• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில்!

praveen

Life is a dream
Staff member
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில்!

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில்!


விபூதி?
குங்குமம்?
சந்தனம்?
நீங்கள் எத்தனையோ பிள்ளையார் கோயில்களுக்குச் சென்றிருப்பீர்கள். மேலே குறிப்பிட்ட மூன்றில் ஒன்றைத்தான், அங்கே வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டிருப்பீர்கள்.
ஆனால், ஆந்திராவின் சித்தூருக்கு அருகில் உள்ள காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் என்ன பிரசாதம் தெரியுமா?
ஒரு #ஸ்பூன்-தண்ணீர்!
அதுவும் #கிணற்று நீர்!
அந்த ஒரு #உத்தரணி தண்ணீரைப் பெற்றுக்கொள்ளத்தான் அங்கே கூட்டம் அலை மோதுகிறது. அதனைப் பருகினால் ஊனம் தீரும் என்றும் நோய்கள் எல்லாம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
அப்படி என்ன அந்தக் கிணற்றுத் தண்ணீருக்கு விசேஷம்?
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் தோன்றியதே அந்தக் #கிணற்றில்தான்!இன்றும் அதே கிணற்றின் மேல்தான் அவர் காட்சி தருகிறார். அது மட்டுமல்ல, நம் ஊர் #திருவானைக்காவல் #ஜம்புகேஸ்வரர் போல, இந்தக் காணிப்பாக்கம் விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக்கொண்டேயிருக்கிறது.
நம் ஊர் பிள்ளையார்கள்போல் இவருக்குப் பெரிய அலங்காரம் எதுவும் கிடையாது. நீளத் தும்பிக்கை, பெரிய காது, சிறிய கண்கள் என்றெல்லாமும் கிடையாது. கிணற்றில் எப்படித் தானாக, சுயம்புவாகத் தோன்றினாரோ, அதேபோல, எந்த மாறுதலும் இல்லாமல் `மொழுக்'கென்று இருக்கிறார் பிள்ளையார். ஆனால் அவரது சக்திதான் `கொழுக், மொழுக்'கென்று தேசம் பூராவும் புஷ்டியாகப் பரவி நிற்கிறது!
பக்தர்கள் இவரை பயபக்தியுடன் வணங்குகிறார்கள். காரணம், காணிப்பாக்கம் விநாயகர், `நல்லவருக்கு நல்லவர், கெட்டவருக்குக் கெட்டவர்' என்று தெலுங்குப் படம் போல் பஞ்ச் டயலாக்கெல்லாம் சொல்கிறார்கள்.
அது உண்மைதான். யாராவது, ஏதாவது விஷயத்தில் பொய் சொன்னால், அவரைத் தரதரவென இங்கே இழுத்து வந்து விடுகிறார்கள். விநாயகர் முன் சத்தியம் செய்யச் சொல்கிறார்கள்.
`காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை' என்று கூறினால், அதனை சத்தியப் பிரமாணமாக இன்றும் ஆந்திர கிராமப் பஞ்சாயத்துகளில் ஏற்றுக்கொள்கிறார்கள்.
காரணம், இந்த விநாயகர் முன் யாராவது பொய் சொன்னால் 90 நாட்களுக்குள்ளேயே பொய் சொன்னவர் கடுமையாக தண்டிக்கப்படுவார் என்பதால்தான்!
கேணி பக்கத்தில் காட்சி தரும் காணிப்பாக்கம் கணபதியைப் பார்த்தாலே, யாருக்கும் பொய் சொல்லத் தைரியம் வராது. உண்மையைத் தவிர வேறெதுவும் வார்த்தைகள் வெளிவராது!
உண்மை மட்டுமல்ல, ஊனமுற்றவர்களையும் இந்த விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் குறைகளையெல்லாம் தீர்த்து வைப்பதில் இவருக்கு தீராத இஷ்டம்.
காரணம், இந்த விநாயகர் முதலில் காட்சி தந்ததே ஊனமுற்ற மூன்று சகோதரர்களுக்குத்தான். ஊர்ப் பெயர் தோன்றியதும் அதனால்தான்!இதோ, அந்தக் கதை.
3 சகோதரர்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊரின் பெயர், விஹார புரி.
இங்கே ஏழை விவசாயிகளான மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்களிடம் `காணி' நிலமே இருந்தது. அது மட்டுமல்ல, மூவருமே ஊனமுற்றவர்கள்.
ஒருவருக்கு வாய் பேச இயலாது. அடுத்தவருக்குக் காது கேட்காது. மூன்றாமவருக்குக் கண் தெரியாது!
தங்கள் ஊனத்தைப் பொருட்படுத்தாமல், மூவரும் ஒற்றுமையுடன் விவசாயம் செய்து பிழைத்து வந்தார்கள்.
கோடைக் காலத்தில் அவர்கள் நிலத்தில் இருந்த கிணற்றில் நீர் வற்றியதால், அதனை ஆழப்படுத்த முனைந்தார்கள்.
மண்வெட்டியுடன் கிணற்றில் இறங்கினான், வாய் பேச முடியாதவன்.
பூமியைத் தோண்டும்போது ஒரு பாறையின்மீது மண்வெட்டிபட்டு, `டங்'கென்று ஓசை எழுந்தது. அது மட்டுமல்ல, வெட்டுப்பட்ட இடத்திலிருந்து குபுகுபுவென ரத்தம் பீரிட்டது.
அதைக் கண்டதும், இதுவரை வாய் பேசாதிருந்தவன், `ஐயோ ரத்தம்' என்று அலறினான்!அவன் அலறியது, மேலே நின்றிருந்த, காது கேட்காதவனுக்குக் கேட்டது!
எட்டிப் பார்த்த கண் தெரியாதவன், `என்ன ஒரே சிவப்பாக இருக்கிறதே' என்று வியந்து பார்த்தான்!
அப்புறம் என்ன?
#மூவரின்குறைகளும் திடீரென #தீர்ந்ததைக் கண்ட கிராம மக்கள் #அதிசயித்தனர்.
கிணற்றுக்குள் இறங்கிப் பார்த்தனர். பாறை உருவில் அங்கே வரசித்தி விநாயகர் காட்சியளிப்பது கண்டு பரவசப்பட்டனர்.
#பயபக்தியுடன் வணங்கினர். (இன்றைக்கும் மண்வெட்டித் #தழும்பு விநாயகர் சிரசில் இருக்கிறது.)
காணி நிலத்தில் தோன்றியதால், காணிப்பாக்கம் விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. பக்தர்கள், தேங்காய் உடைத்தபோது பரவிய இளநீர், ஒரு காணிப் பரப்பளவு பரவியதால் `காணிப்பாக்கம்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள். (பாரகம் என்றால் நீர் பரவுதல் என்று தெலுங்கில் அர்த்தம். பாரகம் என்பதே பாக்கம் என்றானது!)
மிகவும் சிறியதாக இருந்த கோயிலை 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன், பெரிதாகக் கட்டித் திருப்பணி செய்தான். 1336-ல் விஜயநகர மன்னர்களும் இங்கே சிறப்பு வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.
பாகுதா
கோயிலின் அருகில் பாகுதா நதி காணப்படுகிறது.
அந்தக் காலத்தில், அரசனுக்குச் சொந்தமான மாந்தோட்டம் ஒன்று இங்கே இருந்தது. அதிலிருந்த கனிகளை விகிதா என்ற ஒருவன் பறித்துச் சாப்பிட்டான்.
வெகுண்ட அரசன், விகிதாவின் #இரு-கைகளையும் #வெட்டிவிட்டான்.
அறியாமல் செய்த பிழைக்கு, இவ்வளவு பெரிய தண்டனையா? என்று துடித்த விகிதா, அந்த நதியில் நீராடி, #காணிப்பாக்கம்
#விநாயகரை நோக்கி ``பாகு தா (கை தா)'' என்று வேண்டினான். அவனுக்குக் கையும் கிடைத்தது, நதிக்கு `#பாகுதா' என்ற பெயரும் ஏற்பட்டது.
காணிப்பாக்கம் விநாயகர் கோயிலைப் பார்த்ததும் நமக்குப் பிள்ளையார்பட்டியின் நினைவு வரும்.
பிள்ளையார்பட்டி போலவே #எதிரில்
#குளம் அமைந்திருக்கிறது. குளத்தின் நடுவில் ஒரு விநாயகர் `ஜம்'மென்று காற்று வாங்கியபடி, #அமர்ந்திருக்கிறார்.
அலங்காரமில்லாத வெண்மை நிற ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால், அலங்காரமில்லாமல், சுயம்புவாகக் காட்சி தரும் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகரைக் காணலாம். அவரைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருப்பதை எட்டிப் பார்க்கலாம். அது தண்ணீர் மட்டுமல்ல, அவரது அளவிட முடியாத #கருணையும்தான் என்று புரிந்ததால், நம் கண்களில் இருந்தும் கண்ணீர் கசிகிறது. உள்ளம் உருகுகிறது. நெஞ்சம் நெகிழ்கிறது.
ஆஞ்சநேயர், நவகிரகங்கள் ஆகியோரும் இங்கே காட்சி தருகிறார்கள்.
அருகில் வேறு இரண்டு கோயில்களும் உள்ளன. ஒன்று, மணிகண்டேஸ்வரர் ஆலயம். இங்கிருந்து ஒரு பாம்பு, தினமும் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கிச் செல்வதாக ஒரு நம்பிக்கை.
மற்றது வரதராஜ சுவாமி ஆலயம். ஜனமே ஜய அரசன் கனவில் வந்து, பெருமாளே கட்டச் சொன்ன கோயில் இது.
இது பிள்ளையார் சதுர்த்தி நேரம். காணிப்பாக்கம் செல்லுங்கள். வரசித்தி விநாயகரை வணங்குங்கள். #உங்கள் வாழ்வில் #எல்லா #வளங்களையும் #அள்ளிக்கொள்ளுங்கள். அப்புறம் ஒன்று, #ஊனமுற்றவர்கள்
மேல் இந்தப் பிள்ளையாருக்குத் #தனிப்பிரியம் என்பதால், நீங்களும் ஊனமுற்றவர்களை #ஏளனம் செய்யாமல் #முடிந்தவரை-உதவுங்கள். அதை அந்தக் காணிப்பாக்கம் விநாயகர், #கருணையுடன் #கவனித்துக்கொண்டிருப்பார் என்பதை உணருங்கள்.
``காணிப்பாக்கம் கோயிலுக்கு எப்படிச் செல்வது?''
``சென்னையிலிருந்து சித்தூர் 4 மணிநேர பஸ் பயணம். (கட்டணம் ரூ.56) அங்கிருந்து வேறு பஸ்ஸில் அரை மணியில் காணிப்பாக்கம்! (கட்டணம் ரூ.6)''
``தங்க... சாப்பிட...''
``தேவஸ்தானத்திலேயே 100 அறைகள் இருக்கின்றன. மூன்றுவேளை உணவும் கோயில் சார்பாக மலிவு விலையில் வழங்கப்படுகின்றது. மதியஉணவு `ஃபுல் மீல்ஸ்' எவ்வளவு தெரியுமா? பத்து ரூபாய்தான்! தவிர அன்னதானமும் உண்டு.''
``கோயில் தொலைபேசி எண்?''
``08573 281540, 281640''
``என்ன செலவாகும்?''
``சென்னையிலிருந்து ஒருவர் சென்று வர ரூ.300 இருந்தாலே போதும். இது உண்மை. பொய் சொன்னால் பிள்ளையாருக்குப் பிடிக்காது!''
ஸ்ரீ காணிப்பாக்கம் பிள்ளையார் துணை
 

Latest ads

Back
Top