• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருக்கோவலூர்

praveen

Life is a dream
Staff member
திருக்கோவலூர்

திருக்கோவலூர்

நடுநாட்டுத் திருப்பதிகளில் இரண்டாவதான திவ்ய தேசம் திருக்கோவலூராகும். இது தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ளது. கடலூரிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. விழுப்புரம் காட்பாடி இரயில் நிலையத்திலிருந்து திருக்கோவலூர் செல்லலாம். திருச்சியிலிருந்து வேலூர் செல்லும் பேருந்துகள் மூலமாகவும் இத்தலத்தை அடையலாம்.


வரலாறு
பஞ்ச கிருஷ்ணச் ஷேத்திரங்களில் ஒன்றான இத்தலம் வாமன திருவிக்ரம அவதார ஸ்தலம் என்றும் இது அழைக்கப் படுகிறது. வடமொழி நூல்கள் கிருஷ்ணன் கோவில் என்று குறிப்பிடப்பட்டள்ளது. ஆழ்வார்களால் முதன்முதலாப் பாடப்பட்ட திவ்ய தேசம் இதுதான். பாத்ம புராணம், பிரம்மாண்ட புராணம் இவ்விரண்டும் இத்தலம் பற்றி குறிப்புகள் உள்ளன. தம்மைக் குறித்து தவமிருந்த முனிவர்களுக்காக பகவான் இத்தலத்தில் மீண்டும் ஒரு முறை வாமன அவதாரத்தைக் காட்டிக் கொடுத்ததாக ஐதீஹம்.


பெருமாள் வாமன அவதாரம் எடுக்கும் முன்பே கிருஷ்ணக் கோவில் என்று வழங்கப்பட்ட இத்தலத்தின் தொன்மை பல சதுர்யுகங்கட்கு முந்தியதாகும் என புராணங்கள் கூறகின்றன. கோபாலன் என்ற சொல் திரிந்து கோவாலனாகி எனத் பின் கோவலூர் ஆனது.


மகாபலி மன்னன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். அசுரர்களின் குருவான சுக்கிராச் சாரியார் குருவாக இருந்து இம்மன்னனுக்கு சர்வ சக்திகளையும் அளித்து தேவர்களைத் துன்புறுத்தவும் தூண்டிவந்தார். இந்நிலையில் மகாபலியின் துன்பம் பொறுக்க இயலாத தேவர்கள், திருமாலைத் துதித்து தம்மைக் காத்தருள வேண்டுமென விண்ணப்பிக்க, கஸியபர் அதிதி தம்பதிகட்குப் புத்திரனாக அவதாரமெடுத்து குட்டையான வடிவம் கொண்டவாமன மூர்த்தியாக வளர்ந்து பிரம்மச்சர்யத்தை மேற்கொண்டார். மகாபலியை ஒழித்து உங்கள் இன்னல்களைப் போக்குகிறேன் என்றார்.

பிரம்மச்சர்யம் மேற்கொண்டதும் பூமிதானம் பெறுவதற்காக மாபலிச் சக்ரவர்த்தியிடம் வந்தார். குட்டையான வாமன ரூபத்தைக் கண்டு வியந்த மாவலி ஏளனமாக சிரித்து என்ன வேண்டுமென்று கேட்க எனக்கு மூன்றடி மண் வேண்டுமென வாமனன் கேட்க, இப்போதே தந்தேன் என்று வாக்களித்து தாரை வார்த்து தானம் கொடுக்க ஆயத்தமானான். வந்திருப்பது ஸ்ரீமந் நாராயணன் என்றும், தனது சீடன் வீணாக வீழ்ந்துவிடப் போகிறான் என்பதை உணர்ந்த சுக்ராச்சார்யார் மாவலியிடம் உண்மை உணர்த்தியும் கேட்காமல் தானம் கொடுத்தான்.

பகவான் தனது ஓரடியால் இந்த நிலவுலகு முழுவதையும் அளந்து மற்றோரடியை விண்ணுயரத் தூக்கி விண்ணுலகம் முழுவதும் அளந்து, திருவிக்ரம அவதார கோலத்தில் நின்று தனது மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டு நின்றார். நெடிதுயர்ந்த திருவிக்ரம அவதாரமாக நிற்பதைக் கண்ட மாவலி மனம் பதைத்து, தன் நிலையுணர்ந்து மன்னிப்பு வேண்டி தங்களது மூன்றாவது திருவடிக்கு எனது சிரசே இடம் என்று சரணாகதி அடைந்தார். தமது திருவடியை மாவலியின் சிரசில் வைத்த மாத்திரத்தில் பாதாளலோகததில் சேர்ந்தான் மாவலி. தேவர்கள் பூமாரி பொழிய, பக்தர்களும், ஞானிகளும் ஆனந்த கானம் பாடினார்கள்.


மூலவர்
திரு விக்ரமன் - ஒரு காலைத் தரையில் ஊன்றி ஒரு காலை விண்ணை நோக்கித் தூக்கிய நிலை. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். ப்பெருமான் விராட் புருஷனாக இடது கையில் சக்கரம், வலது கையில் சங்கும் கொண்டு நீருண்ட மேகம் போன்ற திருமேனியுடன் மார்பில் ஸ்ரீவத்ஸம், கண்டத்தில் கௌஸ்துபம், காதுகளில் மஹாகுண்டலம், வைஜயந்தி வனமாலையுடன் தேஜோமயமாய் ஒளிரும் புன்னகையுடன் சுற்றியும் பிரகலாதன், மகாபலி, சுக்ராச்சார்யார், தேவர்கள், யட்சர்கள், சித்தர்கள், கருட வில்வக்ஸேநர் புடை சூழ ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தரு சேவை சாதிக்கிறார்.
தாயார் - பூங்கோவல் நாச்சியார், புஷ்பவல்லி தாயார் என்னும் திருநாமங்கள்.


உற்சவர் - ஆயன், ஆயனார், கோவலன்
(கோபாலன்)
தாயார் - கஜலெட்சுமி
தீர்த்தம் - பெண்னையாறு, கிருஷ்ண தீர்த்தம், சுக்ர தீர்த்தம்.


சிறப்புச் செய்திகள்:


1) பகவான் திருவிக்ரம அவதாரம் எடுத்தபோது பூமியை அளந்த திருவடியை பூமாதேவி பூஜித்து மகிழ்ந்தாள். விண்ணோக்கி சத்ய லோகம் சென்ற திருவடியை பூஜித்து பிரம்மன் பெருமை அடைந்தான். தனது கமண்டல நீரால் பிரம்மன் பூஜித்த திருவடியில் பட்டுச் சிதறிய நீர்த்துளிகளே கங்கை கிருஷ்ணபத்ரா, சிலம்பாறு என்று புராணங்கள் புகழ்கின்றன. மூன்றாவது அடியால் மாவலியை பாதாளம் புகுத்தி அங்கும் பெருமாள் எழுந்தருளி காட்சி கொடுத்து பாதாள லோகத்திற்கு அருள் பாலித்தார்.

2) ஆழ்வார்கள் மூவரும் முதன் முதலாக பகவானைத் தூயத் தமிழ்ப் பாசுரஙகள் பாடித் துதிக்க ஆரம்பித்தனர். அதுவே பின்னர் ஆழ்வார்களால் நாலாயிரத் திவ்ய பிரபந்தமாக விரிந்தது. முதலாழ்வார்கள் மூவரும் பல தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருக்கோவலூரை அடைந்தனர். இவர்களை ஒன்று சேர்க்க எண்ணிய பகவான் பெரும் மழையைப் பெய்விக்கச் செய்தார். முதலில் வந்த பொய்கையாழ்வார் மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தை அடைந்து இரவு தங்குவதற்கு இடமுண்டோ வென்று வினவ முனிவர் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி இங்கு ஒருவர் படுக்கலாம் என்று கூறிச் சென்றார். சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த பூதத்தாழ்வார் தமக்கும் தங்குவதற்கு இடம் உண்டோ வென்றார். ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாமெனக் கூறிய பொய்கையார் அவரை உள்ளே அழைத்துக் கொண்டார். சில வினாடிகளில் அவ்விடம் வந்து சேர்ந்த பேயாழ்வார் தானும் தங்கலாமா என்று கேட்க, ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று கூறி அவரையும் சேர்த்துக் கொள்ள இடநெருக்கடி தாளாது முண்டிக் கொள்ள அப்போது நான்காவதாக மேலும் ஒருவர் வந்து மூவரையும் நெருக்குவது போன்ற உணர்வு உண்டாக, ஆச்சரியத்துடன் மூவரும் எம்பெருமானை ஒருங்கே நினைக்க, உடனே பேரொளியாய்த் தோன்றிய எம்பெருமான் தனது பிராட்டியுடன் தம் திருமேனியை மூவருக்கும் காட்டி அருள் புரிந்தார்.

3) முதன்முதலில் ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யதேசம் இதுதான். இங்கு ஆழ்வார்கள் மூவரும் பெருமாளை அனுபவித்ததை ஸ்ரீமந் நிகாமந்த தேசிகன் இப்படி வர்ணிக்கிறார். மூன்று ஆழ்வார்களாகிய கரும்பாலையில் மூன்று உருளைகள் கரும்பைப் பிழிவதைப் போல, தீங்கரும்பான எம்பெருமானை நெருக்கி அவருடைய திருக்குணங்களாகிய ரஸத்தைப் அருந்துகின்றார்கள்


4) இந்த தலத்தில் கிருஷ்ணன் சேவை சாதிப்பதை எண்ணிய துர்க்கை விந்திய மலையிலிருந்து புறப்பட்டு தானும் இவ்விடத்தே கோவில் கொண்டாள். துர்க்கைக்கு இங்கே கோவிலும், வழிபாடுகளும் உண்டு. இது மற்றெந்த திவ்ய தேசத்திற்கும் இல்லாச் சிறப்பம்சமாகும். திருமங்கையாழ்வார் இந்த துர்க்கையை ‘விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்’ என்று புகழ்கிறார்.


5) கிருஷ்ணாரண்யத்திலும், ஸ்ரீமுஷ்ணத்திலும் நான் பக்தர்களுடனே சஞ்சரித்துக் கொண்டே இருக்கிறேன். என்று பகவானால் திருவாய் மலர்ந்தருளப்பட்ட இத்திவ்ய தேசத்தை முதலாழ்வார்கள் மூவரும் திருமங்கையாழ்வாரும் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளனர். மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார். சுவாமி தேசிகரால் இயற்றப்பட்ட ‘தேஹளிச ஸ்துதி’ இப்பெருமாளுக்கு அளிக்கப்பட்ட பக்திப் பனுவலாகும்.


6) கிருஷ்ண பத்திரா நதிதான் இங்கு ஓடும் பெண்ணை ஆறாகும்.வெண்ணெய் உருகுமுன் பெண்ணை உருகும் என்று சிறப்பிக்கப்பட்ட நதியாகும். பிரம்ம புராணத்தின் பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களுள் ஒன்றாக இது குறிக்கப்படுகிறது. பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்கள்.


1. திருக்கோவலூர்
2. திருக்கண்ணங்குடி
3. திருக்கவித்தலம்
4. திருக்கண்ணபுரம்
5. திருக்கண்ணமங்கை

7) இத்தலம் திவ்ய பிரபந்தத்திற்கு விளை நிலமாகும். உலகில் முக்கியமாக, ஒரு ஜீவன் மிக முக்கியமாக அறிய வேண்டிய ரகசியங்களான திருமந்திரம், துவயம், சரமச் ஸ்லோகம், முதலியவைகளை மூன்று திருவந்தாதிப் பிரபந்தங்களாக முதல் மூன்று ஆழ்வார்கள் இங்கு வெளியிட்டருளியமையால் இத்தலம் ஜீவாத்மாக்கள் கடைத்தேற வித்திட்ட விளைநிலமாகும்.

8) இடைகழியில் ஆழ்வார்கட்கு எம்பெருமான் காட்சி கொடுத்ததால் இத்தல பெருமாளுக்கு 'இடைகழி ஆயன்' என்னும் பெயர் உண்டு. நடுநாட்டில் உள்ள தலமாகையாலும் விண்ணுலகிற்கும், பாதாள லோகத்திற்கும் நடுவில் நின்றமையால் இப்பெருமானுக்கு நடுநாட்டான் என்னும் பெயர் வந்தது என்பர்.


9) இங்கு தற்போதுள்ள எம்பெருமானார் ஜீயர் சுவாமிகளின் ஒரு பணி இராமானுஜரையே நினைவுபடுத்துகிறது. நாராயண மந்திரத்தை அனைவர்க்கும் உபதேசித்து அரிஜனங்களை திருக்குலத்தார் என்று பெயரிட்டு அழைத்து அவர்களை வைணவ அடியார்களாக்கினார் இராமானுஜர். அதுபோல் இந்த ஜீயர் சுவாமிகளும், ஆயிரக்கணக்கான அரிஜன சகோதரர்கட்கு தீட்சை அளிக்கிறார். அதாவது வருடா வருடம் தமது திருமாளிகையில் சமபந்தி போஜனம் அளிக்கிறார் என்பது மிகவும் பெருமை மிக்க செய்தியாக உள்ளது.


ஜீவாத்மா கடைத்தேறுவதற்கு வித்திட்ட இத்தலத்திற்கு அன்பர்கள் சென்று பகவானை தரிசித்து, பிறவித் தளைகளைக் களைந்து பெருமானின் பொற்பாதங்களை அடையப் பிரார்த்திக்கிறேன்.
 

Latest ads

Back
Top