Tamil Brahmins
Page 776 of 776 FirstFirst ... 276676726766772773774775776
Results 7,751 to 7,756 of 7756
 1. #7751
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,736
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #1065 to #1069

  #1065. ஆதிகாரணி பராசக்தி

  உண்டு இல்லை என்றது உருச்செய்து நின்றது

  வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
  கண்டிலர் காரண காரணி தம்மொடும்
  மண்டலம் மூன்று உற மன்னி நின்றாளே.

  உண்டு என்றும் இல்லை என்றும் உலகினர் தேவியைக் குறித்துக் கூறுவார். ஆனால் அந்த சக்தியே ஜீவனின் நுண்ணிய உடலைப் பரு உடலாகச் செய்பவள். அவளே வண் தில்லை அம்பலம் எனப்படும் சஹஸ்ர தளத்தில் நிலைபெற்று நிற்பவள். சிவபெருமான் அறிவு வடிவமாக இருந்து கொண்டு ஆன்மாவின் பந்த மோட்சங்களுக்குக் காரணம் ஆகின்றான். ஆனல் அதைச் செயல்படுத்துவது சக்தி என்பதை உலகத்தோர் அறிவதில்லை. சூரிய மண்டலம், சந்திரமண்டலம் அக்கினி மண்டலம் என்ற மூன்றிலும் திகழ்பவள் ஆதி காரணி பராசக்தி.

  #1066. பரஞ்சுடர் ஆகிய பராசக்தி


  நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச்

  சென்றாள் சிவகதி சேரும் பராசக்தி
  ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வு ஆகியே
  நின்றாள் பரஞ்சுடர் ஏடு அங்கை யாளே.

  சீவர்களின் உயிரும் உடலும் ஆனவள் சக்தி தேவி. சீவனைச் சிவனிடம் சேர்ப்பதற்குச் சக்திதேவி சந்திர மண்டலத்தை நோக்கி ஊர்த்துவ முகமாகச் சென்றாள். அவள் வேத வாக்கை ஏந்தி நிற்கும் ஒளி மயமானவள். என் உடலில் அவள் விளங்கிய போது என் உணர்வில் புகுந்து கலந்து நின்றாள்.

  விளக்கம்
  கலைமகள் நான்முகனின் தேவி,. இவள் சுவாதிஷ்டானச் சக்கரத்தில் ஒளி மயமாக விளங்குவாள். இவள் கீழ் நோக்கிச் சென்றால் காம உணர்வாக மாறி விடுவாள். மேல் நோக்கிச் சென்றால் சீவனைச் சிவகதியில் சேர்ப்பாள்.


  #1067. ஏடு அங்கை கொண்ட நங்கை


  ஏடு அங்கை நங்கை, இறைஎங்கள் முக்கண்ணி

  வேடம் படிகம், விரும்பும் வெண்டாமரை
  பாடும் திருமுறை, பார்ப்பதி பாதங்கள்
  சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே.

  சொல்லின் வடிவத்தில் விளங்குவாள் இறைவி. அவள் முக்கண்களை உடையவள். தூய்மையான படிகத்தைப் போன்ற வெண்ணிறம் கொண்டவள். வெண்தாமரை ஆகிய சஹஸ்ர தலத்தில் விரும்பி அமர்பவள் அவள் நாத மயமானவள். அவள் திருவடிகளைத் தலை மேல் சூடுங்கள். அவள் புகழைப் பாடுங்கள்.

  #1068. ஆதித் தலைவி இவளே


  தோத்திரம் செய்து, தொழுது துணை அடி

  வாய்த்திட ஏத்தி வழி படு மாறிரும்பு
  ஆர்த்திடும் அங்குச பாசம் பசுங் கரும்பு
  ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆகும் ஆதிக்கே.

  சக்தி தேவியைத் துதியுங்கள். அவள் இரு திருவடிகளையும் வணங்குங்கள். சூரிய சந்திரர்கள் இணைந்து விளங்கும் வண்ணம் ஒலியையும் ஒளியையும் ஒன்றாக்குங்கள். தியானத்தில் பாசம், அங்குசம், கரும்பு வில் ஏந்திய மெல்லியலாளைக் காணுங்கள்.

  #1069. முக்காலமும் தோன்றும்.


  ஆதி விதமிகுத்த, அண்டந் தமால் தங்கை

  நீதி மலரின் மேல் நேர்இழை நாமத்தைப்
  பாதியில் வைத்துப் பலகால் பயில்விரேல்
  சோதி மிகுந்து முக் காலமும் தோன்றுமே.

  படைப்பு பெருகுமாறு செய்பவன் பாற்கடலில் உள்ள நாரணன். அவன் தங்கையான நாராயணி சஹஸ்ரதளத்தில் வீற்றுள்ளாள். இவள் திரு நாமத்தைச் சிவசக்தியாக எண்ணித் தியானித்து வந்தால் நுண் உடல் ஒளி மயமாகி விடும். அப்போது முக்காலங்களும் நன்கு தோன்றும்.
 2. #7752
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,736
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #1070 to #1074

  #1070. அருட் சக்தி ஆனவள்

  மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்
  வேதாதி நூலின் விளங்கும் பராபரை
  ஆதாரம் ஆகியே ஆய்ந்த பரப்பினள்
  நாதாதி நாதத்துள் நல்லாருளாளே.


  அகாரம் முதல் உன்மனி ஈறாக உள்ள பதினாறு கலைகளும் தேவியின் வடிவம் ஆகும். வேதம் முதலிய நூல்களில் பரமாகவும், அபரமாகவும் போற்றப்படுபவள் தேவி. இவளே ஆவாள் உயிர்களுக்கு ஆதாரம். நாதம், நாதாந்தம் இவற்றில் விளங்கும் சிவபெருமானுடைய அருட் சக்தியும் இவளே.

  #1071. மயக்கத்தை மாற்றுவாள்


  அருள் பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர்
  பொருள் பெற்ற சிந்தை புவனா பதியார்
  மருள் உற்ற சிந்தையை மாற்றி அருமைப்
  பொருள் உற்ற சேவடி போற்றுவன் நானே.


  அனுபவத்தில் தேவியின் அருள் பெற்ற மனிதர்களே! முன்னே வந்து எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்! உண்மைப் பொருளைத் தன்னுடையது ஆக்கிக்கொண்டவள் அந்தத் தேவி. அவள் அருள் புரிவதிலும் வள்ளன்மை வாய்ந்தவள். உலகத்தைப் பற்றிக் கொண்டு மயக்கத்தில் ஆழும் சீவர்களின் சிந்தையை மாற்றிப் பந்தம் இல்லாதபடிச் செய்பவள் தேவி. அவள் சேவடிகளை நான் போற்றுகின்றேன்.

  #1072. வராக முகத்தினள்


  ஆன வராக முகத்தி பதத்தினள்
  ஈன வராகம் இடிக்கும் முசலத்தொடு
  ஏனைய யுழுபடை ஏந்திய வெண்ணகை
  ஊனம் அற உணர்ந்தார் உள்ளத்து ஓங்குமே.

  தேவியைச் சுற்றியுள்ள எழுவரில் ஒருவள் வராகி. இவள் பன்றி முகம் உடையவள். இழிந்தவர்களின் உடலை இடித்துத் துன்புறுத்த உலக்கை, கலப்பை போன்ற ஆயுதங்களை ஏந்தியவள். குற்றங்கள் இல்லாத இவளை, ஊன் உடலைக் கடந்து தியானிப்பவர்களின் மனத்தில் இந்த சக்திச் சிறந்து விளங்குவாள்.

