• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தொல்காப்பியத்தில் சம்ஸ்கிருதம்

Status
Not open for further replies.
தொல்காப்பியத்தில் சம்ஸ்கிருதம்

தொல்காப்பியர் காலம் தவறு--பகுதி 2

tamil-grammar-image.jpg


(முதல் பகுதியைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்: லண்டன் சுவாமி)

1.தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து இல்லை. இதை அடுத்து வந்த குறள், சிலப்பதிகாரத்தில் மங்கல வாழ்த்தோ கடவுள் வாழ்த்தோ உண்டு. ஐந்தாம் நூற்றாண்டில் சிதறிக்கிடந்த பாடல்களை எல்லாம்-- வியாச மாமுனிவன் வேதத்தைத் தொகுத்தது போல ---பாரதம் பாடிய பெருந்தேவனார் முதலியோர் தொகுத்தபோது அதில் கடவுள் வாழ்த்தை இணைத்தனர். தொல்காப்பியர் அதற்கு ஒரு நூற்றாண்டு முந்தியவராக இருக்கலாம்.

2.இந்த நூலை ஒட்டி வளர்ந்த சொற்களான சூத்திரம், காப்பியம், அதிகாரம் ஆகியன வட மொழிச் சொற்கள். சங்க இலக்கியத்தில் 27,000+ வரிகளில் காண முடியாதவை. புலவர் பெயரில் மட்டும் ‘காப்பிய’ உண்டு. ஏனெனில் அவர்கள் காப்பிய (உஷனஸ் மஹா கவியின் காவ்ய கோத்திரம்) கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்கள்.

3.ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று பிற்காலத்தில் புகழப்பட்ட பேரறிஞரைப் பற்றி சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பும் இல்லாதது ஏன்? இவருக்கு முன் இலக்கியம் இருந்தால் அவை யாவை? அழிந்த நூல்கள் பட்டியலில் நூல்கள் பெயர்களில் சம்ஸ்கிருதச் சொற்கள் அல்லவா இருக்கின்றன! மேலும் தொல்காப்பியர் காலத்தவராகக் கருதப்படும் பனம்பாரனார் போன்றோரின் தமிழ், எளிய தற்காலத் தமிழாக இருக்கிறதே! மொழி இயல் ரீதியில் இவர்களை மிகவும் முன் போட முடியாதே. மேலும் முதல், இடைச் சங்க புலவர் பாடல்களும் சங்க இலக்கியத் தொகுப்பில் இருக்கின்றன. அவைகளின் நடையைப் பார்க்கையில் மூன்று தமிச் சங்கங்களும் 200 அல்லது 300 ஆண்டுகளுக்குள்தான் இருந்திருக்க வேண்டும்.

(எனது ‘ 3 தமிழ் சங்கங்கள் உண்மையா கட்டுக் கதையா?’ Three Tamil Sangams: Myth and Reality என்ற கட்டுரையில் மேல் விவரம் காண்க)

4. தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணாக்கரான பனம்பாரனார் பாட்டிலும் ஆதிரையாரின் சிறப்புப் பாயிரத்திலும் வடமொழி சொற்களும் (அவையம், உலகம்), பிற்காலக் கருத்துகளும் இருக்கின்றன. தமிழ் கூறும் நல் உலகம் வேங்கட மலைக்குள் சுருங்கி விட்டதை மாமுலனார் போன்ற புலவர்களும் வேங்கடத்துக்கு அப்பால் உள்ள நாடுகளை ‘மொழி பெயர் தேசம்’ என்று குறிப்பிடுவர். ஆகையால் ஏறத் தாழ ஒரே காலத்தைப் பற்றி அல்லது மாமுலனாருக்குப் பிந்திய காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டி இருக்கிறது.

5. தொல்காப்பியர் 68 இடங்களில் பயன்படுத்தும் “என்மனார்” முதலிய சொற்கள் சங்கச் சொல்லடைவில் இல்லை என்பதோடு ‘ஆர்’ விகுதி பிற்கால விகுதியாகும். வினைச் சொற்கள் ஆன், ஆய், ஆர் என்று நெடிலில் முடிவது கலித்தொகை, பரிபாடலில் அதிகம் வரும். இவை பரிபாடல், கலித்தொகை காலத்தைச் சேர்ந்தவை. இந்த இரு நூல்கள் பற்றிய குறிப்பும் தொல். இல் உண்டு. இதற்கு முந்திய பரிபாடல், கலித்தொகை பற்றிய சான்றுகள் இழந்த நூற்பட்டியலிலும் இல்லை.

6. தொல். பயன்படுத்தும் இலக்கணம் ,வணிகன், காரணம் போன்ற வடமொழிச் சொற்கள் சங்க கால நூல்களில் இல்லை.

7. தொல்காப்பியர் காலப் பாண்டியனை வழுதி, மாறன், செழியன் என்று சொல்லாமல் பாண்டியன் என்று மட்டும் அழைப்பதையும் கருத்திற் கொள்க. அகம், புறம் முதலிய பாடல்களில் இச் சொல் உண்டு என்றாலும் அவைகளின் காலம் சங்க கால இறுதிக் கட்டமா என்பதை ஆராய வேண்டும்.

8.தர்ம, அர்த்த, காம, (மோட்சம்)= அறம், பொருள், இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு நூல்களில் பெருகுவதைக் காணலாம். புறம் 28, 31 பாடல்களில் காணப்படும் இந்த இந்து மதக்கருத்துக்கள் தொல். இல் 1363, 1038 சூத்திரங்களிலும் காணக்கிடக்கிறது.

9.பரைத்தமை: பரத்தையிற் பிரிவு என்பது தலைவனின் ஒழுக்கக் கேட்டிற்கு அடையாளம். சங்க நூல்கள் இவைகளை அன்றாட வாழ்வியல் நிகழ்ச்சியாகப் பேசும். ஆனால் திருக்குறள் காலத்திலிருந்து இதைக் கண்டனப் பார்வையில் காண்கின்றனர். தொல்காப்பியர் இதை ஒரு பிரிவாக இலக்கணத்திற் சொல்ல மனமில்லாமல் ஒதுக்கிவிட்டது போலத் தோன்றுகிறது. அதாவது காலத்தின் தாக்கம். பிற்கால இறையனார் களவியல் இதை ஒரு சூத்திரமாக வைத்து நூல் செய்துள்ளார். ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக பலர் சந்தேகிக்கும் சிலப்பதிகாரத்தில் பரத்தையர் வாழும் வீதியை இளங்கோ அடிகள் 22 வரிகளில் வருணிக்கிறார்.

10.எதுகை:- குறளைப் போல, அதிகம் காணப்படுகிறது. ஆய்த எழுத்துப் பிரயோகமும் சங்க நூல்களை விட அதிகம்.

11.ஒட்டகம்: தொல்காப்பியர் ஒட்டகம், குதிரை முதலிய சொற்களைப் பயன்படுத்துவதும் இவரது காலத்தைக் காடுகிறது. சங்க காலத்தின் இறுதிகட்டத்தில் வந்த சிறுபாணாற்றுபடையிலும் அகம் 245லும் மட்டுமே ஒட்டகம் வருகிறது.

12.தொல்காப்பியர் 287 இடங்களில் தனக்கு முந்தி இருந்தவர்கள் கூறியது என்று பல விதிகளைக் கூறுகிறார். அவருக்கு முந்திய அத்தனை பேரின் நூல்களில் ஒரு சில கிடைத்திருந்தாலும் கூட, இந்தக் கட்டுரைக்குத் தேவையே எழுந்திராது. ஆக அவர் கூறுவது நாமறிந்த சங்க காலப் புலவர்கள் என்றே கருதவேண்டும்.

13. தொல்காப்பியர் பயன்படுத்தும் சம்ஸ்கிருதச் சொற்கள் பட்டியல் மிக மிக நீண்டது; கீழே காண்க:

எழுத்து அதிகாரம்: உவமம், காலம், காரம், காயம், திசை, பூதம், பூதன், மதி, ஆசிரியர், இமை, உரு, உருவு, துணி (12)

சொல் அதிகாரம்: அத்தம், ஆனை, இலக்கணம், உவமம், கருமம், களம், காரணம், திசை, தெய்வம், பூதம், சுண்ணம், வண்ணம் (12)

பொருள் அதிகாரம்: அத்தம், அந்தரம், அம்போதரங்கம், அமரர், அமுதம், அவை, ஆரம், உலகம், உவமம், உரு, ஏது, கபிலை, கரகம், கருமம், கரணம், காமம், காயம், காரணம், காலம், குணம், குஞ்சரம், சிந்தை, சின்னம், சூதர், தாரம், திசை, தூது, தெய்வம், நாடகம், நிமித்தம், பழி, பருவம், பலி, பூதம், மங்கலம், மண்டிலம், மந்திரம், மதி, மாயம், மானம், முகம், முரசு, வருணன், வள்ளி, வாணிகம் (46).

கீழ்கண்ட வார்த்தைகள் பிராக்ருதம் மூலமாக நுழைந்த சம்ஸ்கிருதச் சொற்கள்: அரசன், அரணம், அவை, ஆசான், ஆசிரியர், ஆணை, இமை, இலக்கணம், உரு, ஏமம், ஐயர், கவரி, சுண்ணம், தாமதம், தூணி, தேயம், நிச்சம், பக்கம், பண்ணத்தி, பார்ப்பனன், பையுள், மாராயம், வண்ணம்.

சில சொற்கள் மீண்டும் வந்த போதும் திருப்பிக் கொடுத்தமைக்குக் காரணம் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும் ஒரே காலத்தவை அல்லது ஒரே காலத்தில் இருவேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டவை எனபதைக் காட்டவே.

தொடரும்………………………….. பகுதி மூன்றில் காண்க.

தொடர்பு கொள்ள: [email protected]
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top