• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருவாசகமே மணி வாசகம்

  • Thread starter ramachandran girija
  • Start date
Status
Not open for further replies.
R

ramachandran girija

Guest
திருவாசகமே மணி வாசகம்

திருவாசகமே மணி வாசகம்
===================

மாணிக்க வாசகம் எழுதிய "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று கூறுவார்.

அந்த திருவாசகத்தை படித்து உள்ளம் நெகிழ்ந்திருக்கிறேன்.
படிக்கும் தோறும் புதுமை அனுபவங்கள், இறை சிந்தனை கிடைக்க பெற்றிருக்கிறேன்.

சமீபத்தில் கிருஷ்ணன் என்பவர் எழுதிய திருவாசக விளக்கங்கள் படிக்க நேர்ந்தது. (நேற்று).

அதன் சாரங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த திரி....

***** ரா. கிரிஜா, இராமச்சந்திரன் கிரிஜா (கிரிஜா சந்துரு)
 
by selvi ji .....thank you.... very much for highly spiritual thoughts...

மெய்யாகவே இறைவனிடம் அன்பு செலுத்துவதும் அவனை அடைவதும் எப்படி?’ என்று மனித உடலில் வாழும்போதே இறையனுபவம் பெற்ற மாணிக்கவாசகரிடமே கேட்டுவிடுவோம் என்ற எண்ணம் தோன்றியது. மாணிக்கவாசகர் இறைவனுக்கு எழுதிய காதல் கடிதங்களை வாசித்தால் விடை கிடைக்கும் என்று தோன்றியது. நல்லவேளை, அத்தகைய கடிதங்களைத் தொகுத்துத் ‘திருவாசகம்’ என்றும், ‘திருக்கோவையார்’ என்றும் வைத்திருந்தார்கள்.
ஒவ்வொரு கடிதமாக வாசிக்கத் தொடங்கினேன். ஒரே புலம்பலாகத் தோன்றியது. பக்கங்கள் ஓடின. சரிப்பட்டுவராது என்று மனதில்பட்டது; மூடிவைத்துவிட்டேன். சரி, குத்துமதிப்பாக ஒரு பக்கத்தைத் திறப்போம்; ஏதாவது கிடைத்தால் சரி; இல்லன்னா மூடிவைப்போம் என்று முடிவெடுத்து, ஒரு பக்கத்தைப் புரட்டினேன். ‘கோயில் மூத்ததிருப்பதிகம்’ என்ற தலைப்பைப் பார்த்ததும் ‘சப்’பென்று போய்விட்டது. இருந்தாலும் ஒருவரி வாசிப்போம் என்று பார்த்தபோது, முதல் பாடலிலேயே நான் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதோ என்று தோன்றியது.

 
Last edited by a moderator:
அந்தப் பாடலில் இறைவனிடம் அன்பு செய்வதற்கு, இறைவனிடமே ஒரு சின்ன ஒப்பந்தம் போடுகிறார் மாணிக்கவாசகர்: “அப்பனே! அம்மையோ உன் இதயத்தின் நடுவில் இருக்கிறாள்! நீயோ அம்மையின் இதயத்தினுள் இருக்கிறாய்! நீவிர் இருவரையும் என் இதயத்துள் இருத்த எனக்கு ஆசை போட்டு அடிக்கிறது. அதற்கு நீர் ஒரு சிறிய உதவி எனக்குச் செய்தால் போதும். என்னை உன் அடியார்கள் நடுவில் கொண்டு வைத்துவிடும்” என்பதுதான் அது.

உடையாள் உந்தன் நடு இருக்கும்! உடையாள் நடுவுள் நீ இருத்தி!

அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால், அடியேன் உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்! பொன்னம்பலத்து எம்
முடியா முதலே! ஏன் கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே! -திருவாச:21-1
 
புரிந்துவிட்டது எனக்கு. திரையரங்கில் வழியும் கூட்டத்தோடு கூட்டமாக நின்றாலே போதும். அக்கூட்டத்தினரே நம்மை அரங்கினுள் சென்று சேர்த்துவிடுவதைப் போல, அடியவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக இருந்தாலே போதும். அவர்களுக்கு அருளும் இறைவன் நமக்கும் அருள்வது உறுதி. அடியவர்கள் நடுவில் இருந்தால், அம்மை-அப்பனின் அருஞ்செயல்களைப் பேசுவர்; அவனின் திருவார்த்தைகளைச் சிந்திப்பர்; அவனின் திருநாமங்களைப் பாடிக் களிப்பர். அந்தச் சூழலில், சொந்த முயற்சி இல்லாமலேயே, அம்மையப்பன் நம் இதயத்தில் குடியேறிவிடுவர். என்ன அருமையான சுருக்கு வழி. நாமும் இதற்கு முயற்சி செய்து பார்த்துவிடுவது என்று ‘தீர்மானம்’ செய்துவிட்டு இறைவனைக் காணப்போகிறோம் என்ற நிறைவுடன் உறங்கினேன்.

 
ஏன் வானம் வசப்படவில்லை?
தமிழக சிவாலயங்களில் இப்போதெல்லாம் ‘திருவாசக முற்றோதுதல்’ அடியவர்களால் அதிகம் நிகழ்த்தப்பெறுகின்றன. ‘திருவாசகம் முற்றோதுதல்’ நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்துகொண்டபின்பு, திருவாசகம் ஓதுதலும், திருவாசகத்தில் உருகுதலும் அனுபவத்தில் கனிந்து வரும் நிகழ்வாக இல்லாமல், ‘திருவாசகம் முற்றோதுதல் நன்மை பயக்கும்’ என்ற நம்பிக்கை சார்ந்த ஒரு சமயச் சடங்காக நிகழ்வதாகவே ஒரு உணர்வு என்னுள் உண்டாயிற்று. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற பழமொழி தமிழரிடை வழங்கி வருவதென்னவோ உண்மைதான். ஆயினும், ஏன் பலருக்கும் அந்த வானம் வசப்படவில்லை என்ற எண்ணமே பெரிதும் தலைதூக்கியது.

 
விசாரித்துப் பார்த்ததில், ஒரு சில அடியார்கள் சரியாக வழிகாட்டினார்கள். இராமலிங்க வள்ளலார் மாணிக்கவாசகரின் அடியொற்றி, இறைவனைக் கண்டவர் என்று கூறினார் அவர். அப்படியானால் சரி, வள்ளல் பெருமானையே கேட்டுவிடுவோம் என்று முடிவெடுத்து, திருவாசகத்தைப் பற்றி வள்ளலார் உரைத்த “வான் கலந்த மாணிக்கவாசக, உன் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்” என்ற வாக்கைப் பற்றினேன். ஆம், வெறும் திருவாசக வாசிப்பு மட்டும் போதாது; ‘திருவாசகத்தில் “நான்” கலந்து பாடினாலே இறைவனைச் சிக்கெனப் பிடிக்க இயலும் என்பதை உணர்ந்தேன். அப்படி “நான்” கலந்து பாடினால் என்ன நிகழும்?

 
இதோ வள்ளல் பெருமானின் வாக்குமூலத்தைக் கேளுங்கள்:
“நல்ல கரும்புச் சாற்றினில் தேன் கலந்து, பால் கலந்து, நன்கு பழுத்துக் கனிந்த பழச்சாற்றினைக் கலந்து ...”; சிறிது பொறுங்கள்; இத்தனையும் கலந்தால், திகட்டிவிடுமே? நன்றாக இருக்குமா? என்று கேட்டேன் வள்ளல் பெருமானிடம். பெருமான் கூறினார், “இத்தகைய சுவையுடன், உங்கள் ஊனையும், உயிரையும் கலந்து விடுங்கள்; திகட்டாமல் நிலைத்த இனிமை கிட்டும்” என்றார்.

 
“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”- வள்ளலார் பெருமான்.

இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமோ? வள்ளல் பெருமான் “வாழையடி வாழையாய் வந்த அடியார்த் திருக்கூட்ட மரபினுள்” நம்காலத்திற்கு அண்மையில் வாழ்ந்தவர். அவர்வழி அடியொற்றி, திருவாசகத்தில் “நாம் கலந்து” சுவைத்து, இறைவனைச் சிக்கெனப் பிடித்து உயர்வடைவோம்.
 
