• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Pudukkavitai Pazhaiyadu

Status
Not open for further replies.

saidevo

Active member
புதுக்கவிதை பழையது
பழந்தமிழில் புதுக்கவிதைகள்

இன்று எழுதப்படும் புதுக்கவிதைகள் பெரும்பாலும் எப்படி எழுதப்படுகின்றன? ஒரு உதாரணம் பார்ப்போம்.

"நிஜங்கள் நிராகரிக்கப்படும்வரை நிழல்கள் நம்பப்படும்."

இப்படி எழுதும்போது இந்த எளிய சொற்றொடரில் இல்லாத பொருட்செறிவுகள், அதே எளிய சொற்றொடரை

"நிஜங்கள்
நிராகரிக்கப்
படும்வரை
நிழல்கள்
நம்பப்படும்."

என்று சொல்வீழ்ச்சியாக எழுதும்போது அது எப்படி ஒரு புதுக்கவிதையாகிறது?

முதலில் இதைக்கவிதை என்று சொல்லமுடியுமா? இலக்கணத்தோடு அமைந்த உரைநடைச் சொற்றொடர்கள் கவிதையாகப் பிரிய முற்படும்போது, உரைநடையின் அந்த எளிமையும் இயற்கையும் மாறாமல் அத்துடன் (இயன்றவரை) கவிதையின் இலக்கணச் செறிவும் சேர்ந்துகொள்ளும்போது அது ஒரு கவிதையாகலாம்.

முதலில் உள்ள சொற்றொடரைவிட அடுத்துள்ள சொல்வீழ்ச்சிக்கு உள்ள ஒரே அனுகூலம், வாக்கியங்களப்பகுத்து வரிகளில் எழுதும்போது வார்த்தைகள் அழுத்தம்பெற்று தனியாகக் கவனிக்கப்பட வாய்ப்பு அதிகம். சான்றாக மேலுள்ள கவிதை வரிகளில் ’நிஜங்கள்’ என்ற சொல் படிப்பவரை நின்று சிந்திக்கவைக்கிறது.

இந்த அனுகூலத்துக்கு மாறாக ஒரு பிரதிகூலமும் உள்ளது: கவிதை இலக்கண அணிகள் இல்லாத இத்தகைய வாக்கியப்பகுப்புகள் மனத்தில் பதிவது அரிது. வார்த்தைகள் ஒரு ’ஃபாஷன் ஷோ’வில் வரும் பெண்களைப்போல் வலம்வரும்போது, அவற்றில் எத்தனை மனதில் நிற்கின்றன?

இன்று நம்மிடையே அதிகமாகப் புழங்கும் புதுக்கவிதை என்ற உத்தி நாம் கண்டுபிடித்த புதியது அல்ல. இத்தகைய புதுக்கவிதைகள் நம் பழைய தமிழ்ப் புலவர்களால் பொருட்செறிவோடும் கவிதை இலக்கணச் செறிவோடும் எழுதப்பட்டன. அக்கவிதைகள் உரைநடை போன்றும் எளிதில் புரிவதாகவும் அமைந்தன. அவற்றில் சிலவற்றை இத்தொடரில் பார்க்கலாம். நம் பிள்ளையார் சுழியை ஔவையாரிலிருந்து தொடங்கலாம்:

001. ஔவையார்

அறம் செய விரும்பு.
ஆறுவது சினம்.
--ஆத்திசூடி

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
--கொன்றை வேந்தன்

நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே--அல்லாத
ஈரமில்லா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மேல் எழுத்துக்கு நேர்.
--மூதுரை

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்--வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்.
--நல்வழி

*****

002. அதிவீரராம பாண்டியன்

எழுத்தறிவித்தவன் இறைவ னாகும்.
கல்விக் கழகு கசடற மொழிதல்.

யானைக்கு இல்லை தானமும் தருமமும்
பூனைக்கு இல்லை தவமும் தயையும்
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்.

காலையும் மாலையும் நான்மறை யோதா
அந்தணர் என்போர் அனைவரும் பதரே.
--வெற்றி வேற்கை

*****

003. உலகநாதர்

ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்
--உலக நீதி

*****

004. பெருவாயின் முள்ளியார்

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர்‍இவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.
--ஆசாரக்கோவை (சவலை வெண்பா)

*****

005. கபிலர்

கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா
நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா
கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா
தடுமாறி வாழ்த லுயிர்க்கு.
--இன்னா நாற்பது

*****

006. பூதஞ்சேந்தனார்

மான மழிந்தபின் வாழாமை முன்‍இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடமை
மானிடவர்க் கெல்லாம் இனிது.
--இனியவை நாற்பது


*****

007. மதுரைக் கூடலூர் கிழார்

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப
ஈரம் உடைமை ஈகையின் அறிப
--முதுமொழிக் காஞ்சி, அறிவுப் பத்து

*****

008. நல்லாதனார்

கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் காமுற்ற
பெண்ணுக் கணிகலம் நாணுடமை--நண்ணும்
மறுமைக் கணிகலம் கல்வி இம்மூன்றும்
குறியுடையார் கண்ணே யுள.
--திரிகடுகம்

*****

009. திருவள்ளுவர்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
--திருக்குறள்

*****

010. சமண முனிவர்கள்

விளக்குப் புக‍இருள் மாய்ந்தாங் கொருவன்
தவத்தின் முன் நில்லாதாம் பாவம்--விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.
--நாலடியார்

*****
 
Last edited:
011. விளம்பி நாகனார்

நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம்.
--நான்மணிக்கடிகை 11

*****

012. நீதிவெண்பா (ஆசிரியர் தெரியவில்லை)

கொம்புளதற்கு ஐந்து; குதிரைக்குப் பத்து முழம்;
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே--வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. 20

பொருள்: தலியில் கொம்புள்ள ஆடு, மாடு போன்ற விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஐந்து முழம் தள்ளி இருந்தால் போதும். யானைக்கு ஆயிரம் முழம். ஆனால் வம்பே தொழிலாக உள்ள தீயோரிடமிருந்து கண்ணுக்குத்தெரியாத தூரம் விலகுவதே நல்லதாகும்.

