• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை

Status
Not open for further replies.

saidevo

Active member
பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

(கோவில்: Chottruth Thurai
பதிகம்: thiru aDangkal)

அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம்
முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே
அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர்
இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1

[அன்னதானச் செய்தி: Aadalvallan

மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை
மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக்
காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான்
ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... 2

[முழுதோன்=சிவன், ’முன்னோன் காண்க முழுதோன் காண்க’, திருவாசகம் 3.30]

கலையும் மழுவும் கழுவும் அழலும் கரம்தாங்கத்
தலையில் ஆறும் கலையும் தாங்கும் சடையானைத்
தொலையாச் செல்வ நாதர் சோற்றுத் துறைகாணில்
தொலையும் பசியும் பிணியும் பிறப்பும் தொடராதே. ... 3

[கழு=சூலம்; கலை=மான், பிறைச் சந்திரன்;
தொலையாச் செல்வநாதர்=கோவில் மூலவர் பெயர்]

ஏழூர் தலத்தில் மூன்றா வதென இதுவாக
வேழம் உரித்தான் சோற்றுத் துறையான் விடையோனும்
ஏழை யூரின் பஞ்சம் தீர்க்க எழுந்தேதான்
தாழாச் சோறார் கலமொன் றினையே அளித்தானே. ... 4

[ஏழூர் தலம் = சப்த ஸ்தான ஸ்தலங்கள் முறையே: திருவையாறு, திருப்பழனம்,
திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருமழபாடி]

புலிக்கால் முனிபெண் விடையார் மணமே புரிந்தாரே
நலிவோர் மணமும் நன்றே குதிர நடத்தாரோ?
கலையான் மறையான் சோற்றுத் துறையின் அருளாளன்
மலையாள் கூறன் மனமா ரவினை மறையாதோ? ... 5

[புலிக்கால் முனிபெண் = வியாக்ரபாதரின் மகள் சுயம்பிரகாசையை
நந்திதேவர் மணமுடித்த ஐதீகம் இந்தக் கோவிலில் ஓர் உற்சவமாகக்
கொண்டாடப் படுகிறது.]

அழலாய் எழுந்தே அயன்மால் காணா வடிவானான்
கழலின் விரலால் அரக்கன் அழுத்தி யருள்செய்தான்
உழலும் நெஞ்சம் அரனை சோற்றுத் துறைகாணில்
கழலும் வினையே காமன் அழித்தான் அருளாலே. ... 6

உடுக்கை யொலிக்கக் கூளிக ளாடச் சுடுகாட்டில்
நெடுவெண் ணுடலில் வெண்ணீ றணிந்தே அழலாடி
விடம்கொள் பாம்பும் கழுவோ டுமையும் இடமாடும்
நடனம் சோற்றுத் துறையில் கண்டால் நலிவேது? ... 7

கூற்றைக் காலால் உதைத்தே சிறுவன் உயிர்காத்தான்
காற்றின் கடுகும் கணையால் புரமூன் றழித்தானே
சோற்றுத் துறையூர்க் கோவில் மேவும் துடிகொண்டான்
ஊற்றாய் ஞானம் பெருகச் செய்வான் உயிர்காத்தே. ... 8

பார்த்தன் போற்றப் பாசு பதமும் அளித்தானைத்
தீர்த்தம் ஆடிக் கீர்த்தி பாடி மலராலே
ஆர்த்தே உள்ளம் உருகத் தொழுதே பதம்வீழ்ந்தால்
தூர்த்தே வினைகள் மாய்ப்பன் சோற்றுத் துறையானே. ... 9

ஓதும் வேதப் பொருளை உணரும் உளமின்றி
தீது மொழிகள் பேசித் திரிவார் சிறுசொல்லர்
ஆதி சோற்றுத் துறையான் மறையான் அருளாலே
ஏதும் பிறசொல் கேளார் நெறியிற் பிறழாரே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
தாயுள் ளம்போல் அன்பும் செயலும் சலியாதே
ஆயும் அறியும் மேன்மை உணரும் தகவெல்லாம்
பாயில் விழுமுன் பரமன் அருளப் பணிவோமே. ... 11

--ரமணி, 06-07/01/2014, கலி.23/09/5114

*****
 
002. பாமரர் தேவாரம்: திருவையாறு
(கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்)

தானாய்த் தோன்றி தருமத் தாயின் தயைசேர்ந்தே
ஊனாய்த் தோன்றும் உயிர்கள் உள்ளே உணர்வாகி
வானே தோன்றிப் புரக்கும் ஆற்றல் வளமாகி
தேனாய்த் திருவை யாறில் மேவும் திருவாளா. ... 1

வெளிச்சுற் றில்லோர் இடத்தில் நின்றே இறைதம்மை
விளித்தே உரக்கக் குரலில் பேச எதிரோசை
தெளிவாய் ஏழு முறையாய் நமது செவிகேட்கும்
வெளிநாட் டார்க்கும் ஐயா றிதுவே புதிராமே. ... 2

கோவில் சுற்றில் ஆமை மிதிக்கும் குருமூர்த்தி
தேவிக் கெட்டாம் திதியின் இரவில் திருநாளாம்
தேவன் அறையைச் சுற்றக் கூடா தெனவிங்கே
மூவர் பலவாய்ப் பாடும் ஐயா றுடையானே. ... 3

ஏழூர் தலத்தில் முதலா வதென இதுவாக
வேழம் உரித்தான் விடையார் மணநாள் விழாக்கொள்ள
ஏழூர் வலம்சித் திரைமா தத்தின் திருநாளில்
ஏழை யிறைவன் ஐயா றூரில் எழுவானே. ... 4

ஆல காலன் கண்டம் பற்றும் அயிராணி
காலால் ஈசன் காலன் உதைக்கும் கதையோடு
கோல நடேசன் அரங்கன் முருகன் குழற்கண்ணன்
காலம் வெல்லும் கோவிற் சிற்பக் கலையாக. ... 5
[அயிராணி=பார்வதி]

சைவர் ஒருவர் காசி சென்று திரும்பாதே
சைவன் தன்னைத் தானே பூசை செய்தானாம்
உய்வே பாதம் என்றே அப்பர்க் குணர்வித்தே
ஐயா றெனுமூர் எழுந்தான் ஆட்கொண் டருள்வானே. ... 6

சுந்த ரர்க்கே நிறுத்தி யருள்வான் சுழிவெள்ளம்
அந்த ணச்சி றானை ஒளியாய் வசம்கொள்வான்
நந்தி கேசர்க் கையன் செய்தான் அபிடேகம்
இந்தத் திருவை யாறைச் சேர்ந்தால் இகம்போமே. ... 7

ஐந்தாய் ஆறுகள் சேரும் ஊர்தி ருவையாறாம்
ஐந்தாம் தெய்வ நதிகள் சேரும் தலமாகும்
ஐந்தாய் ஐயன் நந்தி கேசர்க் கபிடேகம்
ஐந்தாய்த் தொழில்செய் ஐயன் வாழ்தி ருவையாறே. ... 8

பிரிய வரதன் அமைத்த கோவில் இதுவாகும்
கரிகாற் சோழன் கோவில் முழுதும் அமைத்தானே
அரசர் பலரும் பின்னை நாளில் பலவாகத்
திருவை யாறில் பணிகள் செய்தார் சிறப்போடே. ... 9

கரிகாற் சோழன் தேரில் ஓர்நாள் கடந்தக்கால்
பரிகால் இடறித் தேரும் நிற்க அகழ்ந்தக்கால்
கருணைச் சித்தர் தெய்வ உருவம் பலகண்டே
அருளால் திருவை யாறின் கோவில் அமைத்தானே. ... 10

ஆயுள் மேனி ஆன்ம நலமும் அறவாழ்வும்
சேயுள் ளம்போல் இறையைப் பற்றும் தகவோடு
காயும் கனியும் எவையென் றறியும் அருள்வேண்டி
பாயும் நதியைத் தாங்கும் அரனைப் பணிவோமே. ... 11

--ரமணி, 10-13/01/2014, கலி.29/09/5114

(கோவில்: Aiyarappan Temple : Aiyarappan Temple Details | Aiyarappan- Tiruvaiyaru | Tamilnadu Temple | ?????????
??????? ???????? ???????? ????????
வரலாறு: blog.satheeshkumar.in: ?????????? ????????
சிற்பம்: blog.satheeshkumar.in: ??????????)
பதிகம்: மூவர் தேவாரம் - அடங்கன்முறை aDanganmurai Moovar tEvAram from First upto Seventh Tirumurais (in tamil script, unicode format)

*****
 
அன்புடையீர்!

தேவாரப் பாடல்களின் பொழிப்பைக் குறும்பாவில் முயன்றாலென்ன என்று
தோன்றியதில் எழுந்த சம்பந்தர் பதிகப் பொழிப்பு கீழே.

அறிஞர்களும் அன்பர்களும் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
ரமணி

*****

003. பாமரர் தேவாரம்: திருவையாறு
மூலம்: சம்பந்தரின் ’கலையார் மதிசேர்’ என்று தொடங்கும் பதிகம்
(??????? ???????? ???????? ????????)
(குறும்பாவில் பொழிப்பு)

மூலம்:
கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மனலியா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே. ... 1

பொழிப்பு:
கலைகொள்ளும் மதியுடனே நதிநீரும்
நிலைகொள்ளும் சடையாரின் பதியாகும்
. . முத்துமணிச் சந்தனமும்
. . எத்தனையோ வுந்திவரும்
அலைப்பொன்னி ஐயாறாம் நதிதீரம். ... 1

மூலம்:
மதியொன் றியகொன் றைவடத்தான்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வு
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே. ... 2

பொழிப்பு:
மதியோடு கொன்றைமாலை அணி-தலையே
மதியினைக்கால் தேய்த்தவராம் வாழ்நிலையே
. . வீடுகளின் கொடிமாடம்
. . நாடிவந்து நடமாடி
மதிதங்கும் ஐயாறெனும் மணித்தலமே. ... 2

மூலம்:
கொக்கின் னிறகின் னொடுவன்னி
புக்க சடையார்க் கிடமாகும்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே. ... 3

பொழிப்பு:
கொக்கிறகும் பச்சிலையும் வன்னியுமே
புக்குறையும் சிவனாரின் சென்னியிலே
. . எண்டிசைவாழ் வானவரே
. . கொண்டொழுகும் கோனவரே
அக்கணிந்தே ஐயாறில் மன்னியனே. ... 3 ... [அக்கு=சங்குமணி]

மூலம்:
சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையு மொலிசே ருமையாறே. ... 4

பொழிப்பு:
சிறைகொண்ட புரமழித்த சினத்தீயினன் ... [சிறை=சிறகு]
கறைமிடற்றன் காதல்செயுந் தனக்கோயிலன் ... [தனம்=தன்மை, செல்வம்]
. . மறைவினிலே பலவரரும் ... [வரர்=தேவர்]
. . உரையாடும் ஒலிபெருகி
நிறைகொள்ளும் ஐயாறின் வனவாயிலாம். ... [வனம்=அழகு] ... 4

மூலம்:
உமையா ளொருபா கமதாகச்
சமைவா ரவர்சேர் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்
அமையா வருமந் தணையாறே. ... 5

பொழிப்பு:
உமையன்னை ஒருபாகம் உடலாகிச்
சமைவாராய் எழுந்தருளும் இடமாகும்
. . மூங்கிலுடல் தரும்முத்தம்
. . தாங்கியலை வரும்நித்தம்
அமைநளிரூர் ஐயாறாம் புடமாகும். ... 5 ... [நளிர்=குளிர்; புடம்=இடம்]

மூலம்:
தலையின் றொடைமா லையணிந்து
கலைகொண் டதோர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே. ... 6

பொழிப்பு:
தலையோட்டுத் தொடைமாலை கழுத்துருள
கலைமானக் கைப்பிடித்தார் எழுந்தருள
. . பாதவிணை யேசித்தம்
. . சாதனையா வார்நித்தம்
மலர்கொண்டு ஐயாறில் வழுத்துவரே. ... 6

மூலம்:
வரமொன் றியமா மலரோன்றன்
சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
அரவங் கொடுசே ருமையாறே. ... 7 ... [அரவம்=ஒலி]

பொழிப்பு:
வரங்கொண்ட மாமலரோன் தலையொன்றைக்
கரங்கொண்ட சிவனாரும் நிலையொன்றும்
. . மலைநின்று இழிபொன்னி
. . அலைநின்று வழிநன்னீர்
அரவம்சேர் ஐயாறாம் தலமென்றே. ... 7 ... [அரவம்=ஒலி]

மூலம்:
வரையொன் றதெடுத் தவரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே. ... 8

பொழிப்பு:
மலைதன்னைக் கொளமுயன்ற கரவலியன்
தலையங்கம் நெரித்தவராம் உறவிலியும் ... [தலையங்கம்=தலைகளும் பிற அங்கங்களும்]
. . அணிகொள்ளும் கோவிலது
. . மணமலர்கள் காவிரியின்
அலைசேரும் ஐயாறாம் திருவலமே. ... 8 ... [வலம்=மேலிடம்]

மூலம்:
சங்கக் கயனு மறியாமைப்
பொங்குஞ் சுடரா னவர்கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
அங்கிக் கெதிர்காட் டுமையாறே. ... 9

பொழிப்பு:
சங்குக்கை மால்சோர அமர்வித்தன்
பொங்குசுடர் என்றோங்கிய உமைசித்தன்
. . தாமுறையும் கோவிலிலே
. . தேமலர்நீர்க் காவிரியும்
அங்கிக்கு ஐயாறில் சமர்ப்பிக்கும். ... 9 ... [அங்கி=அக்கினிதேவன்]

மூலம்:
துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணையந் தணையாறே. ... 10

பொழிப்பு:
துவராடை தோலுடுத்தோர் புணையாகக் ... [துவரஆடை, தோல்=சமணர், புத்தர் ஆடை]
கவர்வாய்ச்சொல் கொள்ளதே துணையாகத் ... [கவர்=வஞ்சகம்]
. . தவராசர் அயன்தேவர் ... [அயன்=பிரம்மன்]
. . உவந்தேதான் நயந்தேட ... [நயம்=அருள்]
அவர்தாமும் ஐயாறில் அணைவாரே. ... 10

மூலம்:
கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலமார் தருஞா னசம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே. ... 11

பொழிப்பு:
கலைவல்லார் ஒலிசேரும் காழியினில்
நலம்சேர்க்கும் சம்பந்தக் காழியனும்
. . அலையாரும் ஐயாறில்
. . சொலுமாலை மெய்யாரச்
சொலவல்லான் துயர்நீங்க வாழுவனே. ... 11

--ரமணி, 14-15/02/2014, கலி.03/11/5114

*****
 
Last edited:
004. பாமரர் தேவாரம்: (மேலைத்) திருக்காட்டுப்பள்ளி
(அறுசீர் விருத்தம்: அரையடி: மா மா காய்)

(’வாருமன் னும்முலை’ என்று தொடங்கும் சம்பந்தர் பதிகப் பொழிப்பு
??????? ???????? ???????? ????????)

மூலம்:
வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
ஊருமன் னும்பலி உண்பதும் வெண்டலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே. ... 1

பொழிப்பு:
அணிவார் முலையாள் மங்கையவள் .. ஆரும் உடலோர் பங்கெனவும்
அணவார் அயனின் வெண்டலையில் .. அரனும் ஐயம் கொண்டலைவும்
அணிநீர்ச் சடையின் வானதியும் .. தணிநீர்ப் பொன்னிக் காவிரியும்
மணியூர்க் காட்டுப் பள்ளியிலே .. அமலன் உருவை யுள்ளுவரே. ... 1

[அணிவார் = வார்-அணி = கச்சையணிந்த; அணவார் = அணவு-ஆர் = ஆர்ந்து இணைந்த;
ஐயம் = பிச்சை; தணிநீர் = குளிர்ந்த நீர்; காவிரியும் = சோலைகள் விரியும்;]

மூலம்:
நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப்
பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே. ... 2

பொழிப்பு:
நிருத்தன் சடைநீள் நிலவுடனே .. இலங்கும் அரவும் உலவிடுமே
கருத்தன் பொழில்சூழ் காவிரியின் .. காட்டுப் பள்ளி மேவியவன்
அருத்தன் மங்கை இடமமர .. ஆர்க்கும் கால்கள் நடமுறவே
பொருத்தன் கழல்கள் சிரம்வைத்தே .. போற்றல் வாழ்வின் பொருள்வைப்பே. ... 2

[நிருத்தன் = நடனம் செய்பவன்; கருத்தன் = செய்வோன், கடவுள், தலைவன்;
அருத்தன் = (கண்ணிற்கும் கருத்திற்கும்) பொருளாய் (அர்த்தமாய்) உள்ளவன்;
பொருத்தன் = பொருத்தம் உடையவன்;]

மூலம்:
பண்ணினார் அருமறை பாடினார் நெற்றியோர்
கண்ணினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
விண்ணினார் விரிபுனல் மேவினார் சடைமுடி
அண்ணலார் எம்மையா ளுடைய‍எம் மடிகளே. ... 3

பொழிப்பு:
பண்ணார் நான்கென் றாரணமே .. படைத்தார் உரைத்தார் நீறணிவார்
கண்ணார் நுதலார் கடிபொழிலார் .. காட்டுப் பள்ளி யிடமுறைவார்
விண்ணார் விரிநீர் அடவெனவே .. மேவும் கங்கைச் சடைமுடியார்
தண்ணார் அண்ணல் எமையாளும் .. தலைவர் எனவே அமைவேனே. ... 3

[அடை=அடைக்கலம்]

மூலம்:
பணங்கொள்நா கம்‍அரைக் கார்ப்பது பல்பலி
உணங்கலோ டுண்கலன் உறைவது காட்டிடைக்
கணங்கள்கூ டித்தொழு தேத்துகாட் டுப்பள்ளி
நிணங்கொள்சூ லப்படை நிமலர்தம் நீர்மையே. ... 4

பொழிப்பு:
பணங்கொள் நாகம் அரையணியும் .. ஆடைக் கயிறாம்; இரந்துணவே
உணங்க லோடு உண்கலனாம் .. உறைதல் நீறு வெண்களனாம்
கணங்கள் கூடித் தொழுதேத்த .. காட்டுப் பள்ளி யெழுந்தானே
நிணங்கொள் சூலப் படையாளன் .. நிமலன் நீர்மை அடையாளம். ... 4

[பணம் = பாம்பின் படம்; உறைதல் = வாழ்தல்; நீறு வெண்களன் = சாம்பல் வெண்மையாய்த்
தோயுமிடம் = சுடுகாடு; நீர்மை = சிறந்த குணம், எளிமை, இயல்பு]

மூலம்:
வரையுலாம் சந்தொடு வந்திழி காவிரிக்
கரையுலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
திரையுலாம் கங்கையும் திங்களும் சூடியங்
கரையுலாங் கோவணத் தடிகள்வே டங்களே. ... 5

பொழிப்பு:
வரையின் மரமாம் சந்தனமே .. வருகா விரியின் உந்தலைகள்
கரையில் இடுமண் சூழ்வரவே .. காட்டுப் பள்ளி வாழ்பவரே
திரையார் கங்கை ஊடுருவத் .. திங்கள் தலைமேல் சூடுவராய்
அரைக்கோ வணமே ஆடையென .. அடிகள் புனையும் வேடங்களே. ... 5
[திரை = அலை; அடிகள் = கடவுள்]

மூலம்:
வேதனார் வெண்மழு வேந்தினார் அங்கமுன்
ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக்
காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நாதனார் திருவடி நாளும்நின் றேத்துமே. ... 6

பொழிப்பு:
வேதன் வெள்ளை மழுக்கரத்தே .. யேந்தி அங்கம் மொழியுருத்தே
ஓத உமையாம் பெண்ணிழையும் .. கூறன் அவனே ஒண்குழையாம்
காத ணியன் கடிபொழில்சூழ்க் .. காட்டுப் பள்ளி வடிவெழிலன்
நாதன் அவன்றாள் மனமாள .. நாளும் ஏத்த வினைமாளும். ... 6

[வேதன் = வேத வடிவினன்; அங்கம் = வேதத்தின் ஆறு அங்கமும்;
மொழுயுருத்தே = மொழியுருவில் உரைத்தே;]

மூலம்:
மையினார் மிடறனார் மான்மழு வேந்திய
கையினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
தையலோர் பாகமாத் தண்மதி சூடிய
ஐயனார் அடிதொழ அல்லலொன் றில்லையே. ... 7

பொழிப்பு:
மையார் மிடறும் விடமேந்தும் .. மானின் மழுவின் வடிவேந்தும்
கையன் கடிசால் பொழில்சூழும் .. காட்டுப் பள்ளி எழில்சூலன்
தையல் கூறாய் மன்னிடவே .. தண்மை நிலவும் சென்னியிலே
ஐயன் அடியைத் தொழுவாரே .. அல்லல் இன்றி எழுவாரே. ... 7

[கடிசால் = மணமிகு]

மூலம்:
சிலைதனால் முப்புரஞ் செற்றவன் சீரினார்
மலைதனால் வல்லரக் கன்வலி வாட்டினான்
கலைதனார் புறவணி மல்குகாட் டுப்பள்ளி
தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே. ... 8

பொழிப்பு:
சிலையால் மூன்று புரமழியச் .. சினந்தார்; என்றும் உரமழியா
மலையை வலித்த வல்லரக்கன் .. வலிமை வாட நல்லுறுத்தார்
கலைகள் முல்லை நிலம்துள்ளும் .. காட்டுப் பள்ளித் தலம்கொள்ளும்
தலைவன் தலையால் கொண்டாடத் .. தவமாம் பேறும் உண்டாமே. ... 8

[உறுத்தல் = அழுத்துதல்; கலைகள் = மான்கள்]

மூலம்:
செங்கண்மால் திகழ்தரு மலருறை திசைமுகன்
தங்கையால் தொழுதெழத் தழலுரு ஆயினான்
கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி
அங்கையால் தொழும்‍அவர்க் கல்லல்‍ஒன் றில்லையே. ... 9

பொழிப்பு:
செங்கண் ணுடைய மாலவனும் .. இண்டை உறையும் நான்முகனும்
தங்கை கொண்டே தொழுதிடவே .. ஆனான் அவனும் அழலுருவே
கங்கை ஆரும் சடையானே .. காட்டுப் பள்ளி உறைவானே
அங்கை கொண்டே தொழுவாரே .. அல்லல் இன்றி எழுவாரே. ... 9

[இண்டை = தாமரை]

மூலம்:
போதியார் பிண்டியார் என்றவப் பொய்யர்கள்
வாதினால் உரையவை மெய்யல வைகலும்
காரினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
ஏரினால் தொழுதெழ வின்பம்வந் தெய்துமே. ... 10

பொழிப்பு:
போதி பிண்டி மரத்தடியில் .. ஓதி யஞானி வழியடியார்
வாதம் மெய்யாய்க் கொள்ளாதே .. வைகல் எழுந்து உள்ளார்ந்தே
கார்மே கம்சூழ் கடிபொழிலார் .. காட்டுப் பள்ளி வடிவெழிலன்
ஏரால் வாழும் மெய்யடியார் .. ஏத்த வின்பம் எய்திடுவார். ... 10

[போதி, பிண்டி = அரச, அசோக மரம்; ஏர் = சீலம்;
ஓதிய ஞானி = புத்தர், மஹாவீரர்; வைகல் = அதிகாலை;]

மூலம்:
பொருபுனல் புடையணி புறவநன் னகர்மன்னன்
அருமறை யவைவல்ல வணிகொள்சம் பந்தன்சொல்
கருமணி மிடற்றினன் கருதுகாட் டுப்பள்ளி
பரவிய தமிழ்சொல்லப் பறையுமெய்ப் பாவமே.

பொழிப்பு:
பொருமே கரையைப் புனலடைவே .. புறவ மன்னன் புகலெனவே
அரும றைநெறி யின்சொல்லை .. அணிகொள் சம்பந் தன்சொல்லை
கரிய மணிகொள் மிடற்றினனை .. காட்டுப் பள்ளி யிடத்தினிலே
பரவிப் புகழ்ந்த தமிழ்ப்பதிகம் .. பறையப் பாவம் அழிந்திடுமே.

[பொருதல் = போர் செய்தல்; புறவம் = சீகாழி;]

--ரமணி, 16-18/02/2014, கலி.06/11/5114

*****
 
005. பாமரர் தேவாரம்: திருப்பூவனூர்
(சந்தக் கலிவிருத்தம்: ’தான தானன தான தானன’
அடிதோறும் முதல் மூன்று சீர்கள் குறிலில் முடியும்;
முதற்சீர் ’தனன’ என்றும் வரக்கூடும்.)


குரவ னிந்திரன் குந்த னைங்கரன் ... [குரவன்=பிரம்மன்; குந்தன்=திருமால்]
முருக னேத்திய மூலன் புண்ணியன்
உருவி லானுறும் பூவ னூரினில்
உருகி யேத்திட வுய்ய லாகுமே. ... 1

சதுரங் கம்தனை யாடி வென்றவன்
வதுவை கொண்டனன் மன்ம கள்தனை ... [மன்மகள்=மன்னன் மகள்]
பொதுமன் றாடுவன் பூவ னூரிலே
எதுவு முட்பொருள் ஈந்த ருள்வனே. ... 2

மன்ம கள்தனை மாத ரேழ்வரில்
அன்னை போலவ ணங்கு பேணிட
சின்ம யற்றனுஞ் சித்த னாய்க்கொள
மன்னன் வேண்டலில் வாழும் பூவனூர். ... 3

[மாதர் ஏழினில் (ஓர்) அணங்கு: சப்தமாதரில் ஒருத்தியான சாமுண்டீஸ்வரி]

பொடிய ணிந்தவன் பூவ னூரிலே
கடிவி டந்தனைக் கட்டும் வேரினால்
அடிய ழித்திடும் சாமுண் டீச்வரி
நெடிய கண்ணுற நின்ற ருள்வளே. ... 4

ஆண்டி லைப்பசி யன்ன மாடுவான்
வேண்டு வோர்பிணி மீள்வ தென்றிலை
பூண்ட வல்விளம் பூவ னூரனும்
ஈண்ட ருள்செய ஏக லாகுமே. ... 5

[அன்னமாடுவான் = அன்னாபிடேகம் கொள்வான்; பூண்ட=சூழ்ந்துகொண்ட;
விளம் = அகங்காரம், அடம்; ஈண்டு=இம்மை]

அம்மன் கற்பகம் ராணி யீச்வரி
நம்மை யாளுமின் னால யந்தனில்
மம்மர் குன்றிட வானம் கைவரும்
உம்பர் கோனது பூவ னூரிலே. ... 6

நாவின் வேந்தரி னாவி மேவியப்
பாவின் மேவிய ஐந்து மாடியன்
தேவன் மேவிய தீந்த மிழ்ப்பதி
பூவ னூரினில் போகும் பாவமே. ... 7

[நாவின் வேந்தர் = திருநாவுக்கரசர்]

அம்மை யப்பனுந் தானுந் தன்மனை
இம்மை தம்முயி ரீசன் பூவனூர்
தம்மை யொப்பவர் தாமென் றப்பரும்
நம்மி டஞ்சொல நாமு மோர்வமே. ... 8

மாசு நாடுவர் மாண்பு நாடலர்
பேசுந் தீவினை யேகும் பூவனூர்
ஈசற் றாளிணை யேந்தி னாலிவண்
பேசு வார்மரு ணீக்கி யாருமே. ... 9

மலைகெல் லுந்தலை மண்ணில் சாய்த்தவன்
வலவ னாரணன் மாய ஏய்த்தவன்
உலையும் நெஞ்சது பூவ னூரினில்
தலைவ ணங்கிட ஆறு மென்பரே. ... 10

[ஏய்த்தவன் = இசையப் பண்ணியவன்]

அப்பர் பாடிய அம்மை யப்பனை
தப்பல் நீங்கிடத் தாழ்த லைக்கொளின்
உப்பும் மூவினை பூவ னூரினில்
கப்பின் றேகநம் காட்சி தேறுமே. ... 11

[தப்பல் = குற்றம்; கப்பு = கிளை]

--ரமணி, 03-06/03/2014, kali.22/11/5114

அப்பர் பதிகம்: ’பூவ னூர்ப்புனி தன்திரு நாமந்தான்’
??????? ???????? ???????? ????????
கோவில்: Chathuranga Vallabha Nathar Temple : Chathuranga Vallabha Nathar Temple Details | Chathuranga Vallabha Nathar - Poovanur | Tamilnadu Temple | ??????? ??????????

*****
 
படிப்பதற்கு வசதியாக இரண்டிரண்டு பாக்களாகப் பதிவு செய்கிறேன்.

திருநல்லூர்
(நாலடித் தரவு கொச்சகக்கலிப்பா)
(கோவில்: Kalyanasundareswarar Temple : Kalyanasundareswarar Temple Details | Kalyanasundareswarar - Nallur | Tamilnadu Temple | ???????????????)

அஞ்சுவண்ண வுருத்தங்கும் பஞ்சவண்ண வுருலிங்கம்
அஞ்சலறும் திருவடிநா வரசர்க்குத் தருவடிவன்
பஞ்சபூத வரம்பெற்றுப் பஞ்சபாண்ட வரைப்பெற்ற
வஞ்சிசாபம் நல்லூரில் அஞ்செழுத்தன் கெல்லுவனே. ... 1 ... [வஞ்சி = இங்குக் குந்திதேவி]

நல்லூரில் எண்கரத்தான் நடராசன் கண்சுரப்பான்
கல்யாண சுந்தரனாய்க் கவினுறவே வந்தவனாம்
கல்யாண சுந்தரியோ டருள்செய்வான் சிந்தையுற
கல்லாரும் கற்றவரும் காஞ்சனத்தாள் பற்றுவரே. ... 2 ... [காஞ்சனம் = பொன்]

*****
 
கடாவேறும் காலனுறும் காலத்தே ஓலமறச்
சடாரியாய்த் தலைநின்று அருள்செய்ய வினைகுன்றும்
விடாமலே பற்றுவோர்க்கு வெண்ணீறன் உற்றவனாய்த்
தடாகமாய் நல்லூரின் தளியினிலே உள்ளானே. ... 3

[சடாரி = பெருமாள் கோவிலிற்போல் நல்லூர்க் கோவிலிலும்
சடாரி வைக்கும் வழக்கம் உள்ளது; தளி=கோவில்]

எழுகடல்நல் லூர்க்குளத்தே விழவினைகள் தீர்களமாய்க்
கெழுகுடந்தைத் திருமுழுக்குக் கிதுவுடந்தை யெனவழக்கே ... [உடந்தை = உறவு]
தொழுதேத்தும் அடியார்க்குத் தொல்வினைகொல் நெடியோனாய்
மழுவாளி மருந்தீசன் மன்பதைக்கோர் அருந்தேனே. ... 4
 
பறைகொட்டப் பேய்கூடும் அனலேந்தும் கரமாடும்
எறிசடையிற் றிழியாறும் பிறைமதியுந் தடுமாறும்
உறியடியாய் அண்டமெலாம் துகளாகித் துண்டெனவே
அறுவினையான் ஐந்தொழிலே நல்லூரில் கைத்தொழுமே. ... 5

ஆடற்கொரு மாடற்றலம் பாடற்பெறும் ஈடற்றதே
தேடத்துணை நல்லூரினில் சேமந்தர வல்லானென
ஓடதனைக் கொள்ளும்பவ ஓடமதைத் தள்ளும்சிவ
வேடத்தினன் பரமனென வேதத்தறம் அருளுவனே. ... 6
 
உயிர்தேவன் ஆதிசேடன் உரம்காணச் சேதமாகிக்
கயிலைச்சேண் ஆவூரில் அமர்ந்ததுவே நல்லூரில்
எயிலெரித்த எண்டோளன் ஏத்துவோருள் நின்றாடச்
செயிரெல்லாம் சிதைந்தேகச் சீர்மலியும் நல்லூரே. ... 7

[உயிர்தேவன் = வாயுபகவன்; சேண் = சிகரம், முகடு; செயிர் = குற்றம், கோபம், நோய்.
ஆவூரில் அமர்ந்ததுவே நல்லூரில் = ஆவூரில், நல்லூரில் அமர்ந்ததுவே
என்று அன்வயம் செய்துகொள்க.]

பழையாறை நாயனாரை ஆராய்ந்த நேயனாவான்
குழைக்காதன் நல்லூரின் கோவெனவே வல்லானாம்
மழுவாளி அகத்தியர்க்கு மணக்கோலம் புகட்டியவன்
பழவினையைப் புடைத்தாளும் பரனேநாம் கடைத்தேற. ... 8

[பழையாறை நாயனார் = அமர்நீதி நாயனார். இவரது வரலாறு இங்கே:
http://www.shaivam.org/baktas/nayanmar/nayanmar-amarneethi.htm]
 
பிரமரமாய் உருவெடுத்து இறையேத்தி உமைவிடுத்து ... [பிரமரம் = வண்டு]
அரனம்மை ஒருமேனி யமரவைத்த பிருங்கமுனி
பரவியவூர் நல்லூரில் அரனிலிங்கச் சில்லியார ... [சில்லி = துளை]
நரவாழ்வில் உளமேறும் நலிவதனைக் களைவோமே. ... 9

[அர்த்தநாரீச்வரர் கதை
https://www.facebook.com/notes/srir...துடையபாகன்-பாகம்-பிரியார்-மா/179472865417179]

ஊருணியாயாச் வேதநெறி உலகினிற்கே போதமுற
தாரணியில் வேறுநெறித் தாங்கிடுவோர் ஊறுரையைக்
காரணித்தே கொள்ளாரைக் காத்தருளும் நல்லூரில் ... [காரணித்தே = பகுத்தறிந்தே]
ஆரணங்கை ஒருபுடையாய் அமைத்தவனின் திருவடியே. ... 10
 
(இறுதிப் பகுதி)

நலங்கிளருந் திருவடியென் றலைமேலென் றாரப்பர்
மலைமல்கு கோயிலிலே மகிழ்ந்தீரென் றார்பிள்ளை
கலைமல்கு நல்லூரில் களித்திருக்கும் வல்லானைத்
தலைமேல்கை வைத்தேற்றின் அலராதோ மெய்த்தேற்றே. ... 11

கருவறையில் குயிறலுற்ற அரனுருளை பயப்புறுமே
பெருவுருவாய் மாலயனும் இருபுறமும் பாலகராய்
அரனம்மை பின்னிற்கும் மணக்கோலம் முன்நிறகத்
தருவெனவே நல்லூரில் அருளுவரே எல்லாமே. ... 12

[குயிறல் = துளைத்தல்; உருளை = இலிங்கம்; பயப்பு = நிறம் மாறுதல்.
நல்லூர்க் கருவரை மூலவர் படம் இங்கே:
]Temple : Temple Details | - | Tamilnadu Temple |

--ரமணி, 16-27/03/2014, kali.14/12/5114

*****
 
திருப்பாச்சிலாச்சிரமம் (திருவாசி)
(எழுசீர் விருத்தம்: விளம் மா விளம் மா விளம் விளம் மா)

கோவில்:
Mattrurai Varadeswarar Temple : Mattrurai Varadeswarar Temple Details | Mattrurai Varadeswarar- Tiruvasi | Tamilnadu Temple | ??????????????????
??????????????????????? (????????) - Tiruppachilachiramam Temple - sthala puranam
??????? ???????? ???????? ????????

பதிகம்:
’துணிவளர் திங்கள்’ (சம்பந்தர்)
??????? ???????? ???????? ????????
’வைத்தனன் தனக்கே’ (சுந்தரர்)
??????? ???????? ???????? ????????

அன்னையின் நேரே அமர்ந்தருள் புரியும்
. அனுக்கைவி நாயக போற்றி!
அன்னமாம் பொய்கைத் தெளியமு தாக
. மன்னியென் னுளம்நிறைந் தமர்ந்தே
முன்னவ னுந்தை யெந்தையா யுணர்ந்தே
. முக்கணன் மேவிநின் றருளி
நன்னலம் பாய்ச்சும் பாச்சிலாச் சிராமத்
. தாலயம் பரவிட அருள்வாய்! ... 1

[அமுது = நீர்; அன்னமாம் பொய்கை = கோவில் தீர்த்தப் பெயர்]

மாற்றுரை வரதர் பிரம்மபு ரீசர்
. அத்துடன் சமீவனே சரெனப்
போற்றவே பலபேர் தாங்கிடு மீசர்
. உருத்திரை பாலசௌந் தரியாய்
காற்றினுங் கடுகிக் குறைதீர்த் தருளி
. அடியவர் காத்தொழில் செய்யும்
ஆற்றுவ டகரை பாச்சிலாச் சிராமத்
. தாலயம் அழித்திடும் வினையே. ... 2

[உருத்திரை = உமையன்னை; ஆற்று வடகரை = காவிரியாற்றின் வடகரையில்]

*****
 
கருவறை சுயம்பு விலிங்கமா யருள்வார்
. அனையுடன் நின்றொரு கோலம்
உருவினில் சகஸ்ர லிங்கமாய் வெளியிற்
. கொலுவுயர் சன்னிதி யொன்றாம்
திருவுருள் பெற்ற நால்வரில் பதிகம்
. இருவரும் பாடியே வந்தார்
ஒருவரின் பாட்டில் பிணியினைத் தீர்த்தின்
. னொருவருக் காடகம் தந்தார். ... 3

[அனை = அன்னை; இருவர் = சம்பந்தர், சுந்தரர்; ஆடகம் = சிறந்த பொன்.]

முயலகன் நோயால் மழவனின் மகளுக்
. குறுதுயர் தீரவே கூத்தன்
தயவினை வேண்டிக் குரவரும் பாட
. அவள்துயர் நீக்கிய அரனும்
முயலகன் இன்றி விடதரம் மீதே
. ஒருவடி யூன்றியே ஆடும்
மயலறும் ஆடற் கூத்தனின் கோலம்
. மனமிழிந் தால்வரும் உய்வே. ... 4

[மயல் = மயக்கம்; குரவர் = இங்கு சம்பந்தர்;
இழிதல் = இறங்குதல்.]
 
வணிகனின் மகளாய்ப் பிறந்தபா லாம்பாள்
. வன்னிம ரத்தடித் தவத்தால்
மணிமிடற் றரனின் பிரிவினை யறுத்தே
. மணம்கொளப் பெற்றவின் னாமம்
அணங்கவள் கமலம் நின்றருள் செய்ய
. மழலையர் நோயற வாழ்வர்
பணிமகள் வாயிற் பெண்ணிரு யுருவிற்
. கணியெனக் காஞ்சனித் தொட்டில். ... 5

[மிடறு = கழுத்து; வாயிற் பணிமகள் = துவாரபாலகி;
காஞ்சனி = மஞ்சள்]

சூரியன் மனையாள் இருவரும் பக்கம்
. சூழவே நின்றிடும் நவக்கோள்
ஆரமாய் மற்ற கோளெலாம் அவரைப்
. பார்க்கவே கோள்வினை குன்றும்
ஆரமாய்க் குவியும் கரங்களிற் றாளம்
. ஆர்த்திட நிற்குமா ரூரர்
பூரணன் தந்த பொன்னை-ஐ யுற்றே
. ஊடலில் நின்றதோர் கோலம்! ... 6
 
அன்னமாய் மாறி அழலென நின்ற
. அரன்முடி தேடிய அயன்தான்
சொன்னபொய் யுரையால் அன்னமாய் நிற்க
. உருத்திரன் அருளினால் தவம்செய்
துன்னியே போற்றத் தன்னுருப் பெறவே
. முன்னுரு நீங்கிய தீர்த்தம்
அன்னமாம் பொய்கை என்றுபேர் பெற்றே
. நம்வினை யழிநிலை நீரே. ... 7

எழுமையும் அடியேன் அடியவர்க் கடியேன்
. இவரினும் புரப்பவர் இல்லை
தொழுதுமேன் காட்டார் சேவடி யானே
. உரிமையா யவர்பொருள் ஆனேன்
உழல்மனம் ஆறப் பாச்சிலாச் சிரமத்
. துறைபவ னேத்தியா ரூரர்
மொழிந்திடும் பாடல் உளம்வரப் பெற்றால்
. ஒழியுமே இனிவரும் பிறப்பே. ... 8

[எழுமை = ஏழு பிறப்பிலும்]
 
(இறுதிப் பகுதி)

புனற்சடை கலையும் கொன்றையும் உறையப்
. பூதமும் பேய்களும் சூழ
வனத்திடை நீறு பூசியே ஆடும்
. அனல்விழிப் பரமனும் பெண்ணைக்
கனற்றிடும் நோயைப் பாச்சிலாச் சிரமக்
. காவலன் மகிழவே தீர்க்க
மனங்கொளப் பாடிக் காழியர் விளைத்த
. அற்புதம் ஆழ்ந்திட உய்வே. ... 9

வானமும் உயிரும் வையமும் அறமும்
. மானிட மனமுறை குணமும்
ஆனவோர் இறையை அறிதலே உய்வென்
. றாமெனும் மறைநெறி பழிக்கும்
கானலாம் நெறிகள் தவிர்த்திடும் அடியார்
. காத்திடும் பாச்சிலாச் சிரம
ஞானனைப் போற்ற நன்மைகள் சேர
. நலிவெலாம் ஓடியே போமே. ... 10

பாச்சிலாச் சிராமப் பாழியின் மூர்த்தி
. பாரினில் அவரது கீர்த்தி
மூச்சினில் நாமம் மந்திரம் ஒலிக்க
. மூழ்கிடச் செய்திடும் தீர்த்தம்
வாச்சியம் வேதம் ஒலித்திட இறையை
. வழிபடும் அடியவர் கூட்டம்
பேச்சினில் செயலில் பாட்டினில் ஐயன்
. பேர்வர ஏர்வரு மன்றோ? ... 11

*****
 
திருப்பூவனூர் - 2.
(எண்சீர் விருத்தம்: அரையடி வாய்பாடு: காய் காய் மா தேமா )

கோவில்:
Chathuranga Vallabha Nathar Temple : Chathuranga Vallabha Nathar Temple Details | Chathuranga Vallabha Nathar - Poovanur | Tamilnadu Temple | ??????? ??????????
http://www.shivatemples.com/sofct/sct103.php

பதிகம்:
’பூவனூர்ப் புனிதன்’ (அப்பர்)
??????? ???????? ???????? ????????

சதுரங்க வல்லவனாய் அருள்செய் யீசன்
. சாமுண்டி மூலமாகச் செய்யும் கோவிற்
பொதுமன்றில் நடம்செய்யும் பூவ னூரே
. பொருளுரைத்தே வினைபோக்கும் தலமென் றாக
நிதம்சூலி நாமத்தை நெஞ்சிற் கொண்டே
. நிமலன்பேர் நனிபரவி முத்தி யுற்றார்
பதம்போற்றித் தலைவணங்கி யுளங்க னிந்தால்
. பாவங்கள் நமைவிட்டு நீங்கும் இன்றே. ... 1

தத்தாநமர் என்றுதன தாவி நீங்கும்
. தருணத்தில் பகைவனையே பக்த னாக்கி
முத்தநாதன் கொலைவஞ்சம் எதிர்கொள் கோவி
. லூர்வேந்தன் மெய்ப்பொருளார் சரிதை கண்டே
இத்தருணம் இகல்தன்னை எதிர்கொள் யாரும்
. ஈசனருள் பெற்றுய்வார் பூவ னூரில்
பத்திவரும் பயம்போகும் வளரும் பான்மை
. அத்தனடி தலைவணங்கிப் போற்று வோர்க்கே. ... 2

*****
 
மேனியெங்கும் வெண்ணீறாய் மாதோர் பாகன்
. மேவியருள் புரிகின்ற பூவ னூரில்
வானிறங்கும் கங்கையாறு தலையிற் றாங்கி
. வானமுதை வையமுறச் செய்த வேந்தன்
கான்தனிலே பேயார்க்க நடனம் செய்யும்
. காட்சியுளம் கொள்வார்க்கே அச்சம் நீங்கி
தானென்ற உணர்வழிந்து மேன்மை யார
. அன்பொன்றே சிவமென்னும் பான்மை யாமே. ... 3

பூச்சொரியும் கொன்றைசிவ நினைவை யூட்டப்
. பூவுலகம் மேலுலகம் நின்றே கேட்கப்
பாச்சொரியும் ஐந்தெழுத்தைக் குழலில் ஊதிப்
. பரமனடி சேர்ந்தார்-ஆ னாய னாரின்
ஆச்சரியக் கதைகேட்டே பூவ னூரில்
. அம்மையப்பன் தாளிணையைப் பற்று வோர்க்கே
மாச்சரியம் முதலான பகையாம் ஆறும்
. மனம்விட்டு நீங்கிடவே மல்கும் அன்பே! ... 4

*****
 
வேகாத செங்கலதைப் பச்சை யென்பர்
. வேதியிலே வேகாத பதிகம் பச்சை
ஆகாதோ அம்மையப்பன் ஞானப் பிள்ளை
. அமணரெலாம் தோற்றிடவே தீயில் இட்டே
பாகான பைந்தமிழில் பரமன் போற்றிப்
. பாண்டியனைத் தாயறமே திரும்பச் செய்த
வாகான தேவாரம் வேதம் போற்றும்
. மாதேவன் மேவுதலம் பூவ னூரே. ... 5

குறிப்பு:

சமணர்களுடன் சம்பந்தர் அனல்வாதம் செய்தபோது தாம் முன்பே பாடிய
திருநள்ளாற்றுத் திருப்பதிகத்தை நெருப்பில் இட்டபோது அது எரியாமல்
பச்சென்றிருந்ததால் அப்பதிகம் ’பச்சைப் பதிகம்’ என்றழைக்கப்படுகிறது.

புரமூன்றும் சிரித்தழித்தே மூவர் ஆன்மா
. உருவாகத் தன்சபையிற் கொண்ட தேவன்
அருளன்னை இடப்பக்கம் கொண்டே மேவி
. ஆட்கொள்ளும் தலமாகும் பூவ னூரில்
விரிசடையும் முக்கண்ணும் புரிநூல் மார்பில்
. வெண்ணீறும் புலியதளும் செம்பொற் றாளும்
தரிசனமாய்க் காண்போர்தம் உளத்தில் தங்கி
. அறநெறியில் உய்விக்கத் திரளும் அன்பே. ... 6

*****
 
கண்படைத்தே வழிபட்டு மகிழச் செய்தே
. காத்தருளும் ஆழிதனைப் பெற்றான் மாயன்
பெண்ணவளைக் கொளும்நம்பி யாரூர் தம்மை
. வெண்ணெய்நல் லூர்த்தலத்தில் கொண்டான் பித்தன்
வெண்ணீறன் வில்லாளி விமலைக் கூறன்
. வினையாளும் வித்தகனைப் பூவ னூரில்
கண்ணாரக் காணுமுளம் களியில் ஆர்ந்தே
. அண்ணலவன் தாள்நாடப் பெருகும் அன்பே. ... 7

வல்லரக்கன் கரம்பற்ற மலையும் ஆட
. வஞ்சியவள் நடுங்கிடவே கயிலை யீசன்
தொல்லைதனைக் கால்விரலால் தலைகள் பத்தும்
. தோயநிலம் அழுத்தியவன் செருக்கைக் கொண்டே
பல்விதமாய் அருள்செய்தே காத்து நின்ற
. பரமனவன் மேவுதலம் பூவ னூரில்
செல்கதியாய் நாடியுள மார வாழ்த்தின்
. எல்லையிலா அன்பினிலே வாழ்வ துண்டே! ... 8

*****
 
(இறுதிப் பகுதி)

அழலோங்கும் தூணாக யீசன் நிற்க
. அடிமுடியை அயன்மாலும் தேடிக் காணாத்
தழலாகும் தண்ணிலவின் கிரணம் போல
. தருக்கினையே உருத்தெரியா தொழித்தே நின்றால்!
கழலிணையே கதியெனவே திண்ணம் கொண்டால்
. கடைக்கண்ணால் இன்னல்கள் தீரச் செய்யும்
மழுவாளி மேவிநிற்கும் பூவ னூரில்
. வழுத்துவோர்க்கு வாழ்வினிலே என்றும் அன்பே. ... 9

தீயதனில் வேதநெறி இறையைக் காணத்
. தீயதென அதுபழிக்கும் நெறிகள் தள்ளி
ஆயிழையாள் இடம்கொண்டே அமரும் தேவன்
. ஆதிபக வனுருவாக அறியும் நெஞ்சில்
மாயயெலாம் விலகிடவே தெரியும் உண்மை
. மாண்பதனை நிலைநிற்கச் செய்தே நம்மைச்
சேயதனைத் தாயவள்போல் காக்கும் ஈசன்
. செம்பொருளாய் மேவுதலம் பூவ னூரே. ... 10

புனிதனெனத் துணைவனென ஆதி நாதன்
. புற்றரவன் பாதியானான் பூத நாதன்
மனிதரிலே தலையானோர் போற்று மீசன்
. மன்நின்றே அறிவொண்ணா இயல்பி னானான்
என்னனாகி மனையாகி எந்தை யாகி
. என்தனமாய் மேவுதலம் பூவ னூரே
என்றெல்லாம் திருநாவுக் கரசர் போற்றும்
. எண்குணன்நம் எண்ணமுறில் வினைகள் போமே. ... 11

*****
 
தில்லை (சிதம்பரம்)
கோவில்: Chidambaram thillai natarajar Temple : Chidambaram thillai natarajar Temple Details | Chidambaram thillai natarajar- Chidambaram | Tamilnadu Temple | ????????? ?????? ???????

சந்தக் கலிவிருத்தம்: மா(3) கூவிளம்(4) தேமா(3) கூவிளம்(5)
(’தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்’--சம்பந்தர் தேவாரம்: 2.28.1.)

மூவர் பாடிய மூல வேடுகள்
தேவன் ஆடிய தில்லை யூரினில்
மேவு முத்திரை ஏற வந்தருள்
பாவ நாசனின் பாலன் வாழியே! ... 1

ஈழம் வேய்தலில் ஏடு காண்டலில் ... [ஈழம் = பொன்]
சோழ வேந்தரும் சேவை மேற்கொள
பாழி தில்லையில் ஆடும் கூத்தனை
ஆழி தாண்டிட ஆசி வேண்டுவோம். ... 2
 
ஐந்து மன்றினில் ஆவி யாறவே
பைந்த மிழ்தனில் நால்வர் பாடவே
வேய்ந்த பொன்னடி வேடன் ஆடவே
பாய்ந்த வின்னருள் பாவம் தீர்க்குமே. ... 3

நாலு திக்கினில் நால்வர் வந்தனர்
ஆலன் பேர்புகழ் பாடி யருளினர்
ஞாலம் நீக்கிய ஞானி யர்நாதன்
கோலம் கண்டிடக் கூத்து மாடுவான். ... 4
 
மாசில் சீடனும் வாத வூரரே
நேச நண்பனும் ஏம சுந்தரர்
தாச னாய்த்திரு நாவின் வேந்தரே
பாச மைந்தசம் பந்த ரானரே. ... 5

ஆதி சேடனின் பாக மாமுனி
பாதி மேனிபுல் பாத மாமுனி ... [புல் = புலி]
காதல் மேலுற ஆடல் காணநாம்
ஆதி தில்லையில் காண முக்தியே. ... 6
 
உருவில் ஆடலன் கூத்து நோக்கியும்
அருவில் தில்லை வானம் நோக்கியும்
அருவும் ரூபமும் லிங்கம் நோக்கியும்
மருவு மாசைகள் மாய வாழ்வமே. ... 7

அஞ்செ ழுத்தினில் ஐயன் மந்திரம்
அஞ்செ னும்வகை ஐயன் காரியம்
அஞ்சு சக்தியில் தில்லை நாயகன் .. [ஆதி, பரா, இச்சா, கிரியா, ஞான சக்திகள்]
பஞ்ச பூதமும் ஆள ஞாலமே. ... 8
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top