• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் கோயில&#

praveen

Life is a dream
Staff member
திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் கோயில&#

அமிர்த மழை பொழியும் ஸ்ரீகாளமேகப் பெருமாள்.....!!!


திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் 46வது திருத்தலமாகும். ஒன்றாகும்.


மூலவர்: ஸ்ரீகாளமேகப் பெருமாள்
திருமோகூர் ஆப்தன்
தாயார்: ஸ்ரீமோஹனவல்லித் தாயார்
புஷ்கரணி: க்ஷீராப்தி புஷ்கரணி
விமானம்: சதுர்முக விமானம்


பல லட்சம் வருடங்கள் பழமையான கோவில்
நம்மாழ்வார் இவ்வூர் கோயில்மீது 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.


பெருமாள் மோகினி அவதாரம் கொண்டு அமிர்தத்தை தேவர்களுக்கு வழங்கிய தலம் என்பதாலேயே, இந்தத் தலம் மோகன க்ஷேத்திரம், மோகினி யூர், மோகியூர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு, இப்போது மோகூர் என்று விளங்குகிறது.


கோயிலினுள் நுழைந்ததும் துவஜஸ்தம்பம் நம்மை நெடிதுயர்ந்து வரவேற்கிறது. அதன் பீடத்தில் கம்பத்தடி பெருமாள் பளபளவென்று காட்சியளிக்க, அவருக்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். அருகே மண்டபத் தூணில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயருக்கும் வெண்ணெய்க் காப்பிட்டு, நெய்தீபம் ஏற்றுகிறார்கள். இந்த ஆஞ்சநேயருக்கு ஆதிசேஷன் குடைபிடித்திருப்பது கூடுதல் சிறப்பு. வெளிப் பிராகாரத்தில் இந்த ஆஞ்சநேயருக்கு இடப்புறமாக தனி சந்நதியும் உள்ளது.


க்ஷீராப்தி (பாற்கடல்) சயனராகப் பரிமளிக்கும் பெருமாளையும் தரிசிக்கலாம். உறங்குவதுபோல பாசாங்கு செய்யும் பெருமாளை, தாயார் எழுந்திருக்கு மாறு பிரார்த்தனை செய்வதாக ஐதீகம். பாற்கடலிலிருந்து அமிர்தம் வெளிக்கொணர உதவுமாறு அவள் வேண்டிக்கொள்கிறாளாம். அதனாலேயே, பாற்கடல் கடையப்படும்போது இழு வேகத்தால் மந்தாரமலை தடுமாற, அதை நிலைநிறுத்தும் எண்ணத்தில் கூர்ம அவதாரம் எடுத்து மலைக்கு அடியே சென்று, அதனைத் தாங்கிக் கொண்டார், பெருமாள். அதுமட்டுமல்ல; மோகினி உரு வெடுத்து தேவ நோக்கத்தை நிறைவேற்றினார். ஆகவே இந்தக் கோலத்தை பிரார்த்தனா சயனக் கோலம் என்றும் வர்ணிக்கலாம்.


ஸ்ரீதேவியும் பூதேவியும் பகவான் காலடியில் அமர்ந்திருந்தாலும் அவர் பாதங்களைத் தொடாமல், இருகரம் கூப்பி அமர்ந்திருப்பதிலிருந்து இந்த வர்ணனை பொருத்தமான தாகவே அமைகிறது.


அடுத்து மோகனவல்லித் தாயார் தரிசனமளிக்கிறார். இவருக்குத் தனியே உற்சவம் கிடையாது என்பதால், இவரைப் படி தாண்டா பத்தினி என்று சிறப்பிக்கிறார்கள். இதனாலேயே, பங்குனி உத்திரத்தன்று, திருக்கல்யாண நிகழ்ச்சியின்போது, பெருமாள் தாயார் சந்நதிக்கு எழுந்தருள்கிறார். பெருமாள் வீதி புறப்பாடு செல்லும்போது ஆண்டாள் உடன் செல்கிறார்.


புலஸ்தியர் என்ற முனிவர், பெருமாளை நோக்கிக் கடுந்தவம் இயற்றினார். பாற்கடலைக் கடையும் சமயத்தில் திருமால் கொண்டிருந்த தோற்றத்தைத் தான் காண விரும்பினார். அதன்படியே திருமால் மோகினி அவதாரக் காட்சி தந்தார்.


திருமோகூர் நண்பன்!


காளமேகம் (கருமேகம்) நீரைத் தனக்குள் தாங்கி, மக்களுக்கு மழையாய்த் தருவது போல் இங்கு திருமால் ஐந்து ஆயுதங்களைக் கரங்களில் தாங்கி, வலக்கையால் தன் திருவடிகளைச் சுட்டிக்காட்டி, தன் அருளை மழையாய்த் தருகிறார்.


உற்சவர் ”நண்பன்” (வடமொழியில் ஆப்தன்) என்று அழைக்கப்படுகிறார். தன்னை நாடும் பக்தர்களுக்கு உற்ற நண்பனாகவும், அவர்கள் இறுதிக்காலத்தில் வழித்துணையாகவும் வந்து அருளுவதால் இந்தப் பெயர்.


திருப்பாற்கடல் பொய்கைக்குக் கிழக்கில் ஒரு விருட்சம் இருக்கிறது. இந்த மரம் ஆதியில் கிருதாயுகத்தில் திவ்ய விருட்சமாகவும், திரேதாயுகத்தில் வன்னி மரமாகவும், துவாபரயுகத்தில் வில்வ மரமாகவும், கலியுகத்தில் அரச மரமாகவும் திகழ்கிறது.


இங்கு ஆதிசேடனுக்குத் தங்கக் கவசங்கள் இருப்பது சிறப்பு.


திருமோகூர் என்ற இந்த திவ்ய தேசத்தில் இன்னொரு சிறப்பான அம்சம் - சக்கரத்தாழ்வார். தனி சந்நதியில் கொலுவிருக்கும் இவருக்கு சுதர்ஸன ஹோமம் செய்து தங்கள் விருப்பங்களை பக்தர்கள் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். திருமணம், பிள்ளைப்பேறு, வேலை, நோய்கள், வியாபார அபிவிருத்தி, செய்வினைக் கோளாறு, கடன் தொல்லை, வழக்குகள் என்று பல பிரச்னைகளுக்கு இந்த சக்கரத்தாழ்வார் ஆறுதலும் தீர்வும் அளிக்கிறார்.


நாமடைந்தால் நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காமரூபங் கொண்டு எழுந்தளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்றென்னுமின் எத்துமின் நமர்காள்"


-என்று திருமோகூர் பெருமாளைப் போற்றிப் புகழ்கிறார் நம்மாழ்வார். ‘நமக்கு நல்ல அரணாக அமைந்து நம்மைக் காப்பாற்றுகிறார் இந்தப் பெருமாள். அப்படியும் தீமையே உருவான அசுரரை அண்டினோமானால், மோஹன ரூபம் கொண்டு, அந்த அசுரரை நிர்மூலமாக்கி நம்மைக் காக்கவல்லவன் இந்தப் பெருமாள். இவனது திருநாமமே நம்மை எல்லாத் துன்பங்களிலிருந்தும் பாதுகாக்கும்’ என்கிறார்.


கோயில் கலைச் சிறப்புகள்
இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார்.
இக்கோவிலின் கம்பத்தடி இம்மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக்கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது.


இந்த புகழ் பெற்ற திவ்ய தேசம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.


மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் ஒத்தக்கடை அருகே அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு மதுரையில் இருந்து நகர பேருந்து வசதி உள்ளது.
 

Latest ads

Back
Top