என்னே கிரேதத்து இரேணுகையே கூற்றுவனாம்
தன்னேர் திரேதத்தில் சானகியே--பின்யுகத்தில்
கூடும் திரௌபதியே கூற்றாம் கலியுகத்தில்
வீடுதோறும் கூற்றுவனாமே. 32

*****

013. மூன்றுரை அரையனார்

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப--நரைமுடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும். 6
[சோழன்=கரிகால் சோழன்]

நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு
உணின்றி ஆகாது உயிர்வாழ்க்கை--பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரதம் இல். 327
[கைத்து=செல்வம் சம்பிரதம்=விளைவு]

*****

ஆன்மீக இலக்கியங்களிலும் புதுக்கவிதையின் உரைநடை எளிமையைப் பாருங்கள்.

014. திருவதிகை மனவாசகங் கடந்தார்

அந்தக் கரணம் அடையவே உரைக்ககேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம்--சிந்தை இவை
பற்றியது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்து அங்கு
உற்றது சிந்திக்கும் உணர். 17.
--உண்மை விளக்கம், ஆன்ம தத்துவம் பற்றி

*****

015. திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியர்

நானே பிரமம் என்றுரைத்து ஞாலம் பேய்த்தே ரெனஎண்ணி
ஊனே புகுந்து நின்றுயிர்கட் குபதே சங்கள் உரைத்துவரும்
மானா மதிக்கே டனுமாய மாயா வாதி பேயாகித்
தானே உரைக்கும் அந்நூலின் உண்மை தன்னைச் சாற்றுவாம். 220
--மாயாவாத மதம் (அத்வைதம்) பற்றி

ஆதியாய் அருவ மாகி அகண்டபூ ரணமாய் ஞானச்
சோதியாய் நின்ற மாயன் சுவேச்சையாய் உருவு கொண்டு
நீதியார் கருணை யாலே நீள்கடல் துயின்று நூலும்
ஓதினா னென்று பாஞ்ச ராத்திரி உரைப்ப னுற்றே. 264
--சிவஞான சித்தியார், பாஞ்சாராத்திரி மதம் பற்றி

*****

016. கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்

"வாழிதிருத்தொண்டர் புராணத்தை நீரே வாசித்துப் பொருள் அருளிச் செய்வீர்" என்று
சோழர் பெருமான் முதலாம் அடியரெல்லாஞ் சொல்லக்கேட்டு குன்றைமுனி மன்றுளாடும்
தாழ்சடையான் அடிஎடுத்துத்தரத் தாஞ்செய்த சைவக்கதையினை விளங்க விரித்துச்சொல்ல
சூழ‍இருந் தம்பலவ ரடியா ரெல்லாம் "சுருதிமொழி இது" எனக்கைதொழுது கேட்டார். 79
--திருத்தொண்டர் புராண வரலாறு

*****

017. சம்பந்தர் தேவாரம்

திருஞான சம்பந்தர் பனையூர் சிவனைத் தொழுதபோது சொன்னார்:

அரவச் சடைமேல் மதிமத்தம் விரவிப் பொலிகின்றவவன் ஊராம்.
நிரவிப் பல தொண்டர்கள் நாளும் பரவிப் பொலியும் பனையூரே.

இந்த எளிய உரைநடை வாக்கியங்களை அவர் செய்யுளாகத் தக்கராகம் பண்ணில் இசைக்கும்வண்ணம் கீழ்க்கண்டவாறு பிரித்துப்பாடினார்:

அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே. 393/1.37.1.

இது வியாழக்குறிஞ்சிப் பண்ணில் திருவல்லம் ஊரில் பாடியது. இன்றும் நாம் பயன்படுத்தும் எளிய சொற்கள்!

எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்
தரித்தவன் கங்கையத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே. 1218/1.113.1

*****

018. அப்பர் தேவாரம்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே. 104/4.11.1

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தெந்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே. 5.90.1

*****

019. சுந்தரர் தேவாரம்

திருவுடை யார்திரு மாலய மானாலும்
உருவுடை யார்‍உமை யாளையோர் பாகம்
பரிவுடை யார்‍அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்‍உறை பூவணம் ஈதோ. 104/7.11.11
--திருப்பூவணத்தில் பாதியது, இந்தளப்பண்

நிலையாய் நின்னடியே நினைந்தேன் நினைதலுமே
தலைவா நின்னினையப் பணித்தாய் சலமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ் திருமேற் றளியுறையும்
மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே. 217/7.21.9
--திருக்கச்சிமேற்றளியில் நட்டராகத்தில் பாடியது

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. 239/7.24.1
--திருமழபாடியில் நட்டராகத்தில் பாடியது

*****

020. மாணிக்க வாசகர்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க
--திருவாசகம், சிவபுராணம் 1-5

கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
னெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றமும் முரண் உறுநரகு இடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி
--திருவாசகம், சிவபுராணம் 111-120

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே.
--திருவாசகம், திருச்சதகம், அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா)

*****
 
Last edited:
பழந்தமிழில் புதுக்கவிதைகள்!
ஐயா! இவை புதுக் கவிதைகள் அல்ல. நல்ல கவிதைகள். 'மீட்டர்' இல்லாமல், எளிதில் புரியும் வகையில் எழுத

முயல்வதே புதுக் கவிதை. நீங்கள் பா இலக்கணம் நோக்கினால், இவை தேறாது. எத்தனை வைதாலும், தமிழ் எழுத

விழைவோர், சந்தங்கள் இல்லாத கவிதைகளைப் படைப்பார்கள்! படிப்பவர்கள் படிப்பார்கள். மற்றவர் :bolt:
 

எழுத்துப் பிழையும், கருத்துப் பிழையும் இல்லாமல் தமிழ் எழுதினால், அதை முழு மனதுடன் வரவேற்போம்!


கோவலன், கேவலன் ஆகாமல், கெண்டை மீன், கொண்டை மீன் ஆகாமல், அறம் செய்தல் அரம் செய்தல் ஆகாமல்


குழவி, குளவி ஆகாமல் இருக்கும் வரை சரியே!
தமிழ்த் தாய் வாழட்டும்; வளரட்டும்! :hail:

 
தமிழ்த் தாய் வாழட்டும்; வளரட்டும்! :hail:


ஒரு சின்ன சந்தேகம்....

தமிழ்த்தாய் என்கிறோம்; கன்னித்தமிழ் என்றும் சொல்கிறோமே .
தமிழ் என்ன மேரி மாதா போன்றா? :spy:


பின் குறிப்பு:
நான் தமிழை மிக அதிகமாக நேசிப்பவன். தயவு செய்து யாரும் என் கருத்தைத் தவறாக நினைக்க வேண்டாம். ஒரு நகைச்சுவைக்காகத்தான் இப்படி எழுதி இருக்கிறேன். பெரியவர்கள் என்னை மன்னிக்கவும்.
 
வணக்கம் திருமதி ராஜிராம்.

நான் புதுக்கவிதை என்ற முயற்சிக்கு எதிரி இல்லை. என் கருத்து, இதுதான் புதுக்கவிதை என்று வரையறுக்க முடியாது என்பதே. கொஞ்சம் விவாதிக்கலாமா?

"’மீட்டர்’ இல்லாமல், எளிதில் புரியும் வகையில் எழுத முயல்வதே புதுக் கவிதை" என்ற கருத்து எனக்கு உடன்பாடு இல்லை. எளிதில் புரிவதுதான் முக்கியம் என்றால் ’மீட்டர்’ இருந்தென்ன, இல்லாமல் இருந்தென்ன?

அதிவீர பாண்டியன் எழுதிய இந்தக் கவிதையை நான் முயற்சித்தவரையில் எந்தப் பாவகையிலும் சேர்க்கமுடியவில்லையே?

யானைக்கு இல்லை தானமும் தருமமும்
பூனைக்கு இல்லை தவமும் தயையும்
ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்.

இந்த மூன்று வரிகளில் எதுகையும் மோனையும் உள்ளன, அமைப்பில் ஒரு ஒழுங்கு உள்ளது. இவை இருந்தும்கூட இதைவிட எளிதில் புரிவது எது? தவிர, இந்த மூன்று வரிகளை ஒரே வரியாக எழுதினால் அது உரைநடையாகிவிடுகிறது. எனவே இந்தக்கவிதை புதுக்கவிதை உத்தியைப் பயன்படுத்தியுள்ளது என்று சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை.

நான் சொல்வது என்னவென்றால்: புதுக்கவிதை என்பது ஒரு உத்தி, அவ்வளவே. அந்த உத்தி நாம் இப்போது கண்டுபிடித்தது அல்ல. அது free verse என்ற ஆங்கிலக்கவிதை முறையின் தமிழ் வடிவம் அல்ல.

அந்த உத்தி நம் பழந்தமிழ்ப் பாக்களில் வெகுகாலமாகக் கையாளப்பட்டு, உரைநடைபோன்ற எளிய பாக்களில் விரவிக்கிடப்பதை எளிதில் காணலாம். இன்று எவ்விதக்கட்டும் இல்லாமல் எழுதப்படும் புதுக்கவிதைகள் பொதுவாக அன்று எழுதப்பட்ட தரத்தில் இல்லை என்று துணிந்து கூறலாம். மாறாக இன்றும் ஒருவிதக் கட்டுக்கோப்புடன் எழுதப்படும், அன்றைய தரத்திற்கு ஈடான புதுக்கவிதைகளும் உண்டு.

நீங்கள் எழுதிய கவிதை ஒன்றை எடுத்துக்கொள்வோம்:

பொறுமையாய்க் கருப்பையுள் கிடந்துழன்ற பின்னர்,
வெறுமையாய்க் காற்றடைத்த பையாய்த் திரிந்தாலும்,
காலபைரவனை உருவாக்கியவனின் ஐந்தெழுத்தை,
காலத்தில் முக்தி பெற, பைய உணர்ந்து ஓதுவோம்!

இது அப்பர் தேவாரம்:

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

இவ்விரண்டு கவிதைகளும் வரிகளைச் சேர்த்தால் ஒரே வாக்கியமாகிவிடும்! அதாவது, ஒரு வாக்கியத்தில் நினைத்ததைப் பகுத்து, கட்டுக்கோப்புடன் பலவரிகளில் இரண்டு கவிதைகளும் சொல்கின்றன. முன்னது புதுக்கவிதை என்றால் பின்னது ஏன் அதுவாகாது?

இன்னொரு உதாரணம்:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்--அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;--தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

பாரதியின் இந்தத் தனிப்பாடலை புதுக்கவிதை என்று உரைப்பதில் என்ன தயக்கம் இருக்கமுடியும்?

இந்த வரிகளைக் கவனிப்போம்:

"சொற்கள் சொற்களைக் காயப்படுத்தின. குரல்கள் குரல்களை ஆக்கிரமித்தன. குரல்களோடு பொருதன. வென்றன. தோற்றன. பெரியோரச் சிறியோராக்கின."
(நான் எழுதிய நாவலில் உள்ள உரைநடை வரிகள்).

உரைநடையாக இருப்பதால் இந்த வரிகளில் புதுக்கவிதை இல்லை என்று நான் சொல்லமாட்டேன்!

எனவேதான் நான் சொல்வது: புதுக்கவிதை என்பது ஒரு இலக்கிய உத்தி. அதன் முக்கியத் தேவை எளிதில் புரிவது. அதற்கு இன்னவடிவம் என்றில்லை. அதாவது அது எந்த வடிவத்திலும் இருக்கலாம். அந்த உத்தி, அன்றுமுதல் இன்றுவரை எல்லாவிதமான இலக்கிய வகைகளிலும் அறிந்தோ அறியாமலோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

*****

To think about:
http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=2007022721230300.htm&date=2007/02/27/&prd=th&
 
Last edited:
021. திருவாலியமுதனார்

அன்ன நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில்தில்லத்
தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம் பலந்தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே. 237
--திருவிசைப்பா

022. திருமூலர் (திருமந்திரம்)

இன்றைய புதுக்கவிதைகளில் ஒரு வாக்கியத்தைப் பல வரிகளில் எழுதுகிறார்கள். திருமூலரின் பெரும்பாலான கவிதைகளிலோ ஒவ்வொரு வரியுமே அவற்றின் ஆன்மீகப் பொருளை எளிதில் விளக்கும் சிறிய, எளிய, வாக்கியம்! ஒருமுறை படித்தாலே மனதில் நின்று, குமிழியிட்டு, மேலும் சிந்திக்கத் தூண்டும் வரிகள்!

