• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திருவண்ணா மலை கிரிவலம்

Status
Not open for further replies.
திருவண்ணா மலை கிரிவலம்

திருவண்ணா மலை கிரிவலம்


மலையின் பெருமை


இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது.

சீல முனிவோர்கள் செறியு மலை..
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை.. ஞான நெறி காட்டு மலை.. ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை.. - என்றெல்லாம் அண்ணாமலை வெண்பாவில் குரு நமசியாவர் இம்மலையைப் போற்றுகிறார்.



ராஜ கோபுரம்





கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கிரிவலம்


இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது. அதன் பெயர் கிரிவலமும் அல்ல. முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர் தான் இம்மலையைக் காவல் காக்கிறார். அதன் பின் விக்னங்கள் ஏதும் இல்லாமல் சிறப்பாய் மலை வலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும். அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.


நந்திகேஸ்வரர்




மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்க்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களில், கிழக்கிற்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை முதலில் வழிபடவேண்டும். மலை சுற்றும் சாலையில் உள்ள நந்திகேசுவரர் சன்னதியை வணங்கி வழிபட்டு பின்னர் தான் மலைவலம் வர வேண்டும். தென்கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.


வழியில் உள்ள சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் மகத்தான மந்திர சக்தி வாய்ந்தது. கேட்ட வரத்தைத் தர வல்லது. இங்கு கிட்டத்தட்ட 22க்கு மேற்பட்ட மகான்கள் ஜீவ சமாதியில் உள்ளனர். வழிபடுதல் சிறப்பு. தொடர்ந்து ரமணாஸ்ரமம் ஆன்ம அமைதியைத் தர வல்லது. சற்றுத் தொலைவில் விசிறி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. மன அமைதியைத் தர வல்லது. தியானம் செய்ய ஏற்ற இடம் அது.

அடுத்து வழியில் தெற்கு திசைக்கு அதிபதியான எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது. எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்பது நம்பிக்கை.

அண்ணாமலை



அடுத்து தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி, சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது. இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை தரிசிக்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம் ஆகும். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் தெரியும் நந்தியின் தலையை வணங்கிச் செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. அதனை வழிபட வேண்டும். வழியில் அடிமுடி சித்தர் ஜீவ சமாதி இருக்கும். இங்கு தியானம் செய்தால் மகத்தான புண்ணிய பலன்கள் கிடைக்கும்.







அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட வருண லிங்கம் ஆகியவை உள்ளது. அதனை வழிபட்ட பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். இங்கு அவசியம் தரிசனம் செய்தல் வேண்டும். இது மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய இடம். இவ்வாலயம் செல்லும் வழியில் மாணிக்கவாசகரின் ஆலயம் உள்ளது.



ஆதி அண்ணாமலை




அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயுலிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேர லிங்கம் காணப்படும். அடுத்து இடுக்குப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது. இதனை பஞ்ச முக தரிசனம் என்பர். அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது. இதனையும் வழிபட்டு, வழியில் உள்ள ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியாக உள்ள ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும். அதனை அடுத்து எதிரே ஒரு சிறிய விருஷபாரூடர் சன்னதி இருக்கும். அதை அவசியம் வணங்க வேண்டும். ஏன் என்றால் அந்த இடத்தில்தான் உமையம்மைக்கு சிவன் காட்சி அளித்து இடப்பாகம் தந்தருளினான். ஆதலால் அதையும் தரிசித்தல் மிக மிக முக்கியமானது. அதன் பிறகு மீண்டும் பூதநாராயணர் ஆலயம் அடைந்து அவருக்கு நன்றி கூறி, தீபம் ஏற்றி வழிபட்டு, வழித்துணையாக விக்னங்கள் இல்லாமல் காத்த இரட்டைப் பிள்ளையாரையும் வணங்கி வழிபட்டு, பின் அருணாசலேஸ்வரர் ஆலயம் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் முழுமையாகப் பூரணத்துவம் அடைகிறது.



சிறப்பு விமான தரிசனம்




கிரிவலம் செல்லும் முறை


நடந்துதான் செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். மலை சுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்கக் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்து செல்லல் வேண்டும். அங்கும் ஆடிக் கொண்டும், பாடி, ஓடிக் கொண்டும் செல்லக் கூடாது. அமைதியாலவே செல்ல வேண்டும். திரிமூர்த்தி தரிசனம்




மலை வலம் வர உகந்த நாட்கள்:எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களே! இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும். ஏகாதசி, நீத்தார் நினைவு நாள்களிலும் கிரிவலம் வரலாம். அமாவாசை, பிறந்த நாள், திருமண நாள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற புண்ணிய தினங்களிலும் மலை வலம் வரலாம்.

கிரிவல மகிமை


புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.

சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.


சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின் மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. சத்குரு சேஷாத்ரி சுவாமிகளும் செவ்வாயன்று மலை வலம் வருதலை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார். பலன்கள் ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும். அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!-என்கிறது தேவாரமும்.



அண்ணாமலையார் மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ சூர்ய யாகம் செய்த பலன் கிடைக்கும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும். மலையைப் பற்றியும், மலை சுற்றுவதைப் பற்றியும் நினைப்பவர்களுக்கே இந்தப் பலன் என்றால், மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்…??? அவர்கள், கைலாசத்திற்குள் நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி, மோட்சமாகிய உயர் பதவியை அடைவார்கள் என்று அருணாசல புராணம் தெரிவிக்கின்றது.

ஞாயிற்றுக் கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்
திங்கட்கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை சுற்றினால் கடன்,வறுமை நீங்கும்.
புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சி, முக்தி கிடைக்கும்.
வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளாவார்கள். வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்.
சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரக தோஷம் நீங்கும்.

நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும், மனைவியும் நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும். கர்ம வினைகள் அனைத்தும் தொலையும். அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனம் நிம்மதி அடையும். பாவங்கள் அனைத்தும் நீங்கும். பித்ரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.

ஆகவே, மலை வலம் வருவோம். மன நலம் பெறுவோம்.


???????? | ????????? ????...
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top