• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஓ அமெரிக்கா ...

Raji Ram

Active member
பண்பு…


வெளியில் நாம் சென்றால் எதிர் வருவோர் நம்மிடம்
துளியும் தயங்காமல் வாழ்த்துத் தெரிவிப்பர்!

அழகான புடவை உடுத்திச் சென்றால் – அது மிக
அழகாக இருப்பதாய்ப் பாராட்டும் தெரிவிப்பர்!

ஒரு கதவைத் திறந்து நாம் உள்ளே சென்று – நம் பின்
வருவோருக்காக அதைப் பிடித்து நின்றால்,

“நன்றி” – எனச் சொல்வார்கள்; புன்னகை புரிவார்கள்!
சின்னச சின்ன உதவிகளுக்கும் உடன் நன்றி பாராட்டும்

இந்தப் பண்புதான் இன்னும் நாம் கற்கவில்லை!
இந்தியாவிற்கு இங்கிருந்து நல்லவை போகவில்லை!!
[/size]
 
Last edited:
சாலைகள்

சாலைகள் பராமரிப்பு மிக உன்னதம் – இருபுறமும்
சோலைகள் போல ஓங்கி உயர் நெடுமரங்கள்!

நெடுஞ்சாலை இருபுறமும் நான்கு வழிப் பாதைகள்;
எதிர்வருவோர் எப்போதும் வருவதில்லை நம் பக்கம்!

அறிவிப்புப் பலகைகள் மிக நேர்த்தி! – பயணத்தால்
களைத்தவர்கள் இளைப்பாற ” exit ” – களில் உணவகங்கள்!

எல்லோருக்கும் தொலைதூரம் செல்வது பழகியதால்
பல்வேறு வசதிகள் செவ்வனே செய்கின்றார்!

இரவுகளில் “ஹைவேயில்” இனிய பயணங்கள்!
இருவழிப் பாதைகளில் ஓடும் வண்டிகளின்

வண்ண விளக்கு ஒளிகள் கொள்ளை கொள்ளும் நம் மனதை!
வண்ணம் இரண்டு ஒளிர்ந்து எண்ணத்தில் நிலைத்து நிற்கும்!

முன் செல்லும் விளக்கு ஒளிகள் மாணிக்க மாலை போல;
முன் வரும் விளக்கு ஒளிகள் வைரக்கல் மாலை போல!

வண்ணமாய்க் கண்களை நிறைத்துவிடும் – இது
திண்ணமாய்ச் சொல்லுவேன், புதிய அனுபவம்தான்!
 
Last edited:
வேலை…


எந்த வேலையும் தாழ்வில்லை இங்கு;
அந்த விஷயம் மிகவும் நல்லதுதான்!

தானே “டிக்கட்” கொடுத்து, தானே “பஸ்” துடைத்து,
தானே அதை ஓட்டி, தானே “ட்ராஷ்” எடுக்கும்

“பஸ்” ஓட்டுனர்?….. இல்லையில்லை!
“பஸ் பாதுகாப்பாளர்” கண்டு அதிசயித்தேன்!

‘அண்ணே! அண்ணே!’ என்று நம்ம ஊரில்
பின்னே சென்று, பணிவுடன் உதவி,

“டீ” யும், கூடவே அடியும் வாங்கும் அந்தக்
“கிளீனர்” வாண்டுகள் இங்கே கிடையாது!

பாம்பாட்டி நாடென்று நம் நாட்டைக் கூறுவோர் – இங்கு
பாடும் ‘நடுத்தெரு நாயகர்’ பற்றி ஏன் சொல்வதில்லை?

‘பணமில்லையேல் பாட்டில்லை’ – என அறிவிப்பு வைத்துப்
பணம் சேர்க்கப் பொது இடத்தில் பாடுவோர் பலருண்டு!

தெருவில் வித்தை காட்டுவோரும் இங்கு உண்டு!
ஒரு நாளில் பல டாலர் நோட்டுக்கள் தேறுமாமே?
 
வண்டிகள்…


பாலை விடப் பெட்ரோல் மிக மலிவு! – அதனால்
சாலைகளில் வண்டிகள் போவதில் குறைவில்லை!

கார் கிடைக்கும் குறைவான வாடகைக்கு – அதனால் நம்
கார் டயர்கள் தேய்க்காமல் நெடுந்தூரம் போய் வரலாம்!

அடுக்கடுக்காய்க் கார்களை ராக்ஷஸ வண்டிகள்
எடுத்துப் போவதைப் பலமுறை காணலாம்!

ஒரு ஊர் “ஏர்போர்ட்டில்” வண்டி எடுத்து – நாம் போகும்
வேறு ஊர் “ஏர்போர்ட்டில்” விட்டுவிட வசதியுண்டு!

மிகப் பெரிய நகரத்தில் மிகவும் நெரிசல்தான்!
மிகப் பெரிய வேலைதான் வண்டி அங்கு ஓட்டுவது!