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. 129

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. 139

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினப்பொழிந்தார்களே. 145

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. 250 (தானச் சிறப்பு)

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 270

நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. 320

தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதார் தீரார் பிறப்பே. 1480 (சன்மார்க்கம்)

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே. 2290

மாயை மறைக்க மறைந்த மறைபொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லாற்கட்குக்
காயமும் இல்லை கருத்தில்லை தானே. 2548

*****
 
Last edited:
.......... நீங்கள் எழுதிய கவிதை ஒன்றை எடுத்துக்கொள்வோம்:

பொறுமையாய்க் கருப்பையுள் கிடந்துழன்ற பின்னர்,
வெறுமையாய்க் காற்றடைத்த பையாய்த் திரிந்தாலும், ..........
அன்புள்ள ஐயா!

அப்பர் தேவாரம் எங்கே! என் கிறுக்கல்கள் எங்கே! இத்துணை தயையுடன் என் கவிதைக் கிறுக்கலை மேற்கோள்

காட்டியதற்கு நன்றிகள் பல. தமிழைப் பிழையில்லாமல் எழுதினால், ஆனந்தியுங்கள் என்றுதான் கூறுகின்றேன் -

அது உரை நடை ஆயினும்; நீண்ட உரைநடையை ஒத்த புதுக் கவிதை ஆயினும்! அளவு, மற்றும் எதுகை, மோனை

எதுவுமே, இக்காலப் புதுக் கவிதைகளில்
காண்பது அரிது என்பது என் எண்ணம். என் எண்ணம் மட்டுமே!

:pray2:

 
Dear Saidevo,

எனவேதான் நான் சொல்வது: புதுக்கவிதை என்பது ஒரு இலக்கிய உத்தி. அதன் முக்கியத் தேவை எளிதில் புரிவது. அதற்கு இன்னவடிவம் என்றில்லை. அதாவது அது எந்த வடிவத்திலும் இருக்கலாம். அந்த உத்தி, அன்றுமுதல் இன்றுவரை எல்லாவிதமான இலக்கிய வகைகளிலும் அறிந்தோ அறியாமலோ பயன்படுத்தப்பட்டுள்ளது
.

கவிதை ஒரு இலக்கிய உத்தி.

கதை ஒரு இலக்கிய உத்தி.

உரை நடை ஒரு இலக்கிய உத்தி.

புதுக்கவிதை அப்படி ஒரு உத்தியா?

கவிதை யை என்ன என்று வரையறுத்துவிட்டால் புதுக்கவிதை கவிதையே அல்ல என்று தீர்மானிக்க நேரும்.

ஹைக்கூ என்று கூறிவந்தார்கள். அந்த பெயர் கூட பொருத்தமானது தான். புதுக்கவிதை என்ற பெயர் அந்த உத்திக்கு என்னவோ பொருந்தவில்லை தான்.


இது என் கருத்து. இதற்கான காரணங்களை நான் இன்னும் எழுதுவேன்.

Cheers.
 
வணக்கம் சுராஜு.

நான் சொல்ல வந்தது இதுதான்:
உத்தி என்பது ஒரு literary device or technique. அந்தச்சொல் யுக்தி என்ற வடமொழ்ச் சொல்லின் தமிழாக்கம்.

படிவம் என்பது ஒரு இலக்கிய வடிவம்--literary form. கவிதை, கதை, உரைநடை, நாடகம், காப்பியம் போன்றன இலக்கியப் படிவங்கள். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட வடிவமும் அந்த வடிவத்திற்கு உண்டான இலட்சணங்களும் உண்டு.

எந்தவிதமான கட்டும் இல்லாது எழுதுப்படுவது உரைநடை. இருந்தும் அதற்கும் ஒரு வடிவம் உண்டு: முன்னுரை, அத்தியாயங்கள் போன்ற பிரிவுகளும், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் பத்தி--paragraph போன்ற வேறு சிறிய பிரிவுகள். சொல்லவந்த விஷயத்தைப் பொருத்து இப்பிரிவுகள் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம்.

ஆங்கில இலக்கியத்தில் இருபதாம் நூற்றாண்டில் free verse என்ற இலக்கிய வடிவம் பிரபலமடைந்தது. மிகப் பிரபலமான டி.ஸ். எலியட் என்ற கவிஞரின் The Waste Land என்ற நீளமான கவிதை free verse வடிவத்தில் எழுதப்பட்டது. அதன் முதல் வரிகள் இவ்வாறு:

APRIL is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing
Memory and desire, stirring
Dull roots with spring rain.

அசை, சீர், தளை போன்ற எந்தக் கட்டுகள் இல்லாவிட்டாலும், இதைப்படிக்கும்போது இது உரைநடையாகத் தோன்றவில்லை. ஆனால் free verse வடிவத்தில் கட்டுகள் இருக்கலாம்--தொடர்ச்சியாகவோ, சிற்சில இடங்களிலோ. வால்ட் விட்மன் கவிதைகளில் அவற்றைப் பார்க்கலாம்.

ஆங்கில Free verse வடிவம் தமிழில் வசன கவிதை என்று பாரதியால் அழக்கப்பட்டது. அவரது வசன கவிதைகளில் ஒன்று:

இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை
ய்டைத்து; காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் நன்று.

எனவே, உரைநடையில் உள்ளதுபோல, கவிதைக்கட்டுகளின்றி கவிதை எழுத முனைந்தால் அது வசன கவிதையாகும். இன்று அதனைப் புதுக்கவிதை என்று அழைப்போர், எளிமையுடன் கட்டும் அவிழ்ந்தால்தான் அது புதுக்கவிதை என்று கூறுவதுடன், அது இதுவரை காணாத ஒன்று என்றும் சொந்தம்கொண்டாட முனைகின்றனர். எனவேதான் நான் புதுக்கவிதையை ஒரு உத்தி என்று அழைக்கிறேன்.

உரைநடைக்கே
ஓர் உறை உள்ளபோது
உறையே இல்லமால்
கொட்டிய சொற்கள்
எப்படிக் கவிதையாகும்?
அதுவும் புதுக்கவிதையாக?
 
Last edited:

புதுக் கவிதையை தான் கண்டுபிடித்தாக யாரேனும் சொன்னார்களா, என்ன? சங்க இலக்கியம்போல

'கோனார் நோட்ஸ்' இல்லாமல் படிக்க முடியாத கவிதைகளே புதுக் கவிதைகளாக உருவெடுத்தன.

இக்காலக் கவிஞர்களால் (கவிஞர் என நீங்களும் ஏற்றுக்கொண்டால்) கம்பர், வள்ளுவர், ஒவையார்,

ஒட்டக்கூத்தர்............. போன்ற கவிகள் போல எழுத முடியுமா என்பதே ஐயம்! அதனால்தான் மீண்டும்

மீண்டும் 'நல்ல தமிழை வளர்ப்போம்' என்று கூறி வருகிறேன்!


குறிப்பு: என்னிடம் இசை பயிலும் மாணவிகள் பலர் ஆங்கில ஸ்வரக் குறிப்புகளே கேட்கின்றார்!

தமிழ் நாட்டில் இப்படி ஒரு அவல நிலை! :shocked:

 

Dear Saidevo Sir,

தாங்கள் 'எண்ண அலைகளை'ப் படித்து ரசிப்பது கண்டு ஆனந்திக்கிறேன்!
எப்போதும் நான் சொல்லுவது இதுவே: தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்! :popcorn:
 
023. திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள்
இந்தப் பாடலைவிட எளிதாகவும் கட்டுடனும் யாராவது புதுக்கவிதை எழுதமுடியுமா?

8. ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
..உத்தமர்தம் உறவு வேண்டும்
..உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
..உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெரும் நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
..பேசா திருக்க வேண்டும்
..பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
..பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
..மறவா திருக்க வேண்டும்
..மதிவேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
..வாழ்வுநான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
..தலமோங்கு கந்த வேளே
..தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
..சண்முகத் தெய்வ மணியே.

வைரமுத்துவின் இந்தக் கவிதையைக் கவனிப்போம்.

கேள் மனமே கேள்

சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
உலகெங்கும் சம்பங்கு (சமபங்கு?) மழையைக் கேட்பேன்.

பின்னது புதுக்கவிதை என்றால் முன்னது ஏன் அதுவாகாது?

*****

வள்ளலாரின் மற்ற சில எளிய பாடல்கள் இதோ:

5066 அம்பலத் தரசே அருமருந் தே
ஆனந்தத் தேனே அருள் விருந் தே.

5087 சங்கர சிவசிவ மாதே வா
எங்களை ஆட்கொள வாவா வா.

5096 நடராஜர் பாட்டே நறும்பாட்டு
ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.
5096 சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு.

5170 பொதுநிலை அருள்வது பொதுவினில் நிறைவது
..பொதுநலம் உடையது பொதுநடம் இடுவது
அதுபரம் அதுபதி அதுபொருள் அதுசிவம்
..அர‍அர அர‍அர அர‍அர அர‍அர

5269 கைவிட மாட்டான்‍என்று ஊதூது சங்கே
..கனக சபையான்‍என்று ஊதூது சங்கே
பொய்விடச் செய்தான்‍என்று ஊதூது சங்கே
..பூசைப லித்ததென்று ஊதூது சங்கே.

5487 கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்‍என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான்--பண்ணிற்
கலந்தான்‍என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து.

இதே பாடலை இன்று எவராவது, ஒரு காதலன் தன் காதலியை விளித்து, "கண்ணிற் கலந்தாய்..." என்று பாடியதாக அமத்தால் நாம் அதை ’ஆஹா, புதுக்கவிதை’ என்று கொண்டாடுவோம்!

*****
 
Last edited:
023. திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள்
இந்தப் பாடலைவிட எளிதாகவும் கட்டுடனும் யாராவது புதுக்கவிதை எழுதமுடியுமா?

8. ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
..உத்தமர்தம் உறவு வேண்டும் ...............
எந்தச் சந்த அடிப்படையும் இல்லாததைப் புதுக் கவிதை என்கிறார்கள், இன்று!

கட்டுக் கோப்புடன் இருந்தாலே, அது மரபுக் கவிதை என நினைக்கிறேன்!

சந்தம் சரியாக அமைத்து, ஆங்கிலம் கலந்த சினிமாப் படல்கள் என்றோ வரத் துவங்கிவிட்டன.

அவை புதுக் கவிதைகள்தான்! உதாரணம்:



'அன்னம் போன்ற வாக்கிங்;


அல்வா போன்ற டாக்கிங்;


போதும் இந்தக் காலேஜ்;

எப்போ உங்க மேரேஜ்?'
​ :music:
 
வணக்கம் திருமதி ராஜிராம்.

"எந்தச் சந்த அடிப்படையும் இல்லாததைப் புதுக் கவிதை என்கிறார்கள், இன்று!
கட்டுக் கோப்புடன் இருந்தாலே, அது மரபுக் கவிதை என நினைக்கிறேன்!"

அப்படியானால் நான் மேலே தந்துள்ள வரைமுத்துவின் கவிதை மரபுக்கவிதையா, புதுக்கவிதையா?

சந்தங்கள் ஒழுங்காக விரவாமல் மறைத்து நான் இப்படி எழுதினால் அது புதுக்கவிதையாகிவிடுமா? (வள்ளலாலார் என்ன மன்னிப்பாராக!)

கண்ணில் கலந்தாள்
கருத்தில் கலந்தாள்
இருக்கின்றாள் என்னில் கலந்தே!
என் பாட்டில் கலந்தாள்
பண்ணில் கலந்தாள்
உயிரில் கலந்தாள் கருணை கலந்து!

’உயர்ந்த மனிதன்’ படத்தில் கவிதையும் உரைநடையும் கலந்து வரும் ’அந்தநாள் ஞாபகம்’ பாட்டு புதுக்கவிதை எனலாமா?
 
......... அப்படியானால் நான் மேலே தந்துள்ள வரைமுத்துவின் கவிதை மரபுக்கவிதையா, புதுக்கவிதையா?

மரபுக் கவிதையே என்கின்றேன்!

சந்தங்கள் ஒழுங்காக விரவாமல் மறைத்து நான் இப்படி எழுதினால் அது புதுக்கவிதையாகிவிடுமா? (வள்ளலாலார் என்ன மன்னிப்பாராக!)

கண்ணில் கலந்தாள்
கருத்தில் கலந்தாள்
இருக்கின்றாள் என்னில் கலந்தே!
என் பாட்டில் கலந்தாள்
பண்ணில் கலந்தாள்
உயிரில் கலந்தாள் கருணை கலந்து!

நிச்சயமாக!

’உயர்ந்த மனிதன்’ படத்தில் கவிதையும் உரைநடையும் கலந்து வரும் ’அந்தநாள் ஞாபகம்’ பாட்டு புதுக்கவிதை எனலாமா?

எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது! அழகிய புதுக் கவிதை!!

என்னுடைய ஈயடிச்சான் காபி பாடல் படித்தீர்களா?


உங்களுக்காக மீண்டும்:

ஒரு NRI - யின் புலம்பல்!

அந்தநாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே
நண்பனே நண்பனே நண்பனே!
இந்தநாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே -அது
ஏன், ஏன் நண்பனே
?

Bagel என் கையிலே, காபி கப் பையிலே;
போண்டா திங்க வழியே இல்லையே!
டிகிரி காபி கிடைக்கலே லாட்டேயும் ருசிக்கலே - அது
ஏன், ஏன் நண்பனே?


பாஸ்தாவே அடிக்கடி உண்ணுவோம் வீட்டிலே,

பிட்ஸாவும் பார்சலாய் ஃப்ரிஜ்ஜிலே!
இட்லியும் சட்னியும் ஞாபகம் வந்ததே- அது
ஏன், ஏன் நண்பனே?

யானையின் சைஸிலே கத்தரிக்காய் உள்ளதே,

யாரிங்கு செய்தாலும் ருசிக்காதே!
துக்கிணி சைஸிலே வெண்டக்காய் உள்ளதே - அது
ஏன், ஏன் நண்பனே?

அப்பளம் பொரித்தாலே பிசுக்குத்தான் ஆகுதே,
அப்புறம் துடைக்கவே முடியலே!
'என்றுதான் இந்தியா செல்வோமோ லீவிலே',
என்று நான் ஏங்குறேன் நண்பனே!


P. S: இதைப் படித்த பல NRI - கள் என்னிடம் சண்டைக்கே வந்துவிட்டார்கள் - நாங்கள் நன்றாக சமைப்போம் - என்று!!

'புலம்பியவர் சமைக்கவும் தெரியாத, சமைக்கப் பிடிக்காத மனைவி அமைந்த NRI', என்று விளக்கம் தந்து, பிழைத்தேன்! :D

 
நண்பர் சாய்தேவ் அவர்களுக்கு,

உத்தி என்பது ஒரு literary device or technique. அந்தச்சொல் யுக்தி என்ற வடமொழ்ச் சொல்லின் தமிழாக்கம்.
படிவம் என்பது ஒரு இலக்கிய வடிவம்--literary form. கவிதை, கதை, உரைநடை, நாடகம், காப்பியம் போன்றன இலக்கியப் படிவங்கள். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட வடிவமும் அந்த வடிவத்திற்கு உண்டான இலட்சணங்களும் உண்டு.

உத்தி முத்தினால் அது வடிவம் ஆகிறது என்பது என் கருத்து. நம்முடைய சோம்பேறித்தனம் நம்மை யாப்பு படிக்கவும் அந்த இலக்கணத்துக்கு உட்பட்டு அதே போது வெறும் வார்த்தை குவியலாக இல்லாமல்அழகாகவும்சந்தத்துடனும்ஒரு கவிதை எழுத விடாமல் தடுக்கும்
போது நாம் செய்த உத்தி தான் புதுக்கவிதை. புதுக்கவிதை நமக்கு கவிதை எழுதி விட்டோம் என்ற மயக்கத்தை தந்து நம்மை மகிழ்விக்கிறது. நாம் செய்த உத்தியின் வெளிப்பாடு வடிவம் தான் புதுக்கவிதை.

அசையும், சீரும், தளையும், அடியும், தொடையும் எல்லாமுமே
யாப்பிலக்கணத்தின்(கவிதை இலக்கணத்தின் ) அங்கங்கள். அப்படியிருக்க இது எதையுமே கணக்கில் எடுக்காத ஒரு வடிவம் எப்படிக் கவிதையாக முடியும். எதுகையும் மோனையும் யாப்பிலக்கணத்தின் பாகம் தான். அவை கவிதை வரிகளில்/வரியில் வந்தால் தான் எதுகை அல்லது மோனை. உரை நடையில் வந்தால் அவை செவிக்கினிய(யுக்தி வாதியின்?) வசனங்கள். அவ்வளவே.

எனக்கும் இந்தப்புதுக்கவிதை சில பிடித்துத்தான் இருக்கிறது.
உம்- நேற்று பெய்த மழைக்கு இன்று குடை விரித்த கோமாளி காளானே! (திரு அ.ரகுமான்) ஆனால் அதை கவிதை என்று எப்படி ஏற்றுக்கொள்ளவது? கண்ணில் கண்ட ஒரு காட்சி யை மற்றவர் பார்க்காத கோணத்தில் பார்த்து அதை சிக்கனமாக வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கும் அழகு அடடா என்ன அழகு என்ன அழகு என்று போற்ற வைக்கிறது. ஆனால் விரிவாக மூன்று நான்கு உவமைகளை அமைத்து சாதாரணமாக உரைநடையில் எழுவதனால் ஒரு முழுப்பக்கமாவது தேவைப்படும் விஷயத்தை நன்கு வரிகளில் யாப்புக்கு உட்பட்டு:
எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறிவேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும்புழையில் கனல் நுழைந்தலேன செவியிற்புகுதலோடும்
உண்ணிலாவிய துயரம் பிடிததுந்த ஆருயிர் நின்று ஊசலாட
கண்ணிலான் பெற்றிழந்தான் என உழன்றான் கடுந்துயரங்க்கால வேலான்.

என்று எழுதியது இது கம்பனின் கவி நயம்.

இதில் எதுகையும் உண்டு மோனையும் உண்டு சந்தமும் உண்டு அணிகளும் உண்டு உவமையும் உண்டு. ஆஹா என்று சொல்ல வைக்கும் நயம் இது.

இனியும் எழுதுவேன்.

Cheers.
 
வணக்கம் திருமதி ராஜிராம்.

முரண்படுகிறீர்கள் என்று தோன்றுகிறது.

வைரமுத்துவின் ’கேள் மனமே கேள்’ பாடலின் நான் கொடுத்துள்ள முதல் எட்டு வரிகளில் எதுகை, மோனைகள் ஆங்காங்கே வருவது தவிர ஒவ்வொரு வரியும் எளிய உரைநடை வாக்கியம்தான். அதேபோன்ற எதுகை-மோனைகள்--சொல்லப்போனால் இன்னும் அதிக அளவில்--’அந்த நாள் ஞாபகம்’ பாடலில் வருகிறதே?
link: Antha naal gnabagam nenjile - Uyarndha Manidhan(1968)

இப்படி இருக்கும்போது முன்னது மபுக்கவிதை என்றும் பின்னது புதுக்கவிதை என்றும் எப்படிச் சொல்கிறீர்கள்?

’அந்த நாள்’ பாடலை உரைநடையில் வடித்தால் இப்படி வரக்கூடும்:

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!
இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே ஏன் நண்பனே?
பாடம் படிப்பு, ஆட்டம் பாட்டம், இதைத் தவிர வேறு என்ன கண்டோம்?
புத்தகம் பையில் இருக்க, புத்தி பாட்டில் இருக்க,
பள்ளியைக் கண்டதும் மழையிலே ஒதுங்கினோம்.
நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லயே நம்மிடம்!...

இப்படி எழுதியிருந்தால் இதில் புதுக்கவிதை உத்தி உள்ளது என்று சொல்லலாம். மாறாக, திரை இசையின் தேவைகளுக்கும் மெட்டுகளுக்கும் ஏற்ப ’கூறியது கூறல்’ என்ற மரபுப்படி பாட்டமைத்ததால் அது மரபுக்கவிதையின் வேறுபாடாகவே எனக்குப் படுகிறது. இது புதுக்கவிதை(உத்தி)யானால் வைரமுத்துவினுடைய பாடலும் அதுவேதான் என்பதே என் கருத்து.

மீண்டும் definition-னுக்கே வருகிறோம். புதுக்கவிதை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யாரும் வரையறுக்கவில்லை. அதாவது, அது எப்படியும் இருக்கலாம். சொல்லப்போனால் புதுக்கவிதையில் தரப்படும் form செயற்கையானது, அதை எழுதுவோரின் mood-ஐப் பொறுத்தது.

என்னைப் பொறுத்தவரை ஒரு கவிதையின் சிறப்பு அதை முழுவதுமாகவோ, அல்லது அதன் முக்கிய வரிகளியோ நினைவுகூர்வதில் உள்ளது. பெரும்பாலான திரைப்பாடல்களை அவற்றின் இசை நினைவுக்கு வராமல் நினைவுகூர முடியாது.

நான் முதலில் காட்டிய வரியை எடுத்துக்கொள்வோம்:
"நிஜங்கள் நிராகரிக்கப்படும்வரை நிழல்கள் நம்பப்படும்."

இந்த வாக்கியத்தை நான் இப்படி எழுதினால் அது புதுக்கவிதையா என்று கேட்டேன்.
"நிஜங்கள்
நிராகரிக்கப்
படும்வரை
நிழல்கள்
நம்பப்படும்."

படிக்கும்போது இந்த வாக்கியம் எளிதாகவும் சிந்திக்கவைப்பதாகவும் இருந்தாலும், சில நாட்கள் கழித்து நினைவுகூற முற்படும்போது சந்தேகங்கள் தலைதூக்குகின்றன. என்ன படித்தோம்?

"நிஜங்கள்
நிராகரிக்கப்பட்டால் / நிராகரிக்கப்படும்போது / நிராகரிக்கப்படும்வரை -- இவற்றில் எது சரி?
நிழல்கள்
நினைக்கப்படும் / நம்பப்படும்" -- எது சரி?

ஏன் இந்தக் குழப்பம்? விடை கவிதையின் உரைநடைத் தன்மையில் இருக்கலாம்.

கண்ணதாசனின்
வீடுவரை உறவு வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?

வரிகளில் இந்தக் குழப்பங்களுக்கு வாய்ப்பில்லை. இரண்டு காரணங்கள்: ஒன்று, வார்த்தைகளை நம் இஷ்டத்துக்கு இடம்மாற்றிப் போடமுடியாது. இரண்டு, அந்த வார்த்தைகள் உரைநடையைக் கடந்த கவிதை. அவ்வாறு கவிதையாவதற்கு அதில் உள்ள மரபுகள் உதவுகின்றன.

எனவே புதுக்கவிதையைக் கவிதை என்ற வடிவத்தில் சேர்ப்பது எனக்கு உடன்பாடில்லை. எதுகையும், மோனையும், அணியும் போல அது ஒரு இலக்கிய உத்தி, அவ்வளவே. அந்த உத்தி அது உணரப்பட்ட காலத்தைக் கடந்து எந்த இலக்கிய வடிவத்திலும் காணப்படலாம்.

முடிவாக, நம் நாட்டுப்புறப் பாடல்கள் பல இன்றைய புதுக்கவிதைகளை விஞ்சி நிற்கின்றன!