வள்ளல் பெருமான் உரைத்த திருவாசகத்தில் “நான்” கலப்பது என்ற இறைவனுடன் இரண்டறக் கலக்கும் விதத்தை, பத்தாம் திருமுறை ஆசிரியரான திருமூலர் ‘திருமந்திரத்தில்' அழகாகக் கூறியுள்ளார். அதையும் இங்கு நினைவுகூர்தல் நம் பார்வையைத் தெளிவாக்கும். வள்ளலார்க்கும் திருமூல தேவ நாயனார் ஒரு குரு அல்லவா?
திருமூலர் இறைக்கலப்பில் முழுமை அடைந்த மகான். தான் பெற்ற இறையின்பத்தை இவ்வுலக மக்கள் அனைவருக்கும் தருகிறார். உலகோர் அனைவருக்கும் ‘குரு'வாக விளங்கும் அவர் சொல்வதைக் கேளுங்கள்.

 
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.”


இறைவன் எங்கோ விண்ணிலும், நாம் இங்கே மண்ணிலும் உறைவதாகக் கருதி, இறைவனைத் தேடும் அன்பர்களுக்கு, “இறைவன் எங்கோ உறைவதில்லை; இன்னும் சொல்லப்போனால், இறைவனுக்கென்று தனியே ஓர் உறைவிடம் இல்லை; ஏனெனில், அவன் எங்கும் நிறைந்தவன்; எப்படியென்றால், தேனுக்குள் உறைந்துள்ள இனிப்பு” என்னும் இன்பத்தை எவ்வாறு கருப்பு, சிவப்பு என்று குறிப்பாக அடையாளம் காட்ட இயலாமல் எங்கும் அவ்வின்பம் செறிவாக நிறைந்துள்ளதோ, அதைப்போலவே, எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம் ஊனுடம்புக்குள்ளும் செறிவாக மறைந்து உறைகின்றான்”. என்கிறார் திருமூலர்.

 
“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!'' – திருமந்திரம்

ஒரு பாதிரியாரை திருவாசகம் கவரமுடியுமா?

திருவாசகத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதன் பெருமையை உலகோர் அனைவருக்கும் பறைசாற்றியவர் லண்டன் மாநகரிலிருந்து தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் என்ற ஊரில் கிறிஸ்தவத் தொண்டாற்றிய ஆங்கிலேய அருட்தந்தை ஜி. யூ. போப் அவர்கள். தமிழ்மறையாம் திருவாசகம் உலகெங்கும் பேசப்பட்டது தமிழர்கள் அனைவருக்கும் பெருமையான செய்தி. அதேவேளை, எல்லோருக்குமான ஓர் ஐயம், சிவனை முழுமுதற்கடவுளாகப் பாடி உருகும் திருவாசகம் ஒரு கிறிஸ்தவ அருட்தந்தையை எப்படிக் கவரமுடியும்? இது ஒரு முரண்பாடாகத் தெரிகிறதே என்பதாகும்.

girija's words :-

but, g.u.pope adored tamil and he had immense respect for tamil... he enjoyed tamil.

 
இதில் ஒரு முரண்பாடும் இல்லை; இறைவன் ஒருவனே ஆதலால், திருவாசகத்தில் ‘சிவன்' ஆகக் காட்சியளிக்கும் அதே இறைவன்தான் அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்களுக்குப் பரமண்டலத்திலிருக்கும் பிதாவாக, இயேசு பெருமானால் அடையாளம் காட்டப்பட்டார். வெறும் நம்பிக்கை சார்ந்து வாழாமல், ஊனுக்குள் ஒளிந்திருக்கும் ‘பிதாவை' உணர்வில் கண்டுகொண்ட அருட்தந்தை போப் அவர்களுக்குத் ‘திருவாசகத்தில்' ஒளிந்திருக்கும் 'சிவனே' அவர் வழிபடும் ‘பரமண்டலப் பிதா' ஆவார் என்பதை எளிதாக அடையாளம் காண இயன்றது.
திருவாசகத்தின் உருக்கத்தில் கரைந்தார் அருட்தந்தை; அவர் லண்டன் நகரின் சர்ச்-ல் முழந்தாளிட்டுச் செபம் செய்யும்போது, தன்னருகில் மாணிக்கவாசகரும் முழந்தாளிட்டு செபம் செய்ததாகத் தான் உணர்ந்ததைத் தன்னுடைய திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் பதிவிட்டுள்ளார். இதுவே சமயம் கடந்த பக்திநிலை; பன்மைத்துவத்தைப் போற்றும் நிலை; இறைவனை உணர்ந்த அருளாளர்களுக்கு இம்மனநிலையும், இறை அருளும், அமைதியும், பேரின்பமும், வீடுபேறும் கிட்டும்.

 
மாணிக்கவாசகர் இறைவனை நேரிலே கண்டதாக அவர் வாக்கிலேயே கேளுங்கள்:
“பரமன் காண்க பழையோன் காண்க
பிரமன் மால் காணாப் பெரியோன் காண்க
யாவரும் பெறவுறும் ஈசன் காண்க
தேவரும் அறியாச் சிவனே காண்க
கண்ணால் யானுங் கண்டேன் காண்க - திருவாசகம்: அண்டப்பகுதி-37,38,55,56,58
குருவடிவில் தோன்றிய இறைவன்
இளமைப் பருவத்திலேயே கல்வி-கேள்விகளில் தேர்ந்த மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனின் முதலமைச்சராகப் பணியாற்றியவர். பாண்டிய நாட்டின் எல்லாவகைச் செல்வங்கள், பதவிகள், அதிகாரங்கள் அனைத்தும் தன் கட்டுக்குள் வைத்திருந்தவர்; அப்படிப்பட்டவர் பாண்டிய நாட்டின் குதிரைப்படைகளை வலுப்படுத்த, அரசனின் ஆணைப்படிப் புதிய குதிரைகளை வாங்க திருப்பெருந்துறைக்குச் செல்கிறார்; சென்ற இடத்தில், திருமறை பயிற்றுவிக்கும் குருவடிவில் தோன்றிய இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார்.
 
பாண்டியப் பேரரசின் முதலமைச்சராக, அதிகாரத்தின் உச்சத்தில், அனைத்துவகைச் சுகபோகங்களுடனும் வாழும் ஒரு மனிதனைத் ‘திருவாசகம்’ பாடத் தேர்ந்தெடுக்க இறைவனுக்கு ஒரு வலுவான காரணம் இருந்திருக்க வேண்டும்.
உலகில் வாழ்ந்து பெற்ற பட்டறிவினால், உலகஇன்பங்களின் நிலையாமையை உணர்ந்து, தன்னை அறிந்து, தலைவனாம் ‘இறைவனை' அடைய எத்தனையோ யோகிகளும், ஞானியரும் தவமாய்த் தவம் கிடக்க, இதைப்பற்றித் துளியும் சிந்திக்கவே வாய்ப்பும், நேரமும் இல்லாத பாண்டிய நாட்டின் முதலமைச்சர் மாணிக்கவாசகரை வலியத் தேடிவந்து, இறைக் காட்சித் திருவருள் தந்தது ஏன் என்பதே நாம் அனைவரும் அறிய விரும்புவது.

 
சராசரி மனிதனின் பார்வையில் மாணிக்கவாசகர் இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் நுகரும் வாய்ப்பு கொண்ட சர்வவல்லமை கொண்ட ஒரு முதலமைச்சர். இவை அனைத்தையும் விட்டுவிட்டு, “அளவற்ற இறைப்பேரின்பம் பெற்ற அவரின் அனுபவப் பிழிவான திருவாசக வரிகள்” மற்ற மனிதர்களுக்கு இறைத்தேடல் நிகழ்த்த நம்பிக்கையான வழிகாட்டியாக இருக்கும். அவ்வாறு, “மனிதன் இறைவனுக்குச் சொன்னதே திருவாசகம்” மனிதனுக்கு இறைகாட்சியை உணர்த்தும் அற்புதமான ஆற்றுப்படைத் தமிழ்மறையே திருவாசகம் என்று நாம் அறியவேண்டும்.

