• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பாமரர் தேவாரம்

Status
Not open for further replies.

saidevo

Active member
பாமரர் தேவாரம்

பூவாளூர்
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
சம்பந்தர் தேவாரம்: 2.43.1: கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம்)

கோவில்
http://www.dinamani.com/weekly_supplements/vellimani/article728935.ece

காப்பு
(அளவியல் இன்னிசை வெண்பா)

பூவாளூர் புக்குறையும் வெள்ளை விநாயக!
பூவாளி கொண்டடிக்கப் பொற்றவம் நீங்கியே
அங்கசன் தன்னை அனங்கனென் றாக்கிய
அங்கணனைப் பாட அருள்.

[பூவாளி = பூவால் ஆகிய அம்பு; அங்கசன் = மனதில் பிறக்கும் மன்மதன்;
அனங்கன் = தூல உடலற்று சூக்கும உடலில் உலவும் மன்மதன்;
அங்கணன் = அழகிய கண்ணுடைய சிவன்]

பதிகம்
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

முன்னொருநாள் மாமலையில் முக்கண்ணன் தவம்செய்தார்
இன்னலுரு சூரபத்மன் இமையவரைத் துன்புறுத்தப்
பொன்னுலகார் மன்மதனால் பூவாளி தொடுக்கநேர்ந்த
புன்கண்மை போக்கியவர் பூவாளூர்ப் பூரணனே. ... 1

[இமையவர், பொன்னுலகார் = தேவர்; புன்கண்மை = அச்சம், துன்பம்]

சாம்பசிவன் கண்திறக்கச் சாம்பலானான் மன்மதனே
ஏம்பலுற்ற ரதிதேவி இறைநோக்கித் தவம்செய்யச்
சாம்பவிச மேதனெனத் தாண்டவனும் காட்சிதந்த
பூம்பதங்கள் சேர்வதற்கே பூவாளூர் தலமாமே. ... 2

[ஏம்பல் = வருத்தம், மனக்கலக்கம்]

மன்மதனை உயிர்ப்பிக்க மன்மதபு ரம்பேராம்
பொன்மலர்கள் பொழிலாரப் பூவாளூர் பேராமே
இன்னமுதாய் அன்னையுடன் ஈசனவர் வீற்றருளப்
பொன்னனடி சேர்வதற்கே பூவாளூர் தலமாமே. ... 3

*****
 
திருமூல நாதருடன் திருக்குங்கு மத்தழகி
தருவெனவே வில்வமரம் தலமரமாய் ஆவதுவாம்
அருணகிரி ஒருகல்லாம் அறுமுகனைப் பாடினரே
பொருவினையைப் போவினையாய்ப் பூவாளூர் செய்திடுமே. ... 4

தென்னாட்டுக் கயையாகும் திருத்தலமென் றிவ்வூராம்
தென்புலத்தார் அருள்வேண்டித் திதிசெய்யும் ஆறாகக்
கங்கைநதிக் கிணையாகப் பங்குனியாம் திங்களணிப்
புங்கவனாய் மேவினனே பூவாளூர்த் திருத்தலமே. ... 5

நீங்கிடவே நாகதோஶம் நின்றருள்வி நாயகராம்
ஆங்கவர்க்கு மோதகத்தை அர்ப்பணித்தால் நலமாகும்
ஈங்கன்னை யைப்போற்ற இல்லைவது வைத்தடையே
பூங்கொடியாள் மேவிநிற்கும் பூவாளூர்ப் புண்ணியனே. ... 6

கோட்டத்தில் பலதெய்வம் கொண்டருளும் கோவிலாகும்
ஆட்டத்தின் நாயகனாய் அடுகாட்டில் ஆடுபவன்
ஆட்சியிலே அறம்நான்கும் அமையவருள் ஆதிதேவன்
பூட்சியெலாம் நீறணிந்தே பூவளூரில் மேவுவனே. ... 7

[பூட்சி = உடல்]

*****
 
Last edited:
துச்சனென ராவணனைத் துவளவைத்த தூமணியின்
உச்சிமுதல் தாள்வரையில் உன்மத்தம் உன்னதமே
நச்சரவும் பொடியணியும் நதிநீரும் திங்களுமாய்ப்
புச்சிமலர் சூடுபவன் பூவளூரில் மேவினனே. ... 8

[புச்சிமலர் = எருக்குமலர்]

ஆரழலாய் எழுந்தபிரான் அடிமுடியைக் காணாதே
நாரணனும் நான்முகனும் நலிவுற்ற போதினிலே
வேரெனத்தான் விளங்குவதை வெள்விடையான் அறிவுறுத்திப்
பூரணத்தைத் தந்தவர்க்குப் பூவாளூர் மேவினனே. ... 9

வேதநெறி விலக்குவதாய் வேறுநெறி விளங்குவதில்
சாதனையாய் ஏதுமிலாத் தானறியும் ஞானமிலாப்
பாதகமே எனவறிந்தே பரமசிவன் பாதவிணை
பூதலத்தில் தேடுவோர்க்குப் பூவாளூர் புண்ணியனே. ... 10

பூவாளி பூரணன்மேல் போட்டவொரு கணையாலே
பூவாளி உருவிழந்தே பொடியாகி அனங்கனாக
பூவாளி மனையாளின் பூவிழிக்குள் வைத்தவனைப்
பூவாலே போற்றடியார் பூவாளூர் சேர்வாரே. ... 11

--ரமணி, 01-10/11/2015

*****
 
திருக்கஞ்சனூர்
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம்: 2.47.1: மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்)

குறிப்பு
பாடலின் ஈற்றயலடி வரும் பாடலின் முதற்சீரோடு அந்தாதித்தொடை அமைய மண்டலித்து வரும்.
இறுதியாய் நிற்கும் பதினொன்றாம் பாடல் ’அழற்கண்ணன் போற்றுவமே’ என்று முடிவுறும்.

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=907
http://www.shivatemples.com/nofct/nct36.php

தேவாரப் பதிகம்
அப்பர்: 6.90: மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60900

காப்பு
கஞ்சனூர் வாழும் கணபதியே உன்பாதம்
தஞ்சமெனக் கொண்டேன் தடைநீங்க - செஞ்சடையன்
கஞ்சனூர் ஆளும்கோன் கற்பகம்பேர் நானெழுதக்
குஞ்சரக்கை நுண்மை கொடு.

பதிகம்
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

அழற்கண்ணன் மணமகனாம் ஆடற்கோ தாண்டவனாம்
கழற்செல்வன் பாதவிணை கஞ்சனூரில் தரிசித்தே
விழுநாளில் வினைநீங்க வெள்விடையான் அருள்வேண்டி
மழுவாளி மாதேவ மாமணியைப் போற்றுவமே. ... 1

மாமணியைச் சபாமணியை உமாமணியைத் தூமணியைக்
காமணியை அன்னையுடன் கஞ்சனூரில் தரிசித்தே
தாமணியும் தோலணிந்து தாரணிந்த கோலத்தைத்
தூமணிவெண் ணீற்றாலே துதிபாடிப் போற்றுவமே. ... 2

[காமணி = காக்கும் மணி; தூமணி = முத்து]

துதிபாடிப் போற்றிவுயிர்த் தொன்மையினை அறிவோமே
பதம்காட்டிக் கஞ்சனூரில் பராசரர்க்கு முத்திதந்தே
வதுவைக்கோ லங்காட்டி மலரோனுக் கருள்செய்தே
முதன்மைக்கோ வெனநிற்கும் முக்கணனைப் போற்றுவமே. ... 3

[உயிர்த்தொன்மை = பரமனின் துளியான நம் சீவான்மா இந்த உலகினும்
தொன்மையானது என்னும் உண்மை]

*****
 
முக்கணனை மூலவனை முளைமதியம் சூடுவனை
சுக்கிரர்க்கு மந்திரத்தைச் சொன்னவனைக் கஞ்சனூரில்
எக்கணமும் எண்ணத்தில் ஏற்றுவோரின் இன்னல்கள்
நிக்கிரகம் செய்வோனை நீறணிந்து போற்றுவமே. ... 4

