• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

விஷ்வக்ஸேநர்

praveen

Life is a dream
Staff member
விஷ்வக்ஸேனர் வாழி திருநாமம்
ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே!
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே!
ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே!
பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே!
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே!
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே!


இதில் எதுவும் புரியவில்லை என்றால் இந்த கட்டுரையை மேலும் படிக்கவும்.
விஷ்வக்சேனர், சேனாதிபதி ஆழ்வான், சேனை முதலியார் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் யார் ?
விஷ்வக்சேனர் நித்தியசூரிகளுக்கு எல்லாம் தலைவர். எம்பெருமானுடைய சேனைக்கு தலைவர் அதனால் சேனாதிபதி என்று கூறுகிறோம். ஆதிஷேசன், கருடன் எல்லாம் நித்தியசூரிகள். அவர்களுக்கு எல்லாம் இவர் தலைவர்!.
விஷ்வக் என்றால் எல்லாத் திசையும்/திக்கிலும் என்று பொருள். எல்லாத் திசையிலும் பெருமாளின் சேனைக்கு இவர் ஒருவரே தலைவர் அதனால் விஷ்வக்-சேனர். பிரம்மாவைத் தேர்ந்தெடுப்பதும் இவர் தான்.
பொதுவாக நல்ல காரியங்களை தொடங்கும் முன் ”சொல்லுங்க” என்று வாத்தியார் இதை சொல்ல


விஷ்வக்சேனர் -
“"சுக்லாம் பரதரம் விஷ்ணும் ( வெள்ளை ஆடை அணிந்திருக்கும் விஷ்ணு) சசிவர்ணம் சதுர்ப்புஜம் ( நான்கு திருக்கைகளை உடைய ) ப்ரசன்ன வதனம் ( சிரித்த முகத்துடன் ) த்யாயேத் ( தியானம் செய்கிறேன்) சர்வ விக்ன உப சாந்தயே! ( எல்லா தடைகளும் தீர ) அதாவது ”எல்லாத் தடங்களும் தீர்வதற்கு விஷ்ணுவை வணங்குகிறேன்” அதற்குப் பிறகு
யஸ்ய த்விரத வக்த்ராத்யா : பாரிஷத்யா : பரஸ்ஸதம்
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே
நம்முடைய தடைகளை போக்கிகொடுக்கும் விஷ்வக்சேனரை வணங்குகிறேன் என்கிறது அடுத்த ஸ்லோகம்.
உற்சவ காலங்களில் இவர் புறப்பாடு தான் முதலில் நடைபெறுகிறது இவரை முதலில் சேவித்துவிட்டு தான் பெருமாளையே சேவிக்க வேண்டும். இவர் என்ன அவ்வளவு பெரியவரா என்று நீங்கள் கேட்கலாம், அதற்கு
ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள் பற்றி கொஞ்சம் சுருக்கமாக பார்க்கலாம்.
ஸ்ரீவைஷ்ணவர்களுடைய ஆசார்ய பரம்பரை எம்பெருமான், பெரிய பிராட்டியார் அதற்குப் பிறகு நம் விஷ்வக்ஸேனர் அதன் பிறகு தான் நம்மாழ்வார் வருகிறார். அதாவது நம்மாழ்வாருக்கு உபதேசம் செய்தவர் விஷ்வக்ஸேனர்.
நம்மாழ்வார் திருநட்சத்திர தனியன் இது
வ்ருஷமாஸி விசாகாயாம் அவதீர்ணம் குணோஜ் வலம் |
ஸுந்தரார்ய குரோசிஷ்யம் சடகோப குரும்பஜே
பொருள்: கலியுகத்தின் ஆதியில் வைகாசி விசாகத்தில் பாண்டிய தேசத்தினுள்ள திருக்குருகூரில் ‘காரி’ என்பவருக்குத் திருக்குமாரராய் “ஸேனை முதலியார்” எனப்படும் விஷ்வக்ஸேனரின் அம்சமாய் அவதரித்த சடகோபனை உபாசி க்கிறேன்.
நம் குருபரம்பரையில் பிராட்டிக்குப் பிறகு இருக்கும் விஷ்வக்ஸேனரை வணங்குவது தான் மரபு.
பராசர பட்டர் தன் விஷ்ணு சஹஸ்ரநாம வியாக்யான ஆரம்ப மங்கள ஸ்லோகத்தில் ஸ்ரீரங்கநாதரின் சேனைத் தலைவரான விஷ்வக்ஸேனரை வணங்குகிறார். அதே போல ஸ்ரீவேதாந்த தேசிகன் யதிராஜ ஸ்பததியில் இப்படிக் கூறுகிறார்.
வந்தே வைகுண்ட்ட ஸேநாநயம்
தேவம் ஸூத்ரவதி ஸகம்
யத் வேத்ர சிகர ஸ்பந்தே
விச்வம் ஏதத் வ்யவஸ்த்திதம்
வரிசையில் முன்றாவது ஆசார்யர் சேனைமுதலியாரான விஷ்வக்ஸேனர், இவர் வைகுண்டத்தில் இருந்துகொண்டு எல்லோரையும் செயல்களில் நியமிக்கிறார். இவர் எம்பெருமானுடைய படைகளுக்குத் தலைவராய் நிற்கின்றார். இவருடைய கையில் எப்போதும் பிரம்பு இருந்து கொண்டிருக்கும்.
அதன் முனையை இவர் சொடுக்கினால் அதற்கு அஞ்சி இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தத்தம் நிலையை மீறாமல் நடந்துகொள்ளும். இவருடைய தேவிக்கு ஸூத்ரவதி என்று திருநாமம். இவ்வாறு தம் அதிகாரத்தால் பிரபஞ்சத்தை ஆளும் விஷிவக்ஸேநரை தொழுகின்றேன்
கையில் இருக்கும் பிரம்பை வைத்துக்கொண்டு உலகத்தையே ஆட்டிப்படைக்கிறார் என்று ஸ்ரீவேதாந்த தேசிகன் கூறுவதைப் பார்த்தோம்.
துவராகா போன்ற கோயில்களில் பெருமாள் சேவிக்கும் போது கூட்டம் அலை மோதும் அப்போது ஒருவர் கையில் துண்டைச் சாட்டை போல முறுக்கி கூட்டத்தினர் மீது அடித்துக் கூட்டத்தை சரி செய்வார். இதை அனுபவிக்கும் போது அடியேனுக்குத் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரம் தான் நினைவுக்கு வரும்
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
“எம்பெருமானே உன் கோயில் வாசலில் தேவர்களும் அவர்களின் கூட்டமும், முனிவர்களும், மருத கணங்களும், யக்ஷர்களும், இந்திரனும் கூட ஐராவதமும் வந்து உன் திருவடி தொழுவதற்கு நிற்கிறார்கள். கந்தர்வர் நெருக்கவும், வித்தியாதரர்கள் தள்ளிக்கொண்டு இருக்கும் வைகுண்டத்துக்கு நாம் முக்தி அடைந்து செல்லும் போது பெருமாளை சேவிக்க விஷ்வக்சேனர் தான் தன் பிரம்பால் தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொன்ன கூட்டத்தை ஒழுங்கு படுத்தி நமக்குச் சேவிக்க வைப்பார் என்று நம்புகிறேன்.
இப்பேர்பட்ட விஷ்வக்சேனரை, நாம் கோயில்களுக்கு செல்லும் முன் விஷ்வக்சேனர் சன்னதியை பார்த்துவிட்டு “பெருமாளைச் சேவிக்க கூட்டம் அதிகமாக இருக்கு” என்று இவரை பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் போய்விடுகிறோம்
எப்பொழுது பார்த்தாலும் எல்லா கோயில்களிலும் பெரும்பாலும் விஷ்வக்சேனர் சன்னதி மூடியிருக்க, உள்ளே எட்டி பார்த்துவிட்டு விஷ்ணு மாதிரியே இருக்கிறார் என்று குழப்பத்துடன் “சரி ஏதோ ஒரு பெருமாள்” என்ற எண்ணம் தான் இன்றும் பலருக்கு இருக்கிறது.
ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சன்னதிக்கு வெளியே சின்ன மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறார். பெரும்பாலும் மூடியிருக்கும். இரவு அரவணை பிரசாதம் இந்த சன்னதியில் தான் வினியோகம் அப்போது சென்றால் சேவிக்கலாம். போன முறை அப்படி தான் அவரை சேவித்தேன்.
மேல்கோட்டையில் விஷ்வக்சேனருக்கு மரியாதை அதிகம். அவரைப் பெருமாள் சன்னதிக்குப் பக்கம் ஆழ்வார்களுடன் சேவிக்கலாம். நிச்சயம் ஒரு அர்ச்சகர் அங்கே இருப்பார். வேறு எந்தக் கோயிலிலும் இந்த மாதிரி இருப்பதைப் பார்த்ததில்லை. தினந்தோறும் திருநாராயணபுரத்தில் திருப்பாவை சாற்றுமுறையின்போது விஷ்வக்ஸேனருக்கு ஸ்ரீசடாரி சாதிக்கப்படுகிறது. அதன்பிறகு, நம்மாழ்வாருக்கும், ஸ்தலத்தார்களுக்கும் சாதிக்கப்படுகின்றது. எம்பெருமானார் தான் ஏற்படுத்தி வைத்த நடைமுறைகளை இங்கே தான் இன்னும் பின்பற்றுகிறார்கள் என்று நினைக்கிறேன். திருமாலிருஞ்சோலையில் விஷ்வக்சேனரை சூத்ராவதி என்ற தர்மபத்தினியுடன் சேவிக்கலாம்.
எம்பெருமானின் சேஷ பிரசாதத்தை முதலில் கொள்பவராதலால், இவருக்கு சேஷாசநர் என்ற திருநாமமும் உண்டு. ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னத்தில் இதைக் குறிப்பிடுகிறார். எம்பெருமான் திருவள்ளத்தில் நினைப்பதை உணர்ந்து அதைச் செவ்வனே செய்யக்கூடியவராக இருக்கும் இவரை அடுத்த முறை கண்டுகொள்ளுங்கள்.
இப்போது இவருடைய வாழி திருநாமத்தை படித்தால் உங்களுக்கு அர்த்தம் சுலபமாக விளங்கும்.
ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே
 

Latest ads

Back
Top