• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இசைத் தமிழ் அதிசயங்கள்

Status
Not open for further replies.
இசைத் தமிழ் அதிசயங்கள்

tamil+yal.jpg


இசைத் தமிழ் அதிசயங்கள்

1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திரு க்கிறார்:

“ துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்
உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்
சச்சரி கொக்கரை தக்கை யோடு
தகுணிதம் துந்துபி டாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
அத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்பன் இடம்திரு வாலங் காடே”

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.
சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.


2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

திண்வார்விசித்த முழவோடு ஆகுளி
நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்
மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு
கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்
இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு
விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ
நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை
கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்
கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, தூம்பு, குழல், தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.
இசைக் கருவிகளை தமிழர்கள் தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).


3). இப்போது கிடைக்காமல் போன பல இசை நூல்களை உரைகாரர்கள் மேற்கோள் காட்டுவர். அவற்றின் பட்டியல் இதோ:
இறையனார் களவியல் உரை: முதுநாரை, முது குருகு.
அடியார்க்கு நல்லார் உரை: இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம்
அரும்பத உரை ஆசிரியர்: பதினாறு படலம்
யாப்பருங்கல விருத்தி உரை: வாய்ப்பியம், குலோத்துங்கன் இசை நூல்

music-top-img.jpg


4). சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரி யாழ், மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் ஆகிய பல வகை யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையன.

5.)மலைச் சாரல் பகுதியில் தினைப் பயிரைத் திண்ண ஒரு காட்டு யானை வந்தது. அங்குள்ள குறத்தி அழகான குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். அதைக் கேட்டு மெய் மறந்து நின்ற யானை பயிரைச் சாப்பிட மறந்து போனதாம்:

ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென
மறம்புகல் மழகளிறு உறங்கும் (அகம்.102)

6).பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேர்ப்பட்ட கல் நெஞ்சுடையோரும் பாலைப் பண்ணைக் கேட்டுக் கொலைத் தொழிலை மறந்தனராம்:

ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை (பொருந. 21-22)


7). புண் பட்ட போர் வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப் பண்ணையும், நரியை விரட்ட விளரிப் பண்ணையும் பாடியதாக புறநானூறு கூறுகிறது (பாடல் 281- 291)

MS+sings.jpg


8).தமிழ் மொழியை இசை, இயல், நாடகத் தமிழ் என்று பிரித்து முத்தமிழ் எனப் பெயரிட்டனர். யாழ், பறை, யாழ் பற்றிய நூல் ஆகியவற்றை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியர் காலத்தில் துவங்கிய தமிழ் இசை அருணகிரிநாதர் காலத்தில் சிறப்போடுத் திகழ்ந்தது. இதோ திருப்புகழில் இசை:

தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட் டியல் தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
தடிய ழனவுக மாருதச் சண்டச் சமரேறி………
என்று சிதம்பரத்தில் பாடியது ஆடல்வல்லானை மனதிற்கொண்டுதான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.


9). வயலூரில் பாடிய திருப்புகழில் நீண்ட தாளத்துக்குப் பின்
பேரி திமிலை கரடிகை பதலை சலரிதவில்
தமர முரசுகள் குடமுழவொடு துடி
சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர

என்று பாடி இசைக் கருவிகளின் ஒலியை எழுப்புகிறார். இன்னும் பல பாடல்களில் இதே போல தாள ஒலிகளுக்குப் பின்னர் அருமையான பொருள் பொதிந்த வரிகளைச் சேர்த்திருக்கிறார்.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருணகிரி காலத்தில் நிலவிய வாத்தியச் சொற்கள் கூட இன்று வழக்கொழிந்துவிட்டன.

10) பரிபாடல்-12 வையை நதி பற்றிய பாடல்.
ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்

என்ற வரிகளில் மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளார்.


11) கொங்கு நாட்டில் ஈரோடு—காங்கயம் பாதையில் அரச்சலூர் என்னும் இடத்தில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடுகின்றனர். இதை எழுதியவன் தேவன் சாத்தன் என்று மூன்றாம் கல்வெட்டில் பெயர் உள்ளது. இது ஒரு இசைக் கல்வெட்டு. முதல் இரண்டு கல்வெட்டுகளில் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் காணலாம். இதோ முதல் கல்வெட்டு:

த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த

முத்தமிழ் வாழ்க! தமிழ் இசை வெல்க!!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top