணியில் சேரும்போதே இந்த நிகழ்ச்சியை விரிவாகக் கூறுவது தலைமை நிருபரின் பழக்கம். அதன் மூலம் அவர்களுடைய பொறுப்பும், அவர்கள் அளிக்கப் போகும் படைப்புகளின் தரமும், தகுதியும் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தி விட்டிருந்தார்.


இவையெல்லாம் அபர்ணாவின் மனதில் ஓரிரு நிமிடங்களில் வந்து சென்றன. ஆசிரியர் தொடர்ந்தார்:


"இன்னும் ஒரு வாரத்துல நீங்க யாரைப் பத்தி கட்டுரை எழுதப் போறீங்கன்னு ரவி கிட்ட சொல்லிடுங்க. வேற ஏதாவது சந்தேகம் இருந்தா, கேளுங்க"


"ஓ.கே, சார், தாங்க்யூ சார்" என்றபடி அவர்கள் ஆசிரியரிடம் விடை பெற்று வெளியே வந்தனர்.


*********************
"அபர்ணா! நீ யாரைப் பத்தி எழுதப் போறே?"


ஜெயஸ்ரீ கேட்டதும், அபர்ணா மென்மையாய் சிரித்தாள்.


"இப்பதான் ஆசிரியர் இதைப் பத்தி சொல்லி முடிச்சிருக்கார். அதுக்குள்ளே யாரைப் பத்தி எழுதப்போறேன்னு கேட்டா, எப்படி?"


(தொடரும்..)
 
"அபர்ணா எப்பவுமே இப்படித்தான், ஜெயஸ்ரீ! என்ன செய்யப் போறானு தெரியவே தெரியாது; அப்புறம் பார்த்தா அவ செய்தது தான் நம்பர் ஒண்ணா இருக்கும்!"


நித்யாவும் அவர்கள் பேச்சில் கலந்து கொண்டாள்.


"போன வருஷம் அபர்ணா எழுதின கட்டுரைத் தொடர் 6 மாசம் வந்ததே, அப்ப இப்படித்தான், நம்ம ஆசிரியர் அபர்ணா கிட்ட மாசம் ஒரு கட்டுரை எழுதித் தரச் சொல்லிக் கேட்டார். நானும் நீ இப்ப கேட்ட மாதிரி, எதைப் பத்தி அபர்ணா எழுதப்போறேன்னு கேட்டேன்; இதே பதில் தான் கிடைச்சுது. அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சு பார்த்தா, "பால்" அப்படிங்கிற தலைப்பில பிரமாதமா ஒரு கட்டுரை!"


"ஆமாம் நித்யா! எனக்கும் ஞாபகம் இருக்கு. "தெரிந்ததும், தெரியாததும்" அந்த
வரிசசையில வந்த முதல் கட்டுரை அது தானே?"


"அதே தான்"


"போதும் நித்யா, ரொம்பப் படுத்தாதீங்க. திடீர்னு ஒரு ஐடியா வந்தது. "தெரிந்த விஷயத்தைப் பத்தி தெரியாத தகவல்களைச் சொன்னா, சுவையா இருக்கும்னு. அதே போல செய்தேன், அவ்வுளவு தான். இப்ப யாரைப் பத்தி எழுதறதுன்னு இன்னும் எனக்கே தெரியலை; தெரிஞ்சதும் உடனே சொல்லிடறேன், சரியா?"


எனக் கேட்க, இருவரும் அவள் சிரிப்பில் சேர்ந்து கொண்டனர்.


******************


அலுவலக வேலை முடிந்து , மாலை வீடு திரும்பினாள் அபர்ணா. அம்மா அளித்த
காபியைப் பருகியபடி அன்று நடந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாள்.


நித்யா சொன்னது போல, அபர்ணாவுக்கு புகழைப் பெற்றுத் தந்தது அந்தக் கட்டுரைத் தொடர் என்று தான் சொல்ல வேண்டும்.


அதற்காக விதவிதமான தகவல்களை சேகரித்து, பலருடைய கருத்துக்களைக் கேட்டறிந்து, வெளிநாடுகளில் பாலை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றிய விவரங்களை அறிந்து, பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால், ஆவின்பால் - அவற்றில் உள்ள நிறைகுறைகள் அனைத்தையும் வகுத்துக் கொண்டாள். வெறும் தகவல் தோரணமாக ஒரு கட்டுரை அமைந்தால் சுவையிருக்காது என்பதால் அவற்றுக்கிடையே பால் பற்றிய பழமொழிகள், பாடல்கள், நகைச்சுவை எனப் பலவும் சேர்ந்து அந்தக் கட்டுரையைத் தொகுத்த நினைவுகள் அவளுள் மலர்ந்தன.


அடுத்தது, தற்போதைய பணி பற்றிய சிந்தனை எழுந்தது.


"சாதனை புரிந்த பெண்மணி? யாரைச் சொல்லலாம்?"


பெருமையும், புகழும் உள்ள துறைகளை நினைத்துப் பார்த்தாள்.


முதலில் வருவது அரசியல். ஆனால் அரசியலில் இப்போது சாத்னை செய்யும் மகளிர் யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே!


குடும்ப உறவுகளைக் கொண்டு, அனுதாப வாயில் வழி அரசியலுக்கு வந்தவர், கணவர்/சுற்றத்தார் பின்னிருந்து ஆட்டி வைக்க, அரங்கத்தில் அரசியல் நடத்துவோர் - இவர்கள் செய்வது சாதனையா? வேதனை என்று அவள் மனம் சொல்லியது,


அடுத்தது, புகழ் பெருகும் இடம் என்றால் வெள்ளித்திரை தான். நேற்று ஒரு நடிகை, இன்று ஒருவர், நாளை இன்னொருவர் என்று குட்டி குட்டி நட்சத்திரங்களாய் திரைவானில் ஜொலிப்பதும், ஆறேழு மாதங்களில் படீரென தரையில் விழுந்து மோதுவதும் தமிழக மக்களுக்கு பழகிப்போன ஒன்று. இதில்
சாதனை எங்கே வருகிறது?


நடிப்பை சாதனையாகக் கொள்ளலாம். ஆனால்?


ஆசிரியரின் வார்த்தைகள் மறுபடி நினைவில் வலம் வந்தன.


"சமுதாயத்துக்கு தொண்டு செய்யற சாதனையா இருக்கணும்."


யாரைப் பற்றி எழுதுவது?அபர்ணா சிந்தனையில் ஆழ்ந்திருக்க, வாயிற்கதவு தட்டப்பட்டது.


அபர்ணா எழுந்து சென்று கதவைத் திறந்தாள். அவர்களுடைய பக்கத்து வீட்டுப் பெண், ப்ரியா வந்திருந்தாள்.


"ஸ்வீட் எடுத்துக்குங்க! செகண்ட் இயர் பாஸ் பண்ணிட்டேன்"


ப்ரியா உற்சாகத்துடன் கூறினாள்.


"கங்கிராட்ஸ்" என்று வாழ்த்தியபடி அபர்ணா இனிப்பு எடுத்துக்கொண்டாள்.


இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.


சமையலறையில் இருந்து அம்மாவும் வந்து அவர்களோடு கலந்து கொண்டார்.


"நிறையப் படிச்சு நல்ல வேலையில சேரணும்" என்று வாழ்த்தியபடி அம்மா இனிப்பு எடுத்துக் கொண்டார்.


"ப்ரியா, எவ்வுளவு பர்செண்டேஜ் வாங்கி இருக்கே?"


"85 % அக்கா"


"வெரிகுட்"


"உங்க பத்திரிகையில தனுஷ் பேட்டி எடுக்கப் போனா, என்னையும் கூட்டிட்டு போறீங்களா, அக்கா?"


ப்ரியா கேட்க, அபர்ணாவும் அம்மாவும் கலகலவெனச் சிரித்தனர்.


"ப்ரியா! அவங்க இதழ்ல தனுஷ் பேட்டி வரும்போது, கண்டிப்பா உன்னைக் கூட்டிட்டு போகச் சொல்றேன்"


"அம்மா! இந்த மாதிரி நிறைவேற்ற முடியாத வாக்குறுதி எல்லாம் கொடுக்காதீங்க. அதெல்லாம் சான்ஸே இல்லை"


அபர்ணா சுருக்கமாக தங்கள் இதழின் கொள்கைகளை ப்ரியாவுக்கு கூறினாள்.
அதன் பின் லேட்டஸ்ட் பாடல்கள், டிரெஸ் என்றெல்லாம் பேச்சு ஓடிய பிறகு மறுபடி காலேஜில் வந்து நின்றது.


"ப்ரியா! உங்க கிளாஸ் பர்செண்ட் எவ்வுளவு?"


"85 % அக்கா"


"அட, அதிசயமா இருக்கு! திடீர்னு நீ வேற காலேஜ்க்கு மாறிட்டியா, என்ன?"


"இல்லியே, அதே காலேஜ் தான்"


"அப்ப இந்த மாற்றத்துக்கு காரணம்?"


"இதுக்குக் காரணம் எங்க யமுனா மேடம் தான்."

***************
 
அத்தியாயம் - 3
**********************


"உங்க புது பிரின்சின்னு சொன்னியே?"


"ஆமாம்; அவங்களே தான். இப்ப வந்து எங்க காலேஜைப் பாருங்க, நீங்களே அசந்து போயிடுவீங்க, என்ன டிஸிப்ளின், என்ன ரிஸல்ட், என்ன ப்ரைஸஸ்! எல்லாத்துக்கும் அவங்க தான் அக்கா காரணம்!"


"கேட்கவே ஆச்சரியமா இருக்கு, ப்ரியா! ஒரு கவர்மெண்ட் காலேஜ்ல இவ்வுளோ செய்ய முடியுமா?"


அம்மா நம்ப முடியாமல் கேட்டார்.


"இவங்க செய்திருக்காங்களே, ஆண்ட்டீ! முதல்லே நாங்க கூட அவ்வுளவு கண்டுக்கலை; புதுசா வர்ற எல்லாரைப் போலவும் முதல்ல கொஞ்ச நாள் ஏதோ வேலை செய்யறாங்கன்னு தான் நினைச்சுக்கிட்டோம். அப்புறம் பார்த்தா நிஜமாவே ரொம்ப சின்சியரா எல்லா வேலையிலும் இறங்கிட்டாங்க. என்ன விஷயமா இருந்தாலும், எப்ப வேணும்னாலும் ஸ்டூடண்ட்ஸ் அவங்களைப் பார்க்கலாம்னு சொல்லிட்டாங்க. என்ன பிராப்ளமா இருந்தாலும் உடனே சரி பண்ணிக் கொடுக்கறாங்க."


"மற்ற ஸ்டாஃப் எல்லாரும் இதற்கு ஒத்துக்கிறாங்களா, ப்ரியா?"


ப்ரியா சிரிப்போடு, "எங்க ப்ரின்சி அவங்களை ஒத்துக்க வைச்சிட்டாங்க, அக்கா"


"எப்படி?" என்றாள் அபர்ணா, வியப்போடு.


"முதல்லே மற்றவங்க எல்லாம் கோ- ஆபரேடிவா இல்லை தான்; ஆனா, பிரின்சி அவங்க வேலை செய்யறதுக்காக காத்திருக்காம, தானே அதையும் சேர்த்து செய்ய ஆரம்பிச்சிட்டாங்க; இதனால ஸ்டூடண்ஸ் மத்தியில பிரின்சிக்கு ரொம்ப நல்ல பேரு வந்திடுச்சு. இதைப் பார்த்து மற்றவங்களும் எல்லாம் மாறிட்டாங்க. முக்கியமா, எங்க காலேஜ் ஹாஸ்டல் கம்ப்ளீட்டா மாறிடுச்சு."


"என்ன காரணம்?"


"ப்ரின்ஸிபல் தான் எங்க காலேஜ் ஹாஸ்டல் வார்டன். இதுக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் வேற இடத்துல தங்கிக்கிட்டு இருந்தாங்க. வாரம் ஒரு முறை ரவுண்ட்ஸ் போவாங்க. அங்க ஹாஸ்டல்ல இருக்கறவங்களும், மேடம் ரவுண்ட்ஸ் வர்ற அன்னைக்கு மட்டும் எல்லாம் சரியா இருக்கிற மாத்ரி செட்-அப் பண்ணிடுவாங்க."


"ஸ்கூல் இன்ஸ்பெகஷ்ன் மாதிரின்னு சொல்லு, " என்றார் அம்மா சிரித்தபடி.


