• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

காளிதாசரின் நூதன உத்திகள்: தமிழிலும் உண்

Status
Not open for further replies.
காளிதாசரின் நூதன உத்திகள்: தமிழிலும் உண்

kalidasa+in+china.jpg


Picture: சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள காளிதாசன் சிலை

மகா கவி காளிதாசன் 1250 உவமைகளையும் உருவகங்களையும் வேறு பல உத்திகளையும் கையாளுகிறான். இவைகளை சங்கத் தமிழ் புலவர்களும் பின்பற்றுவதால் அவர்களுக்கு முன் காளிதாசன் வாழ்ந்தான் என்பது என் துணிபு. குறிப்பாக மிகவும் கற்றறிந்த மக்களிடையே மட்டுமே பயன் படுத்தக்கூடிய சில உத்திகளைக் காளிதாசன் பயன்படுத்துவது போலவே தமிழ்ப் புலவர்களும் பயன்படுத்துகின்றனர்.

இலக்கணம் போன்ற விஷயங்களை உவமையாகவோ சொல் அணிகளாகவோ பயன்படுத்த வேண்டுமென்றால் அதைக் கேட்டு ரசிப்போரின் அறிவும் அதிகமாக இருக்கவேண்டும். இதைத் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் காணும் போது களிபேருவகை ஏற்படுகிறது. இந்திய மக்கள் மேதாவிலாசம், அதே கால ஏனைய நாகரீகங்களை விட மிகவும் அதிகம். வேறு எந்த பழங்கால இலக்கியத்திலும் சிலேடைகள், புதிர்கள், விடுகதைகள், பழமொழிகளை உவமைகளாகப் பயன்படுத்துவதில்லை! முன்னரே ஒரு கட்டுரையில் ‘கொம்பு சீவுதல்’ என்பதை காளிதாசன் எப்படிப் பயன்படுத்தினான் என்பதைக் கண்டோம்.

நான்கூறும் தமிழ் உதாரணங்கள் சங்க கால பிராமணப் புலவர்கள் கையாண்ட உத்திகள். அவர்கள் வடமொழியில் வல்லவர்கள். காளிதாசனைக் கரைத்துக் குடித்த மேதாவிகள். தமிழைக் கிண்டல் செய்த பிரமத்ததன் என்ற வட இந்திய மன்னனுக்கு கபிலர் என்ற பிராமணப் புலவர் (சம்ஸ்கிருதம் மூலம்) தமிழைக் கற்பித்து அவனைப் பாட்டும் எட்டுக்கட்டச் செய்து அதை சங்க இலக்கியத்திலும் சேர்த்து விட்டார்!

சொற்சிலம்பம் ஆடுவதில் வல்லவன் காளிதாசன். வண்டு என்பதற்கு ‘ப்ரமர’ என்று வடமொழியில் சொல்லுவார்கள். அதைக் கவிதையில் பயன் படுத்துகையில் 2 “ர” க்களை உடைய பூச்சி என்று விடுகதை போடுவான் (குமார.3-36).
இதோ மற்ற இடங்களும் தமிழ் ஒப்பீடுகளும்:


1.வண்டு அல்லது தேனீயை அறுகாலி (6 கால்) என்று அழைப்பது (குமார.5-9) தமிழிலும் உண்டு:- புறம் 70 ,கோவூர் கிழார்:

2. ரத அங்க நாம்னா: ரகு.3-24, 13-31: (சக்ரவாகம்): தேரின் ஒரு உறுப்பு (அங்கம்) சக்கரம். அதைப் பெயரில் உடைய பறவை ‘சக்ரவாகம்’. இதைத் தமிழில் அன்றில் பறவை என்பர்.

3. தமிழில் மதுரை. வரி 87, 88 (நெல்லின் பெயரை உடைய ஊர்=சாலியூர்): மதுரைக்காஞ்சி எழுதிய மாங்குடி மருதன் இந்த ‘ரத அங்க நாம்னா’ உத்தியைப் பின்பற்றி சாலியூர் என்பதை நெல்லின் பெயரை உடைய ஊர் என்கிறார்.

