• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நவராத்திரி பற்றிய 75 அரிய தகவல்கள்

praveen

Life is a dream
Staff member
நவராத்திரி பற்றிய 75 அரிய தகவல்கள்

1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.


2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.


3. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.


4. நவராத்திரி விழாவை பெரிய அசுரர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.


5. நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.


6. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.


7. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.


8. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


9. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.


10. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.


11. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.


12. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.


13. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.


14. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.


15. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.


16. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.


17. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.


18. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.


19. புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.


20. நவராத்திரி பூஜைகள் அனைத்தையும் செய்து சுகன்யா தேவி என்பவள் எல்லா வித பலன்களையும் பெற்றாள்.


21. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.


22. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.


23. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.


24. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.


25. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.


26. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.


27. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.


28. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.


29. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.


30. தென்னகத்தில் இருந்துதான் நவராத்திரிக்குரிய மகிஷாசுரமர்த்தினியின் கதை வங்க நாடு சென்றது.


31. அந்த காலத்தில் நாடு சீரும் சிறப்பும் அடையவும், செங்கோல் நடக்கவும், செல்வம் கொழிக்கவும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினார்கள்.


32. நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.


33. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.


34. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.


35. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.


36. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.


37. ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.


38. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.


39. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.


40. குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள்! குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும்.


41. கொலு வைப்பதால் பெண்களின் மன இறுக்கம் தளர்ந்து லேசாகிறது.


42. டெல்லியிலும், காசிக்கு அருகிலுள்ள ராம் நகர் உத்தரபிரதேசம் போன்ற இடங்களிலும் ‘ராம்லீலாÕ நடத்த பெரிய, தனியான திடல்களே உள்ளன. ஸ்ரீராமனது காவியத்தை பத்து அல்லது முப்பது நாட்கள் நாடகமாக நடிக்கின்றனர்.


43. சிறு துளசிக்கன்றை களிமண்ணோடு கொண்டு வந்து கொலுவில் வைத்து தீபாராதனை காட்டுவது ஆனந்தத்தை அதிகப்படுத்தும்.


44. நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம் இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.


45. நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளை பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.


46. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.


47. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.


48. வடநாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி 9 நாட்களும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதுண்டு.


49. தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலு வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


50. சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.


51. அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.


52. காளியை மேற்கு வங்க மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடுவதால் அம்மாநில மக்கள் சக்தி வணக்கக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.


53. குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்துக்கு கரவோ என்று பெயர்.


54. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.


55. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.


56. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.


57. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.


58. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.


59. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.


60. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.


61. நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.


62. நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.


63. உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.


64. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.


65. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.


66. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.


67. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.


68. கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.


69. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.


70. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.


71. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.


72. ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.


73. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.


74. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.


75. எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.
 

Latest ads

Back
Top