"ஆமாம் ஆண்ட்டீ"


"ப்ரியா, உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?" அபர்ணா கேட்டாள்.


"என் க்ளோஸ் ப்ரெண்ட் அபிதா காலேஜ் ஹாஸ்டல்ல தானே இருக்கா. பாதி நாள் தண்ணீர் வர்லேன்னு கம்ப்ளெண்ட்; இல்லே, சாப்பாடு நல்லாயிருக்காது, அப்படி, இப்படின்னு ரொம்ப கஷ்டம், பாவம்! அவ சொல்லித் தான் எனக்குத் தெரியும். முன்னெல்லாம், என் லன்ச் அவளால காலையிலேயே காலியாகிடும். நல்ல வேளையா, இப்பல்லாம் யமுனா மேடம் ஹாஸ்டல்லயே தங்கறாங்க.


திடீர் திடீர்னு எல்லா இடத்திலயும் செக் பண்றாங்க; வேளா வேளைக்கு சாப்பாடை டேஸ்ட் பண்றாங்க. அதனால இப்ப எங்க ஹாஸ்டல் சூப்பரா இருக்கு."


"ஆமாம்! இவங்க ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாம் எங்க இருக்காங்க?"


"அவங்க கல்யாணமே செய்துக்கலை, ஆண்ட்டீ; தனியா தான் இருக்காங்க."


என்ற ப்ரியா கடிகாரத்தைப் பார்த்து சட்டென எழுந்தாள்.


"ஆண்ட்டீ, இன்னும் பாட்டி வீட்டுக்கு போகணும்; நான் கிளம்பறேன், பை, ஆண்ட்டி, பை, அக்கா!"


என்று கிளம்பிவிட்டாள்.


அபர்ணா அவர்கள் காலேஜ் முதல்வரைப் பற்றிய சிந்தனைகளில் லயித்துவிட்டாள்.


"என்ன ஒரு தைரியமான, வைராக்கியமான பெண்ணாக இருக்க வேண்டும்?"


அரசுக் கல்லூரியில் இப்படி ஒரு பெரும் மாற்றத்தை நிகழச் செய்வது சாதாரண காரியமா?"


அவள் சிந்தனையோட்டத்தை அம்மா கலைத்தார்.


"அபர்ணா! உங்க ஆஃபீஸ்லே இன்னிக்கு ஏதாவது சிறப்புச் செய்திகள் உண்டா?"


அம்மாவின் 'டேக்-இட்-ஈஸி' பாலிஸி அபர்ணாவை ரொம்பவும் கவர்ந்த ஒன்று. எதற்குமே அலட்டலோ, பதட்டமோ, கவலையோ கிடையாது. அதற்காக பொறுப்பற்ற தன்மை என்றும் சொல்ல முடியாது. நைசாக, நாசூக்கான வார்த்தைகளால் அவள் எல்லாரையும் சமாளித்து விடுவாள். அதனால்தான் அபர்ணாவின் பத்திரிகை ஆர்வத்துக்கு அம்மா அணை போடாமல், உடனிருந்து வளர்த்தாள். அவள் அப்பாவையும் சம்மதிக்க வைத்தாள்.


"இந்த முறை ஆண்டுமலர்லே சிறப்பு விருது - சாதனைப் பெண்மணி விருது கொடுக்கப் போறாங்கம்மா. இன்னிக்கு ஆசிரியர் எங்களைக் கூப்பிட்டு, அதுக்கு கட்டுரை ரெடி பண்ணச் சொல்லியிருக்கார். அதான், வந்ததிலேர்ந்து யாரைப் பத்தி எழுதலாம்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்மா."


"ப்ரியா தான் சொல்லிட்டுப் போறாளே, அவங்க மேடம் பத்தியே எழுதிடேன், அபர்ணா"


"யோசிச்சுப் பார்க்கிறேம்மா"


அபர்ணா சொல்லவும், அம்மா தன் வேலையைத் தொடரச் சென்று விட்டாள்.


அம்மா சொன்னது போல, யமுனா மேடம் பற்றி எழுதலாமா?


கல்விப் பணி உயர்ந்தது; சிறந்தது. வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பொறுப்பு நிறைந்தது.


மகாகவி பாரதி சொன்னது போல,


"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"


என்பதாக, உயர்தொண்டாக அவர் சொன்னது கல்விப்பணி தானே!


ப்ரியா சொன்னது போல யமுனா மேடம் கல்விக்காகவே தொண்டாற்றுகிறார் என்றால், அவரையே சாதனைப் பெண்மணியாகக் கொள்ள வேண்டும்!


அபர்ணா தன் மனத்துக்குள் தீர்மானம் செய்து கொண்டாள்.


*******************
 
அத்தியாயம் - 4
*********************


அன்னை தெரசா அரசு மகளிர் கல்லூரி.


கல்லூரியின் வகுப்புகள் முடிய இன்னும் அரைமணி நேரம் இருக்கும்போது, அபர்ணா அங்கு வந்தாள்.


"ப்ரியாவின் கல்லூரி முதல்வரைப் பார்க்க வேண்டும்" என்ற் ஆவல் தான் அவளை அங்கே அழைத்து வந்துவிட்டது.


முதல்வர் அறைக்கு வெளியே ஐந்தாறு பேர் ஏற்கனவே காத்திருந்தனர். அபர்ணா அங்கே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.


தன்னைச் சுற்றி இருந்தவர்களை கவனித்தாள். மாணவிகள் மூன்று பேர் ஏதோ தீவிரமாக ஆலோசனையில் கலந்திருந்தனர். ஒரு இளம்பெண்ணும், அவளுடன் அவள் தாயும் காத்திருந்தனர்.


முதல்வர் அறையிலிருந்து வந்த காரியதரிசி, அபர்ணா வந்திருப்பதைக் கவனித்தார். அவர் அருகில் வந்தார்.


"மேடம், நீங்க யாரு? என்ன விஷயமா வந்திருக்கீங்க?"


அபர்ணா தனது பத்திரிகையாளர் அடையாள அட்டையை எடுத்துக்காட்டி, தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.


"என் பேர் அபர்ணா. 'நந்தவனம்' பத்திரிகை நிருபர். உங்க மேடம் கிட்ட பேட்டி எடுக்க வந்திருக்கேன்."


"ஓகே மேடம். உட்காருங்க, மேடம் கிட்ட சொல்றேன்."


என்று உள்ளே சென்றார்.


ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் வந்து,


"இன்னும் நிறைய வேலை இருக்கு. அதெல்லாம் முடிஞ்ச பிறகு தான் அவங்க ஃப்ரீயா இருப்பாங்க. நீங்க முன்னாடியே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருந்தா, நல்லா இருந்திருக்கும்."


என்றபடி அவர் சொல்ல வந்ததை அபர்ணா புரிந்து கொண்டாள்.


"பரவாயில்லை, நான் வெயிட் பண்றேன்"


என்று புன்னகையுடன் கூற, அவர் நன்றி சொல்லிவிட்டு சென்றார்.


அபர்ணா இருந்த இடத்தில் இருந்து கல்லூரியின் பரந்த புல்வெளி காட்சிக்கு விருந்தாக இருந்தது.


ஒரே சீராக வளர்க்கப்பட்ட பூச்செடிகள் தென்றலோடு அளவளாவிக் கொண்டிருந்தன.


அவ்வப்போது மாணவிகள் அவர்களைக் கடந்து சென்றனர்.


பட்டாம்பூச்சிகள் போல அவர்கள் உடைகளும், கவலையற்ற முகங்களும், பூத்துக் குலுங்கும் புன்சிரிப்பும், கலகலப்பும், உற்சாகமும் அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தன்னுடைய கல்லூரி வாழ்க்கையின் நினைவலைகள் அபர்ணாவுக்குள் வந்து போயின.


அப்போது அந்த வழியே வந்த ஒரு மாணவி அவர்களிடம் வந்தாள்.


அபர்ணாவை அடுத்து அமர்ந்திருந்த இளம்பெண்ணிடம் சென்றாள்.


"என் பேரு, ரேகா. நீங்க பிரேமாவோட சிஸ்டர் தானே?" என்று கேட்டாள்.


அவள் தலையசைத்தாள்.


"பிரேமாவுக்கு இப்ப எப்படியிருக்கு?"


இப்போது அந்த அம்மா பேசினார்:


"பரவாயில்லைமா; இருந்தாலும் ஆபரேஷன் செய்தா தான் முழுசா குணமாகும்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. பணத்துக்கு ஏற்பாடு செய்யறோம்னு இந்தப் புள்ளைங்க தான் தைரியம் சொல்லியிருக்கு."


"நீங்க கவலையே படாதீங்க, பிரேமாவோட மெடிகல் செலவுக்காக ஒரு கலை நிகழ்ச்சி நடத்தப் போறதா பிளான் பண்ணியாச்சு. அதுக்கு டிக்கெட் போட்டு, வர்ற பணத்தை அப்படியே கொடுத்துடுவோம். நிச்சயம் பிரேமா மறுபடி வந்து எங்களோடு படிக்கப் போறா, பாருங்க"


என்று கூட இருந்த ஒரு மாணவி கூறவும், அந்தத் தாயின் முகம் தெளிவடைந்தது. அபர்ணாவுக்கும் அவர்கள் ஆலோசனையில் இருந்த காரணம் புரிந்தது.


காரியதரிசி வந்து அவர்களை உள்ளே அழைத்துப் போனார்.


அபர்ணா தன்னுடன் இருந்த ரேகாவிடம் பேச்சுக் கொடுத்தாள்.


"என்ன ஆச்சு?"


"எங்க காலேஜ் ஸ்டூடண்ட் பிரேமா. அவளுக்கு காலேஜ் வரும்போது ஆக்சிடெண்ட் ஆகி, ரொம்ப அடிபட்டுடுச்சு. அவங்க வீட்டுல அவளுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணக்கூட பண வசதி இல்லை, அதான் நாங்க ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்து ப்ரொகிராம் செய்து, பணம் கலெக்ட் பண்ணி கொடுக்கப் போறோம்."


அபர்ணாவுக்கு அவர்கள் அன்பை நினைக்கையில் பெருமிதமாக இருந்தது.


உள்ளே சென்றவர்கள் மலர்ந்த முகங்களோடு வெளிவந்தனர்.


"ரேகா! ப்ரின்சி எல்லாத்துக்கும் ஓ.கே சொல்லிட்டாங்க. நம்ம ப்ரொகிராமுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்து தரேன்னு சொல்லியிருக்காங்க."


அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிட ஆரம்பித்தார்கள்.


பிரேமாவின் தாயும், சகோதரியும் விடை பெற்றுக் கொண்டனர்.


ரேகா அபர்ணாவிடமிருந்து விடை பெற்றாள்.


கல்லூரி நேரம் முடிந்ததைக் குறிக்கும் மணி ஒலித்தது.


காரியதரிசி வந்து அபர்ணாவை உள்ளே அழைத்துச் சென்றார்.


நீள்வட்ட மேஜை மேல் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்த பொருட்கள், அறையின் சுத்தம் - இவை அங்கே இருந்த யமுனாவின் ஆளுமையை அபர்ணாவுக்கு உணர்த்தின.


ஒளி படைத்த கண்கள், நிமிர்ந்த தோற்றம், கண்டிப்பும் கனிவும் கலந்த முகம் - அபர்ணா யமுனாவின் தோற்றத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.


(தொடரும்..)
 
அத்தியாயம் - 5
**********************


"ஸாரி, மேடம்! நீங்க ரொம்ப நேரம் வெயிட் பண்ண வேண்டியதாயிடுச்சு!"


யமுனா சொல்லவும், அபர்ணா 'இட்ஸ் ஓ.கே' என்று புன்னகைத்தாள்.


"சொல்லுங்க; என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க?"


"நந்தவனம் பத்திரிகை பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்"


யமுனா ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.


" இந்தமுறை ஆண்டுமலர்லே உங்களோட பேட்டியை வெளியிடலாம்னு இருக்கோம். அதுக்குத் தான் நான் வந்திருக்கேன், மேடம்."


"காலேஜ் பத்தின இண்டர்வியூ தானே? தாராளமா செய்யலாம்!"


"மேடம், இது பர்சனல் இண்டர்வியூ" அபர்ணா குறுக்கிட்டாள்.


"என்னம்மா இது? பர்சனல் இண்டர்வியூ எடுக்கற அளவுக்கு நான் ஒண்ணும் செய்யலையே!"