நான்தான் வீரன்
நல்லமுத்து பேரன்
வெள்ளிப் பிரம்பெடுத்து
விளையாட வாரேண்டா
தங்கப் பிரம்பெடுத்து
தாலிகட்ட வாரேன்டா, வாரேண்டா...

நாலு மூலை வயலுக்குள்ள
நாத்து நடும் குள்ளப் பெண்ணே
நாத்து நடும் கையாலே என்னையும்
சேத்து நடலாகாதா?...

*****
 

'அந்த நாள் ஞாபகம்' பாடலில் முதல் நான்கு வரிகள் மட்டுமே ஒரு அளவில் (மீட்டர்) அடங்குகின்றன. தொடரும்

வரிகள் அவ்வாறு இல்லையே! அதனால்தான் புதுக் கவிதை என்றேன்! என்னுடைய 'காபி' செய்த பாடலில், முதல்

நான்கு வரிகளின் சந்தத்தையே கையாண்டேன். 'அந்தநாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே' என்றும் மாற்றினேன்! -

அந்த; வந்த என்கிற அழகிற்காக. அதை வேண்டுமானால் மரபுக் கவிதை எனலாம்!!

வைரமுத்துவின் பாடல் ஒரே கட்டுக் கோப்பில் உள்ளது. அதனால் மரபுக் கவிதை என்கிறேன்!
icon3.png
 
நண்பர் சாய்தேவ் அவர்களுக்கு,

இனி கவிதை மனதில் எப்போது நிற்கும் என்று பார்க்கிறேன்:

கருப்பொருள் ஒன்று வைத்து, வெளிப்பொருள் ஒன்றும் கூட்டி,இன் தமிழில், பிற மொழிக்கலப்பின்றி, பாடும் பொருளுக்குத்தக்கவாறு/கருத்துக்கு ஏற்றவாறு சொற்களில் மெல்லின இடையினங்களை கூட்டி/குறைத்து வல்லினத்தை குறைத்து/கூட்டி சந்தங்களை செவிக்கினியனவாக அமைத்து இடையிடையே
அணிகளையும் உலவவிட்டு, நிகழ்களத்தை நன்கறிந்த பொதுவான
தமிழ்மண்ணிலேயே அமைத்து யாப்பிலக்கணத்தின் விதிகளிலிருந்து சற்றும்
பிறழாமல் எழுதப்பட்டால் அது வாசிப்போரின் மனதை எழுதியவர் எண்ணியவாறே
சென்றடையும். அப்படி அடைந்தால் மனதிலும் நிற்கும். அப்படி நிற்பது நல்ல கவிதை ஆகும்.

உம்- ௧)செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

௨)கற்றுக்கரவைக்கணங்கள்.............

௩)தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடா நந்தலாலா
௩)எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் .........

௪)சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரையினை ஒத்திருக்கும் முகத்தை
உன்னி மயங்குவாள்.

௫)பெற்ற தாயினும் ஆயின செய்யும் (நாராயணா என்னும் நாமம்......)

நன்றி.

Cheers.
 
024. பெரியாழ்வார்

21. கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்
--கண்ணன் திருவவதாரச் சிறப்பு
[மருங்கை=இடுப்பு; புல்குதல்=அணைதல்]

37. நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்துநீ ராட்டும்‍இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவா காணீரே
மொய்குழ லீர்வந்து காணீரே

44. மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்கு பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வைய மளந்தானே தாலேலோ

55. என்சிறுக் குட்டன் எனக்கோ ரின்னமுது எம்பிரான்
தன்சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா

75. மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின்மேல்
ஆணிப்பொன் னால்செய்த ஆய்பொன் னுடைமணி
பேணிப் பவளவாய் முத்திலங் கபண்டு
காணிகொண்ட கைகளால் சப்பாணி
கருங்குழல் குட்டனே சப்பாணி
[கபண்டு=காப்பு]

97. பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம்கட்டி
தன்னிய லோசை சலஞ்சல னென்றிட
மின்னியல் மேகம் வரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக் கோட்டரா அச்சோ வச்சோ
எம்பெரு மான்வார அச்சோவச்சோ
--அணைத்துக்கொள்ள அழைத்தல் அச்சோப்பருவம்

108. வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்
சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்கஎன்
குட்டன்வந்து என்னைப் புறம்புல்குவான்
கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்
--வட்ட நடுவே முதுகை கட்டிக்கொள்ளும்படி அழைத்தல்

124. தத்துக்கொண் டாள்கொலோ தானேபெற் றாள்கொலோ
சித்த மனையாள் அசோதை யிளஞ்சிங்கம்
கொத்தார் கருங்குழல் கோபால கோளரி
அத்தன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்

139. வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மரப்பாதக் கிங்கிணி யார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராய ணாஇங்கே வாராய்
எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா
--காது குத்துதல்

பெரியாழ்வாரின் கவிதை எளிமைக்கு இது ஒரு sample, அவ்வளவே.

025. தொண்டரடிப்பொடி ஆழ்வார்

873. பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

900. ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகருளானே.

*****
 
026. திருமங்கையாழ்வார்

1553. அத்தா அரியே என்றுன் னையழைக்க
பித்தா வென்று பேசுகின்றார் பிறகென்னை
முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே.
--பெரிய திருமொழி, ஏழாம் பத்து

*****

027. பூதத்தாழ்வார்

2225. சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் அறம்தாங்கும்
மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லுள்ளு.

*****

028. பேயாழ்வார்

2344. தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவு யொன்றாம் இசைந்து.

*****

029. நம்மாழ்வார்

2620. அவனாம் இவனாம் உவனாம்மற் றும்பர்
வனாம் அவனென் றிராதே அவனாம்
அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலும் ஆம்.

3052. வானவர் ஆதி என்கோ
வானவர் தெய்வம் என்கோ
வானவர் போகம் என்கோ
வானவர் முற்றும் என்கோ
ஊனமில் செல்வம் என்கோ
ஊனமில் சுவர்க்கம் என்கோ
ஊனமில் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே.
(மோக்கம்=மோட்சம்)

3827. கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே.

3835. அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே.

*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top