 
நம்முன் உள்ள மற்றொரு முக்கியமான ஐயம், இறைக்காட்சி கிடைத்தாலும்கூட, மனிதஉடலில் வாழும் எவருக்கும் இறையின்பத்தைச் சுவைத்து அறியமுடியாது என்றும் கூறப்படுகிறது. “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்ற விதியை மாணிக்கவாசகருக்காக மட்டும் இறைவன் தளர்த்தியது ஏன் ???
 
திருவாசகம் என்பதற்குப் பொருள் - அழகிய, தெய்வத்தன்மை வாய்ந்த சொற்களால் ஆகிய பாடல் என்கிறார் தமிழ்க்கடல் மகாமகோபாத்தியாய பண்டிதமணி கதிரேசன் செட்டியார். எல்லையற்ற பெருங் கருணையாளனான சிவப் பரம்பொருளை, மனிதன் மனம், மொழி, ஐம்பொறிகள்-ஐம்புலன்கள் ஆகியன கொண்ட ‘மெய்’ எனப்படும் மனிதஉடலால் அறிய முடியாது என்பது ஞானிகள் கண்ட உண்மை. அத்தகைய இறைவனை, திருவாசகம் உணர்ந்து ஓதுவதால் உணரலாம்; அடையலாம்.
 
இறை உணர்வு பெறாத மனித உடலிலுள்ள ஊனக் கண்களைக் கொண்டு இறைவனைக் காண இயலாது என்பது திருவாசகச் சான்று.

சொற்பதம் கடந்த தொல்லோன்
கண் முதற் புலனால் காட்சியும் இல்லோன்;
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படான் – திருவாசகம்:3:111-113.

உரை உணர்வுகளான மன, மொழி, மெய் ஆகியன கடந்தால் மட்டுமே இறைஉணர்வு என்னும் கண்ணைப் பெற முடியும். ஆதலால், அத்தகைய ‘இறைஉணர்வு’ என்னும் மாபெரும் ஆற்றலை மனித உடலில் வாழும் சாதாரண மனிதன் யாரும் பெற இயலாது.


 
நமக்கெல்லாம் அருளவே ‘விதி’ மாற்றப்பட்டது
“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்ற விதியை இறைவன் தளர்த்தியது, எந்த மனிதனும் இறைவுணர்வை எளிதில் பெறும் ஆற்றல் கொண்ட திருவாசகத்தை மணிவாசகரின் திருவாயால் பாடும்படிச் செய்வதற்காகத்தானே தவிர மணிவாசகர் பொருட்டு அன்று; சாமானியர்களான நமக்கு அருள் புரிவதற்காகத்தான் “இறைபேரின்பத்தைத் தம் அனுபவத்தில் பெற்ற” மணிவாசகரைப் புவியில் சிலநாட்கள் வாழ்ந்து, பின் தில்லை வருமாறு பணித்தான் இறைவன்.

 
எல்லையற்ற இறையின்பம் என்னும் இறையருட் கண்ணைப் பெற்றுப் பின் அக்கண்ணில்லாத வாழ்வின் ஏக்கமே திருவாசகமாகப் பொழிந்தது. இறையருட் கண்ணைப் பெறாத பிறவிக்குருடர்களான நம் போன்றோருக்கு இறையருட்கண் வழங்க மணிவாசகப் பெருமானால் அருளப்பட்டதே திருவாசகமாகும். கண், வாய், காது முதலிய உடல் கருவிகளைக் கொண்டு ‘இது’, ‘அது’ என்று பொருட்களைச் சுட்டிக்காட்டி, நாம் பெறும் அறிவே ‘உரைஉணர்வு’ கொண்டு அறியும் அறிவு; அதைக் கடந்துசென்று, ‘இறைவனின் அருள்’ என்னும் ‘கண்’ கொண்டே இறைவனைக் காணவும், உணரவும் முடியும். அத்தகைய இறைவனை மனிதவுடலில் வாழும் நம்மைப் போன்றோருக்கு உணர்த்தும் ஆற்றலைத் தமக்குத் தருமாறு மணிவாசகர் இறைவனிடம் வேண்டிப் பெற்றார் என்பதை அவர் வாக்காலேயே இதோ அறிவோம்..

 
“உரையுணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வே!
யான் உன்னை உரைக்குமாறு உணர்த்தே!” – திருவாசகம்:22-3

மாதவம் செய்தவர்கள் தமிழர்கள்


நாம் உய்ய, இறையுணர்வை உள்ளீடாகக் கொண்டு மணிவாசகப் பெருமான் அருளிய உயிர் உருக்கும் தமிழ்மறையே திருவாசகம். மெய்யன்புடன் ஓதுவார், கேட்பார், உணர்வார் அனைவருக்கும் பேரின்பப் பரவசம் தந்து இறையனுபவம் தருபவை. எத்துணைத் மாதவம் செய்திருந்தால் நாமெல்லாம் தமிழர்களாகப் பிறந்திருப்போம் என்று எண்ணிப்பாருங்கள். அங்ஙனம் செய்த தவத்தை வீணாக்காமல் திருவாசகம் படித்து, உணர்ந்து நாமெல்லாம் உய்தியடைவோம்.

திருவாசகத்தேனை சுவைக்க மொழி ஆளுமை மட்டுமே போதாது.
 
திருவாசகம் குறித்த பதஉரை, விளக்கஉரை, தெளிவுரை என்று பல அறிஞர்களின் நீண்ட விளக்க நூல்களைப் படித்த பின்னும் நம் இரும்பு மனங்கள் ஏன் உருக மறுக்கின்றன என்பதை நாம் சிந்திக்கவேண்டும். திருவாசகம் கற்பதற்கான நூல் அன்று; இறைவனை உணர்வதற்கான வாசகம். திருவாசகம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், மொழி ஆளுமையினால் மட்டும் அதன் ஆன்மாவைத் தொட்டுவிட முடியாது; நிபந்தனையற்ற, எதிர்பார்ப்பில்லாத, வரம்பில்லாத இறையன்பே திருவாசகத்தின் அடிநாதம்-இயல்புமொழி. அந்த அன்புமொழி புரிந்தால்தான் திருவாசகத்திற்கு உருக இயலும்.

கற்றாவின் மனம்போலக் கரைக!
 
மணிவாசகத்தில் சொல்வதானால், இறைவனின் திருவடி அருளைப் பெற, கற்றாவின் (கன்றை ஈன்ற பசுவின்) மனம் போலக் கசிந்துருக வேண்டும்; கன்றை ஈன்ற பசுவின் மனம், தான் ஈன்ற கன்று வளர்ந்து, தனக்கு ‘இதைச் செய்யும், அதைச் செய்யும்’ என்ற எந்த எதிர்பார்ப்பும் இன்றியே, தன் கன்றின்மேல் கொண்ட அன்பு ஒன்றாலேயே அது உருகுகின்றது; “உன் ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிமேல் அன்பு கனிந்து கசிந்து உருகும் மனத்தை எனக்கருளவே யான் உன்பால் வேண்டுகிறேன்” என்று குற்றாலத்துறையும் இறைவனிடம் மனமுருகி வேண்டுகிறார் மணிவாசகர்.

 
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே! – திருவாசகம்:39-3

கன்றை இழந்த கறவை மாட்டிடம் நாம் எப்படிப் பால் கறப்போம் என்பதைச் சற்று சிந்திப்போம்.
 
வைக்கோல் பொம்மைக் கன்றுக்குட்டியைக் காட்டித்தானே? “மாணிக்க வாசக! சிலநாட்கள் இங்கு வாழ்ந்து, பின் தில்லைக்கு வந்து என்னைப் பார்” என்று இறைவன் மணிவாசகரைப் பிரிந்ததால்தான் மணிவாசகரின் மனம் ‘கற்றா’வின் மனம்போலக் கசிந்துருகியது; நமக்கான ‘திருவாசகம் கிடைத்தது. இதுவே இறைவன் நமக்காக நிகழ்த்திய திருவிளையாடல்.
எவரொருவர் திருவாசகச் சூழலில் தன்னைப் பொருத்தி மாணிக்கவாசராகவே உருகிக் கரைகிறாரோ, அவருக்கு இறைவனை அடைவது மிக எளிது. இதைத்தான் வள்ளலார் “ “நான்” கலந்து பாடுங்கால்” என்று நமக்குச் சொன்னார். திருமூலதேவர் “ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்” என்றார்.

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top