Tamil Brahmins
Page 1 of 4 1234 LastLast
Results 1 to 10 of 31
 1. #1
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவ


  0 Not allowed!

  மார்கழி வழிபாடு - திருப்பாவை- திருவெம்பாவை-1  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.


  திருப்பாவை

  பாடல் 1

  மார்கழித்திங்கள்மதிநிறைந்தநன்னாளால்
  நீராடப்போதுவீர்போதுமினோநேரிழையீர்!
  சீர்மல்கும்ஆய்ப்பாடிசெல்வச்சிறுமீர்காள்
  கூர்வேல்கொடுந்தொழிலன்நந்தகோபன்குமரன்
  ஏரார்ந்தகண்ணியசோதைஇளஞ்சிங்கம்
  கார்மேனிச்செங்கண்கதிர்மதியம்போல்முகத்தான்
  நாராயணனேநமக்கேபறைதருவான்
  பாரோர்புகழப்படிந்தேலோர்எம்பாவாய்


  பொருள்
  : அழகியஅணிகலன்களைஅணிந்தகன்னியரே! சிறப்புமிக்கஆயர்பாடியில்வசிக்கும்செல்வவளமிக்கசிறுமிகளே! மார்கழியில்முழுநிலாஒளிவீசும்நல்லநாள்இது. இன்றுநாம்நீராடக்கிளம்புவோம். கூர்மையானவேலுடன்நம்மைப்பாதுகாத்துவரும்அரியதொழிலைச்செய்யும்நந்தகோபன், அழகியகண்களையுடையயசோதாபிராட்டிஆகியோரின்சிங்கம்போன்றமகனும், கரியநிறத்தவனும், சிவந்தகண்களைஉடையவனும், சூரியனைப்போல்பிரகாசமானமுகத்தையுடையவனும், நாராயணனின்அம்சமுமானகண்ணபிரான்நமக்குஅருள்தரகாத்திருக்கிறான். அவனைநாம்பாடிப்புகழ்ந்தால்இந்தஉலகமேநம்மைவாழ்த்தும்.


  திருவெம்பாவை


  பாடல் 1

  ஆதியும்அந்தமும்இல்லாஅரும்பெரும்
  சோதியையாம்பாடக்கேட்டேயும்வாள்தடங்கண்
  மாதேவளருதியோவன்செவியோநின்செவிதான்
  மாதேவன்வார்கழல்கள்வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
  வீதிவாய்க்கேட்டலுமேவிம்மிவிம்மிமெய்ம்மறந்து
  போதார்அமளியின்மேல்நின்றும்புரண்டுஇங்ஙன்
  ஏதேனும்ஆகான்கிடந்தாள்என்னேஎன்னே
  ஈதேஎந்தோழிபரிலோர்எம்பாவாய்


  பொருள்
  : வாள்போன்றநீண்டகண்களைஉடையதோழியே! முதலும்முடிவும்இல்லாதஒளிவெள்ளமாய்பிரகாசிக்கும்நம்சிவபெருமான்குறித்துநாங்கள்பாடுவதுஉன்காதில்கேட்கவில்லையா? செவிடாகிவிட்டாயோ? அந்தமகாதேவனின்சிலம்பணிந்தபாதங்களைச்சரணடைவதுகுறித்துநாங்கள்பாடியதுகேட்டு, வீதியில்சென்றஒருபெண்விம்மிவிம்மிஅழுதாள். பின்னர்தரையில்விழுந்துபுரண்டுமூர்ச்சையானாள். ஆனால், நீஉறங்குகிறாயே! பெண்ணே! நீயும்சிவனைப்பாடஎழுந்துவருவாயாக!

  நன்றி : http://www.dinamalar.com/news_detail.asp?id=1919753
 2. #2
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்
  திருப்பாவை
  பாடல் 2


  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்: ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, பாவை நோன்பு நோற்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். இந்த நோன்பு காலத்தில் நெய் சேர்க்கக் கூடாது. பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே குளிக்க வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது. தீய சொற்களைச் சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.


  திருவெம்பாவை
  பாடல் 2


  பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்சீசி இவையுஞ் சிலவோ விளையாடிஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.