வண்டி இருப்போரும் வேலைக்குச் செல்ல அதைக்
கொண்டு செல்வதில்லை; தினம் “சப்வே” பயணம்தான்!
 
Last edited:
ஆடைகள்…


சூரிய ஒளி கண்டுவிட்டால் ஆடைக் குறைப்பு ஆரம்பம்!
சூரிய ஒளி கண்டு நம் கண்கள் கூசுவதைவிட – இந்த

ஆடை அலங்கோலம் கண் கூச வைத்து விடும்! – இதே
ஆடைக் குறைப்பைத்தான் கற்கின்றார் நம் பெண்கள்!

வேதனைதான் தோன்றும் இந்த மதி கெட்ட மாதர் கண்டு!
வேறு நற்பண்புகளை இவர்கள் ஏன் கற்பதில்லை?
 
விடுமுறை…


வெள்ளி மாலை வந்துவிட்டால்
துள்ளி குதித்துச் செல்கின்றார்!

ஜோடியாய் வெளியில் சுற்றிக்
குடித்துக் கும்மாளமடிக்கின்றார்!

குடி குடியைக் கெடுக்குமென்று
குடும்பப் பெண்கள் அறிந்தாலும்

குடித்துத்தான் பார்ப்போமென – மது
குடித்துவிட்டு மயங்குகின்றார்!

‘வாழ்க்கை வாழ்வதற்கே’ – என வேதாந்தம் கூறித்
தாழ்வாக எதையுமே கருதத் தயங்குகின்றார்!
 
பெற்றோர்…


தந்தை தாய் இருவரையும் தம் வீட்டில் காப்பது
தன் கடமை என்று எண்ண இங்கே எவருமில்லை!

ஏன்? இந்தியாவிலும் இப்போது இப்படித்தானே! – என்று
என் மனம் எண்ணத் தவறவில்லை!

“மே” மாதம் ” mother’s day ” ; “ஜூன்” மாதம் ” father’s day “
வருஷத்தில் இரு நாட்கள் பெற்றோரை நினைக்கின்றார்!

“பொக்கே” கொடுத்து அவர்களின்
பொக்கை வாய்ச் சிரிப்பைப் பார்க்கின்றார்!

முதியோர் எல்லோரும் தாம் கடையில் வாங்கியதைப்
பொதியாகச் சுமப்பது கண்டு மனம் கலங்கியது! – சென்னையிலும்

காலைப் பாலும், “ரேஷனும்” வாங்கப் பெரியோரை அனுப்பி
வேலை வாங்குவது கண்டு வருந்தியது நினைவில் நிழலாடியது!
 
குழந்தைகள்…


சின்னச் சின்னக் குழந்தைகளைச் செல்லம் கொஞ்ச ஆளின்றித்
தன்னுடனே அழைத்துச் செல்வார் தாம் போகும் இடமெல்லாம்!

குழந்தையின் வயது சில நாட்களேயானாலும்,
குழந்தையைத் துணியிலிட்டு மாலை போல் அணிகின்றார்!

இரட்டைக் குழந்தைகளும் தூக்கக் கலக்கத்தில்,
இரட்டைத் தள்ளுவண்டிகளில் சிணுங்கிச் செல்கின்றார்!

“நானிகள்” என்போர்தான் குழந்தையைப் பாதுகாப்பர்! – அந்த
“நானிகளின்” பழக்கம்தானே அந்தக் குழந்தை கற்றுக் கொள்ளும்?


கடல் கடந்து வந்து பொருள் தேடும் ஜோடிகள்,
உடல் நொந்து போகிறார்கள் குழந்தை வளர்ப்பினால்.

குழந்தை உருவாகி வளரும் காலத்தில், பெண்ணைக்
குழந்தை போல் பேண அவள் தாய் உடன் இருப்பதில்லை.

பேறு காலத்தின் கடைசி நிமிடம் பறந்து வந்து சேர்ந்திடுவாள்.
வேறு வேலைகள் அனைத்தும் ஒதுக்கி, உதவி செய்திடுவாள்.

ஆறு மாதத்திற்கு மேல் இருக்க விடாத விசா கெடுபிடிகளால்
அன்னை சென்றதும், துணைவனின் அன்னை வந்திடுவாள்.

ஓராண்டு இவ்வாறு ஓடியபின், சிலருக்கு மறுபடியும்
ஓராண்டு காலம் action replay யாகச் சென்றுவிடும்.

பெற்றோரும் முதியோராய்ப் போவதால், அடிக்கடி வந்து
உற்ற துணையாக இருந்து உதவ முடியாது போய்விடும்.

சின்னக் குழந்தைச் சிணுங்கலுக்கும் பயந்துகொண்டு – இவர்கள்
என்ன செய்வதென அறியாது திகைத்து நின்றிடுவார்.

வேலைக்கு இருவரும் செல்வதால் குழந்தை காக்கும்
வேலைக்கு, day care – காப்பகங்களை நாடிடுவார். அங்கு

டாலர் செலவுக்கும் பஞ்சமில்லை! ஒரு மாதத்திற்கு எழுநூறு
டாலர் கொடுத்தால், ஒரு வாரத்தில் நாலு நாட்கள் ‘காத்திடுவார்’!

