• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் திருக்கோ&#2

praveen

Life is a dream
Staff member
அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் திருக்கோ&#2

அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் திருக்கோயில் !!


? சேலம் மாநகர் அருகேயுள்ள ஆலயம் !! ?


ராம ஜன்ம பூமியாம் அயோத்தி மாநகரையும், அங்கே அருள்பாலிக்கும் ராமபிரானையும் தரிசிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால், பொருளாதாரம், வயோதிகம் முதலான காரணங்கள் அயோத்திக்குச் செல்ல பெரும் தடைகளாகத் திகழ்கின்றன என்ற மனக் குறையா உங்களுக்கு?


கவலையை விடுங்கள். நம் தமிழகத்தின் , சேலம் மாவட்டத்திலும் ஓர் அயோத்தி இருக்கிறது !! இந்தத் தலம் வட அயோத்தியின் மகிமைக்கு சற்றும் குறைவில்லாதது என்றே சொல்லலாம். ஆம் ! அயோத்தியாவாசிகள் தரிசிப்பதற்கு முன்னதாகவே, ராமபிரான் தமது பட்டாபிஷேகக் கோலத்தைக் காட்டியருளிய திருத்தலம் , சேலம் மாவட்டத்தின் அயோத்தியாபட்டணம் !! இங்குள்ள அருள்மிகு கோதண்டராமர் ஆலயத்துக்குச் சென்றால், நாமும் தரிசிக்கலாம் ! சக்கரவர்த்தி திருமகனின் பட்டாபிஷேகக் கோலத்தை !!


ஆதிகாலத்தில் இந்தப் பகுதியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்தது. ராவண வதம் முடிந்து திரும்பிய ராமபிரான், இவ்வழியே வரும்போது, முனிவரைச் சந்தித்தார். பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளின்படியும், விபீஷ்ணனின் பிரார்த்தனையை ஏற்றும் இந்த இடத்தில், சீதாபிராட்டியுடன் சேர்ந்து பட்டாபிஷேகக் கோலத்தை காட்டியருளினாராம் ராமபிரான் !! ஆக, அயோத்தியில் பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தருவதற்கு முன்பாகவே, இங்கு முதன்முதலாக பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தந்ததால்தான் இவ்வூர் அயோத்தியா பட்டணம் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகின்றனர். இங்கே, ராமர் மூன்று நாட்கள் தங்கி இருந்ததாகக் கூறுகின்றனர்.


இன்னொரு விசேஷ அம்சம்... இத்தலத்தில் மட்டுமே ராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு வஅமர்ந்திருக்கின்றனர். ராமர் மற்றும் சீதைக்கு பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோர் சேவை சாற்றியபடியும், அங்கதன், சுக்ரீவன், ஆஞ்சநேயர் ஆகியோர் ராமபிரான்-சீதாதேவியை சேவித்தபடியும் உள்ளனர் !! ராமரின் மகிமைகளை உணர்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான- தகடூர் என்ற தருமபுரியை ஆண்ட அதியமான்தான் இத்திருத்தலத்தின் கருவறையைக் கட்டியதாகச் சொல்கிறார்கள்.


கட்டடச் சிறப்புக்கும் அத்தாட்சியாகத் திகழ்கிறது இந்த அருள்மிகு கோதண்டராமர் ஆலயம் !! இந்தக் கோயிலின் முன்மண்டபமானது தேர் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது ! வடக்கு வாசல், தெற்கு வாசல் என இரண்டு வாயில்கள் இந்த மண்டபத்தில் இருக்கின்றன. இதன் மேற் கூரையில் திகழும் ராமாவதார மகிமைகளை உணர்த்தும் ஓவியங்கள், மிக அற்புதம் !! மூலிகை வண்ணப்பூச்சுகளைக் கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியங்கள், பக்தர்களின் உடலில் உள்ள பிணிகளைப் போக்குவதாக நம்பிக்கை.


