• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அனுமன் ஜெயந்தி பற்றி

Status
Not open for further replies.

praveen

Life is a dream
Staff member
அனுமன் ஜெயந்தி பற்றி

தேவர்களின் உஷக்காலம் என்றழைக்கப்படும் மார்கழி மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்த மாதம். மாதங்களில் நான் மார்கழி என மாதவன் திருவாய் மலர்ந்ததின் நோக்கமே தனது பக்தனான அனுமன் பிறந்த மாதம் என்பதால் தான் என்றால் அது மிகை ஆகாது. உலகமெங்கும் உள்ள வைணவர்கள் மட்டுமின்றி அனைத்து இந்து மக்களும் போற்றும் நாள் அனுமன் ஜெயந்தி.


இவர் மார்கழி மாதத்தில் அமாவாசை திதி நிறைந்த வேளையில் மூல நட்சத்திரத்தில் வாயு பகவானுக்கும் அஞ்சனை தேவிக்கும் மகனாக அவதரித்த நாளே அனுமன் ஜெயந்தி நாளாக போற்றப்படுகிறது. வாயுதேவனின் அருளால் பிறந்ததால் காற்றைப் போல் எல்லா திசைகளிலும் திரியும் ஆற்றல் பெற்று இருந்தார். குழந்தை பருவத்திலேயே மலை சிகரங்களை தாண்டுவார்.


அனுமனுக்கு குருவாக இருந்து கல்வி கற்றுக்கொடுத்தவர் சூரிய பகவான். அவருக்கு நன்றி கடன் பட்டிருந்த அனுமன், ""தங்களுக்கு குருதட்சணையாக என்ன தர வேண்டும்? என கேட்டார்.சூரியன், தன் மகன் சுக்ரீவனுக்கு மந்திரியாக இருந்து அவனை வழிநடத்திச் செல்லும்படி கூறினார். அதன்படியே ஆஞ்சநேயர் சுக்ரீவனுடன் இருந்து, சூரியனுக்கு தன் நன்றியை செலுத்தினார்.


இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். தன்னலமற்ற தொண்டர். தன்னிகரற்ற பிரம்மசாரி. எந்தவித பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும், பக்தியுடனும் அவர் ஸ்ரீராமனுக்கு தொண்டு செய்தார்.


ஆஞ்சநேயருக்கு சுந்தரன் என்றும் ஒரு பெயர் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி, அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில், ஒரு காண்டத்தை சுந்தர காண்டம் என்று அவரது பெயரால் அழைத்து மகிழ்ந்தார். சொல்லின் செல்வனான அனுமன் முதன்முதலில் ராமனை சந்தித்தபோது, ‘நீ யார்?’ என்று ராமன் கேட்டார். அதற்கு, ‘காற்றின் வேந்தர்க்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன். நாமமும் அனுமன்’ என்று தன் தந்தை, தாயின் பெயருடன், தன் பெயரையும் அடக்கமாக கூறுகிறார் அனுமன்.


இலங்கையில் ராவணனுடன் போர் செய்த போது லட்சுமணன் மூர்ச்சையானான். அவனை எழுப்ப ஒரு மூலிகையைப் பறித்து வரும் படி அனுமனை அனுப்பினார் ராமன். எந்த மூலிகை எனத்தெரியாததால் ஒரு மலையையே பெயர்த்துக் கொண்டு வானவெளியில் பறந்து வந்தார் அனுமன்.எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு.


அனுமன் சீதையை தேடி சென்ற நேரத்தில் அசோகவனத்தில் சீதை தற்கொலைக்கு முயற்சிப்பதை கண்டு திடுக்கிட்டு ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று சீதை காதுபட உரக்க கூறிய ராமபக்தன் நான். ராமர் விரைவில் வந்து சிறைமீட்டு செல்வார் என்று நயம்பட உரைத்து சீதையை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினார்.


ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.


எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. இவர் அவதரிக்க போவதான செய்தியை வாயுபகவானுக்கு, பரம்பொருள் அறிவித்த ஊர், மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர் ஆகும். இந்த ஊரில் தான் திருவாசகம் தந்த மாணிக்க வாசகர் அவதரித்தார்.
தமிழ்நாட்டில் திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல், மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம் வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள் அதிகம்.
பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.


சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், ‘ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.
பாரதப்புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும், மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம். ஆஞ்சநேயர் பெரியவனாக வளர்ந்த பிறகு பெரிய கடலை தாண்டினார் என்றாலும், சிறியவனாக இருந்த போது பூமியிலிருந்து ஒரே தாவலில் சூரியனை எட்டிப்பிடித்தவர்.