குழந்தை பிறந்தது முதல் பிளாஸ்டிக் நாப்பியைக் கட்டுவதால்,
குழந்தையின் நல்ல விளையாட்டும் தடைபட்டுப் போகிறது.

குழந்தை வளர்ப்பு பற்றிப் பாடங்களைக் கற்று வந்தாலும்,
குழந்தை வளர்க்க இந்தத் தலைமுறை திண்டாடி நிற்கிறது!
 
raji,

welcome to the forum.

yes the usa and the west are amazing in many respects.

i understand the anguish that the older parents left in india go through. this is perhaps the only drawback, and a major one at that, of transplanting sons and daughters.

though circumstances made sure, that both my parents were well cared for before they died, i have quite a few cousins who are in the same boat as the aging ignored parents that you allude.

you would surprised, that even here in the west, there are families where three generations live under the same roof.

while most young couples prefer thani kudithanam, most parents too do not want to have the children under their roof. children (no matter what their age)means still, a lot of work, and the older the parents get, they look forward to respite from the ever ending chores.

however, relationships change, and i know, of old single widows or widowers, move in with their daughters. the mother daughter is perhaps the strongest bond in the world, and is easier transition than moving with son/dil.

other couple move in with their parents, solely for economic reasons - either to save up for a house, or income loss due to loss of a job or need for further education.

the bottom line, i agree, for tambram parents with sons daughters in the usa, it hurts to be left behind. situations are kinder in canada & australia, where the parents are processed for permanent status fairly quickly (as far as i know).

once again hope to see more of you in other threads as well.

welcome :)
 
தொலைக்காட்சியும், மெஷின்களும் …


"தொலைக்காட்சி"

தொலைக்காட்சியில் “சானல்கள்” நூற்றுக்கும் மேலுண்டு!

கொலை, கொள்ளை, வன்முறை, பலாத்காரம் – என்று

பலவற்றிலும் இதுவே ஒளிபரப்பு நாள் முழுதும்!

பலர் சேர்ந்து பார்க்க உண்டு ஒரே ஒரு “சானல்”!

என்னவென்று சொல்லவா? அதுதான் ” weather ” “சானல்”!

*************************************************

“வாஷிங் மெஷின்”

தினம் குளித்து ‘மடி’ போட்டு உடுத்துபவர்
மனம் வெறுப்படைவர் இங்கு வந்தால்!

வாரம் ஒரு முறை துவைப்பதே மிக அரிது!
பேரம் கிடையாது! ஒரு “லோடு” ஒண்ணரை “டாலர்”!

வீட்டில் “மெஷின்” இருந்தால் துணிகளை எடுத்துக்கொண்டு
“ரோட்டில்” செல்ல வேண்டாம், துவைக்கும் இடத்திற்கு!

ஆனாலும் ” drier ” பல நிமிடம் சுற்றினால்,
வீணாகக் “கரண்ட் பில்” ஏறுமே? – எனவே

ஒரு “லோடு” துணிகள் சேரும் வரை – இங்கு
ஒருவருமே துவைக்கப் போவதேயில்லை!!

*************************************************

“டிஷ் வாஷர்”

நித்தமும் சமையல் மிகச் சுலபம்! நறுக்கின காய்கறிகள்
சுத்தமோ சுத்தம்! கீரையும் கூட! …… ஆனால்,

சமைத்த பாத்திரங்களை யார் அலம்புவதாம்?
சமைக்கும் நம்ம பசங்களின் பயமே இதுதானே?

பாத்திரம் கழுவ ” டிஷ் வாஷர் ” இருந்தாலும்
பாத்திரத்தில் ஒட்டினது போகவே போகாது! – நாம்

அலம்பி அடுக்கி வைத்தால், ‘அது’ சோப்பு நீரில்
அலசிக் காயவைக்கும்! ஆனால் யாருக்குத்தான் தெரியாது

அந்த முதல் ‘அலம்பல்’ தான் கஷ்டமென்று? – மேலும்
எந்த “மெஷினும்” நம்மையும் வேலை வாங்குமென்று!!

*************************************************
 
வாழ்க்கை…


எப்படி வேண்டுமானாலும் வாழலாம் இங்கு!
இப்படித்தான் வாழ வேண்டுமென்று உறுதி பூண்டு,

காலையில் எழுந்து நீராடி, பூஜை புனஸ்காரங்கள் – நல்ல
வேலையில் இருக்கும் சிலர் இங்கும் செய்கிறார்! – வீட்டு

வேலைகளில் உதவி செய்ய எவரும் இல்லாததால் – நாமே
வேலைகளை மெதுவாகச் செய்வோமென எண்ணி,

நிதானமாய்த் துயிலெழுந்து, குளிக்காமல் சமைத்து வைக்கும்
நம்ம ஊர்ப் பெண்களும் இங்கே இருக்கின்றார்!

வீட்டில் சமைத்தால் இங்கு செலவு குறைவென்று
வீணான நம்பிக்கை எல்லோருக்கும் இந்தியாவில்!

பால், தயிர், புதிய காய்கறி, பழங்களென்று
நல்ல சாப்பாடு இங்கும் நல்ல செலவுதான்!

ஒரு முழ ரொட்டி ஒரு “டாலர்” – ஆனால்
இரு தக்காளி ஒரு “டாலர்” – மேலும்

மூணு ஆப்பிள் ரெண்டு “டாலர்” – மற்றும்
நாலு குடமிளகாய் நாலு “டாலர்” ஆகும்!

பெட்டியில் காசு சேர வேண்டுமென எண்ணி,
ரொட்டியில் காலம் முழுதும் கழிக்க முடியுமா?

காலை எழுந்து நீராடிக் கடவுளை வணங்கிவிட்டு,
வேலைக்குப் போகுமுன் வீட்டிலே சாப்பிடுவது அரிது!

வழியிலே காபியும், வடைபோல “பேகலும்” வாங்கி
வழியிலே சாப்பிடுவர்; நம்மவரும் அப்படித்தான்!

இந்த ஊர்ப் பெண்களோ??

ஒரு கையில் ‘பீடி’! மறு கையில் ஜாடி!!
வேறு என்ன? சிகரெட்டும், காபியும்தான்!

காணுமிடமெல்லாம் சாப்பாட்டுக் கடைகளுண்டு;
வேணுமென்றால் வீட்டில் சமைக்காமலே இருப்பதுண்டு!

நான் கண்ட தமிழர் பலர்
ஆண் பெண் பேதமின்றித்

தோள் அணைத்து வாழ்த்துவதைக்
கண்டு கொஞ்சம் கூசினேன்!

‘ நாடு விட்டு நாடு வந்தால்
நாணமின்றிப் போகுமோ? ‘ – என்ற

வண்ணத் திரையிசை வரிகள்
எண்ணத்தில் அலை மோதின!

நம் கலைகளை ஆர்வமாய்க் கற்ற சில அமெரிக்கர்,
நல்ல தமிழ் பேசி, ‘யோகா’ செய்ய விழையும்போது,

தமிழ்க் குழந்தைகள், தாய் மொழி மறந்துவிட்டு,
தமிழ் தெரியாததைப் பெருமையாய்ப் பேசும்போது,

இனி நம் இனத்தோர் எல்லோரும்
தனித் தன்மையின்றிப் போவோமோ?

எனக்குள் எழுந்தது ஆதங்கம்!
மனத்துள் நிறைந்தது சோகம்!!

 
கலாச்சாரம் …

*********************************************

” culture ” கிடைத்தது!

இந்தியக் கலாச்சாரம் எங்கே போனது?

தேடினேன்…. தேடினேன்…. கிடைக்கவில்லை!

‘வீட்டிலே தயிர் செய்ய ” culture ” – இது

இந்தியாவிலிருந்து வந்தது! ‘ என்று கூறிய நண்பி,

ஒரு ” bottle ” லில் கொஞ்சம் ஊற்றிக் கொடுத்தாள்!

அட!!.. நம்ம கலாச்சாரம் ” bottle ” -லில் கிடைத்தது!!

*********************************************

இவர்கள் எல்லோரும் சட்டத்தை மதிப்பார்கள்! – ஆனால்
இவர்களில் பல்லோர் கற்பை மதிப்பதில்லை!

அந்தரங்க வாழ்க்கை எல்லோருக்கும் உண்டு – அதை
அந்தரங்கமாய்க் கொள்ளப் பலரும் நினைப்பதில்லை!

இந்த ஜோடிகள் பலர் முன் செய்யும் ‘சேஷ்டைகள்’தான்
இந்தியாவிலும் பரவுகிறது! இதை எண்ணி வருத்தம்தான்!

ஆணுக்கும் கற்பு வேண்டும் என்று காப்பியங்களில்
ஆணித்தரமாக அடித்துச் சொன்னவர்கள் – இங்கு

‘பெண்கள் விடுதலை’ – எனச் சொல்லி, இந்தப்
பெண்கள் அடிக்கும் கூத்துக்களைக் கண்டால்,

‘ஏன் இக்காட்சிகளை நாம் பார்த்தோம்?’ – என்றும்
‘ஏனிந்த சமுதாயச் சீரழிவு?’ – என்றும் வருந்துவர்!

‘ஏற்றம் மிகு இந்திய மண்ணிலும் இதுதான்
புற்றாகப் பரவுகிறதோ?’ – என்றும் கலங்குவர்!!

********************************************

கோவில்கள்...

இந்தியர்கள் அதிகமாகக் குடியிருக்கும் இடமெல்லாம்
இந்தியக் கோவில்கள் இருப்பதைக் கண்டிடலாம்!

சுத்தமாய்த் தூய்மையாய் வைத்து இவைகளை
நித்தமும் மிக அழகாய்ப் பராமரிக்கின்றார்!

நாம் வணங்கும் பல்வேறு தெய்வங்களையும், இனிதே
தாம் வணங்கிப் பூஜைகள் அனுதினமும் செய்கின்றார்!

நான் தேடிய நம் நல்ல கலாச்சாரம் இக்கோவில்களில்
தான் கண்டேன்! அதனால் மன மகிழ்ச்சி கொண்டேன்!

சாப்பாட்டுப் பிரியர்கள் அதிகம் இருப்பதால் – இங்கு
சாப்பிடவே ஆவலுடன் வருவோரும் அதிகம்தான்!

பிரசாதம் வழங்குவதும் உண்டு! – ஆனாலும்
பிரதானமாய் இருப்பது ருசியான உணவுகள்தான்!

********************************************
 
‘அ’ – விலிருந்து ‘ஃ’ – வரை…


அமெரிக்கா போகணும்! “டாலர்” சம்பாதிக்கணும்!

ஆசை யாரை விட்டது?

இங்கு வந்து பார்த்தால் புரியும்,

ஈன்ற மண்தான் புனிதம் என்று!

உயர உயரப் பறந்தாலும்

ஊர்க் குருவி பருந்தாகுமா?

எந்தப் பெரியவர் சொன்னதோ?

ஏட்டில் படித்த ஞாபகம்!

ஐயமொன்று எழுந்தது எனக்கு; சுதந்திரம் எனச் சொல்லி,

ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டை வெறுக்கின்றனரே!

ஓ!! இதுதான் அமெரிக்க வாழ்க்கையோ?

ஔவையார் இக் கலாச்சாரம் கண்டால்,

‘ஃ’ – ஆயுத எழுத்தால் தாக்குவாளோ?
 
எல்லாம் தலைகீழ்!


இந்தியாவிலிருந்து இங்கு முதன்முறை வருவோருக்கு,
விந்தையாய் இருக்கும் இங்கு காண்பதெல்லாம்!

விளக்குப் போட ” switch ” – ஐ மேலே தள்ள வேண்டும்!
வலது பக்கமாய்ப் பாதையில் வண்டி ஓட்ட வேண்டும்!

வெந்நீர் நம்முடைய இடது பக்கக் குழாயில் வரும் – குளிர்ந்த
தண்ணீர் நம்முடைய வலது பக்கக் குழாயில் வரும்!

பூக்கள்தான் முதலில் பூக்கும், வஸந்த காலத்தில்!
பூத்தபின் மெதுவாக இலைகள் துளிர் விடும்!

இயற்கையே இவ்வாறு இருப்பதால்தானோ – இங்கு
இல்லாளாய் மாறும் முன் சிலர் தாயாக மாறுகின்றாரோ? - இல்லை

உலக உருண்டையில் நாம் நிற்கும் திசைக்கு
எதிர்த் திசையில் நிற்பதால் இவ்வாறு இருக்கிறதோ?
 
கொஞ்சம் சிரிக்க …


நான் நினைத்த ” lady ” !

சுரங்கப்பாதை ரயில் ஒன்றில் மிகக் கூட்டம் ஒருதடவை;
இறங்க சில நிமிடப் பயணம்தானே என்று எண்ணிக்

காலியாக இருந்த ஒரே ஒரு இருக்கைதனில், அமர்ந்தேன்
ஜாலியாக! அடுத்திருந்த முகம் பார்க்க முடியவில்லை!

இருண்ட நீண்ட தலைமுடி; ஜீன்ஸ் அணிந்து
திரும்பி அமர்ந்திருந்தது அந்த உருவம்!

நான் நினைத்தேன் ” lady ” என்று! – இறங்கும்போது
தான் கண்டேன், அதன் முகத்தில் தாடி ஒன்று!!

*********************************************

மட்டிப்பால்!

பக்தியால் உருகி, ஆண்டவனை வணங்கிவிட்டு
‘மட்டிப்பால்’ ஏற்றினேன்; புகை பற்றி எண்ணவில்லை!

அடுப்படி வேலையில் நான் மூழ்கியிருந்தபோது,
‘திடுக்’கென்று ஊதியது பெரிய “சைரன்” ஒன்று!

நான் கண்ட திரைப்படத்தில் இதே சத்தம் கேட்டுள்ளேன்!
நான் எண்ணி பயந்ததுபோல் அது ” smoke alarm ” தான்!

ஏன் இதை நிறுத்தவே முடியவில்லை?
என்று மனம் கலங்கித் தவித்தேன்!

இரு நிமிடப் பொழுதில் கதவில் ‘டக் – டக்’!
‘வருகிறேன்’ – எனக் கூறிக் கதவைத் திறந்தேன்!

ஆறரை அடி உயரம்! மூன்று அடி அகலம்!
வேறு யார்? ” fire brigade ” தான்! ஆறு பேர்!

“sorry ” எனக்கூறி, மட்டிப்பால் பற்றிச் சொன்னேன்!
‘சரி’ – என்று சென்றார்கள்! நல்ல வேளை; தப்பித்தேன்!

*********************************************
 
சிக்கனம்…


பணம் சேமிப்பது மிகக் கடினம் – இங்கு
மனம் திசை திருப்பப் பல்வேறு வசதியுண்டு!

வார விடுமுறையில் வீட்டில் இருப்போரைப்
பார்ப்பது மிக அரிது! எல்லோருக்கும் ” fun ” வேண்டும்!

எங்கு நாம் சென்றாலும் பணச் செலவு மிக அதிகம்!
எந்த “டிக்கட்” என்றாலும் பதினைந்துக்கும் மேலாகும்!

” sky diving ” போல வீர விளையாட்டுக்கள்
” sky ” உயரச் செலவுதான்! ஒரு முறைக்கு நூறு “டாலர்”!

வீட்டுக்கும் வாடகை மிக அதிகம்! அதனால் எல்லோரும்
வீடு வாங்கக் கடன் எடுத்து, அதை அடைக்க மேன்மேலும்

உழைத்து ஓடாகின்றார்!
களைத்துப் போகின்றார்!

‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ – என
ஓதுவது வீண் பேச்சு! இங்கு ” credit card ” தான் உயிர் மூச்சு!

 
வியக்க வைக்கும் நயாகரா!


பெயரே வந்து தூண்டிவிடும் உள்ளத்தில் பெருமகிழ்ச்சி;
உயரே இருந்து கொட்டும் நயாகரா நீர் வீழ்ச்சி!

உலகிலுள்ள அனைவருமே காண விழையும் அரும் காட்சி;
உணர்ந்திடுவோம் கண்டவுடன் இயற்கை அன்னையின் மாட்சி!

அன்று முதல் இன்றுவரை மேலைநாட்டின் பெருமையாகும்;
மூன்று பிரிவுகளாய்ப் பிரிந்து கொட்டுவது அருமையாகும்!

ஆரம்பத்தில் ‘rapid river’ எனப் பெருகி ஓடும்;
ஆயிரத்து நூற்று ஐம்பதடி அகலக் கொந்தளிப்பாகும்! – அது

அடித்து வந்த பெருமரங்கள் அதனிடையில் காணும்போது,
நொடிப்பொழுது நம் இதயம் துடிக்கவே மறந்துவிடும்!

ஆற்றுக்கு இணையான சாலையில் எதிர்பார்ப்புடன் செல்கின்றோம்!
நூற்றுக் கணக்கான ஜனக்கூட்டம் உடன் வரக் காண்கின்றோம்!

நெருங்கி வரும் பேரிரைச்சல் கேட்கிறது என்றாலும்,
அருங்காட்சி விரிகிறது நாம் எதிர்பாராத் தருணத்தில்!

அமெரிக்கப் பகுதியில் கற்பாறைகளில் மோதி விழும்;
விவரிக்க வார்த்தைகள் இல்லை! காண்போரை அயர வைக்கும்!

இருநூறு அடி ஆழத்திற்குக் கொட்டும் வெள்ளப் பிரவாகம்!
இரு கண்கள் போதாது! கண்டவுடன் வரும் உற்சாகம்!

பாசம் கூட நீருக்கடியில் மரகதமாய் மின்னுகிறது!
பச்சை வண்ணப் பெருக்கெடுப்பாய் மனம் அதை எண்ணுகிறது!

இரண்டாம் பகுதி ‘veil of bride‘ என அழைக்கப்படுகிறது!
இரண்டாம் கருத்திற்கு இடமில்லை; பெயர் கச்சிதமாய் இருக்கிறது!

வெண்மையான அடர்ந்த துணி மணமகளைத் தொடர்வதுபோல்
வெண்மையான அடர்ந்த நீரும் நிலமகளைத் தொடுகிறது!

‘horse shoe’ வடிவத்தில் மூன்றாம் பகுதி இருக்கிறது!
‘horse shoe falls’ என அது பெயர் பெறுகிறது!

இருநூறடி இறங்கவேண்டும் படகுத்துறை அடைவதற்கு;
இரும்பால் அமைத்த “லிப்ட்” உண்டு நம்மை அழைத்துச் செல்வதற்கு!

‘maid of mist’ எனப் படகுப் பயணத்தை அழைக்கின்றார்! – பின்
‘maid of mist’ – ன் சோகக் கதையும் கூறுகின்றார்!

நீல வண்ணத்தில் மழைக் “கோட்டு” அளித்துப் பின்னர்
நீர்வீழ்ச்சிகளைக் காண அழைத்துச் செல்கின்றார்!

படகு புறப்பட்டவுடன் மக்களின் ஆரவாரம்!
இடதுபுறம் தெரிகிறது வானவில்லின் வண்ண ஜாலம்!

கண்ணிமைக்க மறக்கிறது! ஏன்? சுவாசம் கூட நிற்கிறது!
எண்ணிலடங்கா நீர்த்துளிகள் வண்ண மயமாய்த் தெரிகிறது!

வானவில் ஒன்று தோன்றி நம்முடனே வருகிறது! – மறுகணமே
வானவில்லின் பிரதிபலிப்பும் பளீரென்று வளைகிறது!

இரட்டை வானவில்லும், நீர்வீழ்ச்சியின் அதிர்வுகளும்
இரட்டிப்பு மகிழ்வளிக்கும், ஒலி ஒளி பிரம்மாண்டங்களாய்!

அமெரிக்கப் பகுதிகளைத் தாண்டியதும் கண்ணெதிரே
அமர்க்களமாய் வருகிறது “கனடா” நாட்டுப் பிரவாகம்!

ருத்திரனின் தாண்டவம் இப்படித்தான் இருக்குமோ?
இந்திரனின் ஆயுதம் இப்படித்தான் இடிக்குமோ?

ஆண்டவனின் விஸ்வரூபம் இப்படித்தான் இருக்குமோ?
கண்டவர்க்கு ரூபத்தை ஒளி வெள்ளம் மறைக்குமோ?

நீர்வீழ்ச்சியை மறைத்து நிற்கும் நீர்த்துளிகளின் மோதல்கள்!
நீர் வீழ்ந்து நாம் நனைந்து சிரிப்பலையின் மோதல்கள்!

ஒரு கணம் எனக்கு நீந்தத் தெரியாதென நினைத்து,
மறு கணம் வேண்டினேன், இஷ்ட தெய்வத்தை நினைத்து!

பத்து நிமிடப் பயணம்தான்! நினைத்தாலே சிலிர்த்துவிடும்!
சித்து விளையாட்டுப்போலச் சிந்தைதனில் நிறைந்துவிடும்!

ஆற்றங்கரை சேர்ந்து, மேலே ஏறி வந்த பின்,
ஆற்றின் மறுபக்கம் பாலம் வழிச் சென்றிடலாம்!

அங்கும் பூமியைத் துளைத்து, வேறு “லிப்ட்” அமைத்துள்ளார்!
அந்தப் பயணத்தை 'cave of wind' என அழைக்கின்றார்!

மழைக் “கோட்” மட்டுமின்றி வழுக்காத மிதியடிகள் தந்து,
அழைத்துச் செல்லுகிறார் வழிகாட்டி மரப் படிகள் மீது!

‘veil of bride’ நீர் வீழ்ச்சிக்கு மிக அருகில் செல்கின்றோம்!
வீல் வீல் – என்று குழந்தைகள் அலறக் கேட்கின்றோம்!

ஆகாய கங்கை இப்படித்தான் ஆர்ப்பரித்து வந்ததோ?
ஆகாயம் நோக்கிய கணம் இந்த எண்ண அலை மோதியது!

சூறாவளி மேடையொன்று தனியாகத் தெரிகிறது!
தீபாவளிச் சரவெடிகள் வைத்ததுபோல் அதிர்வு அங்கு!

வியந்த பலர் அதில் ஏறி நிற்க விழைந்தனர்!
பயந்த சிலர் அதில் ஏறாமலே திரும்பினர்!

கொட்டும் அருவியின் துளியளவு தெறிப்பதே – யாரோ
தட்டும் உணர்வைத் தருவது விந்தையான அனுபவமே!

இயற்கையில் அமைந்த அந்த வெள்ளப் பெருக்கெடுப்பிற்கு,
செயற்கையாய் இரவில் எத்தனை வண்ணம் சேர்க்கின்றார்!!

வண்ண விளக்குகள் பலவற்றின் ஒளி பாய்ச்சி – அங்கு
வண்ண நீர்ப் பிரவாகம் கண்டு வியக்க வைக்கின்றார்!

தூரிகையால் தீட்டியதுபோல தூரத்திலிருந்து பார்த்தால்;
பேரிகைபோல் முழங்கிவிடும் அருகிலே சென்றுவிட்டால்!

கண் நோக்கிய இடமெல்லாம் வண்ண ஒளிக் கலவைகள்!
விண் நோக்கி எழும் ஒளிர் வண்ண நீர்த் திவலைகள்!

‘maid of mist’ பற்றி…….

நன்றி காட்டும் நாளாக 'thanks giving' நாள் ஒன்று;
தொன்று தொட்டு வந்த கதை இந்த நாளைப் பற்றி உண்டு!

விசித்திரமாய் ஓர் இனத்தில் தொடர்ந்து வந்த வழக்கம் ஒன்று;
சித்திரம்போல் அழகு நங்கையை நீர்வீழ்ச்சியில் தள்ளுவதென்று!

இறைவனுக்கு நன்றி காட்ட, கொடும் நரபலி கொடுத்தனர்!
தலைவனுக்கு வந்தது சோதனை, அழகு மகள் வடிவத்தில்!

தன் மகளைத் தேர்ந்தெடுத்து, பலி கொடுத்து, மனமுடைந்து,
தன் உயிரும் மாய்த்துக் கொண்டான், நீரில் பாய்ந்து, வீழ்ந்து!