இங்குள்ள இருபத்தெட்டு தூண்களிலும் ராமரின் பெருமைகளைப் பறைசாற்றும் விதத்தில் தத்ரூபமாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் ராமாயண காலத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. இந்த இருபத்தெட்டு தூண்களில், நான்கு மூலைகளில் உள்ளவை இசையை உண்டாக்கும் தூண்களாகத் திகழ் கின்றன !! இந்த மண்டபத்தைக் கட்டிய சிற்பியும், நாக்கு அறுபட்ட நிலையில் தூண் சிற்பமாகத் திகழ்கிறார்! இந்தக் கோயில் பற்றிய ரகசியங்கள் வெளியே தெரியாமல் இருக்க வேண்டியே சிற்பியின் நாக்கு துண்டாக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.


மூலஸ்தானத்துக்கு முன்புறம் உள்ள மண்டபத்தை திருமலை நாயக்கர் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், மண்டபத்தில் உள்ள கல்தூண்களில் திருமலை நாயக்கர், அவரது மனைவி மற்றும் அவர்களுடைய பிள்ளைகளின் சிற்பங்களைக் காணலாம். கோயிலின் வடக்கு வாசலுக்கு எதிராக ஆழ்வார்கள் சந்நிதியையும், தெற்கு வாசலுக்கு எதிராக சக்கரத்தாழ்வார் சந்நிதியையும் தரிசிக்கலாம். ஆஞ்சநேயருக்கும் சந்நிதி உண்டு !


இத்திருத்தலத்தில், வடதிசையில் தனியாக சிறு சந்நிதி அமைத்துக்கொண்டு குடிகொண்டுள்ள ஆண்டாளுக்குப் பூரம் நட்சத்திரத்தன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது !! அப்போது ‘திருப்பாவை’ பாடப்படுகிறது. திருமணத் தடை உள்ளவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், இந்தக் கூட்டு வழிபாட்டில் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசித்தால், தங்களுடைய குறைகள் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


இத்தலத்தின் தல விருட்சம்- "வன்னி மரம்" . புரட்டாசி மாதத்தின் ஐந்து சனிக் கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். மூன்றாவது சனிக் கிழமை ராமர்-சீதை கல்யாண உற்சவம் நடைபெறும். சித்திரை மாதத்தில் வரும் ராம நவமி அன்று இத்திருத்தலத்தில் மிகப்பெரிய அளவில் சிறப்பான வழிபாடு நடைபெறும். அன்று வழங்கப்படும் நீர்மோர் தானம் புகழ்பெற்றது.


இந்த ஆலயத்துக்கு வந்து கோதண்ட ராமசுவாமியை வணங்கினால், திருமணத் தடை உள்ளவர்களுக்குத் தடை நீங்கி, தாலி பாக்கியம் கிடைக்கும் !! ராகு கேது தோஷம் நிவர்த்தி ஆகும் !! வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் , சொத்துத் தகராறுகள் நிவர்த்தி ஆகும் , குடும்பப் பூசல்கள் நீங்கும் , குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நீங்களும் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று அயோத்தி நாயகனை வழிபட்டு, வாழ்க்கை வளம் பெற வரம்பெற்று வாருங்கள்.


மூலவர் : அருள்மிகு கோதண்டராமர் !!


திருக்கோலம்: பட்டாபிஷேகத் திருக்கோலம் !!


தல விருட்சம்: வன்னி

பிரார்த்தனைச் சிறப்பு: சகல வேண்டுதல்களையும் நிறைவேற்றும் தலம் இது !! ஆண்டாளுக்குப் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் கூட்டுப்பிரார்த்தனையில் திருப்பாவை பாடப்படுகிறது. திருமணத் தடை உள்ளவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு வழிபட்டால், குறைகள் யாவும் நிவர்த்தி ஆகும் !


நடை திறந்திருக்கும் நேரம்:


காலை 6 முதல் மதியம் 1 மணி வரையிலும்,


மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.


விசேஷ நாட்களில் கூடுதல் நேரம் திறந்திருக்கும்.


எப்படிச் செல்வது ? :


சேலத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, கோதாண்டராம சுவாமி திருக்கோயில். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆத்தூர் அல்லது அரூர் செல்லும் பேருந்தில் சென்று, அயோத்தியாபட்டணம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ள வேண்டும். அங்கிருந்து அரூர் சாலையில், நடந்து செல்லும் தொலைவிலேயே கோயில் அமைந்துள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கோம்பூர் செல்லும் நகரப் பேருந்தில் சென்றால், கோயில் முன்பாகவே இறங்கிக்கொள்ளலாம் !!!
 

Latest ads

Back
Top