• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருமழிசையாழ்வார்

praveen

Life is a dream
Staff member
திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார்
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


திருமழிசையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.
தைமாதம்
மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான
ஶ்ரீ சக்கரத்தின் அம்சமாக திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
பிற பெயர்கள் :


பக்திசாரர்


உறையில் இடாதவர்
-வாளினை உறையில் இடாத வீரன் எனும் பொருள்பட (இங்கு ஆழ்வாரின் நா வாள் எனப்படுகிறது)


குடமூக்கிற் பகவர் -


திருமழிசையார்


திருமழிசைபிரான்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


பிரபந்தங்கள் :


நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக்கொண்ட நூலையும் இயற்றியுள்ளார்.


இவை இவர் கும்பகோணத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் யோகத்தின் பயனாக வெளிவந்தன. இவை நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் முறையே மூன்றாவதாயிரத்திலும், முதலாயிரத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இவருடைய பிரபந்தங்கள் தான் முதன்முதலில் வேறு தெய்வங்களுக்கு மேலாக திருமாலை உயர்வாகச்சொல்லியவை.
( இவருக்கு முன்தோன்றிய முதலாழ்வார்கள் சமரச மனப்பான்மை யுடன் சிவனையும் உயர்வாகச் சொல்லியவர்கள்.)
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
பரமயோகி :


இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். உண்மைத் தத்துவம் என்னவென்று அறிய முயன்று சாக்கியம், சமணம், சைவம், நாத்திகம் (வேத மறுப்பு) உட்பட ஒவ்வொரு சமயமாகப் புகுந்து ஆராய்ந்தார். சைவசமயத்தைச் சார்ந்திருக்கும்போதுதான் திருமயிலையில் பேயாழ்வாரை ஆசிரியராகப் பெற்றார். முக்கண்ணனான சிவபெருமான் இவரைச் சோதித்து இவருடைய பக்தியை மெச்சி இவருக்கு 'பக்திசாரர்' என்ற சிறப்புப்பெயரை அருளிச் செய்தார். சைவசமய சிவவாக்கியார் தான் பின்னாளில் திருமழிசையாழ்வார் என அழைக்கப்பட்டார் எனும் கருத்தும் நிலவுகிறது.
அதற்கு சான்றாக இவருடைய பாடல்கள் மட்டும் திவ்ய பிரபந்தத்தில் மற்றைய ஆழ்வார்களின் பாடல்களிலிருந்து வேறுபடும் வகையில் சித்தர்வகை பாடல்களாய் பரிபாஷை எனப்படும் மறைப்பொருள் நிறைந்தனவாக விளங்குகிறது.


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
பிறப்பின் அற்புதம் :


பார்க்கவர் என்னும் முனிவர் திருமழிசையில் யாகம் புரிகையில் அவர் மனைவியார் கருவுற்று பன்னிரண்டு திங்கள் கழித்து,
கை, கால், முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தைப் பெற்றெடுத்தார்.
அத்தம்பதியர் மனம் தளர்ந்து அதனைப் பிரம்புத்தூற்றின் கீழ் விட்டுச் சென்றுவிட்டார்கள்.
ஆண்டவன் அருளால் அப்பிண்டம் எல்லா உறுப்புகளும் அமையப்பெற்ற ஓர் அழகிய ஆண்குழந்தையாகி அழத் தொடங்கியது.
அக்கணம் அவ்வழியே வந்த மகப்பேறு இல்லாத தம்பதிகளான பிரம்புத் தொழில் புரியும் திருவாளன், பங்கயச்செல்வி என்பவர்கள் குழந்தையை கண்டெடுத்து வளர்க்க தீர்மானித்தனர்.