மனம் உடைந்த தலைவன போட்ட “ஓ” வென்ற ஓலம்தான்,
தினம் கேட்கும் நயாகராவின் ஓசையென்று கூறுகின்றார்!

சோகக்கதை கேட்டு மனம் கசந்த எமக்கு – அந்தச்
சோகம் மாறிவிட “ஜோக்” ஒன்று கிடைத்தது!

'எட்டுக் "கன்கார்டு" விமானங்கள் மிக அருகில் சென்றாலும்,
எட்டாது அந்த ஒலி நீர்வீழ்ச்சி ஓசையால்', என்ற வழிகாட்டி,

'இங்கு பெண்கள் அனைவரும் ஒரு வினாடி மௌனம் காத்தால்,
நன்கு கேட்டு விடும் நீர்வீழ்ச்சியின் ஓசை' – என்றாராம்!

 
ஆதாயம்தான் எனக்கு!


அமெரிக்கா சென்று வந்ததில்
ஆதாயம்தான் எனக்கு! – மகனின்

வீட்டுப் பராமரிப்புப் பொறுப்பேற்று – அவனை
விட்டுப் பிரியாமல் இருந்தோம் மூன்று திங்கள்!

நானே அறிந்திரா என் திறமைகளில் சில
தானே வெளி வந்தது வினோதம்தான்!

புதிதாக மோதிய எண்ண அலைகள் – சில
புதுக் கவிதைகளாய் மலர்ந்தன! – என்

புதுக் கவிதைகள் படித்த சுற்றத்தார் – என்
புது ரசிகர்களாய் மாறி மகிழ்ந்தனர்!

பத்துப் படி “எஸ்கலேடரில்” ஏறப்
பத்து முறை யோசித்துத் தயங்கும் நான்

அடுக்கடுக்கான “எஸ்கலேடர்களில்”
தடுக்காமல் பலமுறை ஏறி இறங்கினேன்!

எல்லோரும் விரும்பும் “டிஸ்னி” உலகில்
பல்வேறு “ரய்டு”களில் சென்று வந்தேன்!

“எலக்டிரிக் கிடார்” வாங்கிவிட்டு – அதை
வாசிக்க நேரமில்லாத அன்பு மகனிடம்

“ஹாட் டிரிக்” போல மூன்று பாடல்கள்
முதல் நாளிலேயே வாசித்து அசத்தினேன்!

பல பெற்றோர்கள் அமெரிக்காவில் செய்யாத
பல வேலைகள் நாங்கள் செய்து விட்டோம்!

“பஸ்”ஸிலும் “சப்வே ரயிலிலும்”
பயணங்கள் பல செய்தோம்!

பல மைல்கள் நடந்து நடந்து
சில “பவுண்டுகள்” எடை குறைந்தோம்!

பாலில் “ஹார்மோன்” அதிகம் எனப் பயந்து
பால் தயிர் குறைவாக உண்ண அறிந்தோம்!

எவ்வித சுற்றுச் சூழல் இருந்தாலும்
செவ்வனே வாழலாமென அறிந்தோம்!!

 
புதிய சுற்றுச் சூழல்கள்; புதிய வாழ்க்கை முறைகள்.

இனிய எம் முதல் அமெரிக்க விஜயத்தில் பார்த்தவை,

எண்ண அலைகளாய் மனதில் வந்து மோதிட,

எண்ணங்கள் மலர்ந்தன புதுக் கவிதைகளாக!

எத்தனையோ நண்பர்கள் பல முறை சென்று வந்தாலும்,

அத்தனையும் நம்மிடம் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை!

பதித்த சில எண்ணங்களை இங்கு முன் வைத்ததில்,

உதித்த மன நிறைவுடன் இதை நிறைவுசெய்கிறேன்!



உலகம் உய்ய வேண்டும்,

ராஜி ராம்
 
Sow.Sri.Raji Ram,

Welcome to the forum. Thanks for this treat! You are the second poet to this forum, in a short period of time. It looks like, the forum seems to be doing something right to attract members poets like you (and Sow. Visalakshi Ramani). I am looking forward for more treat from you!

Cheers!
 

Dear members,
Very happy to inform you that Smt. Visalakshi Ramani is my elder sister!
Regards,
Raji Ram

திருமதி ராஜி ராம் அவர்களுக்கு "தமிழ் பிராமணர்" இணைய தளத்தில் ஒரு மூத்த அங்கத்தினர் என்ற முறையில் நான் தங்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் அமெரிக்க அனுபவங்கள் புதுக் கவிதைகளாக மலர்ந்திருப்பது படிக்க சுவையாக உள்ளது . திருமதி விசாலாக்ஷி ரமணி தங்கள் மூத்த சகோதரி என்று அறிய மிக்க மகிழ்ச்சி. ஆக அனுபவங்கள் கவிதைகளாக மலர்வது தங்கள் மரபில் உள்ள ஒரு திறன்.

நல்லாசிகள்
ப்ரம்மண்யன்
 
Last edited:

Latest ads

Back
Top