• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

முக்தி தரும் காயாரோகணேஸ்வரர் கோவில்

praveen

Life is a dream
Staff member
முக்தி தரும் காயாரோகணேஸ்வரர் கோவில்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் ‘கடல்நாகை’ எனும் நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை ஈசனுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் ஈசனுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார்.


ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த நாயனாருக்கு கிடைத்தது. மனமகிழ்வுடன் அதையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார். வறுமையில் தவித்த அந்தக் குடும்பம் அன்று பசியால் வாடியது. இருப்பினும் சிவனுக்கு செய்த பணியை நினைத்து அதிபத்தர் திருப்தியடைந்தார்.


மறுநாள் அதிபத்தரின் வலையில் தங்க மீன் கிடைத்தது. அந்த மீனையும் ஈசனுக்கே அர்ப்பணம் செய்தார். வறுமையிலும் கூட விலைஉயர்ந்த தங்க மீனை இறைவனுக்கு தியாகம் செய்த தொண்டை எண்ணி மகிழ்ந்த ஈசன், அதிபத்தருக்கு காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டார்.


இந்த நிகழ்வு நடந்தது ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளில் ஆகும். நாகப்பட்டினம் நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் ஆலயத்தில் அதிபத்தருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. அதிபத்தருக்கு ஈசன் அருள் செய்த நிகழ்வை, ஆவணி ஆயில்ய நாளில் திருக்கோவில் அருகில் உள்ள கடலில், படகு மற்றும் மீன் வலையுடன் சென்று நடத்திக் காண்பிக்கிறார்கள்.


ஆவணி ஆயில்ய நாளின் மாலை நேரத்தில், ஆலயத்தில் இருந்து நீலாயதாட்சி அம்மனுடன் காயாரோகணேஸ்வர சுவாமி புறப்படுகிறார். அவரோடு நாகை புதிய கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான அடியவர்களும் வருவார்கள். அப்போது அதிபத்தரின் உற்சவர் சிலையை படகில் வைத்து கடலுக்குள் எடுத்துச் சென்று, அதிபத்தர் தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வினை நடத்திக் காண்பிக்கிறார்கள்.


பொதுவாக கோவிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால் கோவில் நடையை அடைத்து விடுவார்கள். பரிகார பூஜைகள் செய்தபின்னர் தான் நடையை திறப்பார்கள். ஆனால் இந்த தலத்தில் மட்டும் நடை திறந்தே இருக்கும். சிவனருள் பெற்ற அதிபத்த நாயனாருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.


இறந்தவரின் உடலை ஆலயத்திற்கு முன்பாக வைத்து விடுவார்கள். அப்போது சிவாச்சாரியார், கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை இறந்தவர் உடலுக்கு அணிவித்து, தீர்த்தம் கொடுப்பார். அதன்பிறகே இறுதிச் சடங்கிற்காக தூக்கிச் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் இறந்தவரின் ஆன்மா, சிவபதம் அடைவதாக நம்பப்படுகிறது.


காசியைப் போல இத்தலத்திலும் முக்தி மண்டபம் உள்ளது. இத்தல ஈசனையும், அம்பாளையும் வழிபடுவதால் இறப்பிற்கு பின் முக்தி நிச்சயம். வாழும்போது பக்தியுடன் வாழ்ந்தால், நம் வாழ்க்கைக்குப் பிறகு சிவபதம் நிச்சயம். இறந்தவர்களின் ஆன்மா முக்தி பெற, இத்தல ஈசனுக்கு ‘மோட்ச தீபம்’ ஏற்றியும் வழிபடலாம்.


நாகப்பட்டினத்தின் புராண காலப்பெயர், ‘கடல் நாகைக் காரோணம்’ என்பதாகும். இத்தல ஈசனின் திருநாமம் ‘காயாரோகணேஸ்வரர்’. அன்னையின் திருநாமம் ‘நீலாயதாட்சி’ என்னும் ‘கருந்தடங்கண்ணி’. ‘காயம்’ என்றால் ‘உடம்பு’ என்று பொருள்படும். ‘ஆரோகணம்’ என்பதற்கு ‘உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளல்’ என்று அர்த்தம். இங்குள்ள ஈசன், புண்டரீக மகரிஷியின் உடலை, தன் சிவலிங்கத் திருமேனியோடு சேர்த்துக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘காயாரோகணர்’ என்றும், இத்தலத்திற்கு ‘காயாரோகணம்’ என்றும் பெயர் வந்தது.


மனித உடலோடு சொர்க்கத்தில் இடம் கேட்டு தவம் செய்தார் புண்டரீக மகரிஷி. அவரது தவத்தை மெச்சி, அவரது உடலை தன்னுள் ஆரோகணம் செய்து முக்தி கொடுத்தார் ஈசன். இங்கு மூலவர் காயாரோகணேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நெற்றிப் பட்டத்துடன் கூடிய பெரிய சிவலிங்கமாக கிழக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். மார்க்கண்டேயர், அகத்தியர், வசிஷ்டர், கவுதமர், காசிபர், புலத்தியர், ஆங்கிரசர் முதலிய சப்த ரிஷிகளுக்கும், சிவபெருமான் மூல சிவலிங்கத்தில் இருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்த பெரும் புண்ணிய தலம் இதுவாகும். இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.


சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாக இவ்வாலயம் திகழ்கிறது. மூலவருக்கு அருகில் தியாகராஜர் சுந்தர விடங்கராய் உள்ள சன்னிதியும் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிச்சாடனர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் உள்ளன. அஷ்ட நாகங்களில் ஒன்றான ஆதிசேஷன் மகா சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. நாக தோஷங்கள் அகல, இத்தல ஈசன் வழிபாடு நமக்குத் துணை நிற்கும்.


சம்பந்தர், அப்பர், சுந்தரரின் பாடல் பெற்ற தலம் இதுவாகும். சுந்தரருக்கு இத்தல ஈசன் நவமணிகள், முத்துமாலை, பட்டு முதலியன வழங்கியுள்ளார்.


இத்தல ஈசன் அகத்தியருக்கு தனது திருமணக் காட்சியை இங்கும் காட்டி அருளியுள்ளார். கோவிலின் உள்ளே சென்றதும் ஐந்து தலை நாகம் குடை பிடிக்க ‘நாகாபரணப் பிள்ளையார்’ உள்ளார். இவருக்கு பின்னால் சுதை வடிவில் பெரிய நந்தி இருக்கிறது. நந்திக்கு தென்புறம் முக்தி மண்டபம் உள்ளது. ஆலயப் பிரகாரத்தில் வல்லப கணபதி, அகோர வீரபத்திரர், பஞ்சமுக லிங்கம், ஆத்ம லிங்கம், மாவடிப் பிள்ளையார், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், பழனி ஆண்டவர், இடும்பன், சூரியன், கஜலட்சுமி, அறுபத்து மூவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் சன்னிதிகள் இருக்கின்றன.


இத்தல அம்பாள் நீலாயதாட்சியின் கண்கள் கருநீலத்தில் அழகானது. நான்கு திருக்கரங்களுடன் நின்றத் திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறார். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமளா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரின் கீர்த்தனைகளால் அலங்கரிக்கப்பட்ட வள் இந்த அன்னை. இங்குள்ள நீலாயதாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மனைப் போலவே கன்னியாக காட்சித் தருகிறாள்.


#இரட்டைநோக்குநந்தி :


அம்பாள் இங்கு கன்னியாக இருப்பதால், ஈசன் நந்தியை அவளுக்குப் பாதுகாப்பாக அனுப்பினார். ஆனால் நந்தி, ‘தான் அனுதினமும் ஈசனையும் தரிசிக்க வேண்டும்’ எனக் கேட்டார். உடனே ஈசன், அம்பாள் சன்னிதியில் இருந்து கொண்டே தம்மை வழிபடும்படி கூறினார். இதனால் அம்பாள் எதிரில் உள்ள நந்தி தன் கழுத்தை முழுமையாக திருப்பி, சிவன் சன்னிதியைப் பார்த்த படி உள்ளது. நந்தி தனது இடது கண்ணால் ஈசனையும், வலது கண்ணால் அம்பாளையும் பார்த்தபடி இருப்பது இவ்வாலயத்தின் சிறப்பம்சம். இதனை ‘இரட்டை நோக்கு நந்தி’ என்கிறார்கள். இந்த நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து, ஈசன், அம்பிகை, நந்தி என முறைப்படி தேன் அபிஷேகம் செய்து, 5 நெய் தீபங்கள், 5 சந்தனாதி தைல தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.


#வழிபாட்டு_பலன் :


இவ்வாலயத்தில் உள்ள அகோர வீரபத்திரரை, பவுர்ணமி நாளில் வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வறுமை அகலும். இத்தல வெண்ணெய்பிரான், காசி விஸ்வநாதர், அருணாசலேஸ்வரர் சன்னிதிகள் இரட்டிப்பு பலன்களை அளிக்கவல்லவை. இங்குள்ள பைரவரை வெள்ளி மற்றும் அஷ்டமி நாட்களில் முந்திரி மாலை அணிவித்து வில்வ அர்ச்சனை செய்து, நறுமண மலர்மாலை சூட்டி 9 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கிரக தோஷங்கள் அகலும். இங்குள்ள சனீஸ்வரர், தசரதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்கிறார்கள். இவரை 9 நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் சகல விதமான சனி தோஷங்களும், சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.


பிரதோஷத்தில் பெருமாள் :


சிவன் கோவில்களில் பிரதோஷத்தின் போது ஈசனும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வார்கள். ஆனால் இத்தலத்தில் #மோகினி வடிவில் #பெருமாளும் அவர்களுடன் #புறப்படுகிறார். இவரை #பிரதோஷத்தின் போது மட்டுமே #தரிசிக்க #இயலும். மற்ற நாட்களில் பெருமாள், காயாரோகணேஸ்வரர் சன்னிதியிலேயே இருக்கிறார். #பிரதோஷத்தின்போது #மோகினி_வடிவில்
#பெருமாள் புறப்பாடாகும் #சிவதலம் இது #ஒன்றேயாகும்.


நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.


#ஸ்ரீராமஜயம்
 

Latest ads

Back
Top