  #1073. தேவி வழிபாடு


  ஓங்காரி என்பாள் அவள் ஒருபெண் பிள்ளை
  நீங்காத பச்ச்சை நிறத்தை உடையவள்,
  ஆங்காரி ஆகியே ஐவரைப் பெற்றிட்டு
  ரீங்காரத் துள்ளே இனிது இருந்தாளே.


  ஓம் என்ற பிரணவ வடிவம் கொண்டவள் தேவி. ஐந்தொழில்களின் தலைவியும் அவளே. நீங்காத பச்சை நிறம் கொண்டவள் தேவி. அஹங்காரத் தத்துவத்துடன் அவள் பொருந்தி விளங்கும்போது தன்னுடைய அம்சங்களாகச் சதாசிவன், மகேசுரன், உருத்திரன், திருமால், நான்முகன் என்ற ஐந்து தெய்வங்களை உருவாக்கினாள். ஹ்ரீம் என்னும் மந்திர பீஜத்துள் தேவி இனிதாக வீற்றிருப்பாள்.

  #1074. பதினான்கு வித்தைகள்


  தானே தலைவி என நின்ற தற்பரை
  தானே உயிர்வித்துத் தந்த பதினாலும்
  வானோர் தலமும், மனமும் நற்புத்தியும்
  தானே சிவகதித் தன்மையும் ஆமே.


  பராசக்தியே எல்லாவற்றுக்கும் தலைவி. வாக்குவடிவமாக விளங்கும் பதினான்கு வித்தைகளுக்கும் அவளே தலைவி. தேவர்களின் வான மண்டலம், மன மண்டலம், நல்ல அறிவு எல்லாம் அவளே. நாதாந்ததைக் கடந்த சிவகதியை அளிப்பவளும் அவளே.

  பதினான்கு வித்தைகள்:

  வேதங்கள். 4

  அங்கம்..6

  நியாயம்.1

  மீமாம்சை .1

  ஸ்மிருதி1

  புராணம்.1

 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #7753
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,736
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  6. வயிரவி மந்திரம்
  வயிரவி என்னும் சக்தியை நினைவு கொள்வது வயிரவி மந்திரம்

  #1075. மேதா கலை

  பன்னிரண்டாம் கலை ஆதி பயிரவி

  தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
  பன்னிரண்டு ஆதியோடு, அந்தம் பதினாலும்
  சொல் நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே.


  பன்னிரண்டாவது உயிர் எழுத்தாகிய ஐ என்ற எழுத்தால் உணர்த்தப் படுபவள் பயிரவி. அதனுடன் மாயையாகிய ம் என்பதை இணைத்தால் ஐம் என்னும் வாக்கு தேவியின் பீஜ மந்திரம் கிடைக்கும். பிரணவத்துடன் ம் பொருந்தினால் ஓம் என்ற மந்திரம் கிடைக்கும். இவற்றை செபித்தால் தேவி வாக்கு வடிவமான தன் பதினான்கு வித்தைகளையும் அளிப்பாள், அத்துடன் தன்னையும் வெளிப் படுத்திக் கொள்வாள்.


  #1076.ஆதியும் அவளே அந்தமும் அவளே


  அந்தம் பதினாலு அதுவே வயிரவி

  முந்தும் நடுவும் முடிவு முதலாகச்
  சிந்தைக் கமலத்து எழுகின்ற மாசத்தி
  அந்தமும் ஆதியும் ஆகி நின்றாளே.


  பதினான்கு வித்தைகளாக விளங்கும் வயிரவியே ஐந்து கர்மேந்த்ரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், நான்கு அந்தக்கரணங்கள் என்னும் பதினான்கினையும் சீவர்களுடன் பொருத்து கின்றாள். அவளே படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய செயல்களைச் செய்கின்றாள். சிந்தையில் உள்ள பெரிய தாமரையில் விளங்குகின்ற தேவியும் அவளே. அவளே ஆதியும், அந்தமுமாக விளங்குகின்றவள் ஆவாள்.


  #1077. வயிரவியை வழிபடுமின்


  ஆகின்ற மூவரும் அங்கே யடங்குவர்

  போகின்ற பூதம் பொருந்து புராதரர்
  சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
  போகுந் திரிபுரை புண்ணியத் தோர்க்கே!


  சீவர்களைச் செலுத்துகின்ற நான்முகன், திருமால், உருத்திரன் என்ற மூவரும் வயிரவியை வழிபட்டால் செயல்திறன் அடங்கி விடுவர். அழிகின்ற இயல்பு உடையது சீவனின் உடல். அது ஐம் பூதங்களால் ஆனது. உடலில் பொருந்திய சீவனை அநாதியான ஆத்மாக்கள் உள்ள இடத்தை அடையச் செய்பவர் யார்? ஆற்றல் மிகுந்த திரிபுரையை வழிபட்ட புண்ணியர்களே அவர்கள் ஆவர்.


  #1078. சிவம் ஆவார்.


  புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்

  எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்பதி
  பண்ணிய வன்னி பகலோன் மதி ஈறு
  திண்ணிய சிந்தை தன் தென்னனும் ஆமே.


  சிவன் புண்ணியன் ஆவான்; சிவன் நந்தி ஆவான்; சிவன் தூயவன் ஆவான். வான ராசி மண்டலத்தைச் சந்திரன் சுற்றி வருவது வட்டம் ஆகும். இந்த வட்டத்தில் சூரியனும் சுற்றி வருவான். அந்த வட்டம் முழுமையடையும் போது, தலையின் வடகிழக்குப் பகுதியில் சூரியனும் சந்திரனும் ஒன்றாகப் பொருந்துவதால் அக்கினிக் கலை தோன்றும் . அந்தக் அக்கினிக் கலையை அறிந்து கொண்டு அதன் மீது தியானிப்பவர் நிறைந்த சிந்தை உடையவராகிச் சிவமாகவே ஆகி விடுவார்.


  #1079. திரிரையின் அருள்


  தென்னன் திருநந்தி சேவகன் தன்னோடும்

  பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும்
  பண்ணும் பரிபிடி அந்தம் பகவனோடு
  உன்னும் திரிபுரை ஓதி நின்றானுக்கே.


  சிவபெருமான் நம்மைக் காக்கும் அழகிய வீரன். கயிலை மலையில் அவனுடன் பெண்யானை போல வீற்றிருக்கும் அம்மையும் நம்மைக் காக்கின்றாள். இடையறாது அவர்கள் இருவரின் திருவடிகளை எண்ணுபவர்களுக்கு இறைவனும் அவனுடன் உறையும் திருபுரையும் அருள் புரிவர்.
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #7754
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,736
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!

  #1080 to #1084

  #1080. ஞானம் தருவாள்

  ஓதிய நந்தி உணரும் திருவருள்

  நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும்
  போதம் இருபத் தெழுநாள் புணர்மதி
  சோதி வயிரவி சூலம் வந்து ஆளுமே.


  குருமண்டலத்தில் யோகி தியானித்து இருப்பதன் உண்மை நிலையினை பராசக்தி அறிவாள். நீதியை, நேர்மையான வழியில் உயிர்களுக்கு உபதேசித்து உணர்த்துவாள். இங்ஙனம் பராசக்தியிடம் உபதேசம் பெற்றவரிடம் சந்திரனின் வட்டமான பதினாறு கலைகளும் வந்து பொருந்தும். கதிரவன், திங்கள், அக்கினி என்ற மூன்று ஒளிரும் பொருட்களை முத்தலையாகக் கொண்ட சூலம் வந்து அவர் உடலில் பொருந்தி சோதியாக மாறி விடும்.