  பொருள்: அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது 'ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது' என்று ஆணவமாகப் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து பஞ்சணையில் படுத்திருக்கிறாய்,” என்கின்றனர் தோழிகள். உறங்குபவள் எழுந்து, “தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது?” என்றாள்.அவளுக்கு பதிலளித்த தோழியர், “ஒளிமிக்க திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. நமக்கோ நம் வீட்டு முன்பே திருவடி தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், சிதம்பரத்தில் நாட்டியம் ஆடுபவன். நம்மைத் தேடி வரும் அவன் மீது நாம் எவ்வளவு பக்தி வைக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்,” என்றனர்.

  நன்றி: தினமலர் / http://www.dinamalar.com/news_detail.asp?id=1670244
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #3
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை -3

  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

  திருப்பாவை  பாடல் - 3

  ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
  நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
  தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
  ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
  பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
  தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
  வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
  நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

  பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன்.
  அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.


  திருவெம்பாவை

  பாடல் - 3

  முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்ெதன்
  அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
  தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
  பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
  புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ
  எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமோ
  சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
  இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

  பொருள்: ''முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக

  இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற,'' என்கிறார்கள்.துாங்கிக் கொண்டிருந்த தோழி, "தெரியாத்தனமாக துாங்கி விட்டேன். அதற்காக, கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழைய அடியவர்கள் நீங்கள். பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே!'' என வருந்திச் சொல்கிறாள். வந்த தோழியர் அவளிடம், "அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது துாய்மையான அன்பென்பதும், துாய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவனை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதால் அவசரப்படுத்துகிறோம்,'' என்றனர்.


  நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1920903
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #4
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு - திருப்பாவை-திருவெம்பாவை -4

  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.


  திருப்பாவை

  பாடல் - 4

  ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
  ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
  ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
  பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
  ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
  தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
  வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
  மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


  பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி போல் சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.


  திருவெம்பாவை

  பாடல் - 4

  ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
  வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
  எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
  கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
  விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
  கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
  உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்து
  எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

  பொருள்: “ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை?'' என்ற பெண்களிடம், உறங்கிய பெண், “அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக்கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்து விட்டார்களா?'' என்றாள்.எழுப்ப வந்தவர்களோ,''அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதன்பின்பு எண்ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவனைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் துாங்கு,'' என்று கேலி செய்தனர்.  நன்றி: தினமலர் / http://www.dinamalar.com/news_detail.asp?id=1921603
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #5
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு : திருப்பாவை-திருவெம்பாவை-5  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

  திருப்பாவை

  பாடல் - 5


  மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
  துாய பெருநீர் யமுனைத் துறைவனை
  ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
  தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
  துாயோமாய் வந்து நாம் துாமலர்த் துாவித்தொழுது
  வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
  போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
  தீயினில் துாசாகும் செப்பேலோர் எம்பாவாய்


  பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் துாய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் துாய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த துாசு போல காணாமல் போய்விடும்.


  திருவெம்பாவை


  பாடல் - 5


  மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
  போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
  பாலுாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
  ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
  கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
  சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
  ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
  ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்


  பொருள்: “நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல...இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன்”சிவசிவ' என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற'' என்று தோழியை எழுப்புகிறார்கள் பெண்கள்.

  நன்றி: தினமலர்/ http://www.dinamalar.com/news_detail.asp?id=1922325
 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #6
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு : திருப்பாவை-திருவெம்பாவை-6

  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.
  திருப்பாவை

  பாடல்------6

  புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
  வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
  பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
  கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
  வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
  உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
  மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
  உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

  பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி, இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து, தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் ''ஹரி ஹரி'' என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.


  திருவெம்பாவை


  பாடல்-6

  மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
  நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
  போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
  வானே நிலனே பிறவே அறிவரியான்
  தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
  வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
  ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
  ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்


  பொருள்: மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், ''உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன்'' என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர்களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில், நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.

  நன்றி: தினமலர்/
  http://www.dinamalar.com/news_detail.asp?id=1923420
 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #7
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு : திருப்பாவை - திருவெம்பாவை-7  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.

  திருப்பாவை

  பாடல் 7

  கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
  பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
  காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
  வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
  ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
  நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
  கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
  தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

  பொருள்: அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்க வில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத் தாலியும் இணைந்து ஒலி யெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை? எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

  திருவெம்பாவை

  பாடல் 7

  அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
  உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
  சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
  தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
  என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
  சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
  வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
  என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

  பொருள்: தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த துாக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே 'சிவசிவ' என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில் பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சி வசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள்புகழ்கிறோம்.இதையெல்லாம்கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம்என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப் போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு துாரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த துாக்கத்தை நீ என்ன ஒரு பரிசாகக் கருதுகிறாயா? அதிகாலை வேளையில் துாங்கவே கூடாது. நம் பணிகளை அதிகாலை நாலரைக்கெல்லாம் துவங்கி விடவேண்டும்.


  நன்றி: தினமலர் / http://www.dinamalar.com/news_detail.asp?id=1923925
 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 14. #8
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு : திருப்பாவை- திருவெம்பாவை- 8

  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்  திருப்பாவை

  பாடல் 8

  கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

  பொருள்: கிழக்கே வெளுத்தது. மேய்ச்சலுக்கு புல்மேடுகளுக்கு எருமைகள் வந்துவிட்டன. எல்லாப் பெண்களும் குளிக்கப் போக வேண்டும் என அவசரப் படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து நிறுத்தி வைத்து விட்டு கூவிக்கூவி அழைத்துக் கொண்டிருக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமான கண்ணனை நாம் வணங்கினால், அவன் 'ஆஆ' என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். அழகே வடிவான பெண்ணே! உடனே கிளம்பு.

  திருவெம்பாவை


  பாடல் 8


  கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்? ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.


  பொருள்: உறக்கத்தின் நாயகியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் ஒலிக்கின்றன. சிவாலயத்தில் வெண் சங்கு முழங்குகிறது. உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். அவனது கருணையை வியந்து பாடுகிறோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் துாங்குகிறாய். வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமால் கூட சிவனின் அடி தேடி பாதாளம் சென்றார். பெருமையுடைய உலகத்துக்கே தலைவன் நம் சிவன். ஏழைகளின் தோழனான அவனைப் பாடி மகிழ உடனே புறப்படு.

  நன்றி: தினமலர் / http://www.dinamalar.com/news_detail.asp?id=1674549
 15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 16. #9
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!

  மார்கழி
  வழிபாடு : திருப்பாவை- திருவெம்பாவை-9

  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்
  திருப்பாவை


  பாடல் 9


  துாமணி மாடத்து சுற்றும் விளக்கெரியதுாபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.


  பொருள்: துாய ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகையில், சுற்றிலும் விளக்கெரிய, திரவியம் மணம் வீச, மெத்தையில் உறங்கும் மாமன் மகளே! உன் இல்லத்து மணிக்கதவைத் திற. மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை இவ்வளவு நேரம் அழைத்தும் அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பலால் இப்படி செய்கிறாளா? எழ முடியாதபடி யாராவது மந்திரம் போட்டு மயக்கி விட்டார்களா? மாயம் செய்பவனும், மாதவனும், வைகுண்ட நாயகனுமான நாராயணனின் புகழ்பாட எழுந்திரு.


  திருவெம்பாவை


  பாடல் 9


  முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளேபின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனேஉன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்அன்னவரே எம் கணவர் ஆவார்அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.  பொருள்: எங்கள் சிவன் பழமைக்கெல்லாம் பழமையாவன், புதுமைக்கெல்லாம் புதுமையானவன். அவனை தலைவனாகக் கொண்ட நாங்கள், அவனது பக்தர்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கு மட்டுமே தொண்டு செய்வோம். அவன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை பரிசெனக் கருதி, பணிவுடன் நிறைவேற்றுவோம். இந்த பிரார்த்தனையை மட்டும் அந்த சிவன் ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இருக்காது.

  நன்றி: தினமலர் / http://www.dinamalar.com/news_detail.asp?id=1675275
 17. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 18. #10
  Join Date
  Oct 2012
  Location
  I live in Chennai
  Posts
  7,105
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  மார்கழி வழிபாடு : திருப்பாவை-திருவெம்பாவை-10

  மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி மகிழுங்கள்.  திருப்பாவை
  பாடல் 10

  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
  மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
  நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
  போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
  கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
  தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
  ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
  தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


  பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை துாக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் துாக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல், கதவைத் திறந்து வெளியே வா.

  திருவெம்பாவை
  பாடல் 10

  பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
  போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
  பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
  வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
  ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
  கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
  ஏதவனுார் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
  ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.


  பொருள்: தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப்பாதங்கள் ஏழு பாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல்வேறு மலர்களை அணியும் திருமுடியானது வானத்தின் எல்லை களைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!

  நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1925660
 19. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
Page 1 of 4 1234 LastLast

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •