• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்&#

Status
Not open for further replies.
அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்&#

அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் ..

அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில், சதுரகிரி-625 705, மதுரை மாவட்டம்.


G_T1_800.jpg



பொது தகவல்:

திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை சஞ்சீவி மலை என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.

பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள். மகாலிங்கம் கோயிலின் வடக்கே ஊஞ்சல் கருப்பண சாமி கோயில் உள்ளது. சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும். ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது. சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஆடி அமாவாசை திருவிழாவின் போது ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மதுரையில் இருந்து வத்திராயிருப்புக்கு செல்லும் வழியிலுள்ள தாணிப்பாறை பிரிவில் (58 கி.மீ.,) இறங்கி, அங்கிருந்து சதுரகிரி மலை அடிவாரத்திற்கு பஸ் அல்லது ஆட்டோவில் (7கி.மீ.) செல்லவேண்டும். இங்கிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம்.

இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

இம்மலை மதுரையையும், சாப்டூரையும், விருதுநகரையும் இணைத்தும் உள்ளது. இந்தக்கோயில் முன்பு தனியாரிடமிருந்தது. பின் தமிழக அரசு அறநிலையத் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவின் பல மாநில மக்கள் இங்கே வந்து தங்கள் வேண்டுதல் நிறைவேறி செல்கின்றனர். இக்கோயிலுக்கு சாப்டூர் வழியாகவும், வத்திராயிருப்பு வழியாகவும் பாதைகள் உள்ளன.

தல வரலாறு:


சதுரகிரி மலை மீது பச்சைமால் என்பவர் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பசுக்களின் பாலை விற்பனை செய்து வந்தார். அதில் ஒரு பசு மட்டும் பால் கொடுப்பதில்லை. இவ்வாறு பல நாட்கள் கொடுக்காததைக் கண்டு பச்சைமால் காரணம் புரியாமல் சிந்தித்துக் கொண்டிருந்தார். பசுக்கள் காலையில் மேய்த்துவிட்டு மாலையில் கொட்டிலுக்கு வரும்போது பால் கொடுக்காத ஒரு பசு மட்டும் ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் நின்று தன்மடிப்பாலை சொரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பச்சைமால் தன்கையில் வைத்திருந்த கம்பால் பசுவை அடித்தார். அப்பொழுது பசுமாடு விலகி ஓடிவிட்டது. அந்த பால் சொரிந்த இடத்தில் சிவபெருமான் அடியார் கோலத்தில் தலையில் இரத்தம் வடிய நின்றார். இதைப்பார்த்த பச்சைமால் அதிர்ச்சியடைந்து அடியாரை வணங்கி மன்னிப்பு கேட்டு ரத்தம் வடிந்த இடத்தில் அருகிலிருந்த செடியின் இலையைப் பிடுங்கி வைத்து கட்டினார்.

உடனே ரத்தம் நின்று வடுவும் தெரிந்தது. அடியார் வடிவத்தில் வந்த சிவன் இந்த இடத்தில் யாம் இங்கே தங்கியிருக்க விரும்புகிறோம். எனவே இங்கே கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள். அவ்வாறு செய்து வந்தால் அனைவருக்கும் வேண்டிய பலன் கிடைக்கும் என்று கூறிவிட்டு லிங்கமாகி மறைந்துவிட்டார். இதை பச்சைமால் இப்பகுதி பெரியவர்களிடம் கூறி கோயில் உருவாக்கி வழிபாடு செய்து வந்தனர். பின் கோரக்கர் சித்தர் போன்ற பல சித்தர்கள் தங்கி பல சித்துக்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு தங்கிய சித்தர்களின் பெயர்களால் அந்த இடங்கள் அவர் பெயர்களாலேயே இன்றும் வழங்கப்படுகிறது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பற்றி மற்றொரு தலவரலாறும் கூறப்படுகிறது.

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன் - திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்றபோது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக் கொண்டாள். வழக்கத்தைவிட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு சடதாரி என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார்.

மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுத்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக் கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி, நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன், என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி மகாலிங்கம் என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.



தலபெருமை:

இம்மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும், விலங்கினங்களும், பறக்கும் பாம்பு முதல் அனைத்துப் பறவையினங்களும் வாழ்கின்றன.

சுந்தரமூர்த்தி: கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை கும்ப மலை என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுத்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் சுந்தரமூர்த்தி லிங்கம் எனப்படுகிறது. அருளை வழங்குவது சுந்தரமகாலிங்கம், பொருளை வழங்குவது சுந்தரமூர்த்தி லிங்கம் எனக் கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப் பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.


பார்வதி பூஜித்த லிங்கம்: சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய் விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள். இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

லிங்க வடிவ அம்பிகை: சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் ஆனந்த வல்லி என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

பிலாவடி கருப்பு:
வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும், என்றார். வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றில் காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை பிலாவடி கருப்பர் என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.


இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன்மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும், என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன், என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

பெரிய மகாலிங்கம்:
நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை பெரிய மகாலிங்கம் என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் மஞ்சள் ஊத்து தீர்த்தம் உள்ளது. தீர்த்தமும், இப் பகுதியிலுள்ள மண்ணும் மஞ்சள் நிறத்தில் உள்ளது. பார்வதி இத்தலத்துக்கு தவம் செய்ய வந்தபோது, உடன் வந்த புஷ்பகை, கெந்தகை, அமிர்தகை, கருணிகை, மிருதுபாஷிகை, சுச்லிகை, சுமுகை என்ற பணிப் பெண்கள் இந்த தீர்த்தத்தில் மஞ்சள் தேய்த்து குளித்ததால் இப்படி இருப்பதாக கூறப்படுகிறது.

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை நவக்கிரக கல் என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள ஏசி பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் வெள்ளைப்பிள்ளையார் பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

பிரார்த்தனை

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இங்குள்ள மலை மூலிகைகளும் அருவி நீரும் நோய்களை தீர்க்கவல்லவை.

Temple Timings

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.

இருப்பிடம் :
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ. தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ. நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
விருதுநகர்

அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை







http://temple.dinamalar.com/New.php?id=800
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top