• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருப்பாவை தனியன்கள்

திருப்பாவை தனியன்கள்

திருப்பாவை தனியன்கள்.....!!!


தனியன்கள் என்பவை பிற்காலத்தில் வந்த ஆச்சார்யப் பெருமக்களால் சாதிக்கப்பட்டவை. ஆண்டாளின் திருப்பாவைக்கு மூன்று தனியன்கள் உண்டு.


முதலாவது தனியன் ஸ்ரீ பராசர பட்டர் சாதித்தது


நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம்ச்ருதி சதசைரஸ்ஸித்த மத்யாபயந்தீ -
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் பலாத்க்ருத்புங்க்தே கோதாதஸ்யை நம்இதமிதம் பூயஏவாஸ்து பூய:


நீளாதேவியின் அம்சமான நப்பின்னைப் பிராட்டியின் உயர்ந்து திருமார்பிலே உறங்குகின்றவனும், தான் சூடிக் கொடுத்த மாலையாலே கட்டுப்பட்டவனும் ஆன கிருஷ்ணனுக்கு அவனுடைய பாரதந்த்ர்யத்தை (அதாவது ஆத்மாக்கள் அவனிட்ட வழக்காயிருந்து அவனுக்கே பயன்படுவதை) உணர்த்தி எம்மை அடிமைகொள்ள வேணும் என்று நிர்பந்தித்த ஆண்டாளை நமஸ்கரிக்கிறேன் என்று இந்தத் தனியனை சமர்ப்பிக்கிறார் ஸ்ரீ பராசர பட்டர்.


திருமால் கண்ணனாய் இப்பூவுலகில் அவதரித்தது எதற்கு எனில், ஆத்மாக்களை அடிமை கொண்டு ரக்ஷிக்கவே. யசோதையின் உடன் பிறந்தவரான கும்பனின் மகளாக அவதரித்த நீளாதேவி (நப்பின்னை) கண்ணனின் மனைவி. அவளுடைய அவய அழகிலும், ஆத்ம குணங்களிலும் ஈடுபட்டு கண்ணன் தனது அவதார காரியத்தை மறந்திருந்தான். பொறுமைக்கு பெயர்போன பூமிப்பிராட்டியின் அவதாரமாகிற ஆண்டாள் தன் குழந்தைகளை (ஜீவாத்மாக்களை) கண்ணன் ஆட்கொள்ளாதது கண்டு வருத்தமுறுகிறாள். மலைக்குகையில் வாழும் சிங்கத்தை உபாயம் அறிந்தவர்கள் கட்டி வசப்படுத்துமாப்போலே இந்த யசோதை இளஞ்சிங்கத்தை தான் சூடிக் களைந்த மாலைகளாலே கட்டி வசப்படுத்தி விட்டாள். அவனுக்கு அவன் அவதாரமெடுத்த காரியத்தை உணர்த்தி நம்மையெல்லாம் ஆட்கொள்ள வைக்கிறாள் ஆண்டாள். அந்த ஆண்டாளுக்கு நாமெல்லாரும் ‘ஒழிவில் காலமெல்லாம்’ அடிமை செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீ பராசர பட்டர்.


இரண்டாவது மற்றும் மூன்றாவது தனியங்கள்
ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்தது


அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்
இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை
பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.


சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.


‘மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத்தூர்’ என்ற ஆண்டாளின் திருவாக்கையே இங்கு உய்யக்கொண்டார் தனது முதல் தனியனில் முதலடியாகப் பயன்படுத்துகிறார்.


அன்னங்கள் விளையாடித் திரியும் வளங்கள் நிறைந்த வயல்களையுடைய ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் திவ்ய தேசத்தில் பிறந்தவளும், திருவரங்கத்திலே திருமகள் கேள்வனாக உறையும் திருவரங்கனுக்கு மிகச்சிறந்த இனிய இசையுடன் கூடிய (பதியம் – வடமொழில் பத்யம் என்பது இங்கு தமிழில் பதியம் ஆகியிருக்கிறது) திருப்பாவையாகிற முப்பது பாடல்களை பாமாலைகளாக பாடிக் கொடுத்தவளும், தான் சூடிக் களைந்த பூமாலைகளை அந்த அரங்கன் சூடி அநுபவிக்கக் கொடுத்தவளும் ஆன ஆண்டாளை வாய்படைத்த பயனாக நெஞ்சே சொல்லு என்று நெஞ்சுக்கு உபதேசிக்கிறார் ஸ்ரீ உய்யக்கொண்டார்.


ஸ்ரீ பராசர பட்டர் தனது காலக்ஷேபத்தின் போது அடிக்கடி சொல்லுவாராம்: ‘தினமும் திருப்பாவையை அநுசந்திக்க வேணும்’ என்று. ஒருமுறை, சம்சாரி ஒருவர் எழுந்திருந்து கேட்டாராம்: ‘சம்சாரத்தில் உழலும் எம்மைப் போல்வாருக்கு முப்பது பாசுரங்கள் சேவிப்பதற்கு கால அவகாசம் கிடைத்தல் அரிது. என்ன செய்யலாம்?’


‘முப்பது பாசுரங்கள் சேவிக்க இயலாது என்றால் கடைசி இரண்டு பாசுரங்களையாவது சேவியுங்கள்’.


‘அதற்கும் நேரமில்லையென்றால்?’


‘ஆண்டாள் திருவடிகளே சரணம் என்று சொல்லுங்கள். அதுவும் முடியவில்லை என்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் என்று ஒருத்தி இருந்தாள். அவள் பெருமாளுக்கு திருப்பாவை பாடினாள் என்றாவது மனதிலே நினையுங்கள். அந்த நினைவு உங்களை நல்லகதிக்கு அழைத்துச் செல்லும்’


அன்று உய்யக்கொண்டார் ‘சூடிக் கொடுத்தாளை சொல்லு’ என்று சொன்னதும் இதையே தான் போலும்.


ஆண்டாளை இரண்டாவது தனியனில் ‘சுடர்க்கொடி’ என்று விளிக்கிறார் உய்யக்கொண்டார். காரணம் யாதெனில் ஆண்டான் சூடிக் களைந்ததை அடிமைகள் விரும்பி அணிவார்கள். அப்படியல்லாமல் இவள் சூடிக் களைந்ததை ஆண்டவன் உகப்புடன் அணிந்து கொண்ட பெருமை பெற்றவள். அதனாலேயே ஒளிவீசும் (ஞானஒளி) பொற்கொடி போன்றவள். சுடர் என்றால் புகழ். ஆண்டவனையே தான் சூடிக்கொடுத்த பூமாலைகளால் ஆண்டவள் என்ற புகழ் படைத்தவள்.


தொல்பாவை என்பது தொன்று தொட்டு அநுசரிக்கப்பட்டு வரும் பழமையான பாவை நோன்பு. திருப்பாவை என்பதையே தொல்பாவை என்கிறார் என்றும் கொள்ளலாம். திருப்பாவையின் பழமை என்னவென்றால் வேதங்களைப்போல அது அநாதிகாலமாக இருந்து வருகை. வேதங்கள் மறைந்த போது அவற்றை பகவான் தன் திருவுள்ளத்தில் வைத்திருந்து வெளியிட்டான். அதேபோல திருவாய்மொழியும் மறைந்த போது ஆழ்வார் திருப்பவளத்திலிருந்து வெளியானது. வேதங்களைப்போல திருப்பாவையும் நித்யமானது. சப்தங்களெல்லாம் உச்சரிக்கப்பட்டு மறைந்து முன்போலவே தோன்றும். அதுபோலவே திருப்பாவையாகிற இந்த வேதாந்த நூலும் சப்தமாகையாலே மறைந்து ஆண்டாள் திருவாக்கின் மூலம் வெளிப்பட்டது. இத்தகைய திருப்பாவையைப் பாடி உலக மக்கள் உய்யும்படி பரம காருண்யம் செய்ததால் ‘அருளவல்ல’ என்கிறார்.


பற்பல வளையல்களைத் தரித்தவளே! (திருப்பாவை பாடியது செயற்கரிய செயலாகையாலே திருமேனி பூரித்து வளையல்கள் எல்லாம் தொங்கிற்றாம்) என்ன கருணை உனக்கு இந்தப் பூவுலக மக்களின் மேல்? மானிடர்க்கு அடிமைப்படாமல், இந்த ஆத்மாவானது அந்த வேங்கடவனுக்கே உரித்தானது என்று நீ ஆராய்ந்து உரைத்ததை நாங்கள் தாண்டிச் செல்லாமல் – அதாவது மீறி நடக்காமல் தப்பாமல் பின்பற்றும்படி அருள் புரிவாயாக!


இந்த உலகத்தில் உள்ள ஆத்மாக்கள் எல்லாமே அந்த இறைவனுக்கு உரித்தானதவை. அதனாலன்றோ நீ காமதேவனிடம் மாநிடவர்க்கு என்று ஆக்காமல், ‘வேங்கடவற்கு என்னை பத்னி ஆகும்படி செய்’ என்று வேண்டியது. அதை மறந்து மாயையில் சிக்கித் தவித்து சம்சாரத்தில் தத்தளிக்கும் நாங்களும் அந்த வேங்கடவனுடன் நீ கூடியபடியே கூட வேண்டும் என்ற கருணையினால் இந்தத் திருப்பாவையைப் பாடி அருளியிருக்கிறாய். உனக்குண்டான பகவத் ப்ரேமம் எங்களுக்கும் உண்டாகும்படி நீயே அருள வல்லவள் ஆகையினாலே எங்களுக்கு அவ்வாறே அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.....!!!
 

Latest ads

Back
Top