என்ன விந்தை! அக்குழந்தையை அவளே பெற்றாள் என்னும்படி அவள் மார்பில் பால் சுரந்தது.
ஆயினும் அப்பாலை குழந்தை குடிக்க மறுத்தது. பலநாள் வரை பால் உண்ணாமல் இருந்தும் உடல் சிறிதும் வாடவில்லை. இவரின் புகழைக் கேள்வியுற்று அருகில் உள்ள சிற்றூரில் இருந்துவந்த வயதான தம்பதியர் அன்புமிக கொடுத்த பாலை உண்ண ஆரம்பித்தார். சிறிதுகாலம் இவ்வாறு செல்கையில் தமக்கு பால் கொண்டுவந்து தரும் இத்தம்பதிக்கு ஏதேனும் கைமாறு செய்யும் பொருட்டு ஒருநாள் தனக்கு கொடுத்த பாலில் மீதத்தை அவர்கள் சரிபாதி உண்ணுமாறு செய்தார். இதன் மூலம் இளமை மீண்ட அத்தம்பதிகளுக்கு பிறந்த ஆண்மகவே பின்னாளில் கணிகண்ணன் எனும் பெயரில் திருமழிசையாருக்கு அணுக்க சீடரானார்.
------------------------
பிரம்மா அஸ்வமேத யாகம் நடத்த சத்யவிரதத் க்ஷேத்திரமான காஞ்சிக்கு வந்து உத்தரவேதி என்னும் யாகசாலையில் யாகம் வளர்த்தார். ஆனால் தனது மனைவியான சரஸ்வதியை விட்டு காயத்ரி தேவியுடன் யாகத்தைத் தொடங்கினர். இதனால் வெகுண்ட சரஸ்வதி உலகை இருளாக்கினார் .
உடனே நாராயணன் விளக்கொளிப் பெருமாளாகத் திருதன்காவில் தோன்றினர்.
யாகத்தைத் தொடர்ந்த பிரம்மாவை தடுக்க, சரஸ்வதி சரபம் எனும் பறவை மிருக உருவில் அசுரனை ஏவ, நாராயணன் எட்டுக் கைகளில் திவ்ய ஆயுதங்களுடன் அட்டபுயகரனாய் வந்து சரபத்தை அழித்தார். பின்னர் பிரம்மா மீண்டும் தொடர்ந்த யாகத் தீயை அழிக்க, சரஸ்வதி தேவி தானே வெள்ளப்பெருக்காய்வேகவதி ஆறாய்ப் பெருகிவர, பெருமாள் தானே அணையாய் நதியின் குறுக்கே கிடந்து நதியின் போக்கை மாற்றி யாகத்தின் புனிதத்தீயைக் காத்த தலமே திருவெஃகா ஆகும்.
இதனாலே பெருமாள் வெஃகானை கிடந்தான் என ஆழ்வர்களால் அருளப்படுகிறார்


அப்பேர்ப்பட்ட புண்ணிய பூமியாம்
திருவெஃகா திருத்தலத்தில்
திருமழிசையார் தனது சீடர் கணிகண்ணனுடன் சிறிதுகாலம் தங்கி, திருவெஃகாவில் குடிகொண்டுள்ள இறையாகிய யதோத்காரிக்கு கைங்கரியம் செய்து வரலானார்கள். அவ்வாறு இருக்கையில் அவர்களின் குடிலை தினமும் தூய்மை செய்து வரும் கைம்மாறு கருதாத வயது முதிர்ந்த பெண்ணை அழைத்து ஆசியளிக்க விரும்பினார் ஆழ்வார். வேண்டுவன கேள் என ஆழ்வார் கேட்க, வயது முதிர்வால் ஏற்பட்ட இயலாமையையும் அதனால் தன்னுடைய சேவை முழுமையடையாமல் இருப்பதையும் கூற என்றும் இளமையாக இருக்கும்படி வரம் நல்கினார் ஆழ்வார். நித்ய யவனமும், ஈடில்லா எழிலும் பெற்ற அப்பெண்ணை கச்சிப்பதியில் அரசுபுரிந்த பல்லவராயன் எனும் அரசன் விரும்பி மணம்புரிந்தான். பன்னாட்கள் கழிந்தும் மாறாத தன் மனையாளின் யவனத்தின் காரணம் வினவ, அப்பெண் ஆழ்வாரின் புகழை எடுத்துரைத்தாள். அரசன் ஆழ்வாரின் சீடரான கணிகண்ணனிடம் தன் விருப்பத்தை சொல்ல, ஆழ்வார் ஒருநாளும் அரசனின் இவ்வற்ப ஆசைக்கு அருளமாட்டார் என்று பதிலளிக்க, குறைந்தபட்சம் தன்னை ஏற்றிக் கவிதையாவது பாடுமாறு கணிகண்ணனை வேண்ட
"அவர் நாராயணனை அன்றி எந்த நரனையும் பாடேன்" எனக் கூறி திருமாலைப் பாடினார்.
கோபமுற்ற அரசன் கணிகண்ணனை நகரைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டான். யாவும் கேள்வியுற்ற அவருடைய குரவர் திருமழிசைப்பிரான், 'உம்முடன் நானும் வருவேன்' என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் கச்சிப்பதி கோவிலுக்குச் சென்று ஆண்டவனை நோக்கி,


"கனிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டா -


துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக்கொள் "


என்று விண்ணப்பம் செய்தார். அப்பெருமானும் அப்படியே செய்து திருமழிசைப் பிரானைத் தொடர்ந்து சென்றார்.
பெருமாளை தொடர்ந்து திருமகளும் செல்ல கச்சி நகரம் இருண்டு மங்கலம் குறைந்தது.


இதை மறுநாள் அறிந்த அரசன் வருத்தமுற்று கணிகண்ணனைத் தேடிச்சென்று
" தனது தவறைமன்னித்து "
அவரையும் அவர் குரவரையும் கச்சிப்பதிக்குத் திரும்பும்படி வேண்டிக் கொண்டனர். கணிகண்ணன் திருமழிசைப் பிரானை வேண்ட அவரும் ஆண்டவனை நோக்கி


கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சிமணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.


என்று வேண்ட திருமகள்நாதனும் அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு.


என்ன ஒரு அழகான வெண்பா!
இரு வெண்பாக்களிலும் உள்ள ‘துணிவுடைய செந்நாப் புலவன்’ என்ற சொற்றொடரில் என்ன ஒரு கம்பீரம்!


((சமண மதத்தில் மருள் நீக்கியாராக இருந்தவர் திருநாவுக்கரசராக மாறி சைவத்தில் சேர்ந்து விட்டார் என்று கேள்வி ப்பட்டதும் மன்னன் மகேந்திர பல்லவன் கோபப்பட்டான். அவரை விசாரணைக்கு அழைத்துவர ஆள் அனுப்பினான். கட்டளையைக் கொண்டு போன ராஜ தூதர்கள் அந்த மகா புருஷரைக் கொஞ்சம் அச்சுறுத்தினார்கள். ‘எனக்குத் தலைவன் சிவபெருமான்தான்; உங்களுடைய அரசன் கட்டளையை நான் மதிக்க மாட்டேன்!’ என்று திருநாவுக்கரசர் கூறித் தூதர்களை திடுக்கிடச் செய்தார். ‘உம் மைச் சுண்ணாம்புச் காளவாயில் போடுவோம் ; யானையின் காலால் மிதிக்கச் செய்வோம், கழுத்திலே கல்லைக் கட்டிக் கடலில் போடுவோம்’ என்றெல்லாம் தூதர்கள் பயமுறுத்திய போது திருநாவுக்கரசர் ஒரு பாடலைப் பாடினார்.


‘நாமார்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்பமில்லை’


அரச கட்டளை வரும்போது ‘பணிவோமல்லோம்" என்று கூறும் நெஞ்சத்தில் எத்தனை துணிவு!
- ‘ஒரு லோக்கல் கவுன்சிலரை எதிர்த்தால் வீட்டுக்கு ஆட்டோ வருமோ’ என்று பயப்படும் தலைமுறையில் வாழும் நமக்கு, எல்லாவற்றையும் துறந்த ஞானிகளின் தைரியமும் வீரமும் ஆச்சரியமாகத் தான் தெரிகின்றன ))


அவ்வாறு அவர்கள் ஒருநாள் தங்கியிருந்த இடம் ஓர் இரவு இருக்கை என்று அழைக்கப்பட்டு இன்று மருவி ஓரிக்கை என அழைக்கப்பட்டுவருகிறது
 

Latest ads

Back
Top