• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேச&

Status
Not open for further replies.

praveen

Life is a dream
Staff member
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேச&

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. பகவான் அந்த கீதையை உபதேசித்தது பற்றியே ஒரு சந்தேகத்தை எழுப்பினான், அர்ஜுனன்.


அர்ஜுனனின் சந்தேகம் என்ன தெரியுமா? ஸ்ரீ கிருஷ்ணர், மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை அருளியிருக்கிறார். நுட்பமான அரிய பல உண்மைகளை எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்?


பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம்.


ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார்?


அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும் கூட பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர்.


இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கிருஷ்ணர் கருதியிருக்கிறாரே, இது எவ்வகையில் நியாயம்? அர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் கூறினார்.


அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை.


நீ நினைப்பது போல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.


தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.


பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.


அர்ஜுனா ! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு.


இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய் என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது – தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய் அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய்.


நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய்.


இதெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச்சலுகை எதுவுமல்ல; தகுதிச் சிறப்புதான் காரணம். அர்ஜுனன் அப்போதும்கூட அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top