• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

புஷ்கரம்

praveen

Life is a dream
Staff member
புஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகாபுஷ்கரம்’ என்பது 144 (12வூ12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. பிரம்மாவின் கையில் உள்ள தீர்த்தம் புஷ்கரம் எனப்படும். குருபகவான் கடும் தவமிருந்து பிரம்மாவிடமிருந்து இதைப் பெற்றார்.


நம் நாட்டில் உள்ள முக்கியமான 12 நதிகள் 12 ராசிகளுக்குரியவைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-


ராசி நதி


மேஷம் - கங்கை
ரிஷபம் - நர்மதை
மிதுனம் - சரஸ்வதி
கடகம் - யமுனை
சிம்மம் - கோதாவரி
கன்னி - கிருஷ்ணா
துலாம் - காவிரி
விருச்சிகம் - தாமிரபரணி
தனுசு - சிந்து
மகரம் - துங்கபத்ரா
கும்பம் - பிரம்மநதி
மீனம் - பிரணீதா


குருபகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும்.அப்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் தமது தேவியருடன் அந்த நதியில் தங்கியிருப்பர். இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பர்.


நதிகளெல்லாம் தெய்வீகம் வாய்க்கப் பெற்றவைகள் என்று கருதுவது நம் நாட்டு ஐதீகம் ஆகும். இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை உண்டு. அதில் மகிமை காண்பவர் அதனுள்ளே கடவுள் உறைந்திருப்பதை உணர்கின்றனர். தென் தமிழக நதிகளில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி.


ஈசனால் உருவாக்கப்பட்ட தாமிரபரணி


சிவபெருமான் அகத்தியரை ‘‘தென் நாடு செல்க’’ எனக் கட்டளையிட்ட போது அகத்தியர், ‘‘அது தமிழ்நாடு. தமிழ் பாஷை தனக்குத் தெரியாது. ஆதலின், அதை தமக்கு உணர்த்துக’’ என சிவபெருமானிடம் கேட்டார். உடனே, தம் அருகே அவரை அமரவைத்து, தமிழைக் கற்றுக் கொடுத்தார் ஈசன். (தமிழ் மொழி அகத்தியர் காலத்துக்கு முன்னரே இருந்தது என்பது இதனால் தெள்ளத் தெளிவாய் தெரிய வருகிறது).


ஈசனிடம் தமிழைக் கற்றுக் கொண்டு பொதிகை மலையில் வந்து அமர்ந்தார் அகத்தியர். அவர் முன் சூரிய பகவான் தோன்றி, தமிழ் இலக்கணங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். பின்னர், முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல்வராயிருந்து தமிழை வளர்த்தார் அகத்தியர். அகத்தியர் ஸ்நானம் செய்யும் பொருட்டு, சிவபெருமான் பொதிகை மலையில் ஒரு நதியை உருவாக்கி, அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார்.


தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அந்நதிக்கு ‘‘தாம்பிர வர்ணி’’ என்று முதலில் பெயர் சூட்டப்பட்டது. காலப் போக்கில் அது தாமிரபரணி என்றாயிற்று.


143 படித்துறைகள்


அகத்தியருக்காக ஈசனால் உருவாக் கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக் கரையில் ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன.
பாபநாசம் முதல் புன்னைக்காயல் (முகத்துவாரம்) வரை இந்நதிக்கரையில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன.
இப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் 12-10-2018 அன்று மகாபுஷ்கரத்திருவிழா இந்து மடாதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.


விருச்சிக ராசியில் குருப்பெயர்ச்சி


திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று இரவு 7.20 மணிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார். மறுநாள் 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி (ஆத்ய) புஷ்கரம் ஆரம்பம்.


23-10-2018 (செவ்வாய்) அன்று புஷ்கரம் பூர்த்தியாகும். மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது.


இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாகும். அதன் விபரம் வருமாறு:-


தேதி (கிழமை) ராசி


1. 12.10.2018 (வெள்ளி) விருச்சிகம்
2. 13.10.2018 (சனி) தனுசு
3. 14.10.2018 (ஞாயிறு) மகரம்
4. 15.10.2018 (திங்கள்) கும்பம்
5. 16.10.2018 (செவ்வாய்) மீனம்
6. 17.10.2018 (புதன்) மேஷம்
7. 18.10.2018 (வியாழன்) ரிஷபம்
8. 19.10.2018 (வெள்ளி) மிதுனம்
9. 20.10.2018 (சனி) கடகம்
10. 21.10.2018 (ஞாயிறு) சிம்மம்
11. 22.10.2018 (திங்கள்) கன்னி
12. 23.10.2018 (செவ்வாய்) துலாம்


ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக்குரிய தேதி, கிழமையில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும். குடும்பத்தலைவரோடு தொலை தூரத்திலிருந்து நீராட வருகின்றவர்கள் குடும்பத் தலைவரின் (தந்தையின்) ஜென்ம ராசி எதுவோ அந்த ராசிக்குரிய நாள், கிழமையில் நீராடினாலே போதும். அது குடும்பம் முழுவதும் பிரகாசத்தைக் கொண்டு வரும். 12 நாட்களிலும் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமம்.


தானம் கொடுத்தல்


இந்த 12 நாட்களிலும் தாமிரபரணிக் கரையில் தானம் செய்வது சிறப்பு. தானங்களுள் ‘கோ தானம்’ பரம தர்மம் எனப்படும். நல்ல பசுவைத் தானம் செய்வதால் மோட்ச சித்தி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.


சிரார்த்தம் (திதி) கொடுத்தல்


இந்த 12 நாட்களிலும் தாமிரபரணி நதிக்கரையில் நம்முன்னோர்களுக்கு சிரார்த்தம் (திதி) கொடுப்பதும் சிறந்ததாகும். இதனால் பித்ருதோஷம் விலகி, உங்கள் வாழ்வு பொலிவும் வலிவும் பெறும். பாபநாசம் முதல் புன்னைக் காயல் வரை உள்ள எந்த படித்துறையிலும் புனித நீராடலாம். தானம் செய்யலாம். சிரார்த்தம் கொடுக்கலாம்.


நீராடல் விதிகள்


1. நீராடப் போகிறவர்கள் செருப்பு போட்டுக் கொண்டும், குடை பிடித்துக் கொண்டும் செல்லக் கூடாது.
2. நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்துத் தன் உடம்பில் பூசிக் கொண்டு, நதியை வணங்கி அதனுள் இறங்க வேண்டும்.
3. சிகப்பு, கருப்பு, நீலநிற வஸ்திரம், தலைப்பு இல்லாத வஸ்திரம், ஓரத்தில் நீலக்கரை, கருப்பு கரை போட்ட வஸ்திரம் இவைகளை உடுத்திக் கொள்ளக் கூடாது.
4. புனித குளங்களில் நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி. ஆனால், புனித நதிகளில் நீராடும் போது, நதியின் பிரவாகத்திற்கு (ஓட்டத்திற்கு) எதிர் முகமாக நின்றே நீராட வேண்டும். முதுகைக் காட்டக் கூடாது.
5. நதியில் உள்ளம்குளிர குடைந்து மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு முறையும் ‘‘ஹரி, ஹரி’’ என்று சொல்ல வேண்டும்.
6. ஆண்கள் அரைஞாண்கயிறு இல்லாமல் நீராடுதல் கூடாது. அரைஞாண் கயிற்றில் வேஷ்டியை கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது. இது வேஷ்டி இல்லாததற்குச் சமம்.


7. பெண்கள் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது.
8. நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ் வதும், சிறுநீர் கழிப்பதும் பாபச் செயலாகும்.
9. நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும்.
10. நீரிலிருந்து வெளியே வந்து தலைமயிர்களை உதறக் கூடாது.
11. நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு, ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும். மேலாக எடுத்துப் போடக் கூடாது.
12. நெற்றியில் கோபி சந்தனம் பூசிக் கொண்டு நதியை மீண்டும் ஒருமுறை வணங்கி முடிக்க வேண்டும்.


சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும். இந்த 96 நிமிட காலத்தில் நீரா டுவது மிக மிகப் புண்ணியமாம்.
திருமண மாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடி னால் மட்டுமே நற்பலன் கிட்டும். திருமண மான வர்கள் அதி காலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராடலாம். சந்நியாசிகள் அதிகாலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் நீராடலாம்.


தாமிரபரணிக் கரையில் உள்ள குரு ஸ்தலங்கள்


1. திருக்குருகூர் (ஆழ்வார் திருநகர்):-


நவதிருப்பதிகளுள் ஒன்றான இந்த ஸ்தலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது.
இந்த ஸ்தலத்தில் பாயும் தாமிரபரணி ‘பிரம்ம தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
நம்மாழ்வார் அவதரித்த பெருமை இந்த ஸ்தலத்திற்கு உண்டு. அவர் 11 பாசுரங்கள் பாடி மங்களா சாசனம் செய்துள்ளார்.
குருவின் அம்சமாக ஆதிநாதப் பெருமாள்- ஆதிநாதவல்லி (குருகூர்வல்லி) இங்கே அமர்ந்துள்ளனர்.


2. முறப்பநாடு:-


தாமிரபரணிக் கரையில் உள்ள நவ கைலா யங்களுள் ஒன்றான இந்த ஸ்தலம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ளது.
இங்கே கைலாச நாதர் குருவின் அம்சமாக அமர்ந்துள்ளார். மகாபுஷ்கர புண்ணிய நாட்களில் இவ்விரு ஸ்தலங்களிலும் நீராடுவது அதிக மகிமையானது.


குரு தோஷம் நீங்க


நவக்கிரகங்களில் குருபகவானை ‘புத்திரகாரகன்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறும், புத்திர உற்பத்திக்குக் காரண கர்த்தா இவரே. குருபகவானின் அனுக்கிரகம் நிரம்பப் பெற்ற இவ்விரு தலங்களிலும், தாமிரபரணியில் புனித நீராடினால் புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், இங்கே வந்து நீராடினால் மல்லிகை, முல்லை போல மணக்கும் வாழ்வு. புஷ்கர நீராடலால் புது வாழ்வு புஷ்பிக்கும். அதற்கு இப்போதே ஆயத்தமாவீர்!
வேணும் சுபம்!
 

Latest ads

Back
Top