• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அன்னை மூகாம்பிகை ஆலயம்.

praveen

Life is a dream
Staff member
அன்னை மூகாம்பிகை ஆலயம்.

நினைத்ததை அருளும் அன்னை மூகாம்பிகை!


க ர்நாடக மாநிலம் குந்தாப்பூர் தாலூகாவில் கொல்லூர் திருத்தலத்தில் அமைந்துள்ளது அன்னை மூகாம்பிகை ஆலயம். மங்களூரில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும், உடுப்பியில் இருந்து 80 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது கொல்லூர்.


அன்னை மூகாம்பிகை ஆலயம்.


மங்களூரில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும், உடுப்பியில் இருந்து 80 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது கொல்லூர்.
பசுமை படர்ந்த மலைகள், அடர்ந்த காடுகள் ஆகிய வற்றுக்கு மத்தியில் சௌபர்ணிகா ஆற்றின் கரையில் பத்மாசனத் திருக்கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள் உலகம் அனைத்துக்கும் தாயான மூகாம்பிகை! தேவியின் வலக் கையில் உயர்த்திப் பிடித்திருக்கும் வீர வாள், முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்தது. துஷ்டர்களை சம்ஹாரம் செய்ய அன்னை ஏந்தியிருக்கும் அந்த வாள், ஒரு கிலோ தங்கத்தில் செய்யப்பட்டு, வெள்ளியால் அமைக்கப்பட்ட உறையுடன் கூடியது.


மூகாம்பிகை என அம்பிகை பெயர் பெற்றது எப்படி? முன்னொரு காலத்தில் கம்ஹாசுரன் என்கிற அரக்கன் ஒருவன் இருந் தான். குடிமக்களுக்கும் தேவர்களுக்கும் முனி வர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்த அவன், சிவனை நோக்கிக் கடும் தவமிருந்தான். சாகாவரம் வேண்டி அவன் தவம் இருப்பதை அறிந்த பராசக்தி, அவன் வரம் பெறுவதற்கு முன்பே, அவனை (மூகன்) ஊமையாக்கி விட்டாள். இதனால் அவன் ‘மூகா சுரன்’ என்று அழைக்கப்பட்டான். இந்த அசுரனை வதம் செய்ததால் அம்பிகை, ‘மூகாம்பிகை’ எனப் போற்றப்படுகிறாள்.


குடசாத்ரி மலையிலிருந்து 64 நீர்வீழ்ச்சிகள் தனித்தனி யாக உருவாகி, பின்னர் அவை ஒருங்கிணைந்து சௌபர்ணிகா நதியாக உருவெடுத்துப் பாய்கிறது. அந்தக் காலத்தில் இதன் கரையில் ஏராளமான முனிவர்கள் தவம் இருந்தனர். ஒரு முறை இந்தப் பகுதிக்குப் பாத யாத்திரையாக வந்தார் கோலன் என்கிற மகரிஷி. இதன் அமைதியான சூழல் அவருக்குப் பிடித்துப் போக, அங்கேயே ஆசிரமம் அமைத்துத் தங்கி இறைவனை நோக்கிக் கடுந் தவம் இருந்தார். (கோல மகரிஷி தங்கியதால் இந்தப் பகுதி கொல்லாபுரம் என்று அழைக்கப் பட்டு பின்னர் கொல்லூர் ஆனதாகத் தகவல்!)
கோல மகரிஷியின் தவத்தை மெச்சிய பரமேஸ்வரன் அவர் முன் தோன்றி, ‘‘பக்தா, வேண்டும் வரம் கேள்!’’ என்றார்.
‘‘ஈசனே, உலக மக்கள் யாவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். உலகில் மாதம் மும்மாரி பொழிய வேண்டும். பயிர்களும் உயிர்களும் செழிக்க வேண்டும். எல்லோரும் நிறைந்த ஆயுளுடனும், தேக சுகத்து டனும் வாழ வேண்டும். இவற் றைத் தவிர, எனக்கு வேறு எதுவும் வேண்டாம்!’’ என்று பதிலளித்தார் மகரிஷி.


ஈசன் மனம் மகிழ்ந்து, ‘‘கோல மகரிஷியே... இதோ, இந்தப் பாறையில் உனக்காக ஒரு லிங்கம் அமைக்கிறேன். இதை நீ தினமும் பூஜை செய்து வா!’’ என்று அருளினார்.


ஈசன் அருளால் அங்கு ஓர் அழகிய லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட கோல மகரிஷி இறைவனிடம், ‘‘ஈசனே! சக்தி தேவி இல்லாத சிவனை நாங்கள் எப்படி வழிபடுவது?’’ என்று வருத்தத்துடன் கேட்டார். அதற்கு இறைவன், ‘‘இந்த லிங்கத்தின் மத்தியில் உள்ள ஸ்வர்ண ரேகையைப் பார். இதன் இடப் பாகத்தில் பார்வதி, அறுபத்துநான்கு கலைகளுக்கும் தாயான சரஸ்வதி, செல்வங்களை அள்ளித் தரும் லட்சுமி ஆகிய மூவரும் அரூபமாக இருப் பார்கள். வலப் புறம் பிரம்மா, விஷ்ணு ஆகியோருடன் நானும் இருப்பேன்!’’ என்று கூறி மறைந்தார்.


ஈசன் அருளியவாறு ஸ்வர்ணரேகை ஜொலிக்கும் அந்த ஜோதி லிங்கத்தை, கோல மகரிஷி உட்பட மற்ற முனிவர் களும் பூஜித்து வந்தார்கள்.
இந்த நிலையில் மூகாசுரன், கோல மகரிஷி வாழும் இந்தத் தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, தன் அசுரர் குழாமுடன் அங்கு வந்து சேர்ந்தான். அங்கு வசிக்கும் அனைவரையும் துன்புறுத்தி மகிழ்ந் தான். பாதிக்கப்பட்டவர்கள், கோல மகரிஷியிடம் சென்று கண்ணீருடன் முறையிட்டனர். அனைவரையும் சாந்தப்படுத்திய அவர், மூகாசுரனை சம்ஹரிக்க வேண்டி அம்பாளை நோக்கிக் கடும் தவம் இருந்தார்.


அம்பாள், கோலமகரிஷியின் முன் தோன்றினாள். முனிவரின் முறையீட்டைத் தொடர்ந்து கோபக் கனலைக் கண்களில் தேக்கி, கையிலே திரிசூலம் ஏந்தி, தேவ கணங்களில் திறமை வாய்ந்த வீரபத்ரனைப் படைத் தளபதி யாக்கி மூகாசுரனோடு போர் புரிந் தாள் அம்பிகை. முடிவில் அசுரன் மடிந்தான். மூகாசுரன் மடிந்த பகுதி, கொல்லூரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள ‘மாரண ஹட்ட’ என்னும் இடமாகும்.


இந்து தர்மம் செழிக்க ஆதிசங்கரர், சக்தி வழிபாட்டைச் சொல்லும் ‘சாக்தம்’ உள்ளிட்ட ஆறு வகை வழிபாடுகளை வழிப்படுத்தினார். பாரத தேசம் முழுதும் புனித யாத்திரை மேற்கொண்ட அவர், கொல்லூருக்கு வந்தபோது மக்கள் அவரிடம், ‘‘ஸ்வாமி, தங்க ரேகை மின்னும் லிங்கத்தில் அம்பாள் அரூப வடிவில் இருக்கிறாள். ஆனால், மூகாம்பிகை அன்னையின் முகம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே!’’ என்று முறையிட்டனர்.
ஆதிசங்கரர் தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அம்பாள் அவருக்குப் பிரத்தியட்சமானாள். பத்மாசனத்தில் வீற்று, இரு கரங்களில் சங்கு, சக்கரம். மற்ற இரு கரங்களில், ஒரு கரம் பாதங்களில் சரண டையத் தூண்ட, மற்றது வரமருளி வாழ்த்தும் கோலத் தில் அன்னை தோற்றமளித்தாள். தன் முன் தோன்றிய அம்பாளின் உருவத்தை, தேர்ந்த ஸ்தபதி யிடம் விவரித்து விக்கிரகம் செய்யப் பணித்தார் ஆதி சங்கரர். அதன்படி, அம்பாளின் அழகிய உருவம் பிரமிப்பூட்டும்படி உருவானது.


ஸ்வர்ண ரேகை லிங்கத்தின் பின்னால், மூகாம்பிகை திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் அடியில் ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தச் சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக ஐதீகம். மூகாம்பிகை கோயிலின் பூஜை முறைகள் அனைத்தையும் ஆதிசங்கரரே வகுத்து அருளினார். இன்று வரை அவை சற்றும் மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீமூகாம்பிகை ஆதிசங்கரருக்குப் பிரத்தியட்சமான பிறகு, அவர் இயற்றியதுதான் ‘சௌந்தர்ய லஹரி’ (சௌந்தர்யம்-அழகு; லஹரி- அலைகள்).


மூகாம்பிகை கோயிலில் ஆதிசங்கரர் அமர்ந்து தியானம் செய்த பீடம், அம்பாள் படைத் தளபதியாக நியமித்த வீரபத்திரர் சந்நிதி ஆகியவற்றையும் காணலாம். அம்பாளுக்கு நடக்கும் எல்லா பூஜையும் வீரபத்திரருக்கும் உண்டு. அன்னை மூகாம்பிகைக்கு இங்கு அபி ஷேகம் கிடையாது. ஆரத்தி, புஷ்பாஞ்சலி மட்டுமே உண்டு.
எம்.ஜி.ஆர். இந்தக் கோயிலைத் தேர்ந் தெடுத்து தங்கத்தில் வாள் செய்து வழங்கி னார். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் பெங்களூரில் ‘கூலி’ படத்தில் நடித்தபோது உடல் நலமில்லாமல் போயிற்று. அவர் மூகாம்பிகையிடம் வேண்டிக் கொண்ட பிறகு உடல் நலம் சரியாயிற்று. பின் நேரில் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இங்கு வந்து போயிருக்கிறார். இன்னும் பல பிர முகர்கள் மூகாம்பிகை அம்மன் மீது நம்பிக்கை வைத்துத் தொலைதூரத்திலிருந்து வந்து போகிறார்கள். மூகாம்பிகை கோயிலுக்குப் போக, புகழ் பெற்றவர்கள் பலரும் ஆர்வம் காட்டுவது ஏன்?


கோயில் தலைமைக் குருக்கள்களில் ஒருவரான ஸ்ரீநரசிம்ம அடிகாவிடம் கேட்டோம். அவர் சொன் னார்: ‘‘இது ஸித்தி க்ஷேத்திரம். மனதில் பக்தியுடன் வேண்டியதை அம்பாள் பக்தர்களுக்கு வழங்குவாள். இங்கு குத்து விளக்கின் பஞ்சமுகத்திலும் திரி வைத்து நெய் விளக்கு ஏற்றி அம்பாளை வழிபடுவது விசேஷம். நித்திய உற்சவம், வாரத்தில் வெள்ளி உற்சவம், பௌர்ணமி, அமாவாசை, நவராத்திரி, மார்ச் இறுதி-ஏப்ரல் முதல் வாரத்தில் எட்டு நாள் ரதோற்சவம், ஜூன் முதல் வாரம் சுக்ல பட்சம், அஷ்டமி திதியில் அம்பாளின் ஜன்மாஷ்டமி திரு விழா, கட்டணம் செலுத்துவோருக்கு தங்க ரதத்தில் அம்பாள் உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை மிகச் சிறப் பாக நடந்து வருகின்றன.’’
மூகாம்பிகை ஆலயத்துக்குச் சென்றால், திரும்பி வர மனமில்லாமல்தான் வர வேண்டும். அந்த அளவுக்கு அம்பாளின் தேஜஸ், அருள் பார்வை, சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றால் மனதில் கிடைக்கிற பரவசம் நம்மை ஐக்கியப்படுத்தி விடுகிறது. நாம் மனதில் நினைத்து வேண்டியதை அம்பாள், நமக்குக் கொடுத்தே தீருவாள் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் அங்கிருந்து திரும்புகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை!
 

Latest ads

Back
Top