ஏன் இப்படிச் சுற்றிவளைத்துப் பேசவேண்டும்? நேராக சாலியூர் என்று சொல்லிவிடலாமே என்று வாசகர்கள் நினைக்கலாம். சில நேரங்களில் கவிதையின் எதுகை மோனைக்காகவும் ,சில நேரங்களில் தன் புலமையைக் காட்டவும் கவிஞர்கள் இந்த உத்தியைக் கடைப் பிடிப்பர். இது போல பல இடங்களில் செய்வதும் இப்படி சுற்றி வளைத்து ஒரு விஷயத்தைச் சொல்லும்போது கவிதையின் அழகு கெடாமல் காப்பதும் கவிஞனின் திறமையைக் காட்டுகிறது.

kalidasa-statue.jpg



4. பெரும்பாணாற்றுப்படை வரிகள் 297-310 (இராச அன்னம்): சங்க கால பிராமணப் புலவர்களில் ஒருவர் பெயர் ருத்ராக்ஷன். இதைத் தமிழில் உருத்திரங்கண்ணன் என்று சொல்லுவர். இவர் பிராமணர் வீடுகளில் என்ன என்ன ‘வெஜிடேரியன்’ உணவு கிடைக்கும் என்பதை மிக அழகாகச் சொல்லுகிறார். கோழியும் நாயும் அசுத்தம் செய்யாத இடம் அக்ரஹாரம் என்றும் புகழ்கிறார். அப்படிச் சொல்லும்போது, விறலியரே, பாணர்களே, புலவர்களே, அதோ அந்த ஐயர் வீட்டுக்குச் சாப்பிடப் போங்கள். அந்த வீட்டு அம்மாமி, அருந்ததி போன்று கற்புடையவள். உங்களுக்கு வெண்ணெயும், மாதுளைப் பொறியலும், மிளகுபொடியோடு “ பறவைப் பெயர் கொண்ட சோற்றையும்” பரிமாறுவாள். இதுதான் காளிதாசன் ‘டெக்னிக்’. இராச அன்னம் என்னும் அரிசி வகை= பறவைப் பெயர் கொண்ட சோறு.

5.நெடு. நக்கீரர் பாடியது, வரிகள் 82, 114 (உத்தரம், கர்பக் கிரகம்):- நக்கீரர் பாடிய நெடுநல்வாடையில், ‘‘நாளொடு பெயரிய விழுமரத்து கோள் அமை நெடு நிலை’’ என்பது உத்தர நட்சத்திரத்தைக் குறிக்கும். ஆனால் புலவர் சொல்ல வருவது வீட்டின் பகுதியான உத்தரம். இன்னொரு இடத்தில் கர்ப்பக்கிரஹம் என்பதை ‘’கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல்’ என்றும் கூறுவர்.

6. கலி.25:1 வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்=திருதராஷ்டிரன்: ஆதித்த/சூரிய மண்டலத்துக்கு மற்றொரு பெயர் பகன்.அவனுக்குக் கண் கிடையாது. மகாபாரத திருதராஷ்டிரனுக்கும் கண் தெரியாது. ஆக திருதராஷ்டிரன் என்று சொல்வதற்காக பாலைக் கலி பாடிய பெருங் கடுங்கோ இப்படி’ வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்’ என்கிறார். தமிழ்ப் புலவர்கள் சங்க காலத்தில் எந்த அளவுக்குப் புராண இதிஹாசங்களையும், வடமொழியையும் கரைத்துக் குடித்திருந்தனர் என்பதற்கு கலித்தொகையில் நூற்றுக் கணக்காண சான்றுகள் உள.
இதே வரிக்கு வேறு உரைகளும் உள. வயக்குறு மண்டிலம் என்பது கண்ணாடி என்றும் அது பிறர் முகத்தைக் காட்டுமேயன்றி அதனால் காணமுடியாது என்றும் ஆகவே இது தர்ப்பண (கண்ணாடி) ஆனனன் (முகத்துடையோன்) என்பதே என்பர்.

7.வாடா வஞ்சி (மாறோக்கத்து நப்பசலையார், புறம்.39): இவரும் பிராமணப் பெண் புலவர். வாடா வஞ்சி என்பது வாடிப்போகாத வஞ்சி, அதாவது, கருவூர்.

8.கலி. 99-1,2 -அறவினை இன்புறூஉம் அந்தணர் இருவர் (சுக்ரன், பிருஹஸ்பதி) : தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இரண்டு பிராமணர்கள் குருவாக இருந்தனர். அதை சுக்ரன், பிருகஸ்பதி என்று பெயர் சொல்லாமல் அந்தணர் இருவர் என்கிறார் ஒரு தமிழ்ப் புலவர்.

9. பரி.3-31 கூந்தல் என்னும் பெயர் உடைய அசுரன்= கேசாசுரன். தலைமயிர்/ கூந்தல் பெயரை உடைய அசுரன் கேசாசுரன். கேசம் என்ற வட மொழிச் சொல்லுக்கு தலை முடி என்று பொருள்.

10.திருமுறுகு.18 (நக்கீரர்): “நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர் இழை (ஜம்பூத்வீபம்)
சேன் இகழ்ந்து விளங்கும் செயிர் தீர் மேனி” இந்தியாவின் பழம்பெரும் பெயர் நாவலந்தீவு. நாவல்பழ மரங்கள் நிறைந்த பூமி. எந்த வகை மரம் செடி கொடிகள் ஓரிடத்தில் செழிப்பாக இருகிறதோ அதை வைத்து அந்த நாட்டுக்குப் பெயர் சூட்டுவது புராண மரபு. இதையே பின்பற்றி தமிழர்களும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று நிலப் பாகுபாடு செய்தனர். நக்கீரர் என்ற பிராமணப் புலவர் இதே உத்தியை தங்கத்தைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். பலவகை தங்கங்களில் ஒன்று சம்பூநதம் (ஜம்பூத்வீப தங்கம்)= நாவலொடு பெயரிய பொலம்புனை.

காளிதாசன் உலகம் புகழும் மகா கவி. அவனுடைய ரகுவம்சம் உவமைக் கருவூலம்! ரத்தினக் களஞ்சியம்! அவனுடைய உவமைகளில் முக்கால்வாசியை அதில் கொட்டிவிட்டான். எடுத்தஎடுப்பிலேயே

‘வாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் ப்ரதிபத்தயே
ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ’

என்று துவங்குகிறான். பொருள்: பார்வதியும் பரமசிவனும் உலகத்துகே தாய் தந்தையர். அவர்கள் சொல்லும் பொருளும் சேர்ந்திருப்பது போல இணைந்து இருப்பவர்கள். அவர்களை வணங்குகிறேன். இந்த உவமைக்கு ஈடு இணை இல்லை. இந்திய மக்களின் மொழி அறிவுக்குச் சான்று பகரும் மாபெரும் உவமை இது!

இன்னும் தொடரும்………………… (காளிதாசன்-- சங்க காலத்துக்கு முன் வாழ்ந்தவன் என்பதைக் காட்ட அவ்வரிசையில் வரும் ஏழாவது கட்டுரை இது. பழைய கட்டுரைகளையும் படித்துப் பயன்பெறுக.)


Old Posts: 1.Indra Festival in the Vedas and Tamil Epics2. Sea in Kalidasa and Tamil Literature 3. Ganges in Kalidasa and Sangam Tamil Works 4.Gem Stones in Kalidasa and Tamil Literature 5. Bird Migration in Kalidasa and Tamil Literature 6. Kalidasa’s Age: Tamil Works confirm 1[SUP]st[/SUP] Century BC + Same Articles in Tamil
For further information contact author at [email protected]
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top