  #1081. சூலினி சூலியின் அங்கம் ஆவாள்


  சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு

  நாலாம் கரம் உள; நாக பாச அங்குசம்
  மால் அங்கு அயன் அறியாத வடிவுக்கு
  மேல் அங்கமாக நின்ற மெல்லிய லாளே.


  துர்க்கா தேவிக்கு நான்கு கரங்கள் உள்ளன. கபாலம், சூலம் இரு கரங்களில் ஏந்தியவள் அங்குசம், பாசம் இவற்றையும் பிற கரங்களில் ஏந்தியுள்ளாள். நான்முகனும் திருமாலும் கண்டு அறியாத வடிவினை உடைய சூலியான சிவனுக்குச் சூலினியாகிய இவள் ஒரு மேலான அங்கமாக மிக மென்மையுடன் திகழ்பவள்.

  அங்கியாகிய சிவனின் அங்கமாகத் தேவி திகழ்வதன் பெயர் அங்காங்கி பாவம்.

  #1082. வயிரவியின் வடிவழகு


  மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி

  சொல்லிய கிஞ்சுக நிறம் மன்னு சேயிழை
  கல்இயல் ஒப்பது காணும் திருமேனி
  பல்இயல் ஆடையும் பன்மணி தானே.


  வயிரவி மெல்லியலாள்; வஞ்சிக்கொடி போன்றவள்; நெறி தவறுகின்றவர்களைத் தண்டிப்பதில் நஞ்சைப் போன்றவள்; எல்லாக் கலைகளிலும் சிறந்த கலை ஞானம் கொண்டவள்; முள் முருங்கைப் பூவைப் போன்று சிவந்த நிறம் கொண்டவள்; மணியைப் போல ஒளிரும் உடலைக் கொண்டவள்; பல வித மணிகளால் ஆன ஆடைகளை உடுப்பவள்.


  #1083. வயிரவியின் வனப்பு


  பன்மணி சந்திர கோடி திருமுடி

  சொன்மணி குண்டலக் காதி உழைக்கண்ணி
  நன்மணி சூரிய சோம நயனத்தள்
  பொன்மணி வன்னியும் பூரிக்கின்றாளே.


  பல கலைகளைக் கொண்ட சந்திர மண்டலம், பல மணிகள் பதிக்கப்பட்டத் தேவியின் அழகிய திருமுடியாகும். வானத்தையே தன் காதுகளாகக் கொண்டவள் தேவி. அருகில் உள்ள ஒரு நல்ல தோழியைப் போன்றவள். ஒளி வீசும் சூரிய சந்திரர்களைத் தன் இரு விழிகளாகக் கொண்டவள். தேவி பொன் போன்ற ஒளியை எங்கும் பரப்புகின்றாள்.


  #1084. சக்தியின் பல சகிகள்


  பூரித்த பூ இதழ் எட்டினுக்குள்ளே ஓர்

  ஆரியத்தாள் உண்டு, அங்கு எண்மர் கன்னியர்
  பாரித்த பெண்கள் அறுபது நால்வரும்
  சாரித்துச் சக்தியைத் தாங்கள் கண்டாரே.


  தலையின் மீது விரிந்துள்ள எட்டு இதழ்க் கமலத்தின் நடுவில் ஒப்பற்ற தேவி திகழ்வாள். அவளைச் சுற்றிக் எட்டுக் கன்னியர் இருப்பர். அந்த எட்டுக் கன்னியர் ஒவ்வொருவருக்கும் எட்டு எட்டுக் கன்னியர் உடன் இருப்பர். இவர்கள் அனைவரும் தேவியைத் தரிசித்து அமைவர்.


  வாமை, சேட்டை, ரௌத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பல பிரதமனி , சர்வபூத தமனி என்பவர்கள் அந்த எட்டு கன்னியர் ஆவர். இவர்களின் ஆளுகையில் பிரணவத்தின் அறுபத்து நான்கு கலைகளும் செயல்படுபவை. 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #7755
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,736
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #1085 to #1089

  #1085. பூசிக்கத் தகுந்தவள் தேவி

  கண்ட சிலம்பு, வளை, சங்கு, சக்கரம்,
  எண் திசை யோகி இறைவி பராசக்தி
  அண்டமொடு எண்திசை தாங்கும் அருட்செல்வி
  புண்டரி கத்துள்ளும் பூசனை யாளே.


  பராசக்தி தேர்ந்து எடுக்கப்பட்ட சிலம்பு, வளை, சங்கு, சக்கரம் இவற்றை அணிந்தவள். அவள் எட்டு திசைகளிலும் நிறைந்து நிற்பவள். அவள் அனைத்து அண்டங்களையும் தாங்கி நிற்பவள். அவள் தலையின் மீதுள்ள ஆயிரம் இதழ்த் தாமரையில் இருத்திப் பூசிக்கத் தகுந்தவள்.

  #1086. பூசை செய்யும் விதிகள்


  பூசனை கெந்தம் புனை மலர் மாகோடி,
  யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும்
  வாசம் இலாத மணிமந்திர யோகம்
  தேசம் திகழும் திரிபுரை காணே.

  பூசைக்கு உகந்த நறுமணப் பொருட்கள், மணம் வீசும் நறு மலர்கள், புதிய ஆடைகள், நெடுந்தொலைவு கேட்கும் ஐந்து வாத்தியங்களின் முழக்கம், சொல்வதற்கு அரியதாகிய திரு ஐந்தெழுத்தால் ஆன அரிய மந்திரம் இவற்றுடன் செய்யும் பூசையை திரிபுரை மிகவும் விருப்பத்துடன் ஏற்பாள்.

  ஐந்து இசைக் கருவிகள்:
  தோற்கருவி, தொளைக் கருவி, நரம்புக் கருவி, தாளக் கருவி, மிடற்றுக் கருவி.

  #1087. அனைத்துத் தெய்வங்களும் அவளே

  காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
  பூணும் பல பொன்போலத் தோற்றிடும்
  பேணும் சிவனும் பிரமனு மாயனும்
  காணும் தலைவிநற் காரணி தானே.

  ஒரே பொன் வெவ்வேறு அணிகலன்களாகத் தோன்றுவது போலவே, ஒரே அன்னை வெவ்வேறு தெய்வங்களாகத் தோன்றுகின்றாள். உலகம் புகழும் சிவனும், நான்முகனும், திருமாலும் மற்ற தெய்வங்களும் விளங்குவது அகில உலகின் ஆதி காரணியாகிய தேவியினால் என்று அறிவீர்!

  #1088. வேதங்களின் அந்தமும் அவளே


  காரணி, மந்திரம், ஓதும் கமலத்துப்
  பூரண கும்ப விரேசம் பொருந்திய
  நாரண நந்தி நடு, அங்கு உரை செய்த
  ஆரண வேதம் நூல் அந்தமும் ஆமே.

  ஆதி காரணி, மந்திரங்களுக்குக் காரணமானவள். ஆயிரம் இதழ்த் தாமரையில் அவளைத் தியானிக்கும் போது, வாயுவை வெளிப்படுத்தும் பூரண கும்பகத்தில் அவள் விளங்குவாள். அவளே வேதங்களின் அந்தமாகிய உபநிடதங்களிலும் உள்ளாள்.

  #1089. மந்திரம் கூறும் முறை


  அந்தம் நடுவிரல், ஆதி சிறுவிரல்
  வந்த வழி முறை மாறி உரை செய்யும்
  செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு
  நந்தி இதனை நலம் உரைத்தானே.

  இதனைக் குருமுகமாகக் கற்கவும்.
 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #7756
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  62,736
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #1090 to #1094

  #1090. நியமம் செய்தான்

  உரைத்த நவசத்தி ஒன்று முடிய
  நிரைத்த ராசி நெறிமுறை எண்ணிப்
  பிரைச் சதம் எட்டும் முன் பேசிய நந்தி
  நிரைத்து நியதி நியமம் செய்தானே.

  நவ சக்திகளில் ஒருவளான மனோன்மணியைச் சிரசின் மேலும் மற்ற எட்டு சக்தியரைச் சிரசைச் சுற்றியும் பொருந்தும்படி எண்ண வேண்டும். பிரசாத கலைகள் பதினாறில் எட்டு கலைகள் உடலிலும், எட்டுக் கலைகள் உயிரிலும் விளங்கிடும்படி நந்தி நியமம் செய்துள்ளான்.


  #1091. ஒளி மண்டலத்தை உண்டாக்குவாள்


  தாமக் குழலியைக் கண்ணி உள்நின்ற
  ஏமத்து இருள் அற வீசும் இளங்கொடி
  ஓமப் பெருஞ்சுடர் உள் எழு நுண்புகை
  மேவித்து அமுதொடு மீண்டது காணே.


  மலர் மாலைகள் சூடிய குழலி தேவி; கருணை பொழியும் கண்களை உடையவள்; அவள் உயிருக்கு மயக்கத்தைத் தரும் அறியாமையின் இருளைப் போக்கும் குண்டலினி சக்தியாக ஒளி வீசுகின்ற இளங்கொடி ஆவாள். மூலாதாரத்தில் எழுகின்ற மூலக் கனல் எழுப்பும் மூல வாயுவுடன் சேர்ந்து ஒளிமணடலத்தை உருவாக்குவாள். அவளை இனம் கண்டு கொள்வீர்!


  #1092. மூன்று கிரியை மந்திரங்கள்


  காணும் இருதய மந்திரமும் கண்டு
  பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
  வேணு நடுவு மிக நின்ற ஆகுதி
  பூணும் நடுஎன்ற அந்தம் சிகையே.

  இருதய மந்திரத்தின் பொருள் உணர்ந்து கொண்டு, தலையுச்சியில் வீற்றுள்ள சக்திக்கு நாம் வணக்கம் செய்ய வேண்டும். மூங்கில் குழல் போன்ற நடுநாடியின் வழியே மேலே சென்று, உச்சியில் பொருந்தியுள்ள அவள், நாம் அளிக்கும் ஆகுதியைப் பெற்றுக் கொள்வாள். உச்சியின் நடுவே விளங்குவது சிகா மந்திரம் என்பதை அறிந்து கொள்வீர்.


  #1093. உடல் முழுவதும் வியபித்திடுவாள்


  சிகை நின்ற அந்தக் கவசம் கொண்டு ஆதிப்
  பகை நின்ற அங்கத்தைப் பார் என்று மாறித்
  தொகை நின்ற நேத்திரம் முத்திரை சூலம்
  வகை நின்ற யோனி வருத்தலும் ஆமே.


  தேவி சிகையால் உணர்த்தப்படும் ஆயிரம் இதழ்த் தாமரையில் ஒளியாகத் திகழ்வாள். காமம் முதலிய குற்றங்கள் பொருந்தி உயிருக்குப் பகைவர்களாக இருந்த அங்கங்களை அவள் மாற்றிவிடுவாள். மூன்று கண்களை உடைய தேவி உடலில் யோனி முதல் கபாலம் வரையில் ஒளிமயமாக விரவி விளங்குவாள்.


  #1094. ஒளியை உண்டாக்கலாம்!


  வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப்
  பொருத்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து
  நெரித்து ஒன்ற வைத்து, நெடிது நடுவே
  பெருத்த விரல் இரண்டு உல் புகப் பேசே.

  தியானத்தின் மூலம் ஒளியை எழுப்ப இயலாதவருக்கு ஏற்றது இது.
  எனினும் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியது செயல் இது.
  எனவே குருமுகமாக முறையாகக் கற்க வேண்டிய செயல் இது.
 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •