Tamil Brahmins
Results 1 to 1 of 1
 1. #1
  Join Date
  Jan 2006
  Location
  Madras
  Posts
  2,312
  Downloads
  35
  Uploads
  38

  தொண்டரடிப்பொடியாழ்வார்


  0 Not allowed!
  ஸ்ரீமந் நாராயணனின் பெருமைகளை உலகிற்கு அளிப்பதற்காக ஆழ்வார் பதின்மர் இப்பூவுலகில் அவதரித்தனர். இதில் எட்டாவது ஆழ்வாராகத் தொண்டரடிப்பொடியாழ்வார் தோன்றினார். பெருமானின் தொண்டர்களான அடியவர்களின் திருவடித்தாமரையின் அடித்துகளாகத் தன்னை பாவித்துக் கொண்டார்..
  சோழ நாட்டில் உள்ள திருமண்டங்குடியில் 8-ஆம் நூற்றாண்டு பிரபவ ஆண்டு மார்கழித் திங்கள் தேய்பிறையில் சதுர்த்தசி திதியில் கேட்டை நட்சத்திரத்தில் பெருமானின் ஸ்ரீ வனமாலையின் அம்சமாக தொண்டரடிப்பொடியாழ்வார் அவதரித்தார். இவரது இளமை பெயர் விப்ரநாராயணன் என்பதாகும்.
  விப்பிரநாராயணர் திருமணத்தில் விருப்பமற்று, நாள்தோறும் பல கோவில்களுக்குச் சென்று, இறைவனை வணங்க எண்ணியவராய் முதற்கண் திருவரங்கம் திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் மேற்கொண்டு வந்தார்.
  அன்றலர்ந்த மலர்களைப் பறித்து அழகான பூச்சரங்களாகத் தொடுத்து அரங்கனுக்கு சமர்ப்பித்து வரும் வேளையில் தேவதேவி என்ற சோழநாட்டு கணிகையிடம் விருப்பம் கொண்டு தன்னையே மறந்தார். கணிகையால் தன் செல்வம் யாவும் இழந்த இவருக்காக அரங்கன் தன் கோயில் வட்டிலைக் கொடுத்துதவ, அதை களவாடிய பழி இவர் மீது வீழ்ந்து அரசன் முன் இவரை இட்டுச்சென்றார்கள். முடிவில் அரங்கனால் உலகத்திற்கு உண்மை அறிவிக்கப்பட்டதோடு, இவரையும் ஆட்கொணடார். மீண்டும வந்த இவர் தன் இறுதிநாள்வரை அரங்கனுக்கே அடிமைப்பூண்டார். தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
  இவர் இயற்றிய திருமாலை 45 பாசுரங்கள் மற்றும் திருப்பள்ளியெழுச்சி 10 பாசுரங்கள் ஆகியவையாகும். அரங்கனை துயிலெழுப்புவதற்காக திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள் பாடப்பட்டது. இன்றும் வைணவ குடும்பங்களில் நித்யானுசந்தானமாக இப்பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றது.
  அடுத்து இவர் பாடியது திருமாலை பாசுரங்கள். திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதவராவார் என்று சொல்லப்படுகிறது. இந்த 45 பாசுரங்களிலும் அவர் இத்தகைய எளியவனை அவர் கடாட்சிக்க வேண்டுமா என்பதுதான். பாவம் புரிந்த நீசனான என்னையே அருளிய பட்சத்தில் உங்களை அருள மாட்டானா என்று வினவுகிறார்.
  பெரியவாச்சான்பிள்ளை தனது வியாக்யானத்தில் திருமாலைப் பாசுரங்களை பின்வருமானறு பிரிக்கின்றார்.
  முதல் மூன்று பாசுரத்தில் தான் அனுபவித்த பகவானையும் அவனது திருநாமங்களையும் பற்றிச் சொல்கிறார்.
  அடுத்துவரும் பதினோறு பாசுரங்களில் தான் அனுபவித்ததை உபதேசமாக அடியவர்களுக்குத் தெரிவிக்கிறார்.
  அடுத்து வரும் பத்து பாசுரங்களில் பெருமான் ஆழ்வாருக்குச் செய்த உதவிகள் யாவை என்பதாகும்.
  மேற்கொண்டுவரும் பத்து பாசுரங்களில் தன்னிடம் உள்ள குணங்களற்ற தன்மையும், தோஷங்கள் நிறைந்த நிலையினையும் கணக்கிட்டு எதனால் தனக்கு உதவினான் என்பதைக் கூறுகிறார்.
  இத்தகைய பாவியானவனான நான் அரங்கனிடம் செல்வதற்கான தகுதியினை இழந்தேன் என்று வருந்தி பெருமானை விட்டு விலகிச் செல்கின்றார். ஆழ்வாரின் இத்தகைய வருத்தத்தினைப் போக்க, திருவிக்ரம அவதாரத்தில் நல்லவர், தீயவர் அனைவருக்கும் தான் அருளியதையும், கிருஷ்ணாவதராத்தில் கோவர்த்தனகிரியைத் தாங்கிப்பிடித்து நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி மக்களையும், பசுக்கூட்டங்களையும் காத்ததைத் தெரிவித்து அவர்களைவிட நீ தாழ்ந்தவன் இல்லை என்பதை எடுத்துரைத்து அவரைத் தேற்றினார். அதனைக் கேட்ட ஆழ்வார் நெக்குருகி அரங்கனின் திருவடியைப் பற்றினார்.
  அடுத்து வரும் மூன்று பாசுரங்களில் எவை இல்லையென்றாலும் நான் பெருமானை விடமாட்டேன் என்று பாடுகிறார்.
  அடுத்து வரும் 38 ஆவது பாசுரம் உயிர் பாசுரமாகும்.


  மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிகவு ணர்ந்து
  ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புல னகத்த டக்கி
  காம்பறத் தலைசி ரைத்துன் கடைத்தலை யிருந்துவாழும்
  சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே.


  இப்பாசுரத்தில் சரணாகதி தத்துவத்தை அழகுற இயம்பியுள்ளார்.மேலும் ஒரு படி சென்று இந்த சரணாகதியை நான் பண்ணினேன் என்று சொன்னால் அதில் சிறிதளவு தன்னலம் உள்ளது. இதை நான் செய்தேன் என்பதிலிருந்து விலகி இந்த சரணாகதியை பண்ணிவித்துக் கொண்டான் என்ற நிலை வரவேண்டும் என்று ஆழ்வார் எண்ணினார். பகவானே நீயே உன் ஆனந்தத்துக்காக உன் திருவடிகளில் சேர்த்துக்கொள்கிறாய் என்று கூறி அவனாகவே பற்றுவித்துக் கொள்ளுகிறான் என்றும் நான் செய்தது அவன் செயல் என்றும் கூறுகிறார் ஆழ்வார். இத்தகைய நிலையே முழு சரணாகதி என்பதாகும் என்பதை ஆழ்வார் வலியுறுத்துகிறார். அவனாலே அவனை அடைவது எப்படி என்பதை ஆழ்வார் சாதித்துள்ளார்.
  அடுத்து வரும் ஏழு பாசுரங்கள் பாகவதர்களின் பெருமை, அவர்களின் உயர்வு, பெருமான்மீது அவர்கள் கொண்டிருக்கும் பக்தி போன்றவற்றைப் பாடியுள்ளார். சாதி, பேதம் பார்க்காமல் அவர்கள் எல்லோரும் பெருமானின் தொண்டர்கள் என்ற நோக்கில் பார்க்குமாறு நமக்குத் தெரிவிக்கின்றார்.
  இவ்வாழ்வாரின் சிறப்பு என்னவெனில் மற்ற ஆழ்வார் திவ்ய தேசத்திலுள்ள அனைத்து பெருமானையும் பாடியுள்ளார்கள். ஆனால் தொண்டரடிப்பொடியாழ்வாரோ திருவரங்கனைத் தவிர வேறு எந்த பெருமானையும் பாடவில்லை. அரங்கனைப் பாடிய வாயால் மற்றோர் குரங்கனைப் பாடேன் என்றும் தன் உயிர் மூச்சே அரங்கன் என்றிருந்தார். அரங்கனைக் கண்ட கண்கள் வேறு எதையும் காணா என்றார்.
  மார்கழி கேட்டையான அவரது திருநட்க்ஷத்திர நன்னாளில் ஆழ்வாரின் திருவடிகள் வாழி, வாழி என்று போற்றி அவரது பாசுரங்களைப் பாடிப் பெருமானின் திருவடித்தாமரைகளை அடைவோம்.
  Contact - Guidelines

  Since i do not read all the posts, if you need to bring something to my attention report the post or send me a message with the link.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •