• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மார்கழி மஹோத்ஸவம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர

மார்கழி மஹோத்ஸவம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர

மார்கழி மஹோத்ஸவம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயம்


சிதம்பரம் - ஸ்ரீ நடராஜ ராஜர் என்றும், எப்பொழுதும் திருநடனம் புரிந்துகொண்டிருப்பதால், தினம் தினம் திருநாள் தான், தினம் ஒரு உத்ஸவம் தான். சிதம்பரத்தின் மஹோத்ஸவங்களில் மிக முக்கியமானதும், மணி மகுடம் போன்றதும் விளங்குவது மார்கழி ஆருத்ரா தரிசனம். கைலாய மலை பனி படர்ந்தது. அங்கு வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு உகந்த, பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள் மஹா உத்ஸவத்தின் உச்சகட்ட நிகழ்வு. மார்கழி ஆருத்ரா தரிசன தினத்தின் மதியப் பொழுதில் (ஸ்ரீ நடராஜ ராஜர் - பகல் வேளையில் தான் தன் கணங்கள் அனைத்தோடும் வந்திறங்கினார்) சித்ஸபா பிரவேசம் எனும் பொன்னம்பலம் புக்கும் காட்சியே - பெரும் புண்யங்களை அளிக்க வல்லது.


மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் - கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி (14.12.2018 - 8.30 am - 9.30 am) அதைத் தொடர்ந்து, உத்ஸவ யாகசாலையில் காலை மாலை இரு வேளைகளிலும், மிகச் சிறப்பு வாய்ந்த ஹோமங்கள் செய்து, ஒவ்வொரு நாள் இரவிலும் மற்றும் காலையிலும், உத்ஸவ நாயகர்களாகிய ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - நாதஸ்வர இசை முழங்க, வேத பாராயணம் முழங்கிட வீதி வலம் வந்து காட்சி நல்குவார்கள். ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி சிறப்பு வாய்ந்த வாகனங்களில் வலம் வருவார்.


தங்கத்தினாலான மஞ்சம் (14.12.2018),
சந்திர பிரபை (15.12.2018),
சூர்ய பிரபை (16.12.2018),
பூத வாகனம் (17.12.2018),
ஸகோபுரம் எனும் தெருவடைச்சான் என்று அழைக்கப்படக்கூடிய ரதம் (கோபுர வடிவத்திலான, தெரு முழுவதும் அடைத்து வரக்கூடிய விதத்தில் அமைந்தது) (18.12.2018),
யானை வாகனம் (19.12.2018),
தங்க கைலாய மலையெடுத்த வெள்ளி ராவணன் வாகனம் (மிக அற்புதமான அமைப்பு, ராவணன் உருவம் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒன்பது தலைகளும், கையில் ஒரு தலையை வீணையின் தலைப்பாகமாக அமைத்து காம்போதி ராகம் மீட்டும் வகையில் அமைந்தது) (20.12.2018) என்று முறையே வலம் வந்து அருள்பாலிப்பார்.
எட்டாம் திருநாளில் (21.12.2018) பிக்ஷாடனராக வலம் வருவார்.
ஒன்பதாம் திருநாள் (22.12.2018) - தேர் உத்ஸவம்.
பத்தாம் திருநாள் (23.12.2018) - ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம்.
மறுநாள் (24.12.2018) - முத்துப்பல்லக்கில் வீதியுலா.


#மாணிக்கவாசகர்தரிசனம் :