நீறணிந்து பாதத்தில் நெடுஞ்சாணாய் வீழ்ந்தேநாம்
காறணிந்த வாழ்நாளில் கஞ்சனூரில் வழிபட்டே
கூறுசெய்து சுரைக்காயக் கொளச்செய்த கொக்கிறகன்
ஆறணிந்து கானகத்தில் ஆடுவனாம் போற்றுவமே. ... 5

[காறு = கால அளவு]

ஆடுவனாம் அரதத்தர்க் கருளியனாம் கல்நந்தி
மாடதனைப் புல்தின்ன வைத்தவனாம் கஞ்சனூரில்
ஓடிமாயும் வாழ்விதனின் உட்பொருளைக் காட்டுவனாம்
நாடிநாமும் மருள்நீக்கி நன்மைதரப் போற்றுவமே. ... 6

நன்மைதர வேண்டிடவே நவகோளும் கணபதியும்
குன்றெறிந்தோன் சீதேவி குழகனருள் பெற்றடியார்
சன்னிதிகள் நின்றருளும் தலமிதுவாம் கஞ்சனூரில்
அன்னையுடன் ஆட்செயும் அத்தனைநாம் போற்றுவமே. ... 7

அத்தனைநாம் போற்றுகையில் அவன்லீலை பலவற்றுள்
பித்தனிவன் வாழ்மலையைப் பேர்த்தெடுக்க முயன்றவனைக்
கத்தவைத்து அருள்செய்த கஞ்சனூரின் ஈசனைநம்
அத்தனென்று கொண்டவனின் அடிமுடியைப் போற்றுவமே. ... 8

அடிமுடியைக் காணாதே அயனரியை அலையவைத்தே
நெடுவானைத் தொடுதூணாய் நீண்டவழல் உருக்கொண்டு
படியவைத்தே ஆட்கொண்ட பரமனவன் கஞ்சனூரில்
விடிபொழுதில் ஒலிக்கின்ற வேதத்தைப் போற்றுவமே. ... 9

வேதத்தைத் தள்ளுகின்ற வேற்றுநெறி கொள்ளுவோரின்
வாதத்தின் பொய்யுணர்ந்து மனந்தன்னில் கஞ்சனூரன்
பாதத்தை நாடுவோர்க்குப் பரமனவன் அருள்செய்யும்
போதத்தை உளங்கொண்டு பொய்யகலப் போற்றுவமே. ... 10

பொய்யகலப் போற்றிடவே பூரணனின் அருள்சூழ்ந்தே
உய்வித்த அப்பரவர் ஓர்பதிகம் கஞ்சனூரில்
மெய்யுருகப் பாடியது மேவிநிற்க நம்முளத்தில்
ஐயங்கள் அகற்றியருள் அழற்கண்ணன் போற்றுவமே. ... 11

--ரமணி, 08-09/02/2016, கலி.26/10/5116

*****
 
திருநெல்வேலி
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம்: 2.48.1: கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=909
http://www.shivatemples.com/pnaadut/tirunelveli.php
http://maragadham.blogspot.in/2010/11/blog-post_25.html

தேவாரப் பதிகம்
சம்பந்தர்: 03.092: மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=30920

காப்பு
பொல்லாப்பிள் ளையாரே போற்றினேன் ஓர்பதிகம்
நெல்லையப்பர் மீது நெகிழ்ந்தவர் - வல்லவி
காந்திமதி அம்மையின் காப்பையும் வேண்டியே
பாந்தமுடன் பாடவருள் வீர்!

பதிகம்
தான்தோன்றி யுருவாகத் தன்னகத்தே அம்மையுடன்
வான்தோன்றி கங்கைநதி வடிவாகப் பொருநைவரக்
கான்தோன்றி வேணுவனம் காட்சிதந்தே நிலைபெற்றுத்
தேன்தோன்றி மலர்சூழத் திருநெல்லை யமர்ந்தாரே. ... 1

[தன்னகத்தே அம்மையுடன் = சுயம்பு லிங்கத்தில் உறைந்த அன்னை உருவுடன்]

வேணுவன நெல்லையப்பர் வேய்முத்த நாதரவர்
நாணுவன நங்கையவள் நாயகியாம் காந்திமதி
தோணுவன தோய்வதனால் தோன்றுகின்ற வினைதீர்க்க
சேணுவனன் மூலிகையாய்த் திருநெல்லை யமர்ந்தாரே. ... 2

[நாணுவன நங்கை= நாணுகின்ற அழகிய நங்கை
சேணுவனன் = ஆகாச கருடன் என்று வழக்கிலுள்ள விடம் தீர்க்கும் மூலிகை]

ஊன்தோன்றி உளைகின்ற உயிர்க்கருளி யாட்கொளவிண்
மீன்தோன்றிப் பல்கிவரும் வேளையிலே நடமாடி
நான்தோன்றி யலைந்துமனம் நலிகின்ற போதினிலே
தேன்தோன்றி மலர்சூழத் திருநெல்லை யமர்ந்தாரே. ... 3

(தொடரும்)

*****
 
தலவிருட்சம் மூங்கிலெனில் தலத்தீர்த்தம் பலவாமே
தலப்பெருமை தாண்டவனின் தாமிர சபையாமே
வலம்வந்து காணநுட்ப வடிவுகளில் சிற்பமெனச்
சிலையாக நின்றருளத் திருநெல்லை யமர்ந்தாரே. ... 4

அரனுக்கோர் கோவிலெனில் அன்னைக்கின் னொருகோவில்
இருவரையும் சமமாக ஏத்துவழி பாடுகளாம்
ஒருசக்தி பீடமெனில் உருத்திரனின் ஓர்சபையாம்
திருமணக்கோ லம்கொண்டே திருநெல்லை யமர்ந்தாரே. ... 5

இராமக்கோன் கண்டறிய ஈசனவர் அருள்செய்ய
இராமபாண் டியமன்னன் எடுத்ததொரு கோவிலிலே
இராமருக்குப் பாசுபதம் ஈந்தருளி நெல்லையப்பர்
சிராவியமாய்த் துதிகொண்டே திருநெல்லை யமர்ந்தாரே. ... 6

[சிராவியம் = இனிமையான]

வேதியர்நெல் மீதுமழை வீழாத வேலியருள்
பேதமெலாம் தீரவருள் பெம்மானின் கோவிலிலே
சீதரனும் நெஞ்சிருத்தும் சீர்கொண்ட மாதேவர்
தீதறுக்கத் தான்தோன்றித் திருநெல்லை அமர்ந்தாரே. ... 7
 
கண்மூடித் தனமாகக் கயிலைமலை தூக்கியானை
மண்ணழுந்தச் செய்தவனை மன்னித்தே வாள்தந்த
கண்ணுதலார் காளியுடன் காட்டுமுயிர்க் கருணையினைத்
திண்ணமாகத் தருபவராய்த் திருநெல்லை யமர்ந்தாரே. ... 8

அருவுருவன் வானுயர்ந்த அழலுருவாய்த் தோன்றிடவே
திருமால்க ழல்தேடித் திசைமுகன்ற லைதேடித்
திரிந்தோய முன்தோன்றித் தியம்பகன்றன் நிலையுரைத்த
திருத்தனவர் நமக்கருளத் திருநெல்லை யமர்ந்தாரே. ... 9.

வேதவிழி தேராதே வேறுவழி நோக்குமத
வாதங்கள் மெய்ஞ்ஞான வழியல்ல வென்றந்தத்
தீதறுப்போர்க் கருள்செய்யும் செம்பொருளா யுருக்கொண்டே
சீதளநீர் முழுக்காடித் திருநெல்லை யமர்ந்தாரே. ... 10.