அனுமனை மனத்தில் நினைப்பவர்கள் இம்மையில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கிய பலத்துடன் வாழ்வதுடன் மறுமையில் ராமன் அருளால் முக்தியும் அடைவர். ஆஞ்சநேயரை வணக்கும் அடியவர்கள் ' ஸ்ரீ ராம ஜெயம் ' கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக்கொள்ளலாம். ஒரு முறை 'ராம' என்று சொன்னால் அது ஒரு சகஸ்திர நாமம் (1008 ) தடவைகள் சொன்னதற்கு சமம் என்று சிவபெருமான் உத்தர பாகத்தில் கூறியிருக்கின்றார். அப்படி பட்ட ஆஞ்சநேயர் இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருகின்றார். தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஸ்ரீ ராமனிடத்தில் ஒப்படைத்து. தனக்காக வாழாமல் ஸ்ரீ ராமனுக்காகவே வாழுகின்றார்.


எனவே இவர் தனது பக்தர்களுக்கு அனைத்தையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தை அருளுகிறார்.
சிவனும் விஷ்ணுவும் விஸ்வரூபம் எடுத்திருந்தாலும், பொதுவாக ஆஞ்சநேயருக்கு மிகப்பெரிய உருவம் உடைய கோயில்கள் அதிகம் உள்ளது.தூத்துக்குடி அருகில் உள்ள தெய்வச் செயல்புரம் என்ற ஊரில் 75 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது சிறப்பு.


அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று


ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்


என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம்.


அன்றும் – இன்றும் – என்றும் “ஸ்ரீஇராமர்” என்று இந்த வார்த்தையை படிக்கும் – உச்சரிக்கும் நம் பக்கத்திலேயே ஸ்ரீஅனுமன் நிற்கின்றார்.
அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று
அவரது புகழ்பரப்பும் ‘அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர்.இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் ராமாயணம் முந்திய காவியம். அது நமக்கு அரிய பொக்கிஷங்களான இரண்டு ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது.
ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன்; மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம். "ராமா' என்ற நாமம் ஒன்றையே சதா ஜெபிக்கும் பக்தர்களில் தலைசிறந்த ரத்தினமாகத் திகழ்பவன் அனுமன். "ராமா' என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும்.


ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது
உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்.
'ராம' என்ற மந்திரத்துக்கு பாவங்களைப் போக்கடிப்பது' என்று பொருள்.


ஸ்ரீ ராமாயண சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் எல்லாம் அனுமன் நேரில் வந்துஅடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபந்நியாசத்தை பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சகல சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கி பேரருள் புரிகிறார்.


ஒரு முறை ராமருக்கும், ராவணனுக்கும் போர் நடந்தது. இதில் ராவணன் நிராயுதபாணியானான். இதனால் ராமர் ராவணனை கொல்ல மனமின்றி,"இன்று போய் நாளை வா' என திருப்பி அனுப்பிவிட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குத்தான் என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், "மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான். ராமரை அழிப்பதற்காக மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்பும்படி ராமரிடம் கூறினான்.


ராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றிபெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல வாழ்விற்காக மயில் ராவணனை அழித்தார். இப்படி பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால், பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக "பஞ்சமுக ஆஞ்சநேயர்' விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும் வளத்தையும் குறிக்கும் வகையில் "ஜய மங்களா' என்றும் அழைக்கப்படுகிறார்.


அனுமனை நினைத்து, இந்தப் பாடலைப் பாடினால் கல்விவிருத்தி, அறிவுவிருத்தி, மனநிம்மதி, செல்வவளம் பெறலாம்.


அஞ்சிலே ஒன்று பெற்றான்அஞ்சிலே ஒன்றைத் தாவிஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்
கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.


பொருள்: வாயுவுக்கு பிறந்தவன் அனுமன். ஆகாயத்தில் பறந்து, கடல் தாண்டி இலங்கை சென்றான். பூமிதேவியின் மகளான சீதையைக் கண்டான். அவளை மீட்க இலங்கைக்கு நெருப்பு வைத்தான். அவன் தன்னையே நமக்கு தந்து பாதுகாப்பான்.


விளக்கம்: பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவுக்கு பிறந்தான். வானில் (ஆகாயம்) பறந்தான். கடலை (நீர்) தாண்டினான். ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்கு பூமியை (மண்) தோண்டும் போது கிடைத்த சீதையைக் கண்டான். பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கைக்கு வைத்தான். ஆக, பஞ்சபூதங்களையும் அடக்கியாண்டவர் அனுமன். அவரை வணங்கினால் இந்த பூதங்கள் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.


அனுமன் வாலை வழிபட்டால் நினைத்த காரியத்தில் பூரண வெற்றி கிடைக்கும் ராவணனின் சபையில் அனுமன் தன் வாலால் ஏற்படுத்திய சிம்மாசனத்தில் அமர்ந்தார். அமர்ந்து ராவணின் கர்வத்தை அடக்கினார். இலங்கையில் அனுமனின் வாலுக்கு தீ வைத்தபோது சீதாபிராட்டி வேண்டியதால் வெம்மையும் குளிர்ச்சியாகவே இருந்தது. அன்பு, அறம், அருள் ஆகியவற்றின் முழு வடிவமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சநேயர் வாலில் நவகிரகங்களும் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம்.


வெண்ணெய் சாத்தி ஆஞ்நேயரை வழிபடுவது விசேஷம். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராம நாம ஜெபத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்களத்திலே வீர அனுமன் பாறைகளையும், மலைகளையும் பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார். இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம்.


போர்களத்தில் கொழுப்பு நிறைந்த அரக்கர்களையும், தமது உடல் வலிமையால் வடை தட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தை சேர்த்து அவருக்கு வடை மாலை சாத்துகின்றனர். சீதாதேவி பரிசாக வழங்கிய முத்து மாலையை சுவைத்து அதில் ராமசுகம் உள்ளதா என்று பார்த்து பிய்ந்து எறிந்தவர் அனுமான். அதுபோலவே கழுத்தில் அணிவிக்கப்பட்ட வடை மாலையையும் அவர் சுவைத்து பார்ப்பதாக ஐதீகம்.


அனுமான் கோவில்களில் அனுமாருக்கு செந்தூர திலகமிட்டு பூஜை செய்வது வழக்கம். சீதாதேவி ஒருநாள் தனது நெற்றிக்கு செந்தூர பொட்டை வைத்து கொண்டு இருந்தார். அனுமான் அதற்கு விளக்கம் கேட்டார். சீதாதேவி பதில் கூறுகையில் எனது கணவர் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காகவே செந்தூரம் பூசுவதாக கூறினார். இதையடுத்து அனுமான் கருணைக்கடவுளான ராமபிரான் என்றும் நீடுழி வாழ்வதற்காக தனது உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டார்.


ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாத வீரனாக திகழ்ந்தார். சீதையை மீட்டு வருவதற்காக அவர் ராமனிடம் எந்தவித பிரதிபலனையும் கருதவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார்.


எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டு வந்து லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரிய செயல்களை அவர் செய்தார்.தன் அறிவைப் பற்றியோ, தொண்டைப்பற்றியோ பிறரிடம் தற்பெருமையாக சொன்னதே இல்லை.


ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் திரும்ப கிடைத்தது. அங்கதன் ராஜகுமாரனாக மூடிசூட்டப்பட்டான். விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ ராமனிடம் எதுவும் கேட்கவில்லை. இதைக்கண்டு நெகிழ்ந்த ராமன், நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னைப் போன்றே உன்னையும் எல்லாரும் போற்றி வணங்குவர், என்றார். நீ எப்படி கடலைத் தாண்டினாய்? என ராமன் கேட்டார். அதற்கு அனுமன் மிகவும் அடக்கமாக, எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால் என்றார்.
வனவாசமாக 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து விட்டு, அயோத்தி திரும்பிய ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் அனைத்தும் சேகரித்து வரப்பட்டன; மங்கல கீதங்கள் இசைக்கப்பட்டன; வேதங்கள் முழங்கின; பல இன்னிசை வாத்தியங்கள் இசை மழை பொழிந்தன. சீதையும் ராமரும் சேர்ந்து அரியாசனத்தில் சீதாராமராக அமர்ந்தனர்.


அவர்களை பார்த்து எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த முனிவர்களும், நாட்டு மக்களும், பெரியவர்களும் பூமாரி பொழிந்தனர். ராமரின் பாதத்தில் ஆஞ்சநேயர் அமர்ந்திருக்க, அங்கதன் உடைவாள் ஏந்தினான். பரதன் தனது அண்ணனுக்கு வெண்கொற்றக் குடைபிடித்தான். லட்சுமணனும், சத்துருக்கனனும் வெண் சாமரம் வீசினர். பெரியவர்கள் மகுடத்தை எடுத்துக் கொடுக்க, ரகு வம்ச குருவான வசிஷ்ட முனிவர் அதை வாங்கி ராமபிரானுக்கு முடிசூட்டினார்.


நெகிழ்ந்த ராமன், அப்போது அனுமனை பார்த்து, ‘வாயுவின் புத்திரனே, இந்த ராமனின் உன்னத பக்தனே மாருதி! உதவி செய்வதில் உனக்கு ஒப்பாக யாரும் இருக்க முடியாது. எனக்கு நீ செய்த பேருதவியானது அளவு கடந்தது. அதற்கு இணையாக நான் உனக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. என் அன்பைத் தவிர விலை உயர்ந்தது எதை நான் உனக்கு தரமுடியும்’ என்று கூறி அனுமனை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார். இருவரின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
அனுமனின் திறமையையும், அவரது ராம பக்தியையும் உணர்ந்திருந்த சீதாதேவி, அனுமனுக்கு சிறப்பான ஒளி சிந்தும் முத்துமாலை ஒன்றை பரிசாக கொடுத்தார். அதனை ஆனந்தத்துடன் வாங்கிக் கொண்டார் அனுமன். பின்னர் அனைவரும் பார்க்கும் விதமாக அந்த முத்துமாலையை பிய்த்து அதில் ஒவ்வொரு முத்தாக கடித்து உடைக்க தொடங்கினார். அது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. சீதாதேவியே ஒரு கணம் அனுமனின் செய்கையைக் கண்டு திகைத்துப் போனார். ஆஞ்சநேயருக்கு பித்து பிடித்து விட்டது என்று கூறி அனைவரும் பேசத் தொடங்கி விட்டனர். அனுமனை ஏறிட்டு, ‘ஏன் இப்படி செய்தாய்?’ என்று கேள்வி எழுப்பினார் ராமர்


அதற்கு அனுமன், ‘பிரபு! உங்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ள சீதாதேவி கொடுத்த முத்துமாலையில் உங்கள் இருவரின் உருவமும் இருக்கும் என்று எண்ணித்தான் அந்த முத்துக்களை உடைத்து பார்த்தேன். ஆனால் ஒன்றில் கூட உங்களின் திருவுருவம் இல்லை. அது இல்லாத எந்த பொருளும் எனக்கு தேவையில்லை’ என்று கூறினார்.


இதனை கேட்டதும் அங்கிருந்தவர்கள், ‘இவன் முத்துமாலையை மாசுபடுத்தியதில் இருந்து தப்பித்துக் கொள்ளும் விதமாக இப்படி கூறுகிறான். நன்றாக நடிக்கிறான்’ என்று ஆளுக்கொரு விதமாக பேசத் தொடங்கினர். இதனை கேட்டதும் ராமர், ‘அப்படியானால் நீ எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறாய். உனக்குள் நானிருப்பதை அனைவருக்கும் காட்ட முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.


ஆஞ்சநேயர் வசமாக மாட்டிக் கொண்டதாக அனைவரும் கருதினர். ஆனால் ஆஞ்சநேயர், அனைவரும் திகைத்துப் போகும் செயலை அங்கு செய்தார். தன் நெஞ்சை பிளந்து காட்டினார். அதில் அந்த ராமர், தனது உள்ளம் கவர்ந்த சீதாதேவியுடன், சீதாராமராக அமர்ந்திருந்தார். ராமரின் மீது அனுமன் வைத்திருந்த அன்பை, அங்கிருந்த அனைவரும் உணர்ந்து கொண்டனர்.
பகவான் மகாவிஷ்ணு ராமனாக அவதாரம் செய்தபோது, சீதையை மீட்பதற்கு அவரது சீடரான அனுமன் உறுதுணையாக இருந்தார். அவருக்கு நன்றிக்கடன்பட்டவராக இருந்த மகாவிஷ்ணு, அனுமன் தன்னிடம் கொண்டிருந்த அன்பிற்கு அடையாளமாக, இந்த உலகம் உள்ளவரை உன் புகழும் பூமியில் நிலைத்திருக்கும். உனக்கு எவ்வளவு கொடுத்தாலும் நான் உனக்கு என்றும் கடனாளியாகத் தான்
இருப்பேன்,என்றார்.அனுமனை வணங்கினால் மகாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.


மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம். ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன்.
அனுமன் மற்றும் சுந்தரகாண்டம் ஆகிய ரத்தினங்களின் மதிப்பை அறிந்தவர்கள் அதை நழுவ விட மாட்டார்கள். தினமும் அனுமனை வணங்கி, சுந்தரகாண்டத்தின் ஒரு ஸர்க்கத்தைப் படியுங்கள். வாழ்வில் சிரமம் அணுகாது.
ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீ ராமஜெயம்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top