சமய நால்வர்களில் முக்கியமானவர், காலத்தால் முந்தையவர் ஸ்ரீ மாணிக்கவாசகர். பாண்டிய மன்னரின் மந்திரியாக பதவி வகித்து, கல்லால மரத்தின் கீழ் வீற்றிருந்த ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியால் ஆட்கொள்ளப்பட்டு, பெரும் சிவத் தொண்டு ஆற்றியவர்.
இவருக்காகவே, சிவபெருமான் நரிதனை பரியாக்கி, வைகையை பெருக்கச் செய்து, பிட்டுக்கு மண் சுமந்து - போன்ற திருவிளையாடல்களை நிகழ்த்தியவர்.
இறைவனாலேயே மணிவாசகர் என்று போற்றப்பட்டவர். தில்லையின் அம்பலத்தினுள்ளே இரண்டறக் கலந்தவர்.
இவரின் திருவாசகத்துக்கு உருகாதவர் யாருமில்லை. திருவாசகம் - நெஞ்சை நெக்குருகச் செய்யும் விதத்தில், ஒவ்வொரு வாசகமும் மாணிக்கம் போன்ற அழகுற அமைந்தமையால், மாணிக்கவாசகர் என்று போற்றப்படுபவர். இவர் எழுதிய திருவெம்பாவை - மார்கழி மாதத்தில் மிகச் சிறப்பாக பாடப்பெறும்.
சிதம்பரத்தில், மாணிக்கவாசரின் தனிச்சிறப்பு மிக்க விக்ரஹத்திற்கு இந்த மஹோத்ஸவ காலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
இங்கு மட்டுமே மாணிக்க வாசகரின் - கைகள் மற்ற ஆலயங்களில் உள்ளது போல் அல்லாமல், தெய்வங்களுக்கு உரிய சின் முத்திரையோடு அமைந்திருக்கும். இங்கு மட்டுமே மாணிக்கவாசகர் தெய்வத்திற்கு நிகராக கருதப்பட்டு, வழிபாடு செய்யப்படுகிறார்.
மார்கழி மஹோத்ஸவத்தின் பத்து தினங்களிலும், மாணிக்க வாசகர் தனி மஞ்சத்தில் எழுந்தருளிச் செய்து, பொன்னம்பலத்திற்கு அடுத்த கனகசபையின் வாசலில், ஸ்ரீ நடராஜருக்கு எதிரே நிற்கச் செய்து, மிக சிறப்பான வழிபாடுகள் செய்யப்படும்.
மாலை வேளை சாயரக்ஷை எனும் ஸாயங்கால கால பூஜை முடிந்த பிறகு, மாணிக்க வாசகருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படும். அவருடைய திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு, ஒவ்வொரு பாடல் முடிவிலும் சிறப்பு நிவேதனங்கள் நைவேத்யம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெறும். இருபத்தோரு தீபாராதனைகளோடு நடைபெறும் இக்காட்சி மாணிக்கவாசகர் தீபாராதனை என அழைக்கப்படும். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த பூஜையைக் காண எண்ணற்ற பக்தர்கள் பார்த்து மகிழ்வார்கள்.
மறுநாள் காலை பஞ்சமூர்த்திகள் (ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர்) திருவீதி வலம் வரும்போது, மாணிக்க வாசகர் ஸ்ரீ ஸோமாஸ்கந்தரை வணங்கியவாறே பின் நோக்கி வலம் வரும் காட்சி மிகவும் அற்புதமானது.


தேர்த் திருநாளின் (22.12.2018) அதிகாலை 05.00 மணியிலிருந்து 05.30 மணிக்குள் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ ராஜர் அழகுமிகு அரிய அணிமணிகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட திருக்கோலத்தோடு யாத்ராதான நிகழ்ச்சியாக - சித்ஸபையின் கனகசபையிலிருந்து தேருக்குப் புறப்படும் திருக்காட்சி நடைபெறும்.


தேர் மிக அழகிய வடிவம் வாய்ந்தது. மிக உயர்ந்த தோற்றம். ரதலக்ஷணம் எனும் சாஸ்திர முறைப்படி சக்கரங்கள், ஆர் தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு, கிடுகு முதலியவற்றால் ஆனது. தேரிலுள்ள மர சிற்பங்கள் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டது. சிவலீலைகளின் காட்சிகள் மிக அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கும். தேரின் நடுவில் உள்ள ஊஞ்சலில் நடராஜர் அமர்த்தப்படுவார்.


தேரில் அமர்த்தியபிறகு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற பிறகு, சேந்தனாரின் திருப்பல்லாண்டு பாடல்கள் இசைக்க, வேத கோஷங்கள் முழங்க, திருமுறைகள் ஓதப்பட, நாதஸ்வரம் இன்னிசைக்க, உற்சாக கோஷங்கள் நிரம்ப, உலுக்கும் மரம் எனும் நெம்புகோல் வடிவம் தேரை உந்தித் தள்ள, உத்ஸவத்தின் மிக முக்கிய கட்டம் இனிதே தொடங்கும்.
நடராஜரின் ஆட்டத்திற்கு தாளம் இசைப்பது போல தேரில் இருக்கும் மணிகள் ஒலியெழுப்பும். நடராஜரின் முன் தோற்றத்தை ரசிப்பவர்களைப் போல, அழகுமிகு பின் தோற்றத்தை கண்டு ரசிப்போரும் உண்டு. தேர் தரிசன உத்ஸவத்தில் மட்டுமே பின் தோற்றத்தை கண்டு ரசிக்கமுடியும்.
கருநிற இரண்டு (நடராஜர் & சிவகாமசுந்தரி) தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வருவது இரு யானைகள் அழகாக அசைந்து அசைந்து வருவதைப் போன்ற இக்காட்சியை காணும்போது, காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன் என்ற திருநாவுக்கரசர் கூறியதே நினைவுக்கு வருகின்றது.
பொதுவாக இலக்கியங்களில், தெய்வங்களை யானைக்கு ஒப்பிடுவது இயல்பானது. கம்பர் தனது ராமாயணத்தில், ராமரை அறிமுகப்படுத்தும் காட்சியில், யானையை உருவகப்படுத்துகின்றார்.
புலவர் கீரன் இதற்கு ஒரு அழகான விளக்கம் தருவார். யானையின் பலத்தையோ அல்லது நிறத்தையோ ஒப்பிடப்படுவதில்லையாம். யானையின் குணாதிசயத்தை விளக்குகின்றது என்பார் புலவர் கீரன். யானையின் காலைப் பிடித்தால் தான் அதன் உதவியோடு தலையில் ஏறமுடியும். அதுபோல தெய்வத்தின் காலடியில் சரணடைந்தால் மிக உயர்ந்த இடமாகிய மோட்சம் கிடைக்கும் என்பதை உணர்த்தவே தெய்வங்களை யானைக்கு உருவகப்படுதுகின்றனர்.
யானையின் வளைந்த காலைப் பிடித்து அதன் தலையில் ஏறுவதைப் போல, நடராஜரின் வளைந்த திருப்பாதமாகிய குஞ்சிதபாதத்தை சரணடைந்தால், மிக உயரிய பேறு கிடைக்கும் என்பது திண்ணம்.
மதியம் உச்சிகால பூஜை தேரிலேயே நடைபெற்று நிலைபெறும். சற்றே இடைவெளிக்குப் பிறகு, செம்படவர் மண்டகப்படி எனும் மீனவர்கள் எடுத்துவரும் மண்டகப்படி எனும் மரியாதைகளை நடராஜர் ஏற்று பிறகு தேர் மறுபடி கிளம்பி, ஈசான திசை திரும்பி, தேர் கிளம்பிய இடத்திற்கே வந்து நிலைபெறும்.
தேரிலேயே சாயரக்ஷை - மாணிக்கவாசகர் தீபாராதனை விசேஷ நிவேதனங்களுடன் நடைபெறும்.
தேரிலிருக்கும் தெய்வங்கள் கோயிலினுள்ளே ஆயிரங்கால் மண்டபத்தில் வரவழைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் நூறு தீக்ஷிதர்கள் நின்று, ஏக கால லக்ஷார்ச்சனை நடைபெறும்.


ஆயிரங்கால் மண்டபம் மிக பிரம்மாண்டமானது. ஆயிரம் தூண்கள் கொண்டது. மண்டபத்தினுள்ளே விதானம் எனும் மேற்கூரையில் உள்ள ஓவியங்கள் சிதம்பர புராணத்தைப் பகிரும் விதத்தில் வரையப்பட்டது. ஆடல்வல்லானின் அழகு மிகு நடனக் காட்சிகள், சித்தர் பீடங்கள் முதலான ஓவியங்களைக் காண கண்கள் கோடி வேண்டும். ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும்.


அதன் பின், ஆருத்ராபிஷேக ஹோம பூஜைகளுடன், மஹாபிஷேகம் நடைபெறும். அபிஷேக திரவிங்கள் பெருமளவில் சேகரிக்கப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் ஸகல திரவிய அபிஷேகமாக நடத்தப்படும். இறுதியில் புஷ்பாஞ்சலி எனும் பலவித மலர்களால் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
அரிய அணிமணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு அர்ச்சனை ஆராதனைகள் நடத்திய பிறகு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்தபிறகு, மதிய வேளையில், ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து சித்ஸபைக்கு அம்பிகையும், ஈசனும் திருநடனம் புரிந்துகொண்டே செல்லும் அற்புத காட்சிதான் ஆருத்ரா தரிசனம் ஆகும்.
இந்தக் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். தில்லையில் திருநடம்புரியம் சித்ஸபேசரின் திருநடன திருக்காட்சியைக் கண்டவர்கள் பெரும் பேறு பெற்றவர்களாவார்கள்.
வேண்டிய வரங்களும், நீடித்த ஆயுளும், பெரும் செல்வமும் அருளக்கூடிய தேர் தரிசனக் காட்சியை அனைவரும் கண்டுகளிப்போம்.
 

Latest ads

Back
Top