[வேதவிழி = வேதஞானம்]

வெடிதரு தலையேந்தி விடையமர் கலைசூடிப்
பொடியணி மேனியராய்ப் புடையொரு மங்கையுடன்
கடிமலர்ப் பதிகமொன்றால் காழியர் கோன்துதிக்கத்
திடிமமத் தளமொலிக்கத் திருநெல்லை யமர்ந்தாரே. ... 11

[வெடிதரு=வெடித்த (சம்பந்தர் பதிகம், பாடல் 6;)
காழியர்கோன் = சம்பந்தர்; திடிமம் = திண்டிமம் = ஒருவகைப் பறை]

--ரமணி, 01-08/04/2016

*****
 
திருப்பழனம்
(எழுசீர் விருத்தம்: வாய்பாடு 6 மா + புளிமாங்காய்)
(சீர்கள் ஒன்று-ஐந்தில் மோனை; ஈற்றடிச் சீர்கள் ஒன்று-மூன்றில் எதுகை)


அமைப்பு
சுந்தரர் தேவாரம் 7.41.1:
முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வோனே
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70410

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=959
http://www.shivatemples.com/nofct/nct50.php
http://www.findmytemple.com/index.php/ta/தஞ்சாவூர்/t285-ஆபத்சகாயேஸ்வரர்,-திருப்பழனம்
http://www.dailythanthi.com/Others/...reat-Designation-arulum-Abathsahayeswarar.vpf

தேவாரப் பதிகம்
சம்பந்தர் 01.067: வேதமோதி வெண்ணூல்பூண்டு
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10670

அப்பர்
04.012: சொன்மாலை பயில்கின்ற
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40120
04.035: ஆடினா ரொருவர்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40360
04.087: மேவித்து நின்று
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40870
04.087: மேவித்து நின்று
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=40870
05.035: அருவ னாயத்தி
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50350
06.036: அலையார் கடல்நஞ்ச
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60360

காப்பு
பழனத் திறைமகனே பார்வதி மைந்த
மழவிடையன் மாசிலி மன்றாடி மேவும்
பழனப்பேர் பற்றிப் பதிகமொன்று பாடக்
கழல்பற்றி வேண்டினேன் காப்பு.

பதிகம்
(எழுசீர் விருத்தம்: வாய்பாடு 6 மா + புளிமாங்காய்)
(சீர்கள் ஒன்று-ஐந்தில் மோனை; ஈற்றடிச் சீர்கள் ஒன்று-மூன்றில் எதுகை)

கழலால் காலன் உதைத்து பாலன் .. காத்துக் கயிலை உறைவாரே
பழங்கண் கொள்ளா பத்ச சகாயர் .. பக்கம் பெருநா யகியென்றே
முழவும் பறையும் முறையாய் மறையும் .. முழங்கக் காணும் பெருமானாய்ப்
பழமை வினைகள் கழல வருளப் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 1

[பழங்கண் = துன்பம், மெலிவு; பழனத்தீசன் பேர் ஆபத்சகாயர்;
ஈச்வரி பேர் பெரியநாயகி; தளி = கோவில்]

தலத்தின் தருவாய் வாழை விளங்கத் .. தாழை மலர்கள் மணம்வீசும்
கலையும் மானும் கையில் எரியும் .. காதில் தோடும் அசைந்தாட
நிலையில் வாழ்வில் நேரும் வினைகள் .. நிமலன் அருளால் நலிவெய்திப்
பலனாய் உலகில் பலவும் விளையப் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 2

பயணம் கொண்டே பலவாய் வரமும் .. பதுமை பெற்ற தலமாகப்
பயண புரியின் ஈசன் ஆனார் .. பரவை பயந்த அமுதத்தைப்
பயன்கொள் முனிவர் குடிலில் அவுணர் .. பறிக்க ஐயன் உருச்செய்தே
பயந்தாள் காளி வயத்தை அழிக்கப் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 3

[பதுமை = இலக்குமி; பரவை = கடல், இங்கு பாற்கடல்; பயன்கொள் முனிவர் = கௌசிக முனி;
அவுணர் = அசுரர்; ஐயன் = ஐயனார்; பயந்தாள் = பெற்றவள்; வயம் = வலிமை]
 
Last edited:
சுசரி தனெனும் சிறுவன் கனவில் .. சுடுசொற் காலன் குறிசொல்ல
அசலன் அவனைக் காத்தே அருள .. ஆபத் சகாயன் பெயர்பெற்றார்
அசுரர் தம்மைக் காளி அழிக்க .. அமுத லிங்கம் முனிசெய்யப்
பசலை நீக்கப் பசுமை மருதப் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 4

[அசலன் = அசையாக் கடவுள்; அமுதலிங்கம் முனிசெய்ய = கௌதமர் தன் பங்கு அமுதத்தால்
செய்த சிவலிங்கம்; பசலை = மனச்சஞ்சலம், வருத்தம்]

கோட்டச் சுற்றில் ஈசன் பிரம்மா .. கொள்-கை வீணை குருதேவர்
பாட்டி சைத்தே அரிதாய்க் குழல்கோ .. பாலன் உள்ளே வரும்சுற்றில்
கூட்டும் கையை நந்தி தேவர் .. கூப்பும் நிலையில் விழிகாணப்
பாட்டும் பண்ணும் காட்டும் வண்ணம் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 5

வெளியே சுற்றில் கந்தப் பெருமான் .. வேழ முகத்தன் உடன்மேவ
உளியின் உருவாய்க் கோலச் சிலையாய் .. உள்ளேழ் மாதர் தவக்கோலம்
வெளியே சுற்றில் ஈசன் இடத்தில் .. வீற்ற ருள்செய் உமைமேவப்
பளிதம் காட்டும் ஒளியின் ஒளியாய்ப் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 6

[பளிதம் = கற்பூரம்]

பழனம் பெருமை ஐந்தெ ழுத்தாய்ப் .. பரமன் தாமே புகழ்ந்தேத்தப்
பழனத் தலமாம் பயணேச் வரத்தில் .. பல்வே றுமுனி கதிசேர்ந்தார்
பழகும் அடியார் பரவும் அடிகள் .. பாவம் கொள்ளார்க் கருள்செய்தே
பழமை வினைகள் அழிக்கும் பரமாய்ப் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 7

[அடிகள் = கடவுள்]
மலையைக் கெல்ல முயன்ற மூடன் .. வலக்கால் விரலால் நெரியுண்ண
மலையாள் பாகன் வருத்திப் பின்னர் .. வாளும் நாளும் அருள்செய்தார்
கலையைத் தலையில் நிலையாய் இலக்கிக் .. கங்கை தரித்த கறைக்கண்டன்
பலவாய் அடியார் குலவும் படிறன் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 8

[வலக்கால் விரல் = இடப்புறம் உமையாள் இருப்பதால் வலக்கால் விரல்
என்று கற்பனை; இலக்குதல் = அடையாளம் இடுதல், இலங்கச் செய்தல்;
படிறன் = பொய்யன், கள்வன்]

எரியும் தூணாய் வானும் நிலமும் .. இணைத்தே ஈசன் உருக்கொள்ள
அரியும் அயனும் அடியும் முடியும் .. ஆரத் தேடி அறியாதார்
கரியின் தோலை உடுத்தே சூலம் .. கையில் தாங்கும் பெருமானே
பரியாய் ஆக்கி நரியைத் தந்தார் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 9

வேதம் தள்ளும் வேற்று நெறிகள் .. மீது செல்லார் உளந்தன்னில்
நாதன் நம்பன் நக்கன் நடனன் .. நட்டன் நயனச் சுடரோனே
யாது மாகி நின்றே வினைகள் .. யாவும் தீர்த்தே வழிகாட்டிப்
பாது காப்பாய்ப் பாதம் காட்டிப் .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 10

கண்ணில் கண்ட உயிர்கள் யாவும் .. கருத்தன் நாடி வினையுரைக்கப்
பண்ணில் வேண்டி யப்பர் பதிகம் .. பாடப் பரமன் அருள்செய்தார்
கண்மேற் கண்ணன் சடைமேற் பிறையன் .. காழி யர்கோன் பணிந்தேத்திப்
பண்ணும் பதிகம் வண்ணம் காட்டப் .. .. பழனத் தளியில் அமர்ந்தாரே. ... 11

[கருத்தன் = கடவுள்; வினையுரைக்க = தூது சொல்ல; காழியர்கோன் = சம்பந்தர்]

--ரமணி, 20/04/2016

*****
 
‪#‎ரமணி_பாமரர்_தேவாரம்‬
திருநறையூர்ச் சித்தீச்சரம்
(இன்று திருநறையூர்ச் சித்தநதேஸ்வரர் கோவில்)

(வஞ்சித்துறை: பதிகத்தில் 12 பாடல்கள்.
மா விளம்: முதல் ஆறு பாடல்கள்; விளம் மா: அடுத்த ஆறு பாடல்கள்)


சம்பந்தர் தேவாரம்:
திருவிருக்குக்குறள் 01.092.01: வாசி தீரவே காசு நல்குவீர்
திருவிருக்குக்குறள் 03.040.01: கல்லால் நீழல் அல்லாத் தேவை

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=368
http://www.shivatemples.com/sofct/sct065.php

தேவாரப் பதிகம்
சம்பந்தர்:
01.029: ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10290

01.071: பிறைகொள்சடையர் புலியினுரியர்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10710

02.087: நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=2&Song_idField=20870

சுந்தரர்:
07.093: நீரும் மலரும் நிலவும் சடைமேல்
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=70930

காப்பு
நறையூர்வாழ் ஆண்டவி நாயக விங்கு
உறைசித்த நாதரை யோர்ந்தே - முறையாக
வஞ்சித் துறையுரு வாமனப் பாநிரலென்
நெஞ்சின் றெழவருள்வாய் நீ.

பதிகம்
(வஞ்சித்துறை: மா விளம் 1-6, விளம் மா 7-12)

குறையா வளந்தரும்
நறையூர் நாதனை
நறையார் மலர்களால்
நிறையத் தொழுவமே. ... 1

[நறையார் = தேன் நிறைந்த]

நறையூர் நாதனின்
குறையா வனப்புடை
இறைவி யின்கழல்
கறைதீர்த் தருளுமே. ... 2

பொறியாள் இலக்குமி
மறைசொல் மாமுனி
உறவில் மகளென
நறையூர் அருளினன். ... 3

[பொறியாள் = செல்வத்தை ஆளுகின்ற; மறைசொல் மாமுனி = மேதாவி மகரிஷி]

பொறியை நாரணர்க்
குறுவில் லாக்கவே
நறையூர் மேவினர்
இறைவன் இறைவியே. ... 4

[பொறி = இலக்குமி (பிங்கள நிகண்டு); உறுவில் = உற்ற மனைவி]

நரநா ராயணர்
உருவில் பறவையாய்ப்
பெருமான் போற்றிய
திருச்சித் தீச்சரம். ... 5

புறணி நோயறத்
துறவி வேண்டிடக்
குறைகள் களைந்தவன்
நறையூர் நாதனே. ... 6

[புறணி = தோல்; துறவி = கோரக்க சித்தர்]

தென்றிசைக் கடவுள்
தென்குட திசையில்
நின்றருள் நறையூர்
இன்னருங் காட்சி. ... 7

மலைபெயர் அரக்கன்
எலியென நெரித்தார்
நலிவறு நறையூர்க்
கலையணிச் சிவனே. ... 8

அயனரி அறியா
வியன்தொடு வெரியர்
நயந்துறை நறையூர்
மயலறு சிவனே. ... 9

மறைகொளா நெறிகள்
கறையெனக் கொள்வோர்
நிறைகொள நறையூர்
இறைவனின் அருளே. ... 10

காடுறை நாதனைப்
பாடசம் பந்தர்
நாடினர் நறையூர்
ஏடுசொல் வாக்கே. ... 11

சுந்தரர் பாடும்
அந்திரன் நறையூர்
சிந்தையிற் சிவமாய்
வந்தமர்ந் தாரே. ... 12

--ரமணி, 28-30/04/2016

*****
 
அன்பில் ஆலந்துறை (லால்குடி அருகில்)
(அறுசீர் விருத்தம்: விளம் விளம் விளம் விளம் மா தேமா)

கோவில்
http://temple.dinamalar.com/New.php?id=283
http://www.shivatemples.com/nofct/nct57.php
http://www.maalaimalar.com/Devotion.../06092346/1036987/anbil-alanthurai-temple.vpf
http://shaivam.org/siddhanta/sp/spt_p_anbil_alanturai.htm

தேவாரப் பதிகம்
சம்பந்தர்: 01.033 கணைநீடெரி மாலரவம் வரைவில்லா
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=1&Song_idField=10330

அப்பர்: 02.080 வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idField=50800

காப்பு

செவிச்செல்வம் செல்வத்துள் சென்னி எனவே
செவிசாய்த்துச் சோதரர் செய்த - கவிகேட்டே
இன்புற்ற பிள்ளையார் இன்னருளால் அன்பில்மேல்
என்பதிகம் நிற்கும் எழுந்து.

[சோதரர் = கணபதியின் அன்னை பாலூட்டியதால்
சம்பந்தர் பிள்ளையார் சோதரர் ஆகின்றார் என்ற கருத்து]

பதிகம்
(அறுசீர் விருத்தம்: விளம் விளம் விளம் விளம் மா தேமா)

கணையெரி மாலெனக் கடுவிட வாசுகி நாணாய் வைத்தே
இணைத்தெயில் மூன்றினை யெரித்தவர் வானுறை மதிகொள் மைந்தர்
கணைவிழி உமையவள் காந்தையாய் இடப்புறம் மேவ நின்றே
அணைத்தருள் எந்தையாய் அன்பிலா லந்துறை மேவி னாரே. ... 1

[கணியெரி ... எரித்தவர்:
கணைநீ டெரிமா லரவம் வரைவில்லா
இணையா வெயின்மூன் றுமெரித் தவிறைவர்--சம்பந்தர் வரிகள்;
வானுறை மதிகொள் மைந்தர்:
வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை--அப்பர் சொற்கள்]

சடையடர்ச் சதுரனாம் சத்திய வாக்குடை யீசன் பேராம்
விடையமர் காரணர் விடமமர் கருமிடற் கபாலி யாராம்
இடமொரு சவுந்தரி இடையுரி வாரணம் ஈசன் நாமம்
அடியவர் வினைகொள அன்பிலா லந்துறை மேவி னாரே. ... 2

[சடையடர்ச் சதுரனாம்:
சடையார் சதுரன் முதிரா மதிசூடி--சம்பந்தர் சொற்கள்;
காரணர் விடமமர் கருமிடற் கபாலி யாராம்:
கார ணத்தர் கருத்தர் கபாலியார்
வார ணத்துரி போர்த்த மணாளனார்--அப்பர் வரிகள்]

ஊர்ந்திடும் பன்னகம் உறுஞ்சடை மதியணி மாதோர் பாகன்
தேர்ந்திடை அணிவதோ சிந்துர உரியவர் ஆனைந் தாடி
கார்விரி வெள்ளமாய்க் காவிரி கரைபுரண் டோடச் செய்தார்
ஆர்ந்தருள் செய்யவே அன்பிலா லந்துறை மேவி னாரே. ... 3

[ஊர்ந்திடும் பன்னகம் உறுஞ்சடை:
ஊரும் மரவம் சடைமே லுறவைத்து--சம்பந்தர் சொற்கள்;
இரண்டாம் அடி எதிரொலிப்பது:
ஆனஞ்ச மைந்துட னாடிய
என்பின் ஆனை யுரித்துக் களைந்தவன்--அப்பர் சொற்கள்]

*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top