"மேடம், அது உங்களோட அடக்கத்தைக் காட்டுது. இதே காலேஜ் நீங்க வர்றதுக்கு முன்னாடி இருந்த நிலைமையும் எல்லாருக்கும் தெரியும். இப்ப நீங்க செய்திருக்கிற மாற்றமும் எங்களுக்குத் தெரியும்."


அபர்ணா புன்னகையுடன் கூறவும், யமுனா மேடம் அதை மறுக்கும் விதமாய் தலையாட்டினாள்.


"நான் செய்திருகிறது பெரிய சாதனை இல்லை. ஒரு கல்லூரி முதல்வரோட கடமை என்னவோ, அதைத் தான் நான் செய்துகிட்டிருக்கேன். அதனால தனிப்பட்ட முறையில நீங்க பேட்டி எடுத்து வெளியிடறதுல எனக்கு விருப்பம் இல்லை."


பெரிய மனிதர்களுக்கு இருக்கும் சிறந்த குணங்களுள் இந்தத் தன்னடக்கமும் ஒன்று. அதனால்தானே வள்ளுவர், "அடக்கம் அமரருள் உய்க்கும்" என்று சொல்லியிருக்கிறார் என்று அபர்ணா நினைத்துக் கொண்டாள்.


"சரி, இப்போதைக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி முடிந்ததைச் செய்வோம், மற்றதை பிறகு தீர்மானிக்கலாம்" என்று முடிவு செய்தாள்.


"ஓ.கே மேடம், உங்க விருப்பம் இல்லாம செய்யறதுல எனக்கும் சம்மதம் இல்லை. அதனால இப்போதைக்கு காலேஜ் பகுதியில உங்க காலேஜ் பத்தின தகவல்களை வெளியிடறேன். அதுக்கு உங்ககூட கொஞ்ச நேரம் செலவிட வேண்டியிருக்கும்."


"அதுக்கு என்னோட ஒத்துழைப்பு தாராளமா உண்டு."


சிரித்தபடியே யமுனா அவர்கள் கல்லூரி பற்றிய தகவல்கள் நிறைந்த 'ப்ராஸ்பெக்டஸ்' -ஐ எடுத்து, அபர்ணாவிடம் கொடுத்தார்.


"எங்க காலேஜ் பத்தின எல்லா தகவல்களும் இதுல இருக்கு. வேற ஏதாவது வேணும்னா, அப்புறமா காண்டாக்ட் பண்றீங்களா?"


தனக்கு நாசூக்காக விடைகொடுப்பதை உணர்ந்து அபர்ணா கிளம்பினாள்.


"ஓ.கே மேடம், தாங்க்யூ வெரிமச்! அப்படியே உங்க ஹாஸ்டலையும், வித் யுவர் பர்மிஷன், பார்த்துட்டு கிளம்பலாமா?"


"நானும் அங்கதான் கிளம்பிட்டு இருக்கேன், வாங்க போகலாம்."


அபர்ணா வெளியில் காத்திருக்க, யமுனா மேடம் தன் செயலரை அழைத்து செய்து முடிக்க வேண்டிய வேலைகளைக் கூறிவிட்டுக் கிளம்பினார்.


ஹாஸ்டலுக்குச் செல்லும் வழியில் மரங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. விடுதியைச் சுற்றிலும் தூய்மை மிளிர்ந்தது.


அது அரசாங்கக் கட்டிடம் என்பதை அதன் பழமையான தோற்றம் அறிவித்த போதிலும், அது அழகாக பராமரிக்கப்பட்டு வருவதும் தெரிந்தது.


நுழைந்ததும் இருந்த வரவேற்பு அறையில் நடுவில் ஒரு டீபாய் இருந்தது. அதன் மேல் தினசரிகளும், சில பத்திரிகைகளும் இருந்தன. நான்கைந்து மாணவியர் அதைச் சுற்றி இருந்த நாற்காலிகளில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். மேடம் வருவதைப் பார்த்து எழுந்தனர்.


"காபி சாப்பிட்டீங்களா?" என மேடம் கேட்க, அவர்கள் தலையாட்டினர்.


அபர்ணா அவர்கள் பேச்சில் கலந்து கொள்ள முடிவெடுத்தாள்.


"மேடம், இஃப் யூ டோண்ட் மைண்ட், நான் இவங்களோட பேசிட்டிருக்கேன்."


"கண்டிப்பா. கேர்ல்ஸ்! இவங்க ஒரு ஜர்னலிஸ்ட்; நம்ம காலேஜ் பத்தி ஒரு கட்டுரை எழுத வந்திருக்காங்க. ஒ.கே" என்றவர்,


"நான் ஒரு பத்து நிமிஷத்துல வரேன்" என்று அபர்ணாவிடம் கூறிவிட்டு, மாடியில் இருந்த தன் தனியறைக்குச் சென்றார்.


"என் பேர் அபர்ணா. உங்க பேர் என்ன?"


ப்ரீதா, காமாட்சி, ஜெயா, சாரதா நால்வரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். கல்லூரி குறித்தும், விடுதி பற்றியும் மேடம் வந்த பின் நடந்துள்ள சில மாற்றங்கள், முன்னேற்றங்கள் - இவை பற்றியும் அபர்ணா அவர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.


விடுதி ஆயா அபர்ணாவிடம் வந்து,


"உங்களுக்கு குடிக்க என்ன தரட்டும், அம்மா காபியா, டீயானு கேட்டு கொடுக்க சொன்னாங்க" என்று வரவும், அபர்ணா காபி குடிப்பதாகக் கூறினாள். ஐந்து நிமிடத்தில் காபி வந்தது; நல்ல தரமானதாகவும் இருந்தது.


மேடம் இறங்கி வந்ததும் ஆயா அவருக்கு டீ எடுத்து வந்தார். அதைப் பருகி விட்டு,


"லக்ஷ்மிம்மா, டிபன் ரெடியானு கேட்டுட்டு வாங்க" என்று அவரிடம் கூறினார்.


ஆயா வந்து ரெடி என சொல்லவும், மேடம் எழுந்து சமையலறைக்கு சென்றார்.


அபர்ணா ஒன்றும் புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


(தொடரும்...)
 
அத்தியாயம் - 6
**********************


யமுனா மேடம் சமையலறைக்குள் செல்வதை அபர்ணா வியப்புடன் பார்த்தாள்.


ப்ரீதா, "மேடம் எல்லாம் சரியா இருக்குதானு செக் பண்னின அப்புறம் தான் எங்களை சாப்பிடக் கூப்பிடுவாங்க" எனவும்,


அபர்ணாவின் மனதில் யமுனா மேடம் அந்த மாணவிகளின் தாய் ஸ்தானத்துக்கு உயர்ந்தார்.


மறுநாள் சமையலுக்கு மெனு சொல்லிவிட்டுத் திரும்பிய யமுனா, அறை வாசலில் அபர்ணாவைக் கண்டு சிரித்தார்.


"இங்கேயும் வந்திட்டீங்களா? இதுதான் எங்க வீட்டுச் சமையலறை. இவங்க தான் ஹெட்குக்."


என்று சமையல் அம்மாளை அறிமுகப்படுத்தினார்.


சமையல் அறையில் சுத்தம் என்றால் படுசுத்தமாக இருந்தது. அழுக்கு, பிசுக்கு இல்லாமல் மேடை பளபளத்தது. டிபன் மூடி வைக்கப்பட்டிருந்தது. அலம்பி வைக்கப்பட்ட பாத்திரங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.


"கிச்சனை ரொம்ப நீட்டா வைச்சிருக்கீங்க"


தன் மனதில் தோன்றியதை அபர்ணா பளிச்செனக் கூறினாள்.


"எல்லாம் தங்கத்தோட இன்சார்ஜ் தான்"


மேடம் கூறவும் தங்கம் கூச்சத்தால் நெளிந்தாள்.


"சரி,ஹாஸ்டலை சுத்திப் பார்த்துட்டு வாங்க" என அபர்ணாவை ஆயாவுடன் மேடம் அனுப்பி வைத்தார்.


"உங்க ஹாஸ்டலை பார்த்தா, எனக்கே இங்க வந்து தங்கிடலாம்னு ஆசையா இருக்கு ஆயா" அபர்ணா கூறவும் ஆயா பெருமையுடன் கூறினார்.


"யமுனாம்மா கூட இருக்க கொடுத்து வைச்சிருக்கணும்" என்றவர்,


"அம்மாடீ! நீ காலேசு பத்தி எழுத வந்திருக்கேனு நம்ம புள்ளைங்க சொல்லிச்சு. ரொம்ப சந்தோஷம். அப்படியே யமுனாம்மாவோட தங்கமான குணத்தைப் பத்தியும் நாலு வரி எழுதிடும்மா"


"அவங்க வந்த பிறகு காலேஜையே மாத்திட்டாங்கனு எல்லாரும் பேசிக்கிறாங்க. அதைச் சொல்றீங்களா, ஆயா?"


"அது மட்டுமில்லைமா; புள்ளைங்க மேலே என்ன அக்கறையா இருக்காங்க, தெரியுமா? போன வாரம் நம்ம ஹாஸ்டல்ல ஒரு புள்ளைக்கு உடம்பு சரியில்லை; நாலு நாளா ஜூரம்; யமுனாம்மா எப்படிக் கவனிச்சுக்கிட்டாங்கன்னு தெரியுமா? தினம் டாக்டரம்மா வரச் சொல்லி, ஹ்ம்....அந்தப் புள்ளைக்கு சரியாகற வரை இவங்களுக்கு சோறு, தண்ணி இறங்கலைன்னா பாரும்மா. நானும் இத்தினி வருஷமா ஆயாவா இருக்கேன்; இப்படி ஒருத்தங்களைப் பார்த்ததே இல்லை."


"பார்த்தா ரொம்ப கண்டிப்பா, கறாரா இருப்பாங்க போல தெரியுது?"


"பழகிப் பாருங்கம்மா, தங்கம் போல மனசுன்னு நீங்களே சொல்லுவீங்க"


பேசிக்கொண்டே அவர்கள் மீண்டும் வரவேற்பறைக்கு வந்தார்கள்.


அபர்ணா மேடத்திடம் விடைபெற்றுக் கிளம்பினாள்.


********************
அபர்ணா வீடு திரும்பியதும் அம்மா அவளை ஆவலுடன் வரவேற்றார்.


"வா, அபர்ணா! பேட்டி கிடைச்சுதா?"


"இல்லேம்மா; பேட்டி கிடைக்கலே. ஆனா, அவங்களைப் பத்தி பல விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சுது."


"என்ன ஆச்சு? பேட்டி தர முடியாதுன்னு சொன்னாங்களா?"


"அந்தக் காரணத்தைக் கேட்டா நீயும் ரொம்ப ஆச்சரியப்படுவேம்மா. ஏன்னா, பேட்டி எடுக்கிற அளவு பெரிய சாதனை ஏதும் தான் செய்யலை, அதனால இது அவசியமே இல்லைனு தீர்மானமா சொல்லிட்டாங்க."


"இந்தக் காலத்துல இப்படி ஒரு மனுஷியா? தனக்குத் தானே பிறந்தநாள் வாழ்த்து, திருமணநாள் வாழ்த்து அப்படின்னு பத்திரிகை மூலமா வாழ்த்திக்கிட்டு விளம்பரம் தேடிக்கிற உலகம் இது. இதுல பேட்டி எடுக்கப் போன உங்கிட்டே இப்படி சொல்லியிருக்காங்க. அபர்ணா, நிஜமாவே அவங்க ஒரு வித்தியாசமான பெண்மணினு தான் எனக்கும் படுது."


"அம்மாவும் பெண்ணுமா யாரைப் பத்தி பேசிட்டிருக்கீங்க?"


அப்பா கேட்டபடியே அவர்கள் பேச்சில் கலந்துகொண்டார்.


அபர்ணா சுருக்கமாக யமுனா மேடம் பற்றித் தான் கேள்விப்பட்ட தகவல்களையும், அன்று பேட்டி எடுக்கச் சென்ற தன் அனுபவத்தையும் கூறினாள்.


"அப்புறம் என்ன செய்யறதுன்னு பார்த்தேன்; சரி, காலேஜ் பத்தின கட்டுரையா எழுதறேன்னு சொல்லி அவங்களோடேயே காலேஜ் ஹாஸ்டலுக்குப் போனேன். எல்லாருக்கும் அவங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு."


"அபர்ணா, அதிகாரத்துல இருக்கிறவங்க யாரோ அவங்களை எல்லாருக்கும் பிடிச்சுதானே ஆகணும்?"


அப்பாவின் கேள்வியின் அர்த்தத்தை அபர்ணா உணர்ந்து கொண்டாள்.


"நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்பா. இந்த விஷயத்துல நான் அந்த மாதிரிப்பட்டவங்க கிட்ட பேசலே. அங்க ஹாஸ்டல்ல வேலை செய்யற ஆயா கிட்ட பேசினேன்; தானே முன்வந்து மேடத்தைப் பத்தி எழுதுங்கன்னு என் கிட்ட கேட்டுக்கிட்டாங்க."


"அப்படின்னா இது உண்மையான அன்புதான்; அடிமட்டத்துல இருக்கிறவங்க எப்பவுமே யாருக்குமே பயப்பட மாட்டாங்க. மனசில உள்ளதை படார்னு சொல்லிடுவாங்க."


"ஆமாம்பா, அவங்க அன்புக்குக் காரணமும் எனக்குப் புரிஞ்சுது. மேடம் எல்லாரையும் ஒரே மாதிரி மரியாதையா நடத்தறாங்க; சமையல்கார அம்மா லக்ஷ்மி, இன்சார்ஜ் தங்கம், ஆயா கனகம், வாட்ச்மேன் வடிவேல் - எல்லாரையும் அவங்கவங்களை தனிப்பட்ட மனுஷங்களா மரியாதையா நடத்தறாங்க; நல்லா பாராட்டி வேலை செய்ய வைக்கிறாங்க; ஸ்டூடண்ட்சும் அதனால அவங்க கிட்ட மரியாதையோட நடந்துக்கிறாங்க."


"சரி அபர்ணா! இத்தனை நல்லவங்களா இருக்கிறவங்க இப்படி பேட்டி கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களே, இப்ப நீ என்ன செய்யப் போறே?"


"அதாம்மா நானும் யோசனை செய்துக்கிட்டு இருக்கேன், எனக்கென்னவோ அவங்களைப் பார்த்ததுல இருந்து கண்டிப்பா அவங்க பேட்டியை வெளியிடணும்னு ஒரு எண்ணம் வந்திடுச்சு. ஆனா, அதுக்கு எப்படி அவங்களை சம்மதிக்க வைக்கிறதுன்னு தான் யோசிக்கிறேன்."


"ஏன் அபர்ணா, அவங்களைச் சேர்ந்த சொந்தக்காரங்களோ, ஃப்ரெண்ட்ஸோ இருந்தா, அவங்க மூலமா ட்ரை பண்ணேன்?"


அப்பா கூறவும் அபர்ணாவின் முகம் மலர்ந்தது.


"ஆமாம் அபர்ணா, நம்ம ப்ரியா சொல்லிட்டிருப்பா, அவ கிளாஸ்மேட்டோட அம்மா தான் மேடத்தோட க்ளோஸ் ப்ரெண்டாம்; அவங்க கிட்ட வேணா பேசிப் பாரேன்."


"அது தாம்மா சரியா வரும். நான் இப்பவே போய் ப்ரியா கிட்ட அவங்க அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் வாங்கிட்டு வரேன். இன்னும் நாலு நாளைக்குள்ள யாரைப் பத்தி எழுதப் போறோம்னு எடிட்டர் சார் கிட்ட சொல்லிடணும்."


(தொடரும்....)
 
அத்தியாயம் - 7
*********************


அரைமணி கழித்து, அபர்ணா விலாசத்தோடு வந்தாள்.


"அட்ரஸ் கிடைச்சுதா அபர்ணா?"


"கிடைச்சுதும்மா; அவ ப்ஃரெண்ட் சுமதி கிட்டே இந்த நிஷாவோட அட்ரஸ் இருந்தது. நிஷாவோட அம்மா பூர்ணிமாவும், யமுனா மேடமும் தான் திக் ஃப்ரெண்ட்ஸ்."


பூர்ணிமா வீட்டுக்கு தொடர்பு கொண்டு மறுநாள் காலை ஒரு பேட்டி விஷயமாக வருவதாகக் கூறி அபர்ணா அனுமதி பெற்றுக் கொண்டாள்.


அன்றிரவு முழுக்க அபர்ணாவுக்கு இதே சிந்தனைதான். எப்படி பூர்ணிமாவிடம் பேசுவது என்று பலமுறை தனக்குள்ளேயே பேசி இறுதியாக முடிவு செய்து கொண்டாள். அதன் பிறகே அவளால் நிம்மதியாக தூங்க முடிந்தது.


மறுநாள் காலை சொன்னபடி சரியாக பத்து மணிக்கு பெசண்ட் நகரில் பூர்ணிமா வீட்டில் இருந்தாள் அபர்ணா.


வாயில்மணி இன்னிசை ஒலித்தது.


வந்தது பூர்ணிமாவாகத் தான் இருக்க வேண்டும் என்பதை வயதையும், தோற்றத்தையும் வைத்து எடை போட்ட அபர்ணா தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.


"நான் அபர்ணா, நேத்து ஃபோன் பண்ணியிருந்தேன்.."


"வாம்மா, நான் தான் பூர்ணிமா, உனக்காகத் தான் காத்துக்கிட்டிருக்கேன்" என்றபடி உள்ளே அழைத்துச் சென்றாள்.


"சொல்லும்மா, என்ன விஷயமா வந்திருக்கே?"


"உங்க ஃப்ரெண்ட் யமுனா மேடம் பற்றித் தான் பேச வந்திருக்கேன்."


"அதுக்கு என்னை பார்க்க வந்திருக்கே?"


"ஆமாம் ஆண்ட்டீ! யமுனா மேடம் கிட்ட தான் நேத்து பேட்டி எடுக்க போயிருந்தேன்; ஆனா அவங்க பேட்டி கொடுக்கிற அளவு தான் எதுவும் செய்யலைனு சொல்லி பேட்டி கொடுக்க மறுத்துட்டாங்க்."


"அவ எப்பவும் இப்படித்தான்; சரி, இப்ப என்ன செய்யறதா இருக்கீங்க?"


"அவங்க பேட்டி இல்லைன்னாலும் அவங்களோட வாழ்க்கை வரலாறு மாதிரி ஒரு கட்டுரை எழுதலாம்னு இருக்கேன். அதுக்கு மேடம் பத்தின டீடெயில்ஸ் எல்லாம் கொடுத்து நீங்க தான் உதவணும். சின்ன வயசிலேர்ந்து நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்னு சொன்னாங்க."


"அது சரிதாம்மா; எங்களுக்குள்ளே தெரியாத விஷயமோ, பேசிக்காத சமாச்சாரமோ எதுவும் இல்லை. ஆனா, யமுனா கிட்ட கேக்காம எப்படி நான் இதுக்கு சம்மதிக்க முடியும்?"


"ஆண்ட்டீ, இது வந்து ஒரு விருதுக்காக நான் தயார் பண்ணற ஒரு கட்டுரை. ஒரு வேளை இந்த விருது யமுனா மேடத்துக்கே கூட கிடைக்கலாம். அப்ப அவங்களோட கடுமையான உழைப்பும், சாதனைகளும் ஒரு நியாயமான அங்கீகாரம் பெறும். உங்க ஃப்ரெண்ட்டோட தகுதிக்குக் கிடைக்கிற ஒரு பரிசா நினைச்சு, நீங்க இதுக்கு உதவணும்னு தான் என்னோட வேண்டுகோள்.


அவங்க பேட்டி கொடுக்கலைன்னாக் கூட அவங்களைப் பத்தின கட்டுரைக்கு பர்மிஷன் கொடுத்தாப் போதும். எப்படியாவது, நீங்க தான் இதைச் செய்யணும்."


அபர்ணா விளக்கமாகச் சொல்லி முடித்தாள்.


"சரிம்மா, நீ இவ்வுளவு தூரம் ஆசைப்பட்டுக் கேக்கிறே. எனக்கும் யமுனாவோட பேரும், புகழும் பரவணும்னு தான் ஆசை. அதனால அவ கிட்ட பேசிப் பார்க்கிறேன்."


அபர்ணா மகிழ்ச்சியோடு நன்றி கூறிவிட்டுக் கிளம்பினாள்.


*******************
ஞாயிற்றுக்கிழமை.


காலை பதினோரு மணி இருக்கும். கல்லூரி விடுதியில் சிலர் தொலைக்காட்சி, சிலர் பத்திரிகைகள் என்று பொழுது போக்கிக் கொண்டிருந்தனர்.


பூர்ணிமா வருவதைப் பார்த்த ப்ரீதா,


"வாங்க ஆண்ட்டீ, நிஷா வந்திருக்காளா?" என்று கேட்டாள்.


"அவ தான் தினம் வராளே! அதான் இன்னிக்கு அவளை வீட்ல இருக்கச் சொல்லிட்டு நான் வந்திருக்கேன். நல்லாயிருக்கியா? ஊர்ல அப்பா, அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா?"


"எல்லாம் நல்லா இருக்காங்க ஆண்ட்டீ"


"உங்க வார்டன் ரூம்ல இருக்காங்களா, ப்ரீதா?"


"இருக்காங்க ஆண்ட்டீ, நீங்க போய்ப் பாருங்க"


பூர்ணிமா வார்டனின் அறைக்கு சென்றாள்.


"மேடம், உள்ளே வரலாமா?" என்ற அவள் குரல் கேட்டு யமுனா திரும்பிப் பார்த்தாள்.


"வா, பூர்ணி" என்று வரவேற்றாள்.


"ஞாயிற்றுக்கிழமை தானே, இன்னிக்கு என்ன வேலை செய்துகிட்டிருக்கீங்க பிரின்சி மேடம்?"


"உனக்கு என்ன பிரின்சி மேடம்? ஒழுங்கா எப்பவும் போல கூப்பிடு. வீட்டுல எல்லாம் சௌக்கியமா?"


"ம்ம், நல்லாயிருக்காங்க. உன்னோட கொஞ்சம் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன் யமுனா. ஏதாவது முக்கியமான வேலையில இருந்தியா?"


"வேலை முக்கியம் தான். ஆனா அவசரம் இல்லை. இன்னும் மூணு வாரம் பொறுத்து கல்லூரி ஆண்டு விழா நடத்தப்போறோம். அதுக்கு ஆண்டறிக்கை தயார் பண்ணிட்டு இருந்தேன். ம், சொல்லு, அப்புறம் என்ன விஷயம்?"


"ஒரு முக்கியமான விஷயம் பத்தித் தான் பேச வந்திருக்கேன், யமுனா. அபர்ணா என்னைப் பார்க்க நேத்து எங்க வீட்டுக்கு வந்திருந்தா."


"எந்த அபர்ணா?"


"சரியாப் போச்சு! ஜர்னலிஸ்ட் அபர்ணா!! உன் கிட்டே பேட்டி எடுக்க வந்த அதே அபர்ணா தான்!"


"உன் கிட்டே பேட்டி எடுக்க வந்தாளா?"


"இந்த கிண்டல் எல்லாம் வேணாம் யமுனா. அவ உன்னைப் பத்தி ஒரு கட்டுரை எழுத ஆசைப்படறா. அதுக்கு நீ பர்மிஷன் தரணும்."


"அதுக்கு நீ தூது வந்திருக்கியா, பூர்ணி? என்னைப் பத்தி உன்னை விட யாருக்குத் தெரியும்?"


யமுனா சற்றே நெகிழ்ந்த குரலில் சொல்ல, பூர்ணிக்கும் லேசாகக் கண் கலங்கியது. யமுனா அருகில் அமர்ந்து அவள் கைகளைக் கோத்துக் கொண்டாள்.


(தொடரும்......)
 
அத்தியாயம் - 8
**********************


"தெரியும் யமுனா. உன்னோட சாதனையைப் பத்தி உன்னை விட எனக்குதான் நல்லாத் தெரியும். அதனால தான் உன்னை இதுக்கு சம்மதிக்க வைக்க நானே வந்திருக்கேன்."


பூர்ணி ஒரு புன்னகையோடு சொன்னாள்.


"எப்பவும் ஒரே போல என்னோட கடமையை நான் செஞ்சுகிட்டிருக்க தான் ஆசைப்படறேன். விளம்பரம் செய்துக்கிறது, அதுவும் கடவுள் பணிக்கு சமமா இருக்கிற கல்விப் பணிக்கு விளம்பரம் செய்துக்கிறதுல எனக்கு சம்மதம் இல்லை பூர்ணி. ப்ளீஸ், என்னை வற்புறுத்தாதே!"


"யமுனா, உனக்கு இதுல இஷ்டம் இல்லைன்னா விட்டுடு. நீ பேட்டி தர வேணாம். ஆனா, ஒரு விஷயத்துக்கு நீ ஒத்துக்கிட்டு தான் ஆகணும்."


யமுனாவின் பார்வையில் கேள்வி வந்தது.


"உன்னைப் பத்தின ஒரு கட்டுரை - கிட்டத்தட்ட வாழ்க்கை வரலாறு மாதிரி செய்யறதா அபர்ணா சொல்லிக்கிட்டிருக்கா. அதுக்காக அவ உன்னை தொந்தரவு செய்யாம நான் பார்த்துக்கிறேன். எல்லாத் தகவல்களையும் அந்தக் கட்டுரைக்கு நான் சொல்ல, நீ பர்மிஷன் தரணும்."


"இதெல்லாம் அவசியமா பூர்ணி?"


"அவசியம் தான் யமுனா. உனக்கு இந்தக் கட்டுரையினால வரப்போற பேரும், புகழும், விளம்பரமும் தேவையில்லாம இருக்கலாம். ஆனா, இதனால யாராவது ஒருத்தர் மனசுலயாவது நல்ல இலட்சியமும், உயர்ந்த எண்ணங்களும் வரும்னு நான் கண்டிப்பா நம்பறேன். அதுக்கு உன்னைப் பத்தின கட்டுரை ஒரு தூண்டுகோலா இருக்கும். அதனால நீ இதுக்கு சம்மதிச்சு தான் ஆகணும் யமுனா!"


சில நிமிடங்கள் யோசனைக்குப் பிறகு யமுனாவும் ஒப்புக்கொண்டாள்.


"கூடிய வரைக்கும் என்னோட தனிப்பட்ட வாழ்க்கையைப் பத்தி ரொம்ப இடம் பெறாம பார்த்துக்கிறது உன்னோட பொறுப்பு."


"இதப் பாரு, யமுனா! உங்கிட்ட நான் பர்மிஷன் வாங்கின அப்புறம் இந்த சட்டம் எல்லாம் செல்லாது. உன் வாழ்க்கையைப் பத்தி அபர்ணாவுக்கு என்னென்ன தகவல் வேணுமோ, அதல்லாம் சொல்லப்போறேன். அப்புறம் அவ பாடு, அவங்க மேகஸீன் பாடு!"


"சரி பூர்ணி! உன் இஷ்டம் போல செய்! என்ன சாப்பிடறே? ஜூஸ் கொண்டு வரச் சொல்லட்டா?"


"அதெல்லாம் வேண்டாம். உங்க ஹாஸ்டல் சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குன்னு நிஷாவோட ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்களாம்."


"ரொம்ப நல்லது. இருந்து லஞ்ச்சாப்பிட்டுப் போலாமே"


"ஓகே,ஓகே"


ஹாஸ்டலில் அனைவரோடும் சேர்ந்து சாப்பிட்ட பின் வீட்டுக்கு வந்தாள் பூர்ணிமா. அவள் கணவன் பாஸ்கர் வரவேற்றான்.


"வா, பூர்ணி! போன விஷயம் சக்சஸ் தானே?"


"பாதி சக்சஸ் தான்; யமுனா பேட்டி கொடுக்க முடியாதுனுட்டா. ஒரு வழியா அவளை கன்வின்ஸ் பண்ணி, கட்டுரைக்கு பர்மிஷன் வாங்கிட்டேன்."


"யேயே......மேடம் பத்தி வரப்போகுது....ஹே..."


நிஷா ஆர்ப்பரித்தாள்.


"யமுனாவை ஒத்துக்க வைக்க நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் நிஷா. "இப்போ எனக்கு டைம் இல்லே", அப்படி, இப்படினு கட்டுரைக்கும் ஏதாவது சாக்கு சொல்லி அவ மறுத்திடுவாளோன்னு நானே அவளைப் பத்தி எல்லாம் சொல்லிடறேனு சொல்லி, அவளை அபர்ணா டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துக்கிட்டேன்."


"அபர்ணா கிட்ட சொல்லிட்டியா?"


"இனிமேல் தான் சொல்லணும்ங்க"


அன்று மாலை பூர்ணிமா அபர்ணாவுக்கு போன் செய்து யமுனாவின் சம்மதத்தை தெரிவித்தாள்.


"ரொம்ப தாங்க்ஸ் ஆண்ட்டீ! இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு!"


"அவளைப் பத்தி எழுத தான் அனுமதி உண்டும்மா. அதுக்காக மறுபடி அவ கிட்ட பேட்டிக்கு போயிடாதே. உனக்கு என்ன விவரம் வேணுமோ அதெல்லாம் நானே சொல்றேன்."


"புரியுது ஆண்ட்டீ! நான் யமுனா மேடமை தொந்தரவு செய்ய மாட்டேன். உங்களைப் பார்க்க எப்ப வரலாம்?"


"நாளைக்கு காலையில பத்து மணிக்கு வரியாம்மா?"


"சரி ஆண்ட்டீ! நாளைக்கு பார்க்கலாம், தேங்க்ஸ்"


பூர்ணிமா தொலைபேசியை வைத்ததும், பாஸ்கர் புன்னகையோடு கூறினான்:


"ஒரு நல்ல விஷயத்துல இறங்கி இருக்கே பூர்ணி; ஆல் த பெஸ்ட்! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!"


(தொடரும்...)
 
அத்தியாயம் - 9
**********************


மறுநாள் காலை சொன்னபடி சரியாக பத்து மணிக்கு அபர்ணா பூர்ணிமாவைச் சந்திக்க வந்துவிட்டாள்.


"வா, அபர்ணா! காபி, டீ ஏதாவது குடிக்கறியா?"


"வேணாம் ஆண்ட்டீ! இப்ப தான் சாப்பிட்டுட்டு வரேன்."


பூர்ணிமாவும் வந்து அவள் அருகில் அமர்ந்தாள்.


"ம், சொல்லு, அபர்ணா! உனக்கு யமுனாவைப் பத்தி என்ன தெரியணும்?"


"உங்க காலேஜ் லைஃப்லேர்ந்து சொல்லுங்க ஆண்ட்டீ"


பூர்ணிமா தன் கல்லூரிக் கால நினைவுகளில் மூழ்கினாள்.


*************************


அன்று தான் கல்லூரியின் கடைசி நாள்.


பரீட்சைகள் யாவும் முடிந்துவிட்டன. மாணவிகள் மத்தியில் ஒரு கலவையான உணர்ச்சிக் குவியல்.


தேர்வு முடிந்த மகிழ்ச்சி ஒரு புறம், தோழிகளைப் பிரியும் சோகம் மறுபுறம் - இரண்டும் மாறி மாறி அவர்கள் முகங்களில் பிரதிபலித்தன.


யமுனாவும் பூர்ணிமாவும் தங்கள் தோழிகளோடு பேசியபடி ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டிருந்தனர். இன்னும் சரியாக சொல்வது என்றால், பூர்ணிமாவும் மற்றவர்களும் பேசிக் கொண்டிருந்ததை யமுனா கேட்டுக் கொண்டிருந்தாள்.


"கவிதா! நீ என்ன பண்ணப் போறே?"


"அடுத்தது வேலை தேடற வேலைதான்; ஆமா, லதா, நீ என்ன செய்யப்போறே?"


"நமக்கு இந்தப் படிப்பே ரொம்ப ஜாஸ்தி! ஏற்கனவே வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க."


"சீக்கிரமே அப்ப பத்திரிகை வரும்னு சொல்லு."


பூர்ணிமா கிண்டல் செய்ய அனைவரும் சிரித்தனர்.


"சரி, நீ என்ன செய்யப் போறே?"


"நான் கொஞ்ச நாள் வேலைக்குப் போகப் போறேன்; கல்யாணம் எல்லாம் அப்புறம் தான்."


"யமுனா! உன் பிளான் என்ன?"


"மேலே படிக்கணும்னு ஆசை இருக்கு; ஆனா, வீட்டுல இனிமே தான் கேட்கணும்."


"உனக்கென்ன யமுனா? எல்லாத்துலயும் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கறே; கண்டிப்பா ஃபர்ஸ்ட் கிளாஸ் தான். என்னை மாதிரி ஆளைக் கூப்பிட்டு 'சீட்' கொடுத்தாக் கூட
மேலே படிக்க மாட்டேன்."


மீனா சொல்ல, அனைவரும் சிரித்தார்கள்.


யமுனாவும், பூர்ணிமாவும் ஒரே பஸ்ஸில் தான் செல்ல வேண்டும். அவர்கள் இருவரும் பேருந்து நிறுத்தத்தில் ஒன்றாக காத்திருந்தனர்.


"யமுனா, நீ என்ன செய்யப் போறே?"


"அதான் தெரியலை, பூர்ணி. வேலைக்கு அனுப்புறதுல எங்க வீட்டுல யாருக்கும் இஷ்டமில்லே. சும்மா வீட்டுல இருந்து என்ன செய்யறது? மேலே படிக்க வைப்பாங்களான்னும் தெரியலை."


"உங்க பாட்டிக்கு தான் உன்னை ரொம்பப் பிடிக்குமே, அவங்க கிட்ட சொல்லிப் பார்க்கிறது தானே."


"அதான் செய்யலாம்னு இருக்கேன். நீ என்ன வேலைக்குப் போகப் போறே?"


"எங்க வீட்டுக்குப் பக்கத்துலேயே ஒரு ஸ்கூல் இருக்கு. இப்போதைக்கு அங்க சேரலாம்னு இருக்கேன்."


"அடிக்கடி வீட்டுக்கு வா, பூர்ணி."


"இதெல்லாம் நீ சொல்லணுமா? நானே வந்து உங்க வீட்டுல நின்னுடறேன், பாரு!"


அதற்குள் பேருந்து வந்துவிட்டது. யமுனாவின் வீடு முன்னதாகவே இருந்ததால், முதலில் இறங்கிவிட்டாள். கீழிருந்து அவள் கையசைக்க, வண்டியில் இருந்து பூர்ணிமாவும் பதிலுக்கு கையசைத்தாள். கண்ணோரத்தில் துளிர்த்த நீரை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்.


பூர்ணிமாவின் வாழ்க்கை சுறுசுறுப்பாகி விட்டது. அவர்கள் வீட்டின் அருகில் இருந்த பள்ளியிலேயே அவளுக்கு வேலை கிடைத்து விட்டது.


கல்லூரி வாழ்வு முடிந்த பத்தாம் நாள் அவள் ஆசிரியையாகி விட்டாள்.


(தொடரும்...)
 
அத்தியாயம் - 10
***********************


பூர்ணிமாவுக்கு புதிய வேலையின் நெறிமுறைகள் பழகிக் கொள்ள ஒரு மாதமானது. இதற்கு நடுவில் அவள் அண்ணாவுக்கு பெண் பார்க்க முடிவு செய்தார்கள். சொந்தத்திலேயே பெண் எடுத்ததால் நிச்சயதார்த்தம் உடனே நடத்தி விட்டார்கள். திருமணம் அடுத்த மாதம் செய்வதாக இருந்தது. வீட்டில் கல்யாணக் களை கட்ட ஆரம்பித்து விட்டது. வேலைகள் சேர்ந்து கொள்ள, பூர்ணிமாவால் யமுனாவைப் பார்க்கச் செல்ல முடியவில்லை.


"எப்படியும் அண்ணாவின் திருமணத்திற்கு அழைக்க வரப் போகிறேன்; அப்போது சந்திப்போம்" என்று தன் நிலையை சுருக்கமாக தெரிவித்தாள்.


அதேபோல் இரண்டு வாரங்கள் கழித்து, பூர்ணிமா தன் அண்ணாவின் திருமணப் பத்திரிகையுடன் யமுனாவைப் பார்க்கச் சென்றாள். யமுனா அவளை அன்புடன் வரவேற்றாள்.


யமுனாவின் பெற்றோரிடம் திருமணப் பத்திரிகையைக் கொடுத்து அழைத்தாள். அதன்பின் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.


"உன்னோட வேலை எப்படி இருக்கு, பூர்ணி?"


"ரொம்ப இன்டிரஸ்டிங்கா இருக்கு. ஸ்டூடண்ட்ஸ் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. பொழுது போறதே தெரியாது. ஆமா, நீ என்ன செய்யறே? படிக்கப் போறியா?"


"இல்ல பூர்ணி. இன்னும் படிச்சா, அதுக்கு மேலே படிச்ச மாப்பிள்ளையை பார்க்கணுமாம். அதனால இதுவே போதும்னு வீட்டுல சொல்லிட்டாங்க."


"அப்ப மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு சொல்லு."


"ஆமா பூர்ணி; பார்க்கறாங்க. ஆனா, எனக்கென்னவோ கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்லை."


"என்ன சொல்றே யமுனா?"


"உன் கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேனே பூர்ணி, எல்லாரையும் போல கல்யாணம் செய்துகிட்டு குடும்பம் நடத்த எனக்கு ஆசை இல்லை. ஒரு விவேகானந்தர் மாதிரி, அன்னை தெரசா மாதிரி ஏதாவது சாதிக்கணும்னு நினைக்கிறேன்."


"வீட்டுல என்ன சொல்றாங்க யமுனா?"


"என்ன செய்யணுமோ அதைக் கல்யாணத்துக்கு அப்புறம் செய்னு சொல்றாங்க. எனக்கென்னவோ ஆண்கள் மேலே ஒரு நம்பிக்கை இல்லை. எல்லாரும் இதைக் கொடு, அதைக் செய்னு கையில ஒரு பட்டியல் வைச்சுக்கிட்டு தான் பொண்ணு பார்க்கவே வர்றாங்க."


"அவசரப்படாதே யமுனா. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. யாராவது வந்து உன்னை பார்த்துட்டுப் போனாங்களா?"


"இது வரைக்கும் இல்லை."


"அதுக்குள்ளே ஏன் கவலைப்படறே? இதெல்லாம் பெரியவங்க வேலை. நாம போட்டு குழப்பிக்க வேணாம்."


"நல்லா சொல்லு பூர்ணி; காலாகாலத்துல கல்யாணம் செய்துகிட்டு குடும்பம் நடத்துற வழியப் பாருங்க"


என்றபடி யமுனாவின் தாயார் வந்தார்.


"அதான் ஆண்ட்டீ சொல்லிக்கிட்டிருந்தேன். சரி, யமுனா! நான் கிளம்பறேன். அண்ணா கல்யாணத்துக்கு அவசியம் வாங்க ஆண்ட்டீ! யமுனா, நீயும் வரே, பை,பை!"


என்றபடி கிளம்பிவிட்டாள்.


***************


பூர்ணிமாவின் அண்ணனின் திருமணத்திற்கு யமுனா தன் பெற்றோர்களோடு வந்திருந்தாள். அதன்பின் காலம் வேகமாக சுழன்றது என்று தான் சொல்ல வேண்டும். பூர்ணிமாவைப் பொறுத்த வரை அது தான் நடந்தது.


அண்ணாவின் திருமணத்தில் பூர்ணிமாவின் அழகு, அடக்கம், சுறுசுறுப்பு, திறமை - இவற்றை கவனித்த ஒரு பெரியவர் தன் மகனுக்கு அவளைப் பெண் கேட்டு உடனே வந்து விட்டார்.


இரு வீட்டாருக்கும் பிடித்துப் போக, கையோடு நிச்சயமும் நடந்து, திருமண நாளும் குறிக்கப்பட்டது.


ஒரு ஞாயிறன்று பூர்ணிமா யமுனாவைச் சந்திக்கப் போயிருந்தாள். யமுனாவுக்கு அவள் மேல் ஒரே கோபம்.


"கல்யாணம் பண்ணிக்கிட்டு, வேறெதோ ஊருக்குப் போயிட்டேனு நினைச்சேன்!"


"கல்யாண நியூஸை சொல்ல தான் இப்ப வந்திருக்கேன்" என்று பூர்ணி சொல்லவும், யமுனாவின் கோபம் பறந்தோடி விட்டது.


"நிஜமாவா? வாழ்த்துக்கள்! யாரு மாப்பிள்ளை? எந்த ஊர்? அவர் பேரென்ன?"


கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.


"ஒவ்வொண்ணாக் கேளு, யமுனா"


"சரி, முதல் கேள்வி, எப்ப கல்யாணம்?"


பூர்ணி தேதியைச் சொன்னாள்.


"எங்கே நடக்குது தெரியுமா?"


"நம்ம ஊரு தானே?"


"ம்ஹூம்..மாப்பிள்ளை ஊர்லே வைச்சுதான் கல்யாணம். அதான் அவங்க குடும்ப வழக்கமாம். அதனால நீ எங்களோடவே வந்துடணும். என்ன?"


அதற்குள் யமுனாவின் தாயார் பூரணிக்கு டீ கொண்டு வந்தார்.


"ரொம்ப சந்தோஷம் பூர்ணி, பையன் என்ன வேலையில இருக்கான்?"


"ஒரு பிரைவேட் கம்பெனில அசிஸ்டெண்ட் மானேஜரா இருக்கார்மா."


"கல்யாணம் எங்கே?"


"மாப்பிள்ளை ஊர்லம்மா; பாண்டிச்சேரி கிட்ட அவங்க சொந்த கிராமத்துல தான் கல்யாணம். யமுனாவையும் கூட்டிக்கிட்டு நீங்க கண்டிப்பா வந்துடணும்."


"சரிம்மா, வரோம்."


"யமுனா! என் கதையையே பேசிட்டிருக்கேன். உன் பக்கம் எப்படி? ஏதாவது 'செட்டில்' ஆகற மாதிரி இருக்கா?"


"போன வாரம் ஒரு வீட்டுல இருந்து வந்து பார்த்துட்டுப் போனாங்க.."


"என்ன சொல்லியிருக்காங்க?"


"என்ன கேட்டாங்கன்னு கேளு பூர்ணி, அதான் கரெக்டா இருக்கும். அவங்களுக்கு வைர மூக்குத்தி வேணுமாம்."


"கண்டிஷன் மாதிரி சொன்னாங்களா?"


"அதையே அழகா சொல்லிட்டாங்க; ஏற்கனவே இருக்கற மருமக கிட்ட இது இருக்காம்; உங்க பொண்ணுக்கு இல்லேன்னா பின்னால அவளுக்கு தான் மனசு வேதனைப்படும்னு சொல்றாங்க..ஹ்ம்...என்ன டெக்னிக், பாரு?!"


"உங்க வீட்டுல என்ன சொல்றாங்க யமுனா?"


"வீட்டுல எப்படியாவது இந்த இடத்தை முடிச்சுடலாம்னு தான் சொல்றாங்க. ஆனா, எனக்கு தான் இதுல விருப்பமே இல்லை பூர்ணி."


"செலவு அதிகமாகும்னு யோசிக்கிறயா யமுனா?"


"அது மட்டும் இல்லே பூர்ணி; "இதைச் செய்தா தான் உன்னை கல்யாணம் செஞ்சுப்பேன்" அப்படின்னு அவங்க போடற கண்டிஷன் எனக்கு பிடிக்கலை. ஒரு மூக்குத்திக்காக தன்மானத்தை இழக்கத் தயாரா இருக்கிற இவனை என்னால கணவனா நினைச்சு மரியாதை கொடுக்க முடியாது, பூர்ணி!"


"புரியுது யமுனா. ஆனா, இந்த மாதிரி எண்ணங்களை ரொம்ப வர விடாதே. பிராக்டிகலா யோசனை செய்து பழகு. அப்ப தான் நல்லதுனு சொல்லி நான் கிளம்பினேன்."


அப்புறம் நான் யமுனாவை பார்க்கிறதுக்குள்ளே அவள் மனசில பெரும் மாற்றம் நடந்திடுச்சு, அபர்ணா!


(தொடரும்.....)
 
அத்தியாயம் - 11
***********************


"என்ன ஆச்சு, ஆண்ட்டீ?"


"என் கல்யாணத்தின் போது யமுனாவுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. அதனால அவ கல்யாணத்துக்கு வர்லே. நான் என் கணவரோட பாண்டிச்சேரிக்குப் போயிட்டேன்; உடனே குழந்தை உண்டாயிடுச்சு. நானும் யமுனாவுக்கு லெட்டர் எழுத ட்ரை பண்ணேன்; முடியலே. அவ ஆனா எங்க வீட்டுல விசாரிச்சு விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டா. அப்புறம் நிஷா பிறந்து ரெண்டு மாசம் ஆன போது ஒரு நாள் என்னைப் பார்க்க எங்க வீட்டுக்கு வந்திருந்தா.


"குழந்தை உன்னை மாதிரியே இருக்கு, பூர்ணி"


யமுனா சொன்னதும் பூர்ணி சிரித்தாள்.


"சரி, நீ எப்படி இருக்கே? நானும் உங்க வீட்டுலேர்ந்து எப்படா பத்திரிகை வரும்னு காத்திட்டிருக்கேன். என்ன ஆச்சு?"


"நீ நினைக்கிற மாதிரி பத்திரிகை வராது பூர்ணி"


"என்ன சொல்றே யமுனா?"


"ஆமாம் பூர்ணி, நான் கல்யாணமே செய்துக்கப் போறதில்லை."


"என்ன நடந்தது? ஏன் இப்படி பேசறே யமுனா?"


"நீ அன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போய் எத்தனை நாளாச்சு?"


"ம்...கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலே இருக்கும்."


"முதல் ஆறு மாசம் நானும் ரொம்ப பொறுமையா இருந்தேன் பூர்ணி. எத்தனையோ பேர் வந்து வந்து பார்த்துட்டுப் போறதும், டௌரி கேட்கறதும், அது சரிவரலைன்னு ஆனதும் அப்புறம் சொல்றோம்னு கிளம்பிப் போகிறதும் தொடர்கதை மாதிரி நடந்துகிட்டே இருந்தது, கொஞ்ச நாள்லேயே என் மனசு மரத்துப் போச்சு. வர்றவங்க முன்னாடி பொம்மை மாதிரி போய் உட்கார்ந்து இருக்கிறதும் அவங்க கேள்விக்கு பதில் சொல்றதும் எனக்கு வெறுத்துப் போச்சு. அப்புறம் திடீர்னு ஒரு யோசனை வந்தது.


எதுக்காக இப்படி அவமானப்படணும்? கல்யாணம் செய்துக்காம வாழ முடியாதா?நல்ல லட்சியத்தோட வாழ்ந்து காட்ட முடியாதா அப்படினு எனக்குள்ளேயே ஒரு கேள்வி எழுந்துச்சு. அது அப்படியே தீவிரமாகி அதுக்கப்புறம் கல்யாணமே வேண்டாம்னு நான் முடிவு செய்துட்டேன்."


யமுனாவின் அன்றைய தீர்மானம் பூரணியை திடுக்கிட வைத்தது. என்றாலும், அது அப்படியே அவள் வாழ்வில் நிகழும் என்பதை பூரணி எதிர்பார்க்கவில்லை.


யமுனாவின் அப்போதைய மனநிலை காரணமாக தான் திருமணமே வேண்டாம் என மறுத்தாள் என்றுதான் பூரணி எண்ணினாள். எப்படியும் அவள் பெற்றோர் அவளை மாற்றி விடுவார்கள் என்று நம்பினாள். ஆனால் கடைசியில் யமுனா தான் அவர்கள் மனதை தன் பக்கம் மாற்றி விட்டாள்.


அடுத்த சந்திப்பு மற்றொரு தோழியின் திருமணமாய் அமைந்தது. அங்கிருந்து பூரணி யமுனா வீட்டுக்குச் சென்றாள். மீண்டும் திருமணப் பேச்சை பூரணி எடுத்த போது, யமுனா தன் முடிவை தெளிவாய் அறிவித்தாள்.


"இது விளையாடற விஷயமில்லை, யமுனா! இந்த மாதிரி ஒரு முடிவெடுக்கிற வயசும் உனக்கு இல்லை."


பூரணியும் விடாமல் வாதிட்டாள்.


"அதுக்கு வயசு இன்னும் ஆகலை, ஆனா என் மனசு தயாரா இருக்கு பூரணி."


"நீ அன்னிக்கு சொன்ன போது இதுலே இவ்ளோ தீவிரமா இருப்பேனு நான் நினைக்கலை, யமுனா. எதுக்கும் மறுபடியும் யோசனை பண்ணிப் பாரு. பணத்தை விட உன் மனசை மதிக்கிறவங்க கண்டிப்பா இருப்பாங்க. வாழ்க்கை முழுக்க உன்னால தனியா வாழ முடியுமா?"


"தனியா எதுக்கு இருக்கணும்? இந்த உலகமே உறவு தான்; எல்லாரும் சொந்தம் தான்."


"இருந்தாலும் யமுனா...."


"இதோ பாரு, பூரணி! வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கணும், எதையாவது சாதிக்கணும்! அது தான் நாம வாழ்ந்ததுக்கு அடையாளம்! வீடு, கணவன், குழந்தை அப்படின்னு ஒரு சின்ன வட்டம் போட்டு அதுக்குள்ள சிக்கிக்கிறதுல எனக்கு இஷ்டம் இல்ல. மகாகவி பாரதியார் சொன்ன மாதிரி தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிப் கிழப் பருவம் எய்திப் பின் மாயும் வேடிக்கை மனிதரைப் போல என் வாழ்க்கையும் சராசரியாய் முடிந்து போறதில் எனக்கு உடன்பாடில்லை."


"அப்போ கல்யாணம் செய்துக்கிறது தப்புன்னு சொல்றியா?"


"சேச்சே, அப்படியில்லை. எனக்கு அது சரியில்லைன்னு தான் சொல்றேன். எத்தனையோ சாதனையாளர்கள் போல நானும் சரித்திரம் படைக்கணும்னு விரும்பறேன். விவேகானந்தர் மாதிரி, அன்னை தெரசா மாதிரி சமுதாயத்துக்காக வாழ ஆசைப்படறேன்; அவங்களுக்கு இந்த உலகமே சொந்த குடும்பமா தானே இருந்தது."


"நீ சொல்றது உன் வரையில சரியா இருக்கலாம், யமுனா! ஆனா உங்கப்பா, அம்மாவோட விருப்பம் என்ன?"


"முதல்லே அவங்களாலே இதை ஏத்துக்க முடியலை, பூர்ணி! என்னை மாத்தணும்னு முயற்சி செய்தாங்க; அப்புறம் என் லட்சியத்தைப் புரிஞ்சுக்கிட்டாங்க. அதனால இப்ப அவங்களும் என் முடிவை ஏத்துக்கிட்டாங்க."


**************************************


"இப்படித் தான் அபர்ணா, யமுனா அந்த முடிவுக்கு வந்தா. அப்புறம் மறுபடி படிக்க ஆரம்பிச்சா. தன் மேற்படிப்பை முடிச்சுட்டு டீச்சர் டிரெய்னிங் எடுத்துக்கிட்டா. செகண்டரி ஸ்கூல்ல வேலை கிடைச்சு சேர்ந்தா. அப்புறம் நான் வேற ஊருக்கு போயிட்டேன்.


யமுனாவோட கல்விப்பணி தொடர்ந்துகிட்டே வந்தது. நிறைய 'கோர்ஸஸ்' படிக்சு தன் திறமையை வளர்த்துகிட்டா. காலேஜ்லே பாடம் நடத்துற அளவு தன் தகுதி, திறமை - இதெல்லாம் வளர்த்துக்கிட்டா. முதல்லே திருச்சி கிட்ட ஏதோ ஒரு காலேஜ்ல போஸ்டிங் கிடைச்சுது. யமுனாவோட ஆர்வம், திறமை, கடுமையான உழைப்பு - எல்லாம் சேர்ந்து அந்த கல்லூரியை எல்லாரும் கவனிக்க் வைச்சது. அப்புறம் ஹெச.ஓ.டி போஸ்ட், அடுத்த டிரான்ஸ்ஃபர்ல வைஸ் பிரின்சி. எஜுகேஷன் டிபார்ட்மெண்ட்ல யமுனாவைப் பத்தி தெரியாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. அவளோட சின்சியாரிட்டி, கமிட்மெண்ட், கடுமையான உழைப்பு, நேர்மையான குணம் இதெல்லாம் சேர்ந்து அவளுக்குக் கொடுத்தது தான் இப்ப இருக்கற பிரின்சி போஸ்ட்டிங்!"


அபர்ணா வியப்பும் பிரமிப்பும் கலந்து பூர்ணிமா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். நிச்சயமாய், ஒரு இலட்சியத்தோடு வாழும் யமுனாவை நினைத்த போது, மரியாதை கலந்த ஒரு ஆச்சரியம் எழுந்தது.


(தொடரும்.....)
 
"அவங்க பேரெண்ட்ஸ் அப்புறம் யமுனா மேடம் கல்யாணம் பத்தி யோசிக்கலையா?"


அபர்ணா கேட்டாள்.


"அவங்களுக்கு வருத்தம் தான். இருந்தாலும் அவளோட முடிவை அவங்க ஏத்துக்கிட்டாங்க. யமுனா திருச்சி காலேஜ்லேர்ந்து டிரான்ஸ்ஃபர் ஆகி கிளம்பினப்போ மாணவர்கள் ஃபேர்வெல் பார்ட்டி ஒண்ணு ஏற்பாடு செய்தாங்க. அதிலே யமுனாவோட பேரெண்ட்ஸும் கலந்துகிட்டாங்க. அங்க பேசின மாணவர்களோட அன்பையும், அவங்க யமுனா கிட்ட வெச்சிருந்த மரியாதை, பாசத்தையும் நேரிடையா பார்த்தாங்க. அப்புறம் அன்னிக்கு ராத்திரி யமுனா கிட்ட சொன்னாங்களாம் : "நீ சொன்னது போல உலகமே உனக்கு உறவு தாம்மா! உன்னோட முடிவு எனக்கு ரொம்ப மனநிறைவா இருக்கு!" அப்படின்னாங்களாம்!!


"அவங்க பேரெண்ட்ஸ் எங்க இருக்காங்க?"


"இப்ப ரெண்டு பேருமே இல்லை"


"அவங்க ரிலேடிவ்ஸ் யாராவது?"


"இருக்காங்க. அவங்களுக்கும் இவங்க குடும்பத்துக்கும் போக்குவரவு குறைச்சல். யமுனா கல்யாணம் செய்துக்காத காரணத்தால அவளைப் பத்தி ஏகப்பட்ட வதந்தியை அவங்களே உருவாக்கி விட்டாங்க. காதல் தோல்வி, அது, இதுன்னு கற்பனைக் கதைகளை கட்டிட்டாங்க. இதனால யமுனாவோட அப்பா கோவப்பட்டு அவங்களோட தொடர்பை துண்டிச்சிட்டாரு."


"இப்பவும் அவங்க யாரும் வர்றதில்லையா?"


"இப்ப வராங்களே! ஏன்னா, காலேஜ் அட்மிஷனுக்கு பிரின்சிபல் யமுனா சிபாரிசு வேணும்னு எப்பவாவது வருவாங்க. ஆனா யமுனா கிட்ட எந்த சிபாரிசும் வாங்க முடியாது. யாரோட சிபாரிசும் அவ கிட்ட செல்லாது."


"ரொம்ப தாங்க்ஸ் ஆண்ட்டீ! உங்களோட பேசினதை வைச்சு அவங்களைப் பத்தி கட்டுரை எழுதப் போறேன்."


"அபர்ணா! நான் சொன்னது யமுனாவோட ஒரு முகம் தான். இன்னும் நீ யமுனாவைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா, நீ ஆனந்தியைப் போய்ப் பாரு. அப்பதான் நீ யமுனாவை இன்னும் நல்லா புரிஞ்சுக்க முடியும்."


"அவங்க யாரு ஆண்ட்டீ?"


"ஆனந்தி யமுனாவோட பொண்ணு மாதிரி. நான் அவளோட அட்ரஸ் தரேன். நீயே போய்ப் பேசிப் பாரு!"


ஆனந்தியின் முகவரியை வாங்கிக் கொண்டு, பூர்ணிமாவிடம் நன்றி சொல்லி விட்டு அபர்ணா புறப்பட்டாள்.


ஆனந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச, அவள் அன்று மாலை வருமாறு அபர்ணாவை அழைத்தாள்.


அபர்ணா செல்லவும், ஆனந்தி அவளை வரவேற்று, தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.


"யமுனா மேடம் பத்தி நீங்க எழுதப் போறது எனக்கு ரொம்ப சந்தோஷம்."


அபர்ணா புன்னகைத்தாள்.


"பூர்ணிமா ஆண்ட்டீ தான் எனக்கு உங்களைப் பத்தி சொன்னாங்க. அதான் உங்க கிட்ட பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்."


"எனக்கு வாழ்க்கை அமைச்சுக் கொடுத்தவங்களே யமுனா மேடம் தான். நான் அவங்களை என்னோட அம்மா ஸ்தானத்துல வைச்சு வணங்கறேன். இந்த ஃபோட்டோவைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்."


என்று ஆனந்தி சுட்டிக் காட்டியது அவளுடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அவளும் அவள் கணவரும் மணமாலைகளுடன் இருக்க, உடன் யமுனா மேடமும் இருந்தார்.


"எனக்கு வாழ்க்கையிலே ஒரு நம்பிக்கை கொடுத்து வாழக் கற்றுக் கொடுத்தது யமுனா மேடம் தான். என் கல்யாணத்தையும் அவங்க தான் செஞ்சு வைச்சாங்க."


ஆனந்தி தன்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள்:


"அப்ப மேடம் கோயமுத்தூர் கவர்மெண்ட் காலேஜ்ல ஹெச். ஓ.டி.யா வொர்க் பண்ணிட்டு இருந்தாங்க. நான் அங்க தான் படிச்சுக்கிட்டிருந்தேன். படிப்புல எப்பவும் நான் ஃபர்ஸ்ட். அதோடு என் அப்பா, அம்மாக்கு நான் ஒரே பொண்ணு. ஆசையா எனக்கு பாட்டு, டான்ஸ் எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. எனக்கும் அதுலே ரொம்ப ஆர்வமுண்டு. காலேஜ்ல நான் கல்சுரல் அஸோஸியேஷனுக்கு செகரெட்டரி. அதனால மேடமுக்கும் மத்த எல்லா லெக்சரஸ் எல்லாருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்.


இப்படி சந்தோஷமா போயிட்டிருந்த என் லைஃப் திடீர்னு தடம் மாறிடிச்சு. நான், அப்பா, அம்மா மூணு பேரும் போயிட்டிருந்த ஆட்டோ மேல ஒரு லாரி மோதிடிச்சு. எங்கப்பா, அம்மா - ரெண்டு பேரும் அந்த விபத்துல என்னை அநாதை ஆக்கிட்டு போயிட்டாங்க."


சொல்லும் போதே ஆனந்தியின் குரல் தழுதழுத்தது. கண்கள் பனித்தன.


"ஐ'ம் ஸாரி" என்று அபர்ணா சொல்லவும், ஆனந்தி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். மேலும் தொடர்ந்தாள்:


"இளவரசி மாதிரி இருந்த நான் திடீர்னு அநாதை ஆயிட்டேன். எங்கப்பா அம்மா அந்தக் காலத்திலேயே கலப்புத் திருமணம் செய்தவங்க. அதனால சொந்த பந்தம் யாரோடும் தொடர்பில்லே. தனிமரமா வாழ வகை தெரியாம, சாகவும் முடியாம தவிச்சுக்கிட்டிருந்தேன். அப்ப தான் நடந்ததைக் கேள்விப்பட்டு யமுனா மேடம் என்னைப் பார்க்க ஆஸ்பிடலுக்கு வந்தாங்க. என்னைப் பத்தின எல்லா தகவல்களையும் தெரிஞ்சுக்கிட்டாங்க.


"இனிமே உனக்குத் துணையா நான் இருக்கேன், ஆனந்தி. கவலைப்படாதே, தைரியமா இரு" அப்படின்னு ஆறுதல் சொன்னாங்க.


சொன்னது போலவே அவங்க தான் என் படிப்பை முடிக்க வைச்சாங்க. அவங்க சென்னை வந்தப்போ நானும் அவங்களோட இந்த ஊருக்கு வந்திட்டேன். இங்கேயே எனக்கு வேலையும் கிடைச்சுது. எங்க ஆஃபிஸ்லே என் கூட வொர்க் பண்ணற கார்த்திக் என்னை கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டார். மேடம் தான் எங்க கல்யாணத்தை நடத்தி வைச்சாங்க.


மாதா, பிதா, குரு, தெய்வம்னு சொல்லுவாங்க. எனக்கு இப்ப எல்லாமே அவங்க தான்."


(தொடரும்.....)
 
அத்தியாயம் - 13
*************************


ஆனந்தி சொன்னதன் ஆழத்தைப் புரிந்து கொண்ட அபர்ணாவுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது. கண்டிப்பு காட்டும் ஒரு கல்லூரி முதல்வரின் கருணை நிறைந்த தாய்மையைப் புரிந்து கொள்ள முடிந்தது.


ஆனந்தி மேலும் தொடர்ந்தாள்:


"இதல்லாம் பத்து நிமிஷத்துல சொல்லி முடிச்சிட்டேனே தவிர, அவங்க எனக்காக செய்ததை எல்லாம் சொல்லி முடிக்க முடியாது. விரக்தியும் வேதனையுமா இருந்த என் மனசை மாத்தி என்னையும் ஒரு மனுஷியா நடமாட வைச்சது அவங்க தான். எங்க கல்யாணத்துக்கு கார்த்திக் வீட்டுல சொல்லி ஏற்பாடு செய்ததும் அவங்க தான். எங்க மாமியார் வரும் போதெல்லாம் முதல்ல யமுனாம்மாவை தான் விசாரிப்பாங்க."


அவர்கள் குடும்பத்தில் யமுனா பெற்றிருக்கும் இடத்தை அபர்ணாவால் உணர முடிந்தது.


"இவங்களைப் பத்தி எழுத ஒரு வாய்ப்புக் கிடைச்சதே எனக்கு பெருமையா இருக்கு."


"இன்னும் எத்தனையோ சேவை நிறுவனங்கள்ல யமுனாம்மா நிறைய செய்துகிட்டு இருக்காங்க. அதெல்லாம் வெளியில யாருக்குமே தெரியாது."


"இந்தக் கட்டுரைக்கு கூட முதல்ல பர்மிஷன் தரவே மறுத்துட்டாங்க. அப்புறம் பூர்ணிமா ஆண்ட்டீ தான் அவங்க கிட்ட பேசி ஒரு வழியா பர்மிஷன் வாங்கிக் கொடுத்தாங்க."


"பார்த்தீங்களா? அது தான் யமுனாம்மா!"


ஆனந்தி சொல்லவும், அபர்ணா புன்னகையோடு ஆமோதித்தாள்.


********************


வீட்டுக்கு வந்த அபர்ணா முதலில் அம்மாவிடம் எல்லா விவரங்களையும் கூறினாள். சமுதாயத்துக்காக சத்தமில்லாமல் சேவை செய்து வரும் யமுனா மேடம் பற்றி எழுதி அவர்களையே "சாதனைப் பெண்மணி" விருதுக்குத் தகுதியானவராக எழுத தீர்மானம் செய்துள்ளதையும் கூறினாள். அம்மாவும் மிகுந்த மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்.


அபர்ணா யமுனா மேடம் பற்றிய கட்டுரையை எழுத ஆரம்பித்தாள்.


************************
ஒரு மாதம் ஓடி விட்டது.


பூர்ணிமாவின் வீடு. மதியம் மூன்று மணி இருக்கும். அழைப்பு மணி ஒலித்தது.


கதவைத் திறந்த பூர்ணிமாவுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அபர்ணா வந்திருந்தாள்.


"உள்ளே வா, அபர்ணா! என்ன திடீர் விசிட்? விஷயம் ஏதாவது உண்டா?"


"கண்டிப்பா ஆண்ட்டீ, சூப்பர் நியூஸ் கொண்டு வந்திருக்கேன்! யமுனா மேடத்துக்கு சாதனைப் பெண்மணி விருது கிடைச்சிருக்கு!! எடிட்டர் இப்ப தான் சொன்னாரு. அடுத்த இதழ்ல அவங்க ஃபோட்டோவோட கட்டுரையும் வெளியிடப் போறாங்க. அதான் உங்களையும் கூட்டிக்கிட்டு அவங்களைப் பார்க்கப் போகலாம்னு வந்தேன்."


அபர்ணா படபடவென விஷயத்தைச் சொல்ல, பூர்ணிமாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது.


"ரொம்ப சந்தோஷமா இருக்கு அபர்ணா! வா, உடனே கிளம்பலாம்!"


இருவரும் யமுனாவைப் பார்க்கக் கல்லூரிக்கு கிளம்பினார்கள்.


பூர்ணிமாவுக்கு மகிழ்ச்சியைக் கூற வார்த்தைகளே வரவில்லை; உணர்ச்சிப் பெருக்கில் அவள் இருந்தாள். அபர்ணாவின் மனம் நிறைவாக இருந்தது. தன் கடமையை சரியாக செய்து முடித்த திருப்தி இருந்தது.


"விழா அடுத்த மாசம் நடத்தப் போறாங்க, ஆண்ட்டீ! அப்போ யமுனா மேடமுக்கு இந்த விருதைக் கொடுத்து கௌரவிப்பாங்க."


அப்போது தான் பூர்ணிமாவிற்கு இது பற்றி யமுனாவிடம் எதுவும் கூறவில்லை என்பது ஞாபகம் வந்தது. இது வழக்கம் போல் ஒரு கல்லூரி முதல்வரின் பேட்டி என்பது போல சொல்லியே தான் அவளிடம் அனுமதி வாங்கியதும் நினைவு வந்தது.


(தொடரும்.....)
 
அத்தியாயம் - 14
**********************


"இந்த மாதிரி விருதுக்காக தான் பேட்டின்னு தெரிஞ்சிருந்தா யமுனா இதுக்கு சம்மதிச்சிருக்கவே மாட்டா, அபர்ணா! எப்படியாவது அவளை ஒத்துக்க வைக்கணும்!"


என்று பூர்ணிமா சொல்ல அபர்ணா ஆமோதித்தாள்.


கல்லூரிக்குச் சென்றதும் இருவரும் நேராக விடுதியை நோக்கிச் சென்றனர். எதிரில் வந்த ப்ரீதாவைப் பார்த்ததும் சட்டென பூர்ணிமாவுக்கு ஒரு ஐடியா வந்தது.


"ப்ரீதா! உங்க மேடமுக்கு "நந்தவனம்" பத்திரிகையோட "சாதனைப் பெண்மணி" விருது கிடைச்சிருக்கு!"


என்று கூற, ஐந்தே நொடிகளில் விடுதி முழுதும் மாணவியர் கூட்டம் நிரம்பி வழிந்தது. குதூகலமும் கும்மாளமும் எல்லார் முகங்களிலும் தெரிந்தது. எங்கும் ஒரே ஆரவாரம்! ஒரே பேச்சு! சிரிப்பு !!


அதற்குள்ளாக சில மாணவியர் கும்பலாகச் சென்று யமுனாவின் அறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்தனர். சுற்றி நின்று வாழ்த்துக் கூறினர்!!


"மேடம், கங்கிராஜூலேஷன்ஸ்!"


திடீரென சூழ்ந்து கொண்டு மாணவிகள் பாராட்டவும் யமுனாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.


"என்ன விஷயம்? எதுக்கு கங்கிராட்ஸ்?"


"மேடம், உங்களுக்கே தெரியாதா? 'நந்தவனம்' பத்திரிகைலேர்ந்து உங்களுக்கு "சாதனைப் பெண்மணி" விருது கொடுத்திருக்காங்க. இப்பதான் எங்களுக்கு பூர்ணிமா ஆண்ட்டீ சொன்னாங்க."


கூட்டம் மறுபடி கரகோஷம் செய்தது.


"அப்போது இந்த பேட்டி, கட்டுரை எல்லாம் இதற்காகத் தானா? எதற்காக இந்த தேவையற்ற விளம்பரம்?"


பூர்ணிமாவும் அபர்ணாவும் அப்போது அங்கு வந்து சேர்ந்து கொண்டனர். யமுனாவின் முகத்தைப் பார்த்த பூர்ணிமாவுக்கு அவள் எண்ணம் புரிந்தது.


"ஸ்டூடண்ட்ஸ்! இந்த அவார்ட் உங்க மேடமுக்கு கிடைச்சதுல உங்க கருத்து என்ன?"


பூர்ணிமா கேட்க,


"வீ ஆர் வெரி வெரி ஹாப்பி, ஹேய்......" என்று கோரஸாக குரல் எழுந்தது.


பூர்ணிமா யமுனாவின் கையைப் பற்றினாள்.


"யமுனா! உனக்கு இதுல இஷ்டம் இல்லே, ஆனா இவங்க சந்தோஷம் அதை விட பெரிசுன்னு எனக்குத் தோணுது. அது உனக்கும் தெரியும். அதனால சந்தோஷமா இதை ஏத்துக்கோ"


என்று மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள்.


சற்று யோசித்த பின்னர், யமுனா ஒப்புக் கொண்டு தலையசைத்தாள். அதைக் கவனித்த அபர்ணாவின் முகம் மலர்ந்தது.


"சூப்பரா அவங்க ஸ்டூடண்ட்ஸ் மூலமாவே அவங்களை ஒத்துக்க வைச்சிட்டீங்க, நீங்க கிரேட் ஆண்ட்டீ!" என்று பூர்ணிமாவின் கையைப் பற்றிக் குலுக்கினாள்.


******************


நந்தவனம் பத்திரிகை நடத்தும் "சாதனைப் பெண்மணி" விருது வழங்கும் விழா.


விழா மேடையில் பல முக்கியமான பிரமுகர்கள், எழுத்துலகில் முத்திரை பதித்த வித்தகர்கள், எடிட்டர், நிர்வாக ஆசிரியர், யமுனா மேடம் அனைவரும் அமர்ந்திருந்தனர்.


ரவிராஜ் வரவேற்புரை கூற, எடிட்டர் தலைமையுரை வாசிக்க எழுந்தார். அனைவருக்கும் தன் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, தன் உரையைத் தொடங்கினார்.


"முதல் முதலாக இந்த "சாதனைப் பெண்மணி" விருதை பிரின்சிபால் யமுனா மேடம் அவர்களுக்கு கொடுக்கிறோம். இனி ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப் போகிறோம். அதற்குத் தகுதியாக எல்லாப் பெண்களும் சாதனை செய்ய முன் வரணும்கிறது எங்க பத்திரிகையோட விருப்பம்."


கூட்டத்தில் பெண்களின் கரவொலி எழவும், அவர் சற்று இடைவெளி கொடுத்து தன் உரையைத் தொடர்ந்தார்.


"யமுனா அவர்கள் தான் செய்தது சாதனை அல்ல, கடமை தான் அப்படின்னு சொல்லி இந்த பேட்டிக்கே முதல்ல மறுத்திருக்காங்க. அப்படியும் எங்க நிருபர் அபர்ணா அவங்க வாழ்க்கை பத்தி தெரிஞ்சுக்கிட்டு அவங்க செய்யற நல்ல விஷயங்களை கட்டுரையா கோத்து கொடுத்தாங்க. இதைச் செய்த அபர்ணாவுக்கும், அபர்ணாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்த திருமதி பூர்ணிமா, யமுனா மேடமோட வளர்ப்பு மகள் ஆனந்தி மற்றும் இந்த நல்ல விஷயத்துல ஒத்துழைப்பு கொடுத்து உதவி செய்த ஒவ்வொருத்தருக்கும் எங்க நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறோம்."


பூர்ணிமாவின் கணவன் பாஸ்கர் அவளை பெருமிதமாய் பார்த்தான். விழாவுக்கு வந்திருந்த ஆனந்தி, கார்த்திக், ப்ரியா, அபர்ணாவின் பெற்றோர் - எல்லார் முகமும் பூரிப்பால் நிரம்பியது.


அவர் மேலும் தொடர்ந்தார்:


"யமுனா மேடம் பத்தி நான் சொல்ல எதுவுமே இல்ல..."


கூட்டம் வியந்து போக, மீண்டும் தொடர்ந்தார்:


"அவங்க பேட்டி வெளியானதுமே எங்களுக்கு வந்த கடிதங்களே அவங்களோட பெருமையை சொல்லுது. அவங்க மாணவிகளோட கருத்துக்களையும், அந்தக் கடிதங்கள்ல சிலதையும் இப்ப படிச்சுக் காட்டலாம்னு இருக்கோம்."


ரவிராஜ் அவற்றை உடன் படிக்க ஆரம்பித்தார்.


யமுனா டீச்சர், யமுனா மேடம் என பாராட்டைத் தாங்கி வந்த அவை படிக்கப்படும் போது மீண்டும் அந்தக் காலம் சென்று வாழ்வது போலவே யமுனா உணர்ந்தாள். அந்த மாணவ - மாணவிகளின் முகங்கள் அவள் நினைவில் எழுந்தன.


கூட்டம் வாழ்த்த, மாணவிகள் கை தட்டி ஆர்ப்பரிக்க, அனைவரும் பாராட்ட, அதோ யமுனா விருது வாங்கச் செல்கிறாள்.


எல்லா நதிகளுமே கடலில் சங்கமிப்பது வழக்கம்; ஆனால் யமுனா நதி மட்டும் கண்ணனோடு கலந்து புகழ் பெற்றது. அதே போல், கல்விப் பணியோடு கலந்து விட்ட இந்த யமுனாவின் பயணம் மேலும் சிறக்க நாமும் வாழ்த்துவோம்!!


(நிறைந்தது)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top